தற்கொலைபற்றிப் பேசுதல்

தற்கொலை என்பது மிகவும் நுண்ணுணர்வான ஒரு விஷயம், பலகாலமாகச் சமூகம் அதனைக் களங்கமாகவே பார்த்துவந்துள்ளது. தற்கொலையால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் தனிமையாக உணர்கிறார்கள், தங்களுக்கு யாரும் உதவுவதில்லை என எண்ணுகிறார்கள், சமூகம் தங்களை எடைபோடும் என எண்ணி அஞ்சுகிறார்கள். ஆகவே, தற்கொலையைப்பற்றிய உரையாடல்களை அதிகரிக்கவேண்டும், அதன்மூலம், தற்கொலையைச் சுற்றியிருக்கிற விலக்கப்பட்டதன்மையை நீக்கவேண்டும், அதேசமயம், அது ஒரு நோய் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும், அதைப்பற்றி விவாதிக்கும்போது, நுண்ணுணர்வுடன் நடந்துகொள்ளவேண்டும்.

தற்போது, தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது, ஆகவே, ஒவ்வொருவரும் அப்படியொரு நிகழ்வை அக்கம்பக்கத்தில் காண்பது சாத்தியமே. இதனால், தற்கொலை செய்துகொண்டவருடைய குடும்பத்தினர், நண்பர்கள், அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் என எல்லாரும் தீவிர அதிர்ச்சி, துயரத்தைச் சந்திக்கிறார்கள். இந்த நிகழ்வு அவர்கள்மீது பெரும் தாக்கத்தை உண்டாக்குகிறது. தற்கொலையைப்பற்றிப் பேசும்போது, மனத்தில் கொள்ளவேண்டிய சில விஷயங்கள்:

  • தற்கொலைக்கான காரணம் என்னவாக இருக்கும் என்று ஊகிக்கவேண்டாம்: தற்கொலை என்பது, பல்வேறு காரணிகளின் தொகுப்பால் ஒருவருக்கு ஏற்பட்ட தீவிர துயரத்தின் விளைவு ஆகும். தற்கொலைக்கான காரணங்களைப்பற்றி ஊகிப்பது சரியல்ல, அதன் பின்னணியிலிருக்கும் காரணத்தை இது சிறுமைப்படுத்திவிடுகிறது. ஆகவே, இறந்தவருடைய தனிநபர் உரிமையைப் பிறர் மதிக்கவேண்டும்.
  • தற்கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட முறையைப்பற்றி விவாதிக்கக்கூடாது: ஒருவர் எப்படித் தற்கொலைசெய்துகொண்டார் என்பதைப்பற்றிப் பேசுவதும், அவருடைய தனிநபர் உரிமையில் குறுக்கிடுவதாகும். அத்துடன், தற்கொலை அபாயத்தில் உள்ள மற்றவர்கள் இதைக் கேட்கும்போது, பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள், தங்கள் வாழ்வை எப்படி முடித்துக்கொள்ளலாம் என்று அவர்களுக்குச் சில யோசனைகள் கிடைக்கின்றன.
  • இறந்தவரைப்பற்றித் தீர்ப்புச்சொல்லவேண்டாம்; தற்கொலை என்பது பலவீனத்தின் அடையாளம் அல்ல: தற்கொலை என்பது, ஒரு சிக்கலான விஷயம். ஒருவருடைய வாழ்க்கையில் ஆழமாக வேரூன்றியுள்ள விஷயங்களுடைய தொகுப்பின் விளைவாக இது ஏற்படுகிறது. அது ஒரு நோய், அதனைப் பலவீனமாக எண்ணவேண்டாம்.
  • ஒரு குடும்பத்தில் யாராவது தற்கொலை செய்துகொண்டால், அந்தக் குடும்பத்துக்குப் பிறருடைய ஆதரவு தேவை. அவர்கள் விரும்பினாலன்றி, தற்கொலையைப்பற்றிப் பேசவேண்டாம்: குடும்ப உறுப்பினர் ஒருவருடைய தற்கொலையை எண்ணித் துயரத்தில் உள்ளவர்கள் தனிமையாக உணர்கிறார்கள், அத்துடன், தற்கொலையைச் சுற்றியுள்ள களங்கவுணர்வு அவர்களுடைய நிலையை இன்னும் மோசமாக்கிவிடுகிறது. ஒருவருடைய நண்பரோ உறவினரோ தற்கொலை செய்துகொண்டால், துயரத்தில் இருக்கிற அவரிடம் எப்படிச் சென்று பேசுவது என்று பிறர் தயங்கலாம், அவர்களிடம் என்ன சொல்வது என்று புரியாமல் திணறலாம். அதுபோன்ற நேரங்களில், மிகுந்த மனத் துயரத்தில் இருக்கும் அவர்கள் எதிர்பார்ப்பதெல்லாம், மற்றவர்களுடைய ஆதரவைதான் என்பதை நினைவில்கொள்ளவேண்டும்.
  • அவர்களிடம் இதுபோன்ற விஷயங்களைச் சொல்லக்கூடாது: “இறந்தவர் தன்னுடைய குடும்பத்தை எண்ணிப்பார்க்கவில்லையா?” அல்லது “இப்படிச் செய்ய அவருக்கு எப்படி மனம் வந்தது?”: இது, மூன்றாவது அம்சத்தின் தொடர்ச்சிதான், அவசரப்பட்டு எந்தத் தீர்மானத்துக்கும் வரக்கூடாது, அவருடைய உணர்ச்சிகளைத் தான் புரிந்துகொண்டுவிட்டதாக எண்ணக்கூடாது. 

தற்கொலை 'செய்துகொண்டார்' என்று சொல்வதுபற்றி...

தற்கொலைபற்றிய ஆரோக்கியமான உரையாடல்களை உருவாக்க, அதைப்பற்றிச் சமூகத்தில் இருக்கும் களங்கவுணர்வைப் போக்கக்கூடிய சரியான சொற்களை நாம் பயன்படுத்துவது முக்கியம். தற்கொலை 'செய்துகொண்டார்' என்ற சொல், முன்பு தற்கொலை ஒரு குற்றமாகக் கருதப்பட்டபோது உருவானது. அதன்பிறகு, தற்கொலைபற்றிப் பல ஆராய்ச்சிகள் நிகழ்ந்துள்ளன, அந்த எண்ணம் சிலருக்கு ஏன் வருகிறது என்பதுபற்றி நிபுணர்கள் ஆராய்ந்துள்ளனர், முன்பைவிட இப்போது நாம் இதனை நன்கு புரிந்துகொண்டுள்ளோம். இந்தப் பின்னணியில் பார்க்கும்போது, நாம் இந்தப் பிரச்னையை நுண்ணுணர்வுடன் அணுகவேண்டும், தற்கொலையால் பாதிக்கப்பட்டவர்களை அவதூறு செய்யக்கூடாது. ஆகவே 'தற்கொலை செய்துகொண்டார்' என்பதுபோன்ற சொற்களைக் குற்றம்போல் சொல்வதைத் தவிர்க்கலாம், 'வாழ்க்கையை முடித்துக்கொண்டார்' என்பதுபோன்ற சொற்களைப் பயன்படுத்தலாம்.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org