உயிரைக் காக்கும் உரையாடல்கள்

தற்கொலை எண்ணத்துடன் உள்ள ஒருவரிடம் பேசுவது கடினம்தான்; ஆனால், சில நேரங்களில் ஒரே ஒரு பேச்சு ஓர் உயிரைக் காப்பாற்றக்கூடும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

எழுதியவர்: டாக்டர் பூர்ணிமா போலா

நீண்டநாளைக்குப்பிறகு, நீங்கள் உங்களுடைய பக்கத்துவீட்டுக்காரரிடம் பேசுகிறீர்கள். வழக்கமான அரட்டைதான், குழந்தைகள், போக்குவரத்து... மற்ற விஷயங்களைப் பேசுகிறீர்கள். திடீரென்று, சற்றும் எதிர்பாராதவிதமாக அவர் ஓர் அதிர்ச்சிகரமான விஷயத்தைச் சொல்கிறார். சற்றே தயங்கித்தயங்கி, 'நான் இனிமேலும் வாழத்தான் வேண்டுமா என்று நினைக்கிறேன்' என்கிறார். அப்போது, நீங்கள் என்ன சொல்வீர்கள்? என்ன செய்வீர்கள்? உங்களால் எப்படி அவருக்கு உதவ இயலும்?

இதுபோன்ற ஒரு சூழ்நிலையில் நீங்கள் செய்யக்கூடிய மிக முக்கியமான விஷயங்கள், அவர்கள் சொல்வதை நேரம் செலவழித்துக் கேட்பது, அவர்களிடம் சென்று பேசுவது, நீங்கள் அவர்கள்மீது அக்கறை செலுத்துகிறீர்கள் என்பதைக் காட்டுவது போன்றவைதான். ஒருவர் தற்கொலை எண்ணங்களை வெளிப்படுத்துகிறார் என்றால், அதை ஒரு தீவிரமான செய்தியாக எடுத்துக்கொள்ளவேண்டும், அவர் 'உதவிகோரி அழைப்புவிடுக்கிறார்' என எண்ணவேண்டும். அவரிடம் தற்கொலை எண்ணங்களைப்பற்றிக் கேட்டால், அவர்கள் தற்கொலைக்குத் தூண்டப்பட்டுவிடுவார்களோ என்று நீங்கள் கவலைப்படலாம், அவர்கள் மனத்தில் இல்லாத ஒரு சிந்தனையை நாமே தூண்டிவிட்டுவிடுவோமோ என்று எண்ணலாம். ஆனால் உண்மையில், அதைப்பற்றிப் பேசுவது ஒரு மிகப்பெரிய உதவியாக இருக்கக்கூடும். முதலில், ஒரு சின்ன விஷயம் செய்யுங்கள், அவர்களை எண்ணி நீங்கள் கவலைகொள்வதாக உங்கள் பக்கத்துவீட்டுக்காரரிடம் சொல்லுங்கள். அவருடைய கதையை இரக்கவுணர்வுடன், ஏற்றுக்கொள்ளும் மனத்துடன் அமைதியாகக் கேளுங்கள். இதனால், தான் தனிமையில் இல்லை என அவர் உணரலாம், தனக்கு உதவக்கூடியவர்கள் இருக்கிறார்கள் என நம்பலாம். "உங்கள் உணர்வுகளை என்னால் சரியாகப் புரிந்துகொள்ள இயலுமா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், எனக்கு உங்கள்மீது அக்கறை இருக்கிறது, நான் உங்களுக்கு உதவ விரும்புகிறேன்" என்பதுபோல் நீங்கள் பேசலாம். அல்லது, நீங்கள் இதுபோன்ற கேள்விகளை எழுப்பலாம், "நீங்கள் எப்போது இப்படி உணரத்தொடங்கினீர்கள்? ஏதாவது நடந்ததா? அதனால்தான் நீங்கள் இப்படி உணரத் தொடங்கினீர்களா?"

சில நேரங்களில், தற்கொலையைப்பற்றிப் பேசுபவருடைய மனத்தை மாற்றவேண்டும் என்று எண்ணி நாம் அவசர ஆலோசனைகளைத் தரக்கூடும், அவர்களைப் பிறரோடு ஒப்பிடக்கூடும், அல்லது, விமர்சிக்கக்கூடும். உதாரணமாக, "நீங்கள் இன்னும் நிறைய நாள் வாழ்ந்து நிறைய வேலைகளைச் செய்யவேண்டியிருக்கிறது" அல்லது "நீங்கள் தற்கொலை செய்துகொண்டால் உங்கள் குடும்பம் பாதிக்கப்படும்" அல்லது "உங்களைவிடப் பெரிய பிரச்னை கொண்டவர்கள் பலர் இருக்கிறார்கள்" அல்லது "நீங்கள் சுயநலம் பிடித்தவர், பலவீனமானவர்" என்று சொல்லக்கூடும். உண்மையில் நாம் அவர்களுக்கு உதவிசெய்யதான் விரும்புகிறோம். ஆனால், இதுபோன்ற பேச்சுகள் அவர்களுக்கு உதவாது, சொல்லப்போனால், இவை அவர்களுடைய பிரச்னையைப் பெரிதாக்கிவிடக்கூடும். உங்களால் அவருடைய பார்வையிலிருந்து பிரச்னைகளைக் காண இயலுமா? சிரமத்தில் உள்ள ஒருவரிடம் யாராவது உண்மையாகப் பேசினால், அவர்களைப்பற்றித் தீர்ப்பு ஏதும் சொல்லாமல் அவர்களைப் புரிந்துகொண்டு ஆதரிக்க முயன்றால், அது அவர்களுக்கு ஒரு பாதுகாப்பு வலையாக அமையும். ஆகவே, யாருக்கேனும் உதவி தேவைப்பட்டால் அவர்களை அணுகிப் பேசுங்கள்.

நம்பிக்கைகளை உடைத்தல்

நீங்கள் அடுத்து என்ன செய்யலாம்? உங்களுடைய பக்கத்துவீட்டுக்காரர், தான் தற்கொலையைப்பற்றிப் பல நாளாகச் சிந்தித்துக்கொண்டிருந்ததாகவும், அதற்காகப் பல வழிகளைச் சிந்தித்துப்பார்த்ததாகவும் சொல்லலாம். அதேசமயம், இது ஒரு பெரிய விஷயம் அல்ல என்று சொல்லி அவர் உங்களைச் சமாதானப்படுத்த முயற்சி செய்யலாம், 'இதை நானே கவனித்துக்கொள்வேன், ஆகவே, இதைப்பற்றி யாரிடமும் சொல்லாதீர்கள்' என்று சொல்லலாம். உங்களுடைய உரையாடல்களை ரகசியமாக வைத்துக்கொள்வீர்கள் என்று எப்போதும் வாக்குறுதி தராதீர்கள், அவருடைய உணர்வுகளை மாற்றுகிற முழுப்பொறுப்பை ஏற்றுக்கொள்ளாதீர்கள். எதையும் அவரே கேட்கட்டும் என்று காத்திருக்காதீர்கள், அவர் எதிர்பார்க்கும் ஆதரவையும் உதவியையும் பெற்றுத்தர உங்களால் இயன்ற எல்லாவற்றையும் நீங்களே முன்வந்து செய்யுங்கள். உங்களுடன் பேசும் ஒருவர் தன்னுடைய வாழ்க்கையை எப்படி முடித்துக்கொள்வது என்பதுபற்றிக் குறிப்பாகச் சிந்திக்கிறார் என்று தெரிந்தால், அவர் உடனடியாகத் தற்கொலைக்கு முயற்சிசெய்யக்கூடும் என்று தோன்றினால், அவர்களைத் தனியே விடாதீர்கள். அவருடைய குடும்ப உறுப்பினர்களைத் தொடர்புகொண்டு, உங்களுடைய கவலைகளை மென்மையாகச் சொல்லலாம். அவர்கள் ஒரு நெருக்கடி உதவித் தொலைபேசி எண்ணை அழைக்கலாம், அல்லது ஒரு மனநல நிபுணரிடம் அவரை அழைத்துச்செல்லலாம் என்று ஆலோசனை சொல்லுங்கள். அவர் இதனை ஏற்க மறுக்கலாம், இதில் தனக்கு நம்பிக்கை இல்லை என்று எண்ணலாம், ஆனால், நீங்கள் இதனை வலியுறுத்திச்சொல்லவேண்டும்.

தற்கொலையைத் தடுப்பதுபற்றிய கொள்கை மாதிரிகள், மனநல நிபுணர்களின் கண்டறிதல்கள் மற்றும் உள்ளூர், சர்வதேச ஆய்வுகள் அனைத்தும், தற்கொலைக்கு முயற்சிசெய்கிற ஒருவருடன் இரக்கம்காட்டிப் பேசுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றன. தற்கொலை என்பது ஒரு முக்கியமான பொது நலப் பிரச்னை, சமூக அடிப்படையிலான தலையீடுகளைப் பயன்படுத்தும் ஆய்வுகள், தற்கொலை விகிதங்கள் குறைந்துகொண்டிருப்பதைப் பதிவுசெய்துள்ளன. லைஃப்லைன் என்கிற ஆஸ்திரேலிய நெருக்கடி ஆதரவுச் சேவை அமைப்பு, தற்கொலை விகிதங்கள், ஆபத்துக் காரணிகள் மற்றும் அவ்வெண்ணத்தை சீக்கிரத்தில் கண்டறிதல் போன்றவற்றைப்பற்றி மக்கள் வெறுமனே தெரிந்துகொண்டால்மட்டும் போதாது, அதுபற்றிய விழிப்புணர்வு பெற்றால்மட்டும் போதாது என்கிறது,  இப்படிப்பட்டவர்களுடன் உறவுகளை வளர்த்துக்கொள்ளுதல் மற்றும் அவர்களுடன் பேசுதல் ஆகியவற்றில் அந்தச் சமூகத்தின் உறுப்பினர்களுக்குப் பயிற்சி தருவது முக்கியம் என்று வலியுறுத்துகிறது. இந்தியாவிலும் உலகெங்கும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பணியிடங்கள் பலவற்றில் தற்கொலைத் தடுப்புத் திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்களில், தற்கொலை எண்ணம் கொண்டிருப்பதாகத் தோன்றுகிறவர்கள் பேசுவதை அனுதாபத்துடன் கேட்பது எப்படி, அவர்களுடன் பேசுவது எப்படி, அவர்களை அணுகுவது எப்படி என ஆசிரியர்கள், சக ஊழியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

உங்களால் எல்லாருக்கும் உதவ இயலாமல்போகலாம். ஆனால், ஒரே ஒருவரை அணுகிப்பேசினால்கூட, அவருடைய உயிரை நீங்கள் காப்பாற்ற இயலும்.

டாக்டர் பூர்ணிமா போலா NIMHANS மருத்துவ உளவியல் பிரிவில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார்

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org