இயல்பாக இல்லாத ஒருவர்

பதற்றம் என்பது, ஒரு குறிப்பிட்ட நிலையைத் தாண்டினால் மனநலப் பிரச்னையாகக்கூடும். அதனைக் குணப்படுத்த இயலும்

பரத் 30களில் உள்ள ஓர் இளைஞர். அவர் எப்போதும் பதற்றத்துடனே காணப்பட்டு வந்தார். தான்  எப்போதும் இயல்பாகவோ நிதானமாகவோ இருந்ததில்லை என்று சொல்கிறார் இவர்.

இதனால், பரத் தன்னுடைய வேலையைச் சிறப்பாகச் செய்ய இயலவில்லை, பதற்றம் அவருடைய வேலைத்திறனைப் பாதிப்பதைக் கவனித்த ஒரு நண்பர், அவர் ஒரு மருத்துவரைச் சந்திக்கவேண்டும் என்று சொன்னார்.

பரத் ஓர் IT நிறுவனத்தில் பணிபுரிந்துகொண்டிருந்தார், குறிப்பிட்ட வேலைகளைக் குறித்த நேரத்தில் பூர்த்தி செய்யவேண்டும் என்கிற அழுத்தம் அவருக்கு அதிகமாக இருந்தது.

பரத்தின் மனைவி தன்னுடைய தோழியிடம் பேசிக்கொண்டிருந்தபோது, பல மாதங்களாக பரத் எப்போதும் எரிச்சலுடன் காணப்படுவதாகவும் இரவுமுழுக்க நன்கு தூங்கி விழித்தபிறகும் அவர் களைப்போடு இருப்பதாகச் சொல்வதாகவும் சொன்னார். அவர் தொடர்ந்து பல விஷயங்களை மறந்துகொண்டே இருந்தார், தன் மனைவி என்ன சொல்கிறார் என்பதை அவர் கவனித்துக் கேட்பதே இல்லை.

பரத் ஓர் உளவியல் நிபுணரைச் சந்தித்தார். தான் சின்னச் சின்ன விஷயங்களுக்கும் கோபப்படுவதை ஒப்புக்கொண்டார். அதற்குக் காரணம், தன்னுடைய அலுவலகத்தில் பணி அழுத்தம் அதிகமாக இருப்பதுதான் என்று அவர் உணர்ந்தார். அவரால் அலுவலகத்தில் கோபத்தைக் காட்ட இயலவில்லை. ஆகவே, வீட்டுக்கு வந்து தன் மனைவியிடமும் குழந்தையிடமும் கத்துவார், இதனால் அவர் குற்ற உணர்வும் வெட்க உணர்வும் கொண்டார்.

உளவியல் நிபுணர் பரத்திடம், 'நீங்கள் எப்போதும் பரபரப்பாக அல்லது பதற்றமாக இருக்கிறீர்களா?' என்று கேட்டார், அதற்கு பரத் மிக வேகமாகத் தலையாட்டி ஆமோதித்தார்.

மருத்துவர் பரத்திடம் நெடுநேரம் பேசினார், அவரது அறிகுறிகளைப்பற்றி மேலும் விவரங்களைத் தெரிந்துகொண்டார், அதன்பிறகு, அவருக்குப் பொதுப் பதற்றக் குறைபாடு இருப்பதை அவர் கண்டறிந்தார். இது பலருக்கும் இருக்கிற பிரச்னைதான், இதுபோன்ற அறிகுறிகளால் பலர் துன்பப்பட்டிருக்கிறார்கள் என்பதை அறிந்து பரத் ஓரளவு நிம்மதி அடைந்தார். தனது பதற்ற நிலைகளைக் குறைப்பதற்குச் சிகிச்சை உள்ளது என்று தெரிந்து அவர் மிகவும் மகிழ்ந்தார்.

பரத் மருந்துகளை எடுத்துக்கொள்ளத் தொடங்கினார். சில வாரங்களுக்கு, அவர் ஒரு நிபுணரிடம்  ஆலோசனையும் பெற்றுவந்தார். மருந்துகளைச் சாப்பிடத்தொடங்கி இரண்டு மாதங்களுக்குள் அவர் தன்னுடைய மருத்துவரிடம் ‘என்னுடைய வாழ்க்கையில் இப்போதுதான் முதன்முறையாக நான் எதைப்பற்றியும் தொடர்ந்து கவலைப்பட்டுக்கொண்டிருக்காமல் அமைதியாக, இயல்பாக இருக்கிறேன்’ என்று சொன்னார்.

இப்போது, தன்னுடைய நிலை இன்னும் முன்னேறியிருப்பதாக பரத் உணர்கிறார். அவருடைய மனைவியும் தன் கணவரிடம் ஏற்பட்டிருக்கிற மாற்றத்தைத் தெளிவாகக் காண்கிறார். அலுவலகத்தில் உள்ளோர் அவருடைய செயல்திறன் சென்ற வருடத்தைவிட இந்த வருடம் மிகவும் உயர்ந்துவிட்டது என்று தெரிவித்துப் பாராட்டுகிறார்கள்.

இந்தப் பிரச்னை கொண்ட பல நபர்களிடம் காணப்பட்ட அறிகுறிகள், அவர்களுடைய அனுபவங்களைக் கருத்தில் கொண்டு, மனநல நிபுணர்களின் உதவியுடன் இந்த விவரிப்பு உருவாக்கப்பட்டது. இது ஒரு குறிப்பிட்ட நபரின் உண்மை அனுபவம் அல்ல, இந்தப் பிரச்னை கொண்ட ஒருவருடைய நிலையைப் புரியவைக்கும் நோக்கத்துடன் இந்த விவரிப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org