பெற்றோரின் பிரச்னை: குடும்பத்தின் பிரச்னை

மனச் சோர்வு கொண்ட ஒருவர் அதிலிருந்து குணமாவதற்கு அவருக்கு சிகிச்சையும், உணர்வு நிலையிலான ஆதரவும், அன்பும், அக்கறையும் தேவை

அபய் ஒரு கலகலப்பான, மகிழ்ச்சியான பையன். அவன் தன்னுடைய பள்ளிப்படிப்பை பூர்த்தி செய்துவிட்டு ஒரு பொறியியல் கல்லூரியில் சேர்ந்தான். அபய் நல்ல மதிப்பெண் வாங்கவேண்டும், தனக்கு பிடித்த பொறியியல் கல்லூரியில் சேரவேண்டும் விரும்பி கொண்டிருந்தான், இவை எல்லாம் நிறைவேறியவுடன் அவன் மிகவும் மகிழ்ந்தான். அவன் பொறியியல் கல்லூரியில் சேர்ந்தபிறகு முதல் சில மாதங்களுக்கு எல்லாம் சரியாகவே நடந்துகொண்டிருந்தது, ஆனால் ஒரு கட்டத்தில் அபயால் படிப்பு சுமையை, அதனால் ஏற்பட்ட அழுத்தத்தை தாங்க இயலவில்லை. அவனுடைய கவனம் சிதற ஆரம்பித்தது, வகுப்புகளுக்கு வராமல் இருக்க தொடங்கினான். அவன் வேண்டுமென்றே பிடிவாதம் பிடிக்கிறான், சோம்பேறித்தனமாக இருக்கிறான் என்று அவனுடைய பெற்றோர் நினைத்தார்கள், அவனை கண்டித்து வலுக்கட்டாயமாக கல்லூரிக்கு அனுப்பி வைத்தார்கள். அபய் கல்லூரிக்கு செல்லவில்லை, எங்கேயோ ஊர் சுற்றிவிட்டு மாலை ஆனதும் வீட்டுக்கு வந்தான். அவனுக்கு எல்லாவற்றிலும் ஆர்வம் குறையத் தொடங்கியது. அவன் தன்னுடைய உடல் நிலையை கவனித்துக்கொள்ளவில்லை சுத்தமாக இருக்கவில்லை, நீண்டநேரம் தூங்கினான் அல்லது வீட்டில் யாரிடமும் பேசாமல் தன்னுடைய அறையிலேயே இருந்தான். நல்ல வேளையாக அவனுடைய தாய் தன் மகனிடம் ஏற்பட்ட இந்த நுணுக்கமான மாற்றங்களை கவனித்தார், ஓர் உளவியல் நிபுணரை சந்தித்து ஆலோசனை பெற தீர்மானித்தார். நடந்த அனைத்தையும் கேட்ட உளவியல் நிபுணர்  அபய்க்கு மனச் சோர்வு வந்திருப்பதாக கண்டறிந்தார். அவனுக்கு மனச் சோர்வை போக்கும் சில மருந்துகள் தரப்பட்டன, ஆனால் அவற்றால் அவனுடைய நிலை முன்னேறவில்லை. அபய் அதே குழப்பமான மனநிலையுடன் காணப்பட்டான்.

அபயின் தந்தை அவனை புரிந்துகொள்ளவில்லை, ஏதாவது சொல்லிக்கொண்டே இருந்தார் ஒரு கட்டத்தில் அவருடைய தொந்தரவை தாங்கிக்கொள்ள இயலாத அபய் வீட்டிலிருந்து வெளியேறி தன்னுடைய அத்தை வீட்டில் தங்க தொடங்கினான். அந்த அத்தை அவனிடம் அனுதாபத்துடன் நடந்து கொண்டார். சில நாள் கழித்து அபய் தன்னுடைய பிரச்சினைகளை அவரிடம் சொன்னான். அவன் சொன்னதை கேட்ட அத்தைக்கு ஒரு விஷயம் புரிய வந்தது, அபயின் பிரச்சினைக்கு காரணம் அவனுடைய பெற்றோர்தான். அவர்களுக்குள் அடிக்கடி சண்டை வரும், அதனால் குடும்பத்தில் அமைதி இல்லை. அதோடு அபயின் தந்தை அவனிடம் நிறைய எதிர்பார்த்தார், அதற்காக அவனை தொடர்ந்து தொந்தரவு செய்து கொண்டே இருந்தார், விமர்சித்துக்கொண்டே இருந்தார் இதனால் அபய் தான் எதற்கும் பயனில்லாதவன், தனக்கு மதிப்பே கிடையாது என்று உணர்ந்தான். இந்த சூழ்நிலையில் அபய்க்கு மிகவும் தேவைப்பட்டது தார்மீக ஆதரவும் உணர்வு நிலையிலான ஆதரவும்தான். அதனை அவனுடைய அத்தை அவனுக்கு வழங்கினார்.    

அடுத்த 6 மாதங்களில் அபய் மெதுவாகக் குணமானான், தன்னுடைய படிப்பைத் தொடரத் தீர்மானித்தான். அவனுடைய பெற்றோர் தாங்கள் சண்டை போடுவதை நிறுத்தவேண்டும், தங்களுக்கிடையிலான உறவை மேபடுத்திக்கொள்ளவேண்டும் என்பதை உணர்ந்தார்கள். அவனுடைய தந்தை தன்னுடைய மகனை தொடர்ந்து தொந்தரவு செய்து கொண்டே இருக்கக்கூடாது,  இளைஞனான அவனை மரியாதையுடன் நடத்தவேண்டும் என்று புரிந்துகொண்டார்.

இந்தக் கதையில் அபய் மனச் சோர்விலிருந்து குணமானதற்கு காரணம் அவனுடைய அத்தை வழங்கிய உணர்வு நிலையிலான ஆதரவு, அன்பு மற்றும் அக்கறை. இவை மிக நல்ல மருத்துவ சிகிச்சைகளுக்கு இணையானவை. மனச் சோர்வுக்கான சிகிச்சை நபருக்கு நபர் மாறுபடும். பெரும்பாலான சூழ்நிலைகளில் மருந்துகளையும் சிகிச்சையையும் கலந்து தரவேண்டியது இருக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். ஆனால் சிகிச்சை எதுவானாலும் அதை மேம்படுத்துவது குடும்ப உறுப்பினர்களும் நண்பர்களும் காட்டுகிற அனுதாபம், அன்பு, ஆதரவு மற்றும் நான் உன்னை புரிந்துகொண்டேன் என்கிற நம்பிக்கையையும்தான்.

இந்தப் பிரச்னை கொண்ட பல நபர்களிடம் காணப்பட்ட அறிகுறிகள், அவர்களுடைய அனுபவங்களைக் கருத்தில் கொண்டு, மனநல நிபுணர்களின் உதவியுடன் இந்த விவரிப்பு உருவாக்கப்பட்டது. இது ஒரு குறிப்பிட்ட நபரின் உண்மை அனுபவம் அல்ல, இந்தப் பிரச்னை கொண்ட ஒருவருடைய நிலையைப் புரியவைக்கும் நோக்கத்துடன் இந்த விவரிப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org