எங்களோடு பணிபுரிவோர்

 • தேசிய மன நலம் மற்றும் நரம்பியல் அறிவியல் கல்விக் கழகம் (NIMHANS) logo

  ஒரு பாராளுமன்றச் சட்டத்தின்படி, NIMHANS 'தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஓர் அமைப்பு' என்ற கௌரவத்தைப் பெற்றது. நாட்டின் முன்னணி மனநல அமைப்பு, பொதுமக்களுக்கு மருத்துவச் சேவைகளை வழங்குவதுடன், மனநலம் மற்றும் நரம்பியல் துறைகளில் அதிநவீன ஆராய்ச்சிகளையும் நிகழ்த்துகிறது.

  வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷனுக்கான யோசனையுடன் நாங்கள் NIMHANS இயக்குநர் மற்றும் துணைவேந்தரைச் சந்தித்தபோது, அவர் உடனடியாக எங்களுடன் இணைந்து பணியாற்ற ஒப்புக்கொண்டார். மனநலத்துறையில் நாட்டிலேயே மிகவும் மதிக்கப்படும் அமைப்புடன் இணைந்து பணிபுரிவதில் நாங்கள் மிகுந்த பெருமைகொள்கிறோம். இதற்காக, NIMHANSல் உள்ள உளவியல், மனோதத்துவ நிபுணர்கள் மற்றும் பிற மருத்துவர்களை நாங்கள் அணுகியபோது, அவர்கள் காட்டிய நிபந்தனையற்ற ஆதரவு, எல்லையற்ற ஆர்வம் மற்றும் பகிர்ந்துகொள்ளும் உணர்வு ஆகியவற்றால்தான் இந்த போர்ட்டல் உருவானது.

  NIMHANSபற்றி மேலும் அறிய, தயவுசெய்து இந்த இணையத்தளத்தைக் காணவும்: http://www.nimhans.ac.in/

 • மஹிதி இன்ஃபோடெக் logo

  இணையத்தில் மனநலம்பற்றிய விவரங்களை வழங்குவதற்கான ஒரு தளத்தை உருவாக்க நாங்கள் விரும்பியபோது, அதற்கான தொழில்நுட்ப உதவி கோரி நாங்கள் பல சேவை வழங்குநர்களிடம் பேசினோம், அவர்கள் போர்ட்டல்களை உருவாக்குவதில் நல்ல அனுபவம் பெற்றிருந்தார்கள். ஆனால், அதற்குமேலாக, அந்த நிறுவனங்களிடம் நாங்கள் ஒரு குறிப்பிட்ட திறனை எதிர்பார்த்தோம். நாங்கள் தேர்வுசெய்யும் நிறுவனம், சமூக சேவைப்பணிகளுக்கான நோக்கங்களைப் புரிந்துகொள்ளவேண்டும், நாங்கள் உருவாக்க விரும்பும் சமூகத் தாக்கத்தைப் புரிந்துகொள்வதற்காக, வழக்கத்தைவிடக் கூடுதலாக முனையவேண்டும். அந்தப் பண்புகளை, நாங்கள் மஹிதியிடம் கண்டோம். மென்பொருள் உருவாக்கத்துறையில் நன்கு வேரூன்றிய நிறுவனம் இது.

  மஹிதி இன்ஃபோடெக் உலகெங்குமுள்ள நிறுவனங்களுக்கு முழுமையான தொழில்நுட்பத் தீர்வுகளை வழங்கிவரும் ஓர் IT சேவைகள் நிறுவனம்.

  மஹிதி இன்ஃபோடெக்பற்றி மேலும் விவரங்களுக்கு, தயவுசெய்து இந்த இணையத்தளத்தைக் காணவும்: http://www.mahiti.org

 • என். சொக்கன் logo

  நாகசுப்பிரமணியன் சொக்கநாதன் “என். சொக்கன்” என்று அறியப்படும் தமிழக எழுத்தாளர். சேலம், ஆத்தூரில் பிறந்து, வளர்ந்து, பெங்களூரில் வசிக்கும் இவர் மென்பொருள் துறையில் பணியாற்றி வருகிறார். தமிழ், ஆங்கிலம் என இருமொழிகளிலும் எழுதுகிறார், மொழிபெயர்க்கிறார். சிறுகதைகள், புதினங்கள், மரபுக்கவிதைகள் போன்றவற்றுடன் வாழ்க்கை வரலாறுகள், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் பல நூல்களும் பல்வேறு பத்திரிகைகளில் தொடர்கள், கட்டுரைகளும் எழுதிவருகிறார், சிறுவர்களுக்கும் அதிகம் எழுதிவருகிறார், இவரது நூல்கள் ஒலிப்புத்தகமாகவும், ஆங்கிலம், இந்தி, மலையாளம், குஜராத்தி, மராத்தி, ஒடியா உள்ளிட்ட மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டும் வெளியாகியுள்ளன.

  என். சொக்கன்பற்றி மேலும் அறிய, தயவுசெய்து இந்த இணையத்தளத்தைக் காணவும்: http://nchokkan.wordpress.com

  "வொய்ட்ஸ்வான் போர்ட்டல் பக்கங்களைத் தமிழில் மொழிபெயர்க்கத்தொடங்கியபோதுதான், மனநலம்பற்றிய விஷயங்களில் நானொரு ஞானசூன்யம் என்பதை உணர்ந்தேன். இத்தனைக்கும் என்னுடைய நெருங்கிய உறவினர்கள் சிலர் மனநலப் பிரச்னைகளைச் சந்தித்திருக்கிறார்கள், இன்னும் அவற்றிலிருந்து மீண்டுகொண்டிருக்கிறார்கள், அதனைக் கண்ணெதிரே பார்த்தபோதும், இதை ஒரு பெரிய விஷயமாக நான் எண்ணியிருக்கவில்லை. இந்தப் பக்கங்கள் என் கண்ணைத் திறந்தன, மனநலம்பற்றி ஒவ்வொருவரும் அறிந்துகொள்வது, மனநலப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளோர், அவர்களைக் கவனித்துக்கொள்வோருக்கு ஆதரவளிப்பது ஆகியவை எந்த அளவு முக்கியம் என்பதைப் புரிந்துகொண்டேன்."