மனநலம்: நமது பார்வை

உடல்நலப் பிரச்னைகளை எப்படி அணுகுகிறோமோ, அதேபோல்தான் மனநலப் பிரச்னைகளையும் அணுகிச் சரிசெய்யவேண்டும்

எழுதியவர்: டாக்டர் ஷ்யாமளா வத்ஸா

எனக்கு எட்டு அல்லது ஒன்பது வயதாகியிருந்தபோது, முதன்முறையாக மனநலப் பிரச்னைகளைப்பற்றிக் கேள்விப்பட்டேன். என் தாயும் நானும் காந்திபஜாரை நோக்கி நடந்துகொண்டிருந்தோம். எதிரே ஒரு கூட்டம், அதன் நடுவே ஓர் ஆண் கிழிந்த அழுக்குத் துணியில், சிக்குப்பிடித்த தலைமுடியுடன் நின்றிருந்தார். அவர் தன்னுடைய கைகளை வேகமாக ஆட்டியபடி கோபத்துடன் கத்திக்கொண்டிருந்தார், ஆனால், அவர் யார்மீதும் குறிப்பாகக் கோபப்படுவதுபோல் தோன்றவில்லை. என் தாய் என்னைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டார், "சீக்கிரம் வா" என்றார், "நாம் இங்கிருந்து போய்விடவேண்டும். அந்த ஆளுக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறது. அவனால் நமக்கு ஆபத்து வரலாம்."

அடுத்த பல ஆண்டுகளில், நான் பல 'பைத்தியம் பிடித்த'வர்களைத் திரைப்படங்களிலும் புத்தகங்களிலும் பார்த்தேன். அவர்கள் மனநல பாதிப்பு கொண்டவர்களை இப்படிதான் காட்சிப்படுத்தினார்கள். அந்த எண்ணம் எனக்குள் வலுப்பெற்றது. அந்த நேரத்தில்தான், 'பைத்தியம்' பிடித்தவர்கள் மனநல நிபுணரிடம் சிகிச்சை பெறவேண்டும் என்று நான் தெரிந்துகொண்டேன். அதன்பிறகு, 'மனநல நிபுணர்கள் பைத்தியம் பிடித்தவர்களுக்குச் சிகிச்சையளிக்கிறார்கள்' என்று எண்ணிக்கொண்டேன்.

மனநலப் பிரச்னை = பைத்தியம். அநேகமாக எல்லா இளைஞர்களுக்கும் மனநலப் பிரச்னையைப்பற்றி இப்படிதான் சொல்லித்தரப்படுகிறது. சூரியனும் சந்திரனும் ஒரே அளவுதான் என்று நம்புவதுபோல, அவர்கள் இதையும் நம்புகிறார்கள். இந்த எண்ணத்தை அவர்கள் மாற்றிக்கொள்ளவில்லையென்றால், அவர்கள் மனத்தில் இந்தத் தவறான கருத்துகள் நிலைத்துவிடுகின்றன. பின்னர் அவர்களுக்கே இந்தவிஷயத்தில் உதவி தேவைப்பட்டால், அல்லது, அவர்களுடைய அன்புக்குரிய யாருக்கேனும் உதவி தேவைப்பட்டால், இந்த எண்ணம் அவர்களைத் தடுக்கிறது. "என்னது? நான் மனநல மருத்துவரைச் சந்திக்கவேண்டுமா! அப்படியானால், எனக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறது என்று சொல்கிறாயா?" மனநலப் பிரச்னை கொண்ட ஒருவரிடம் 'நீங்கள் ஒரு மனநல நிபுணரிடம் ஆலோசனை பெறலாமே' என்று யாராவது சொன்னால், அவருக்குக் கிடைக்கும் பொதுவான பதில் இதுதான்!

இதயம், நுரையீரல், சிறுநீரகம், கல்லீரல்... இப்படி உடலின் ஒவ்வொரு பகுதியையும் பாதிக்கக்கூடிய பல நோய்கள் இருக்கின்றன. அப்படியானால், மூளைக்குமட்டும் நோயே வராது என்று ஏன் நினைக்கவேண்டும்? (அல்லது: மூளையைமட்டும் நாம் ஏன் வித்தியாசமாக நடத்தவேண்டும்?)

ஒரு பொருள், மனிதனுடைய கண்ணின் கருவிழியில் தோன்றுகிறது, பிறகு அது மூளைக்குச் செல்கிறது, மூளை அதனைப் புரிந்துகொள்கிறது. இந்தக் காலகட்டத்தில் பலவிதமான செயல்பாடுகள் நிகழ்கின்றன. இந்தச் செயல்முறையை நாம் ஒரு பெரிய விஷயமாகக் கருதுவதில்லை. காரணம், அது சில நானோவிநாடிகளில் நடைபெற்றுவிடுகிறது. உதாரணமாக, ஒருவர் ஐஸ் க்ரீம் கோன் ஒன்றைப் பார்க்கிறார், "ஆஹா! இது சாக்லெட் ஐஸ் க்ரீம்" என்று எண்ணுகிறார். இந்த எண்ணத்தை உருவாக்குவதற்காக, ஆயிரக்கணக்கான செல்கள் இணைந்து பணிபுரிகின்றன. இந்த நிகழ்வுகள் ஏற்படக் காரணம், நரம்பு செல்களுக்கிடையே நடைபெறும் தகவல்தொடர்புதான். இது நியூரோட்ரான்ஸ்மிட்டர்கள் எனப்படும் வேதிப்பொருள்களின்மூலம் நிகழ்கிறது. ஒரு குறிப்பிட்ட வேதிப்பொருள் சரியாக இணைப்பை ஏற்படுத்தாவிட்டால், கண்ணில் இருக்கும் இரண்டு நரம்பு செல்களுக்கு இடையிலுள்ள இணைப்பு தவறாகச் செயல்படக்கூடும், ஆகவே, கண்ணால் ஐஸ் க்ரீமைக் காண இயலாது. அதனால், தன்முன்னே இருப்பது ஐஸ் க்ரீம் என்று மூளையால் உணர இயலாது. காரணம், அந்தக் காட்சியைப் புரிந்துகொள்வதில் பங்கேற்கும் மூளைப் பகுதிகளுக்கு இணைப்பு வந்துசேர்வதில்லை.

அதேபோல், நரம்பு செல்களும் நியூரோட்ரான்ஸ்மிட்டர்களும் ஒருவருடைய சிந்தனையில் பங்கேற்கின்றன. அவை சரியாக வேலைசெய்யவில்லை என்றால், ஒருவருடைய எண்ணங்கள் பாதிக்கப்படும், அதனால், அவர் நடந்துகொள்ளும்விதமும் பாதிக்கப்படும். ஆகவே, மனநலப் பிரச்னைகளுக்கு ஓர் உயிரியல் அடிப்படை உள்ளது, நீரிழிவைப்போல, பார்க்கின்சன் குறைபாட்டைப் போல.

மனநலப் பிரச்னைகளில் கிட்டத்தட்ட 90% மிகச் சாதாரணமானவை, இன்ஃப்ளூயன்ஸாபோல், ஜலதோஷம்போல், அலர்ஜிபோல், தோல் பிரச்னைபோல், தலைவலிபோல், காதுவலிபோல், வயிற்றுப்போக்கைப்போல்... இந்தப் பிரச்னைகளுக்கெல்லாம் மக்கள் தங்களுடைய பொது மருத்துவரை (GP) அணுகிச் சிகிச்சை பெறுகிறார்கள். உதாரணமாக, ஒருவர் தனக்கு வயிறு வலிக்கிறது என்று GPயிடம் சென்றால், அந்த மருத்துவர் அவரைப் பரிசோதித்து, 'அசிடிட்டி' என்பார், அதனைக் குணப்படுத்துவதற்காக ஓர் அன்டாசிடைத் தருவார். இதனால் உங்களுக்குப் பதற்றம் ஏற்படுகிறதா என்று அவர் கேட்பார், பாதிக்கப்பட்டவர் ஆம் என்று சொன்னால், அந்தப் பதற்றத்தைக் குறைக்க ஒரு மருந்து தருவார். ஆன்க்ஸியோலிடிக் மருந்து எனப்படும் பதற்றத்தைக் குறைக்கிற மருந்தை இரண்டு வாரங்கள் சாப்பிட்டபிறகும், அவருடைய பதற்றம் தொடர்ந்தால், அவர் ஒரு மனநல நிபுணரைச் சந்திக்கவேண்டும் என்று GP சிபாரிசு செய்வார். அதே GPயிடம் யாராவது காதுவலி என்று வந்தால், அதற்குச் சிகிச்சை தருவார், ஒருவேளை அந்தச் சிகிச்சை பலனளிக்காவிட்டால், அவரை ஓர் ENTயிடம் செல்லுமாறு சொல்வார். அதேபோல்தான் இதுவும்.

ஆறு மாதங்களுக்குமுன்னால், நான் ஒரு பெண்ணைச் சந்தித்தேன். அவருக்கு வயது 35. அவர் ஏதேதோ எண்ணங்களால் குழம்பிப்போயிருந்தார், தன் வாழ்க்கையைச் சமாளிக்க இயலாமல் தடுமாறினார். அவருக்கே தெரியாமல் எப்படியோ உள்ளே நுழைந்த அந்த எண்ணங்கள் அவரை மிகவும் தொல்லை செய்தன, அவரால் அதைக் கட்டுப்படுத்தவே இயலவில்லை, அந்த எண்ணங்களைத் தன்னுடைய சிந்தனையிலிருந்து அகற்றவும் இயலவில்லை. அவர் எப்போதும் பதற்றமாக இருந்தார், உயர் ரத்த அழுத்தம் வந்து அதற்குச் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தார், அவருக்குத் தூக்கம் சரியாக இல்லை, அடிக்கடி வாந்தி வருவதாலும், வயிற்றில் தொடர்ந்து வலி ஏற்படுவதாலும், அவரால் சரியாகச் சாப்பிட இயலவில்லை. அவருடைய கணவர், முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லாமல் அவரருகே அமர்ந்திருந்தார். ஒரே ஒருமுறைமட்டும் அவர் வாய்திறந்து பேசினார், 'எனக்கு இந்தத் திருமணம் வேண்டாம், நான் இந்த உறவிலிருந்து வெளியேற விரும்புகிறேன்' என்றார். தன் மனைவியின் நடவடிக்கைகள் அவருக்கு எரிச்சலைத் தந்திருந்தன, அவர் அடிக்கடி மருத்துவரிடம் செல்லவேண்டியிருப்பது பிடிக்கவில்லை, அவரது அறிகுறிகளுக்கு நிரந்தரத் தீர்வு எதுவும் இல்லை என்று அவர் கருதத்தொடங்கியிருந்தார். இந்தப் பிரச்னை, அவர்களுக்குத் திருமணமாகிப் பன்னிரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்துகொண்டிருந்தது. வீட்டில் சமையல் சரியில்லை, எங்குபார்த்தாலும் குப்பை, குழந்தையைச் சரியாக வளர்க்க இயலவில்லை... அவர்கள் இருவரும் ஒருமுறைகூட ஒழுங்காகப் பேசிக்கொள்ள இயலவில்லை. கணவர் எதைப்பேசினாலும், மனைவி குறுக்கிட்டுப் பேசுவார், திடீரென்று அழுவார், தற்கொலை செய்துகொள்ளப்போவதாக பயமுறுத்துவார்.

அவருக்கு என்ன பிரச்னை என்பதைக் கண்டறிந்து, அதற்கான மருந்துகள் தரப்பட்டன. அதன்பிறகு, ஆறு மாதங்களில் அவருடைய அறிகுறிகள் கொஞ்சம்கொஞ்சமாகக் குறைந்தன. இப்போது, அவர் வேலைக்குச் செல்கிறார், அவர்கள் விவாகரத்தைப்பற்றிப் பேசுவதில்லை. காரணம், அவர்களுக்கிடையிலான உறவு நன்கு மேம்பட்டுவிட்டது. அவர்கள் வீடு இன்னும் குப்பைபோல்தான் கிடக்கிறது, ஆனால், அதைச் சரிசெய்துவிட இயலும் என்று அவர் மகிழ்ச்சியுடன் பேசுகிறார்.

மனநலப் பிரச்னை சார்ந்த அறிகுறிகளான அதீத சோகம், பயம் அல்லது கோபத்துக்கு ஒருவர் சிகிச்சை பெறுகிறாரா, இல்லையா என்பது, 'மனநலப் பிரச்னை' என்பதை அவர் எப்படிப் பார்க்கிறார் என்பதைப்பொறுத்து அமைகிறது. மனநலப் பிரச்னைகளைப்பற்றிய தவறான நம்பிக்கைகளைத் தெளிவுபடுத்தினால், மக்கள் உடல்சார்ந்த பிரச்னைகளை எப்படிக் கையாள்கிறார்களோ அதேபோல் மனம்சார்ந்த பிரச்னைகளையும் கையாளத் தொடங்குவார்கள்.

டாக்டர் ஷ்யாமளா வத்ஸா பெங்களூரைச் சேர்ந்த உளவியலாளர், இருபது ஆண்டுகளுக்கும்மேலாக இத்துறையில் பணியாற்றிவருகிறார்.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org