புத்திசாலித்தனக் குறைபாடு (மனநிலைச் சிதைவு): உண்மை அறிவோம்

தவறான நம்பிக்கை: புத்திசாலித்தனக் குறைபாடு என்பது மரபு வழியில் வரும் ஒரு பிரச்னை.

உண்மை: சில நேரங்களில் புத்திசாலித்தனக் குறைபாடு மரபு வழியில் வரலாம். ஆனால் பெரும்பாலான நேரங்களில் அது வெளி பாதிப்புகளால்தான் ஏற்படுகிறது, இவற்றில் சிலவற்றை நாம் கட்டுப்படுத்தலாம்.

தவறான நம்பிக்கை: புத்திசாலித்தனக் குறைபாடு ஒரு தொற்று நோய்.

உண்மை: இது முற்றிலும் பொய். புத்திசாலித்தனக் குறைபாடு என்பது எந்த விதமான தொடர்பினாலும் தொற்றுவதில்லை.


தவறான நம்பிக்கை: புத்திசாலித்தனக் குறைபாடு உள்ள குழந்தைகளை அவர்களுடைய பெற்றோர் கண்டிக்கக் கூடாது, காரணம் அவர்கள் அழுதால் அது அவர்களுக்கு நல்லதல்ல.

உண்மை: எல்லாக் குழந்தைகளையும் போலவே புத்திசாலித்தனக் குறைபாடு கொண்ட குழந்தைகளுக்கும் அவர்களுடைய பெற்றோர் நல்ல நடத்தையைச் சொல்லித்தர வேண்டும். அதே சமயம் அவர்களுக்கு நல்ல ஒழுக்கங்களைச் சொல்லித்தரும்போது அவர்களுடைய குறைபாடுகள், வரம்புகளையும் கருத்தில் கொள்ளவேண்டும்.


தவறான நம்பிக்கை: ஒருவருக்குத் திருமணம் செய்து வைத்தால் புத்திசாலித்தனக் குறைபாடு குணமாகிவிடும்.

உண்மை: இது முற்றிலும் பொய். புத்திசாலித் தனக்குறைபாடு உள்ள ஒருவருக்குத் திருமணம் செய்து வைப்பதென்றால் அவரை யார் திருமணம் செய்து கொள்கிறாரோ அவருக்கு இந்த மருத்துவப் பிரச்னையைப் பற்றி முழுமையாகச் சொல்லப்படவேண்டும், அவர் அதற்கு முழு ஒப்புதல் தெரிவிக்க வேண்டும், அதன்பிறகு தான் திருமணம் நடைபெற வேண்டும்.

தவறான நம்பிக்கை: மருந்துகளும் வைட்டமின்களும் புத்திசாலித்தனக் குறைபாட்டைக் குணப்படுத்தும்.

உண்மை: புத்திசாலித்தனக் குறைபாடானது குணப்படுத்தக்கூடிய ஒரு நிலையாக இருந்தால் அப்போது உரிய சிகிச்சையின் மூலம் அதனைக் குணப்படுத்தலாம். ஆனால் சேதமடைந்த மூளையைச் சரிசெய்யக்கூடிய மருந்துகள் எவையும் இல்லை.

தவறான நம்பிக்கை: புத்திசாலித்தனக் குறைபாடு கொண்ட பெரியவர்கள் பிறருக்குப் பாலியல் ரீதியில் பெரும் அபாயமாக அமையலாம். காரணம் அவர்களால் அவர்களுடைய பாலியல் உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொள்ள இயலாது.

உண்மை: புத்திசாலித்தனக் குறைபாடு கொண்ட பெரியவர்களுக்குப் பாலியல் உணர்வுகள் கட்டுப்படுத்தப்பட்டே இருக்கும்.

தவறான நம்பிக்கை: முந்தைய பிறப்பில் பெற்றோர் தவறான செயல்களைச் செய்திருந்தால் கர்மவினை காரணமாக அவர்களுடைய குழந்தைகளுக்குப் புத்திசாலித்தனக் குறைபாடு வரலாம்.

உண்மை: இது முற்றிலும் பொய். இதுபோன்ற நம்பிக்கைகள் ஏற்கனவே பெரும் சுமையைத் தாங்கிக் கொண்டிருக்கிற பெற்றோருக்கு இன்னும் சிரமத்தைத்தான் கொண்டு வருகின்றன. புத்திசாலித்தனக் குறைபாடு என்பது ஒரு மருத்துவப் பிரச்னை, அந்தப் பிரச்னை கொண்ட குழந்தைகளுடைய பெற்றோருக்கும் அந்தக் குழந்தைகளைக் கவனித்துக் கொள்கிறவர்களுக்கும் சமூகத்தில் உள்ளவர்கள் ஆதரவு மிகவும் அவசியம். குடும்பத்தினரும் சமூகத்தினரும் போதுமான ஆதரவும் ஊக்கமும் தந்தால் புத்திசாலித்தனக் குறைபாடு கொண்டவர்கள் மிக நன்றாகச் செயல்படுவார்கள், நல்ல வாழ்க்கையை வாழ்வார்கள்.
 

தவறான நம்பிக்கை: பெரியவர்கள், சான்றோர் மீது நம்பிக்கை வைத்தால் புத்திசாலித்தனக் குறைபாடு குணமாகும்.

உண்மை: இது முற்றிலும் பொய். தங்களால் புத்திசாலித்தனக் குறைபாட்டைக் குணப்படுத்த இயலும் என்று சொல்லுகிறவர்கள் பெற்றோரைத் தவறான வழியில் செலுத்துகிறார்கள். இதுபோல் புத்திசாலித்தனக் குறைபாட்டை நம்பிக்கை மூலம் குணப்படுத்த இயலும் என்பதற்கு எந்த விதமான சான்றோ ஆராய்ச்சி அடிப்படையிலான ஆதாரமோ இல்லை.

இந்தப் பட்டியலானது உலக ஆரோக்கியக் கழகத்துக்காக (WHO) மனநிலைப் பாதிப்பு பற்றி உருவாக்கப்பட்ட ஓர் ஆவணத்தை வாசித்து அதன் அடிப்படையில் தொகுக்கப்பட்டது. இந்த மூல ஆவணத்தை எழுதியவர்கள் டாக்டர் சதீஷ் கிரிமாஜி, NIMHANS, பெங்களூர், டாக்டர் சுல்தானா S ஜமான், பங்களாதேஷ் புரோட்டோபோன்டி அறக்கட்டளை, P M விஜேதுங்கா, சுசித சுவேசேத பெற்றோர் கழகம்,  சர்வோதயா, இலங்கை மற்றும் டாக்டர் உடோம் பேஜரசங்கர்ண், ராஜானுகல் மருத்துவமனை, பாங்காக்.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org