பைபோலார் (இருதுருவக்) குறைபாடு: உண்மை அறிவோம்

தவறான நம்பிக்கை: இருதுருவக் குறைபாடு என்பது மனநிலை மாற்றத்துடைய இன்னொரு பெயர்தான்.

உண்மை: மனநிலை மாற்றம் என்பது, ஒருவர் வருத்தமாக, கோபமாக, எரிச்சலோடு அல்லது ஊக்கம் குறைவாக உள்ளபோது அவருடைய மனநிலை மாறுவது ஆகும். இந்த மாற்றம் சிறிது நேரத்திற்குமட்டுமே நீடிக்கும். ஆனால் இருதுருவக் குறைபாட்டுடன் தொடர்புடைய மனநிலை மாற்றங்கள் மிகவும் வித்தியாசமானவை, தீவிரமானவை. அவை ஒருவருடைய வாழ்க்கை மற்றும் செயல்பாடுகளின் ஒவ்வோர் அம்சத்தையும் பாதிக்கக் கூடும்.

தவறான நம்பிக்கை: இருதுருவக் குறைபாடு என்பது ஓர் அபூர்வமான நிலை.

உண்மை: இருதுருவக் குறைபாடு என்பது அபூர்வமான மனநிலைக் குறைபாடு அல்ல. உலக சுகாதார அமைப்பின் (WHO) புள்ளிவிபரம் மற்றும் ஆய்வின்படி உலகெங்கும் சுமார் 6 கோடிப் பேர் இருதுருவக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்தியாவின் மக்கள் தொகையில் 3 சதவீதம் பேர் இருதுருவக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

தவறான நம்பிக்கை: இருதுருவக் குறைபாட்டுக்கு மருந்துகளின்மூலம்மட்டுமே சிகிச்சை அளிக்க இயலும்.

உண்மை: இருதுருவக் குறைபாட்டின் அறிகுறிகளைக் கட்டுபடுவதற்கு மருந்துகள் தேவை. ஆனால் அதுமட்டுமே இருதுருவக் குறைபாட்டுக்கான ஒரே சிகிச்சை அல்ல. ஓர் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுதல், போதை மருந்துகள் மற்றும் மதுவைத் தவிர்த்தல், நல்ல தூங்கும் பழக்கங்களை ஏற்படுத்திக் கொள்ளுதல் , உடற்பயிற்சி செய்தல் மற்றும் மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்துதல் போன்றவற்றையும் மருந்துகளுடன் இணைத்துச் செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் சிபாரிசு செய்கிறார்கள்.

தவறான நம்பிக்கை: இருதுருவக் குறைபாடு உள்ளவர்கள் அதிலிருந்து வெளியே வரவேண்டும் என்று எண்ணிப் போதுமான அளவு முயற்சி செய்வதில்லை.

உண்மை: இருதுருவக் குறைபாடு பற்றி மக்களுக்கு அதிகம் தெரியாத காரணத்தால், அவர்கள் அந்தக் குறைபாடு உள்ளவர்களைத் தவறாக நினைக்கிறார்கள். 'எல்லாருக்கும்தான்  மனநிலை மாற்றங்கள் உள்ளன, அவர்கள் அதைத் தங்களால் இயன்ற அளவு கட்டுப்படுத்திக்கொள்கிறார்களே, இருதுருவக் குறைபாடு உள்ளவர்களால்மட்டும் இதை ஏன் கட்டுப்படுத்த இயலுவதில்லை' என்று நினைக்கிறார்கள். பெரும்பாலான நேரங்களில் இருதுருவக் குறைபாடு என்பது ஒரு தீவிரமான மனநிலைக் குறைபாடு, அதற்கு மருத்துவ சிகிச்சை தேவை என்பதே மக்களுக்குத் தெரிவதில்லை.

தவறான நம்பிக்கை: இருதுருவக் குறைபாடு உள்ளவர்கள் தீவிரமான, மனச் சோர்வான நிலையை எப்போதும் அனுபவிக்கிறார்கள்.

உண்மை: இருதுருவக் குறைபாடு உள்ள பெரும்பாலான மக்களுக்கு நெடுநாள் அதற்கான அறிகுறிகள் எவையும் தெரிவதில்லை, அவர்கள் ஓர் இயல்பான வாழ்க்கையையே வாழ்கிறார்கள். தொடர்ந்து மருந்துகளையும் சிகிச்சையையும் எடுத்துக் கொண்டால் பெரும்பாலோனார் இந்த நிலையிலிருந்து விடுபட்டுவிடுகிறார்கள்.

தவறான நம்பிக்கை: இருதுருவக் குறைபாடு மனநிலையைமட்டுமே பாதிக்கிறது.

உண்மை: இருதுருவக் குறைபாடு என்பது ஒருவருடைய மனோநிலையைமட்டும் பாதிப்பதில்லை, அவருடைய சிந்திக்கும் திறன், ஆற்றல், கவனம், ஆரோக்கியம், தூங்குதல், சாப்பிடுதல், பழக்கங்கள், பாலியல் ஆர்வம், சுயமதிப்பு மற்றும் பிறருடன் பழகும் தன்மை போன்றவற்றையும் பாதிக்கின்றன.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org