விளிம்புநிலை ஆளுமைக்குறைபாடு: உண்மை அறிவோம்

தவறான நம்பிக்கை: விளிம்புநிலை ஆளுமைக் குறைபாட்டைக் (BPD)  குணப்படுத்த இயலாது.

உண்மை: மருந்துகள், ஆலோசனை மற்றும் உணர்வு நிலையில் வழங்கப்படும் ஆதரவின் மூலம் BPDயைக் குணப்படுத்தலாம். இதன்மூலம் பாதிக்கப்பட்டவர் தன்னுடைய நிலைமையை முன்னேற்றிக்கொள்ளலாம், அவரது வாழ்க்கைத் தரமும் மேம்படும். விளிம்புநிலை ஆளுமைக் குறைபாடு கொண்டவர் எந்த அளவு பாதிப்புகளைச் சந்தித்துள்ளார் என்பதைப் பொறுத்தும் அவர் சிகிச்சைக்கு எந்த அளவு ஒத்துழைக்கிறார் என்பதைப் பொறுத்தும் இந்தப் பிரச்னை ஆறு மாதங்கள் தொடங்கி சில ஆண்டுகளுக்குள் குறிப்பிடத்தக்க அளவில் சரி செய்யப்பட்டுவிடும்.

தவறான நம்பிக்கை: தற்கொலை எண்ணம் கொண்ட அனைவருக்கும் BPD உள்ளது.

உண்மை: விளிம்புநிலை ஆளுமைக் குறைபாடு கொண்ட ஒருவர் அனிச்சையாகத்  தன்னைத் தானே காயப்படுத்திக்கொள்ள முயற்சி செய்யலாம் அல்லது தற்கொலைக்கும் முயற்சி செய்யலாம். அதே சமயம் தற்கொலை செய்து கொள்கிற எல்லாரும் BPD பிரச்னை கொண்டவர்கள் என்று பொருள் இல்லை. ஒருவருக்கு BPD வந்திருப்பதாகச் சொல்லவேண்டுமென்றால் அவரிடம் தனித்துவமான அறிகுறிகள் சில காணப்படவேண்டும். ஆகவே யாருக்கும் BPD உள்ளது என்று மேலோட்டமாகப் பார்த்துச் சொல்லிவிட இயலாது.

தவறான நம்பிக்கை: BPD பிரச்னை கொண்டவர்கள் உண்மையாகவேத் தற்கொலை செய்துகொள்ள  எண்ணுவதில்லை, அப்படி நடிக்கிறார்கள். காரணம் மற்றவர்கள் தன்னைக் கவனித்துக் கொண்டே இருக்கவேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்.

உண்மை: ஒருவருக்கு BPD பிரச்னை இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, அவர் தற்கொலை செய்துகொள்ள முக்கிய காரணம் அவர்கள் மனத்தில் எழும் துயரம் மிகவும் தாளமுடியாததாக இருக்கிறது, தங்களுடைய வாழ்க்கை பயனற்றது என்கிற தீர்மானத்திற்கு அவர்கள் வந்துவிடுகிறார்கள். அவர்களுக்குத்  தீவிரமான, வலி மிகுந்த உணர்ச்சிகள் ஏற்படலாம், தற்கொலை செய்துகொண்டால் மட்டும்தான் இதிலிருந்து தப்ப இயலும் என்று அவர்கள் எண்ணிவிடலாம். உண்மையில் ஒருவர் தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்கிறார் என்றால் அவர் வேறுவழியில்லாமல்தான் அவ்வாறு செய்கிறார், அதன்மூலம், பிறர் தனக்கு எப்படியாவது உதவமாட்டார்களா என்கிற எண்ணத்தை அவர் வெளிப்படுத்துகிறார்.

தவறான நம்பிக்கை: BPD பிரச்னை கொண்டவர்களுக்கு உண்மையில் எந்த நோயும் இல்லை, அவர்கள் மற்றவர்களைத் தங்கள் வழிக்குக்கொண்டு வருவதற்காகதான் இப்படி நடிக்கிறார்கள்.

உண்மை: விளிம்புநிலை ஆளுமைக் குறைபாடு என்பது ஓர் உண்மையான நோய்தான், எப்படி நீரிழிவும் மூட்டு வலியும் உண்மையான நோய்களோ அதுபோல இதுவும் ஓர் உண்மையான நோய். விளிம்புநிலை ஆளுமைக் குறைபாடு கொண்ட ஒருவர் நடந்துகொள்ளும் விதம் மற்றவர்களுக்கு வினோதமாகவோ எதிர்பாராததாகவோ இருக்கலாம். ஆகவே அவர்கள் பிறரைத் தங்கள் வழிக்குக்கொண்டு வருவதற்காகவோ பிறருடைய கவனத்தைக் கவர்வதற்காகவோதான் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்று மற்றவர்கள் நினைக்கக்கூடும், அதாவது அவர்கள் விரும்பிதான் இப்படிச் செய்கிறார்கள் என்று பிறர் எண்ணலாம். ஆனால் உண்மை அதுவல்ல. BPD பிரச்னை கொண்ட ஒருவருடைய உணர்ச்சிகள் நிலையற்று மாறுகின்றன, தன்னைப்பற்றி அவர் வைத்திருக்கும் பிம்பமும் நிலையற்றதாக இருக்கிறது. இவர்களுடைய சுயமதிப்புக் குறைவாக இருப்பதாலும், மற்றவர்கள் தங்களை நிராகரித்து விடுவார்களோ என்று இவர்கள் பயப்படுவதாலும், தங்களுடைய அன்புக்குரியவருடைய நேசத்தைப் பெறுவதற்காக இவர்கள் எதைவேண்டுமானாலும் செய்ய முயல்வார்கள். அவர்களுடைய உண்மையான நோக்கம் பிறரைத் துன்புறுத்துவதோ, அவர்களைத் தன் வழிக்குக்கொண்டு வருவதோ அல்ல, எப்படியாவது மற்றவர்கள் தங்களுக்கு உதவிவிடமாட்டார்களா என்றூ அவர்கள் துடிக்கிறார்கள், அதைதான் வேறு விதமான நடவடிக்கைகளின்மூலம் வெளிப்படுத்துகிறார்கள்.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org