வலைப்பதிவுகள்மூலம் மனநலப் பிரச்னைகள் குணமாகுமா?

வலைப்பதிவுகளைக்கொண்டு மனக்காயங்களை ஆற்றிக்கொள்ளுதல், தொடர்புகளை உருவாக்குதல், வளர்தல்
வலைப்பதிவுகள்மூலம் மனநலப் பிரச்னைகள் குணமாகுமா?

மத்திய அமெரிக்காவின் க்வாடெமாலாவிலுள்ள கிராமப்புறங்களில், கவலை பொம்மைகள் என்ற சிறிய கைவினைப்பொருள்கள் உள்ளன, யாருக்காவது  (குறிப்பாக, குழந்தைகளுக்கு) தூங்குவதில் பிரச்னைகள் இருந்தால், அல்லது, அவர்கள் எப்போதும் கவலைப்பட்டுக்கொண்டே இருந்தால், அவர்களுக்கு இந்தப் பொம்மைகளைத் தருவார்கள். ஒவ்வொரு நாளும், அவர்கள் தூங்கச்செல்வதற்குமுன்னால், இந்தப் பொம்மைகளின் காதில் தங்களுடைய பிரச்னைகளைச் சொல்வார்கள். உடனே, அந்தப் பொம்மைகள் பிரச்னைகளை வாங்கிக்கொண்டு, அவர்கள் இரவில் நன்கு உறங்க உதவும் என்பது அவர்களுடைய நம்பிக்கை.  

இந்த டிஜிட்டல் உலகத்திலும் கவலை பொம்மைகள் உள்ளன, அவை இணைய வசதியுள்ள கணினிகளாக மாறியிருக்கின்றன. 'வலைப்பதிவு' என அழைக்கப்படும் தொழில்நுட்பத்தளத்தில் பலரும் தங்களுடைய தனிப்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள். இவர்களில் பலர், 'வலைப்பதிவுகள் என்பவை ஒருவகையான சுயசிகிச்சைகள்' என்று அனுபவப்பூர்வமாகச் சொல்கிறார்கள்.

ஒருவர் எந்தக் கலாசாரத்தைச்சேர்ந்தவராக இருந்தாலும் சரி, தன்னுடைய உணர்வுகளைச் சொற்களாக மாற்றும்போது, அவர் அமைதியடைகிறார். சிகிச்சையாளரிடம் பேசுவது, நண்பரிடம் பேசுவது, நாட்குறிப்பு எழுதுவது, வலைப்பதிவு எழுதுவது... இவை எல்லாமே ஒருவருக்கு அமைதிதரும் விஷயங்கள். ஒருவர் தன்னுடைய பிரச்னைகளைச் சொற்களாக மாற்றி எழுதும்போது, அவருடைய மூளையின் ப்ரீஃப்ரன்டல் கார்டெக்ஸ் என்ற பகுதி அதிகம் வேலை செய்கிறது, இதுதான் தர்க்கரீதியிலான, பிரச்னைகளைத் தீர்க்கும் பகுதி ஆகும். அதேசமயம், அமிக்டலா என்ற பகுதி அமைதியடைகிறது, இதுதான் உணர்வுகளைக் கையாளும் பகுதி ஆகும். ஆகவே, அவர் பிரச்னையை உணர்ச்சிப்பூர்வமாக அணுகாமல், பகுத்தறிவோடு அணுகுகிறார்.

உணர்வுகளை வெளிப்படுத்தும் எழுத்தைப்பற்றி, குறிப்பாக, அதனைச் சிகிச்சைக் கருவியாகப் பயன்படுத்துவதுபற்றிப் பல ஆராய்ச்சிகள் நடைபெற்றுள்ளன. இந்த ஆய்வுகளின்படி, ஒருவர் தனது எண்ணங்கள் மற்றும் உணர்வுகளை எழுத்தின்மூலம் வெளிப்படுத்தினால் (அதாவது, உணர்வுகளை வெளிப்படுத்தும்விதமாக எழுதினால்), அவரால் அழுத்தத்தை நன்கு சமாளிக்க இயலுகிறது, நமது ஞாபகசக்தியை மேம்படுத்த இயலுகிறது, மருத்துவரிடம் செல்லும் அவசியம் பாதியாகக் குறைகிறது. இதுபற்றிப் பேசும்போது, அமெரிக்காவைச் சேர்ந்த சமூக உளவியலாளரான டாக்டர் ஜேம்ஸ் பென்னெபேக்கரை நினைக்கவேண்டும். இருபது ஆண்டுகளுக்குமுன்பாக, டாக்டர் பென்னெபேக்கர் சில பரிசோதனைகளை நிகழ்த்தினார், அவற்றில் பங்கேற்றவர்களுக்கு ஓர் எளிய வேலை தரப்பட்டது: தினமும் 20 நிமிடங்களுக்கு நிறுத்தாமல் எழுதவேண்டும், இந்த வேலையை 3-4 நாள்களுக்குத் தொடர்ந்து செய்யவேண்டும். இந்த வேலையை ஒழுங்காகச் செய்தவர்களுக்கு, பலவிதமான நல்ல பலன்கள் கிடைத்தன. உதாரணமாக, தேர்வுகளில் அவர்கள் நல்ல மதிப்பெண்களை எடுத்தார்கள், அவர்களது நோய் எதிர்ப்புசக்தி மேம்பட்டது. வெளிநாட்டில்மட்டுமல்ல, நம்நாட்டிலும் இந்தப் பயிற்சி பலன் தந்துள்ளது. சென்னையிலிருந்துக்கும் ஈஸ்ட் வெஸ்ட் ஆலோசனை மையத்தின் வெளிப்பாட்டுக் கலைகள் சிகிச்சையாளர் மற்றும் இயக்குநர் மக்தலீன் ஜெயரத்னம் தன்னிடம் சிகிச்சைபெறுவோரில் பெரும்பாலானோரைத் தினமும் நாட்குறிப்பு எழுதச்சொல்கிறார். படைப்பூக்கம் கொண்ட எழுத்தின் எல்லா வடிவங்களும் தனது பணியில் உதவுவதாகச் சொல்கிறார் அவர். உதாரணமாக, அவரிடம் சிகிச்சைபெற்ற 16 வயது இளைஞர் ஒருவர் சொன்னது இது: “இந்தக் கதை பழங்குடியினரைப்பற்றியது, இவர்கள் நகரங்களுக்குச் சென்று எடுபிடிவேலைகளைச் செய்வதுபற்றியது. அப்போது, அந்த நகரத்தில் இருக்கும் ஓர் அரசியல்வாதி இந்தப் பழங்குடியினரைக் கடுமையாக வேலை வாங்குகிறார், அவர்களைத் துன்புறுத்துகிறார். இதைப் பார்க்கும் அந்த அரசியல்வாதியின் மகன், பழங்குடியினர் தங்கள் வாழ்க்கையை மீளமைத்துக்கொள்வதற்கான ஒரு திட்டத்தை உருவாக்குகிறான். இந்தக் கதையைப் படித்தவுடன், என்னிடம் சிகிச்சைபெற வந்திருப்பவரைப்பற்றி நான் போதுமான அளவு புரிந்துகொண்டேன், காரணம், அவரும் சமீபத்தில்தான் ஒரு சிறு நகரிலிருந்து சென்னைக்கு வந்திருந்தார்,” என்கிறார் ஜெயரத்னம். எழுதப்படும் சொல்லானது, எழுதுபவரை நன்கு தேற்றுகிறது, அவரது காயங்களை ஆற்றுகிறது.

இந்தத் தொழில்நுட்ப யுகத்திலும், எழுதுதல் ஒரு முக்கியமான சுயவெளிப்பாட்டு ஊடகமாக உள்ளது, ஆனால், இப்போதெல்லாம் அதிகப்பேர் கையில் நாட்குறிப்பு எழுதுவதில்லை, இணையத்தில் வலைப்பதிவுகளாக எழுதுகிறார்கள். தனிப்பட்ட நாட்குறிப்பு எழுதினாலும் சரி, வலைப்பதிவு எழுதினாலும் சரி, அதன்மூலம் உணர்ச்சிகள் வெளிப்படுகின்றன, குரல்கள் வெளித்தெரிகின்றன. அதேசமயம், வலைப்பதிவுகளில் ஒரு கூடுதல் நன்மை உண்டு.

தொழில்நுட்ப ஊடகமான வலைப்பதிவுகளில், வாசிப்பதற்குச் சிலர் இருக்கிறார்கள். அது ஓர் உரையாடல் ஊடகமாக அமைகிறது. இது ஒரு நவீன குழுச் சிகிச்சைபோலதான். ஒரே ஒரு வித்தியாசம், இங்கே சிகிச்சையாளர் கிடையாது, உரையாடல்களை யாரும் வழிநடத்துவதில்லை. நாம் வலைப்பதிவுகளை எழுதும்போது, மனித உறவுகளுக்கான நமது தேவையை நாம் பூர்த்திசெய்துகொள்கிறோம். நம்மைப்பற்றி யார் என்ன நினைப்பார்களோ என்று பயப்படாமல் நாம் நமது எண்ணங்களை எழுதுகிறோம், வாசிப்பவர்கள் அதுபற்றிய தங்கள் கருத்துகளைச் சொல்கிறார்கள், நாம் அவற்றுக்குப் பதில் எழுதுகிறோம், சிலநேரங்களில், உலகின் இன்னொருமூலையில் இருக்கும் ஒருவருடைய அனுபவத்தை நேரடியாகத் தெரிந்துகொள்கிறோம்.

வலைப்பதிவுகள் பலதரப்பட்ட மக்களை ஒருங்கிணைக்கின்றன. வேறு எந்தவழியிலும் இவர்கள் சந்திக்க வாய்ப்பில்லை. இணைய நண்பர்கள் நிஜமானவர்கள் அல்ல என்கிற எண்ணத்தை வலைப்பதிவுகளின்மூலம் பழகுகிறவர்கள் பொய்யாக்கிவிடுகிறார்கள். purisubzi.in என்ற இணையத்தளத்தில் பல விஷயங்களை நேர்மையாக எழுதிவரும் எழுத்தாளர், வலைப்பதிவாளர் பரத், 'நண்பர்கள் அருகே இருக்கவேண்டும் என்பது உண்மையில்லை' என்கிறார், 'நட்பின் வரையறைகள் மாறிவிட்டன. உண்மையான நட்புக்கு எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை. சமீபத்தில் எனக்குக் கிடைத்த பல நல்ல நண்பர்கள், இணையம்மூலம் அறிமுகமானவர்கள்தான். பகிர்ந்துகொள்ளப்படும் ஆர்வங்கள் மற்றும் உணர்வுகளை அடித்தளமாகக்கொண்ட நட்பு நிச்சயம் வளரும், அந்த நண்பர் எங்கே வசிக்கிறார் என்பது முக்கியமில்லை.'

மனநலப் பிரச்னைகளைக்கொண்டோருக்கு, வலைப்பதிவுகள் நன்கு உதவும். காரணம், இவர்கள் தனிமையாக உணர்வது சகஜம். இப்படிப்பட்டவர்களுக்கு வலைப்பதிவுகள் உதவுகின்றன என்பதற்கு எந்த வலுவான அறிவியல் ஆதாரமும் இல்லைதான். ஆனால், 2012ல் சில இஸ்ரேலிய ஆய்வாளர்கள் 161 பதின்பருவத்தினரிடம் ஓர் ஆய்வை நிகழ்த்தினார்கள். இவர்கள் எல்லாரிடமும் பல நிலைகளில் சமூகப் பதற்றம் அல்லது மனத்துயர் காணப்பட்டது. இந்தப் பதின்பருவத்தினர் ஆறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டார்கள்; முதல் நான்கு குழுக்களில் இருந்தவர்கள் வலைப்பதிவுகளை எழுதினார்கள், மீதமுள்ள இரு குழுக்களைச்சேர்ந்தவர்கள் ஒரு தனி நாட்குறிப்பை எழுதினார்கள், அல்லது, எதுவுமே எழுதவில்லை. பத்து வாரத்துக்குப்பிறகு, ஆய்வாளர்கள் இவர்களைப் பரிசோதித்தார்கள், தனி நாட்குறிப்பு எழுதியவர்கள், எதுவுமே எழுதாதவர்களுடன் ஒப்பிடும்போது, வலைப்பதிவு எழுதியவர்களிடையே சுய மதிப்பு கணிசமாக மேம்பட்டிருந்ததைக் கண்டார்கள்.

ஆகவே, மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது, அவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்கள் தங்களுடைய அனுபவங்களை ஒரு வலைப்பதிவில் பகிர்ந்துகொள்ளத்தொடங்கலாம். இதன்மூலம் ஒரு மெய்நிகர் சமூகத்தின் ஆதரவு அவர்களுக்குக்கிடைக்கும், இதேபோன்ற சவால்களைச் சந்தித்துக்கொண்டிருக்கும் பிறரை அறிந்து ஊக்கம் பெறலாம். உதாரணமாக, தனிநபர் பிராண்டிங் வழிகாட்டி மற்றும் வலைப்பதிவரான விஜய் நல்லவாலாவை எடுத்துக்கொள்ளலாம். 2012ல் அவர் தனது இருதுருவக்குறைபாட்டு அனுபவத்தைப்பற்றி ஒரு வலைப்பதிவு எழுதினார். அடுத்த சில மணி நேரங்களுக்குள், அந்த வலைப்பதிவில் கருத்துகளும் ஆலோசனைகளும் குவிந்தன. விஜய் அசந்துபோனார், “உலகத்தில் இருதுருவக் குறைபாட்டால் அவதிப்படுபவன் நான்மட்டுமில்லை, அது எனக்கே நன்றாகத் தெரியும்" என்கிறார் அவர், "இதில் புதிதாகச் சொல்வதற்கு எதுவும் இல்லை,  ஆனால், நான் இப்படி எழுதியதும், எனக்கு மிகவும் நன்றாகத் தெரிந்த நண்பர்கள், உறவினர்களெல்லாம்கூட இந்தப் பிரச்னையை அனுபவித்திருக்கிறார்கள் என்று தெரிந்துகொண்டேன். இதுபற்றி என்னிடம் பேசிய எல்லாருக்கும் ஒரு பொதுவான இழை இருந்தது. அவர்களில் கிட்டத்தட்ட யாருமே நிபுணர்களிடம் உதவிபெறவில்லை. பலர், உதவிபெற மறுத்துவிட்டார்கள், அல்லது, பாதியில் சிகிச்சையை நிறுத்திவிட்டார்கள்." ஆகவே, இதுபோன்ற பிரச்னை கொண்டவர்கள் அதுபற்றி வெளிப்படையாகப் பேசுவதற்கான ஒரு தளத்தை உருவாக்கவேண்டும் என்று விஜய் தீர்மானித்தார். அப்போது அவர் உருவாக்கிய தளம், http://www.bipolarindia.com, இந்தியாவில் இருதுருவக் குறைபாடு மற்றும் மனச்சோர்வைப்பற்றிப்பேசும் முதல் இணையச் சமூகம் இதுதான். இதனை விஜய் முன்னின்று உருவாக்கினார், இது அவரது பிரச்னை குணமாவதற்கும் குறிப்பிடத்தக்கவகையில் உதவியது.

ஒருவர் தன்னை வெளிப்படுத்துவதற்கு வலைப்பதிவுகள் நல்ல கருவிகள். அர்த்தமுள்ள இணைப்புகளை உருவாக்கவும் இது உதவக்கூடும். அதேசமயம், மற்ற பல சமூக ஊடகக் கருவிகளைப்போலவே, இதிலும் சில விஷயங்களில் எச்சரிக்கை தேவை. புதிதாக வலைப்பதிவு எழுதவருகிறவர்கள் நினைவில்கொள்ளவேண்டிய சில விஷயங்கள்:

  • இணையம் ஒருபோதும் மறப்பதில்லை! ஆகவே, எதையாவது பிரசுரிக்குமுன், ஒருமுறைக்கு இருமுறை யோசிக்கவேண்டும். ஒருவர் தான் எழுதிய கட்டுரையை அழிப்பது எளிதுதான். ஆனால், இணையத்தில் அதன் தாக்கங்கள் பலநாளைக்குத் தொடரும்.
  • ஒருவர் எழுதப்போகும் விஷயம் மிகவும் அந்தரங்கமானது என்றால், அதை ஒரு புனைபெயரின்கீழ் எழுதுவது நல்லது. அல்லது, சில வலைப்பதிவாளர்களைப்போல் ஒரு தனிநபர் நாட்குறிப்பைத் தொடங்கி எழுதலாம், அதை மற்ற யாரும் படிக்கமாட்டார்கள், ஆகவே எண்ணங்களைச் சுதந்தரமாக வெளிப்படுத்தலாம். “நான் வலைப்பதிவுகளில் பலவிதமான உணர்வுகளை வெளிப்படுத்திவந்தாலும், என்னுடைய ஆழமான உணர்வுகளை நான் எனது நாட்குறிப்பில்தான் எழுதுகிறேன்" என்கிறார் பரத், "இதற்குக் காரணம் உண்டு, என்னைப்பொறுத்தவரை, என்னுடைய உணர்வுகளை நான் எந்தவடிவத்தில் எழுதினாலும், அது என்னுடைய பாதிப்பு சாத்தியங்களை வெளிப்படுத்துவதாகவே அமைகிறது. ஆகவே, நான் எழுதுவதை யார் பார்க்கவேண்டும், எந்த அளவு பார்க்கவேண்டும் என்பதை நானே கட்டுப்படுத்த விரும்புகிறேன்.”
  • முக்கியமாக, ஒருவருக்கு மனநலப் பிரச்னை இருப்பது கண்டறியப்பட்டிருக்கும்போது, அவர் வலைப்பதிவுகளை எழுதினால், அவருடைய சிந்தனை தெளிவாகும், அவருக்கு ஓர் ஆதரவு வலைப்பின்னல் உருவாகும். ஆனால் அதற்காக, நிபுணரின் சிகிச்சை அவசியமில்லை என எண்ணிவிடக்கூடாது. ஒருபக்கம் முறைப்படி சிகிச்சை பெற்றபடி, இன்னொருபக்கம் வலைப்பதிவுகளை எழுதிவந்தால், முழுமையான பலன் கிடைக்கும்.

வலைப்பதிவுத் தளங்கள்:

வலைப்பதிவுகளை உருவாக்க விரும்புவோருக்கு, பின்வரும் மூன்று தளங்கள் நன்கு பயன்படும்:

மனநலம்பற்றிய வலைப்பதிவுகள்:

மனநலம்பற்றிய வலைப்பதிவுகளில் என்ன எழுதுவது, எப்படி எழுதுவது என்று அறியவிரும்புவோர், இந்த மூன்று இந்திய வலைப்பதிவுகளை வாசிக்கலாம்:

https://autismindianblog.blogspot.com: ஆட்டிசம் கொண்ட தன் மகனை வளர்க்கும் 'சவாலான, அதேசமயம் அழகிய அனுபவத்தை' ஓர் இந்தியத் தந்தை இங்கே எழுதுகிறார். “ஆட்டிசம் பற்றிய விஷயங்களை, அதைச் சமாளிக்கும் வழிமுறைகளைக் கற்றுக்கொள்வது ஒரு பரிசோதனைதான்" என்கிறார் இவர், "இதை நான் பகிர்ந்துகொள்ளக்காரணம், பிறரும் இதனை வாசித்துப் பலன்பெறுவார்கள் என்பதுதான்.”

https://indianhomemaker.wordpress.com: ஓர் இந்திய நகரத்தைச்சேர்ந்த இல்லத்தரசி ஒருவருடைய தினசரி வாழ்க்கையின் பதிவுகள். இவர் பல நுட்பமான தலைப்புகளை எழுதுகிறார், உதாரணமாக, சோகத்தைக் கையாளுதல், குடும்ப வன்முறை, பாலியல் பாரபட்சம் போன்றவை.

https://swapnawrites.wordpress.com: ஸ்வப்னாவின் தாய்க்கு டிமென்ஷியா இருந்தது. தான் அவரைக் கவனித்துக்கொண்ட அனுபவங்கள், தவறுகள், கற்றுக்கொண்ட பாடங்களை ஸ்வப்னா வலைப்பதிவுகளாக எழுதத் தொடங்கினார். பின்னர், இதேபோன்ற பிரச்னைகளைச் சந்திக்கும் பிறருக்கு அவர் உதவத்தொடங்கினார். ஒரு தன்னார்வலராகத் தான் கவனித்த விஷயங்களையும் பகிர்ந்துகொண்டார். இப்போது ஸ்வப்னாவின் தாய் உயிருடன் இல்லை. ஆனாலும், ஸ்வப்னா தொடர்ந்து வலைப்பதிவுகள் எழுதுகிறார், டிமென்ஷியா பிரச்னை கொண்டோரைக் கவனித்துக்கொள்வதுபற்றிய எதார்த்தமான பிரச்னைகளைப் பதிவுசெய்கிறார்.

சான்றுகள்:

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org