மனநலப் பிரச்னைகொண்டோர்மீது பாரபட்சம் வேண்டாம்

மனநலப் பிரச்னைகளைப்பற்றிய சமூகத்தின் சிந்தனைகளை மாற்றுவதற்கு நாளாகும், ஆனால், இந்த விஷயத்தில் நாம் இதுவரை நன்கு முன்னேறியுள்ளோம், வருங்காலம் பிரகாசமாகத் தோன்றுகிறது

நம் சமூகத்தில் மனநலம்பற்றிப் பல தவறான நம்பிக்கைகள் உள்ளதும் உண்மை, அதனால், மனநலப் பிரச்னை கொண்டோர்மீது களங்கவுணர்வு காட்டப்படுவதும் உண்மை. மனநலக் கல்விக்கான தேவையைப்பற்றி, மெல்பர்ன் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர், மெல்பர்னில் உள்ள புனித வின்சென்ட் மருத்துவமனையின் கௌரவ, மூத்த மனநல நிபுணர் சிட்னி ப்ளோச் அவர்களுடன் வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷனைச் சேர்ந்த பெட்ரீசியா ப்ரீதம் பேசியுள்ளார். மனநலப் பிரச்னைபற்றிச் சமூகம் கொண்டிருக்கிற களங்கவுணர்வும், பாதிக்கப்பட்டோர்மீது அது காட்டுகிற பாரபட்சமும், மனநலப் பிரச்னை கொண்டோரின் வாழ்க்கையைக் கடுமையாகப் பாதிக்கக்கூடும் என்று டாக்டர் ப்ளோச் வலியுறுத்துகிறார், சமூகத்தின் இந்த மனப்போக்கை மாற்றுவதற்கு, மனநலம்பற்றிய கல்வி அவசியம் என்கிறார் அவர். இந்தப் பேட்டியிலிருந்து தொகுக்கப்பட்ட சில பகுதிகள் இங்கே.

40 ஆண்டு அனுபவம் கொண்ட மனநல நிபுணர் நீங்கள், இந்தக் காலகட்டத்தில் மனநலப் பராமரிப்புத்துறையில் நீங்கள் கண்டுள்ள மாற்றங்கள் என்னென்ன?

இந்தக் கேள்விக்கு இருவிதமாகப் பதில் சொல்லலாம்: மாற்றங்கள் குறைவுதான் என்றும் சொல்லலாம், மாற்றங்கள் மிக அதிகம் என்றும் சொல்லலாம். பல ஆண்டுகளுக்குமுன்னால், நான் மனநல மருத்துவராகப் பணியாற்றத் தொடங்கியபோது, இந்தப் பிரச்னைகளுக்கு மிகச்சில மருந்துகள்தான் இருந்தன. அந்த ஆரம்பகால மருந்துகளுக்குப் பல பரிதாபமான பக்கவிளைவுகள் இருந்தன: உடல் நடுங்கும், தடுமாறும், வாய் உலர்ந்துபோகும்... இப்படி. ஆகவே, கடந்த  ஐம்பது ஆண்டுகளில் மனநலப் பிரச்னையைச் சந்தித்தவர்களுடைய நிலையுடன் ஒப்பிடும்போது, இன்றைய நிலை எவ்வளவோ பரவாயில்லை. காரணம், இப்போது பல சிகிச்சைகள் உள்ளன, மருந்துகள்மட்டுமல்ல, உளவியல் சிகிச்சைகள், சமூகச் சிகிச்சைகள் என எல்லாமே நன்கு முன்னேறியுள்ளன. அதேபோல், மனநலப் பிரச்னைகளின் தன்மையைப்பற்றி நாம் நிறைய கற்றுக்கொண்டிருக்கிறோம். என்னென்ன பிரச்னைகள் வரக்கூடும், அவை வரும்போது மூளையில் என்ன தவறாகிறது என்பதையெல்லாம் கற்றுக்கொண்டிருக்கிறோம். ஆனால், நாம் கற்றுக்கொள்வதற்கு இன்னும் நிறைய இருக்கிறது.

உதாரணமாக, குழந்தைகளிடம் வருகிற ஆட்டிசம்போன்ற ஒரு பொதுவான பிரச்னையை எடுத்துக்கொள்வோம். உதாரணமாக, குழந்தைகளிடம் வருகிற ஆட்டிசம்போன்ற ஒரு பொதுவான பிரச்னையை எடுத்துக்கொள்வோம். இவை எல்லாம் மரபணுரீதியிலானவை என்றூ நாம் நினைக்கிறோம். ஆக, இப்போதைக்கு ஆட்டிசத்தைப்பற்றி நமக்குக் கொஞ்சம்தான் தெரியும், நாம் இன்னும் நிறைய தெரிந்துகொள்ளவேண்டும். நல்லவேளையாக, இன்றைய நவீனயுகத்தில் இதற்குப் பல மேம்பட்ட வழிகள் உள்ளன. உதாரணமாக, அதிநவீன X-கதிர்களைப்பயன்படுத்தி நரம்பியல் படங்களை எடுக்கலாம், அவற்றின்மூலம் மூளையைக் காணலாம், அது எப்படி இயங்குகிறது என்பதை அறியலாம். இதையெல்லாம் விவரிப்பது என் நோக்கமில்லை, ஆனால், கணினியில் மூளையின் பகுதிகளை விரிவாகக் காண்பது ஒரு மிகப் பரவசமான விஷயம்! மரபியலைப்பற்றியும் நமக்கு இப்போது அதிகம் தெரிந்துள்ளது. இதனால், ஆட்டிசத்துக்குச் சில ஜீன்கள் பொறுப்பாவதை நாம் அறிகிறோம். இதை வைத்து, இந்த ஜீன்கள் என்ன செய்கின்றன, எதனால் ஒரு குழந்தைக்கு ஆட்டிசம் வருகிறது என்று நாம் அறியலாம். 2000ம் ஆண்டில் மனித ஜீனோம் கண்டறியப்பட்டபிறகு, அல்லது, தெளிவாக்கப்பட்டபிறகு, மரபியல்துறை கணிசமாக மேம்பட்டுள்ளது.

நீங்கள் ஆய்வகத்துக்குச் சென்று, மூளையில் உள்ள சில குறிப்பிட்ட வேதிப்பொருள்கள், நரம்பு கடத்திகள், பல்வேறு உயிர்வேதியியல் செயல்முறைகளை அளவிட்டால், தீவிர மனநலப் பிரச்னைகளைப்பற்றி இன்னும் நிறைய கற்றுக்கொள்ளலாம். அதன் அடிப்படையில், அந்தப் பிரச்னைகளுக்குச் சிகிச்சைகளை உருவாக்கலாம். நாம் அந்தப் பாதையில்தான் உள்ளோம், ஆனால், இதற்கு நேரமாகும். நாம் பொறுமையாக இருக்கவேண்டும். ஆனால், இந்தத் துறை நம்பிக்கை தருவதாக உள்ளது. அதுதான் நம் எல்லாருக்கும் மிகவும் முக்கியமான செய்தி.

உலகெங்கும் உள்ள சமூகங்களில், மனநலப் பிரச்னை கொண்டோர் மிகுந்த களங்கவுணர்வையும் பாரபட்சத்தையும் அனுபவிக்கிறார்கள். அப்படியானால், நாம் இந்தப் பிரச்னையை எப்படி அணுகுவது? சமூகத்தில் இருக்கும் தவறான நம்பிக்கைகளை எப்படி அகற்றுவது?

இதுதான் மிகச் சிரமமான சவால். ஆரம்பத்திலிருந்தே, மனநலப் பிரச்னை கொண்டோர்மீது பாரபட்சம் காட்டப்பட்டுவந்திருக்கிறது. அவர்களால் பிறரைப்போல் வாழ இயலாது எனக் கருதப்பட்டது. இது ஓரளவு உண்மைதான், உதாரணமாக, பதினெட்டு வயது மாணவர் ஒருவருக்குத் தீவிர மனநலப் பிரச்னை ஏதாவது வந்துவிட்டால், அவர் வேலைக்குச்செல்வது, திருமணம் செய்துகொள்வது போன்றவற்றுக்கான வாய்ப்புகள் மிகவும் குறைந்துவிடுகின்றன. ஆகவே, மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் விநோதமானவர்கள் என்று பிறர் நினைக்கிறார்கள், அவர்களால் இவர்களைப் புரிந்துகொள்ள இயலுவதில்லை.

நம்மைப்போல் பயனுள்ள ஒரு வாழ்க்கையை அவர்களால் வாழ இயலவில்லை என்று நாம் எண்ணுகிறோம். அதாவது, அவர்கள் ஊனமுற்றவர்கள் என்று நாம் தீர்மானித்துவிடுகிறோம், அவர்களுக்கு எதிராகப் பாரபட்சம் காட்டுகிறோம். அவர்களால் எப்படியும் வேலை செய்ய இயலாது, ஆகவே, அவர்களுக்கு நாம் வேலை தரவேண்டியதில்லை என்று நாமே தீர்மானித்துவிடுகிறோம். அவர்களால் மற்ற பொறுப்புகளை நிறைவேற்ற இயலாது, ஆகவே, நாமும் அவர்களுக்குப் பொறுப்புகளைத் தரவேண்டாம் என்று எண்ணிவிடுகிறோம். இதனால், அவர்களிடம் இருக்கிற இயற்கையான ஆற்றலும் பிடுங்கப்பட்டுவிடுகிறது.

இதைக் கையாளச் சரியான வழி, மனநலம்பற்றிய கல்வியை வழங்குவதுதான். மனநலம் பாதிக்கப்பட்டவர்களை நாம் காணும் பார்வை தவறானது என்று மக்களுக்குச் சொல்லவேண்டும். நான் பயன்படுத்தியுள்ள இன்னொரு முறை, மனநலம் பாதிக்கப்பட்டவர்களையும் அவர்களுடைய குடும்பத்தினரையும் இந்த விஷயத்தில் எனக்கு உதவுமாறு கேட்பேன், அதாவது, மனநலம் பாதிக்கப்பட்டவர்கள்மீது சமூகம் காட்டும் பாரபட்சத்தை, களங்கவுணர்வைக் குறைக்க அவர்களுடைய உதவியைக் கேட்பேன். அவர்கள் தங்களுடைய குடும்பத்தினரிடமும் மற்றவர்களிடமும் பேசும்போது, 'நாங்களும் மனிதர்கள்தான், எங்களுக்கும் தேவைகள் உண்டு, உணர்வுகள் உண்டு' என்று சொல்லச்சொல்வேன், 'எங்களுக்கு ஒரு பிரச்னை இருக்கிறது என்பதால், நாங்கள் மனிதர்கள் என்பது மாறிவிடுமா? நாங்களும் உங்களைப்போல்தானே?' என்று கேட்கச்சொல்வேன்.

இந்தியாபோன்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது, ஆஸ்திரேலியாவில் மனநலத்துறை நன்கு முதிர்ச்சியடைந்துள்ளது என்று நினைக்கிறேன், மக்களும் இதனை நன்கு ஏற்றுக்கொள்கிறார்கள், மனநலம்சார்ந்த பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான கட்டமைப்புகள் எளிதில் கிடைக்கின்றன. அப்படியானால், இந்தியாபோன்ற நாடுகளில் மனநலத்துறையில் இன்னும் சமூகப் பிரச்னைகளின் பாதிப்பு இருக்கிறதே, அவர்கள் என்ன செய்யவேண்டும்?

இது ஒரு பெரிய கேள்விதான். அதேசமயம், நீங்கள் சொல்வது சரியா என்று எனக்கு நிச்சயமாகத் தெரியவில்லை. ஒப்பீட்டளவில், ஆஸ்திரேலியா சற்றே மேம்பட்ட சமூகம்தான், இங்கே உளவியல், மனநலம் சார்ந்த பல வளங்கள் உள்ளன; ஆனால், மனநலப் பிரச்னை என்பது எப்போதும் சிண்ட்ரெல்லாவைப்போலதான் பார்க்கப்படுகிறது, அதாவது, ஓர் ஏழை உறவினரைப்போல. உதாரணமாக, இன்றைக்கு மெல்பர்னில் ஒருவருக்கு இதயமாற்றுச் சிகிச்சை செய்யப்படுகிறது என்றால், அதற்கு அரை மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் செலவாகும். அந்தச் செலவைச் சமூகம் கொடுத்துவிடும். இதோடு ஒப்பிடும்போது, மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவருக்குச் சிகிச்சையளிக்க அதிகச் செலவு ஆகாது. ஆனால், சமூகம் இதயமாற்றுச் சிகிச்சைகளுக்குப் பணம் தருவதையே விரும்புகிறது, அது ஒரு நல்ல, நாடகத்தனமான தேவையாகத் தோன்றுகிறது, மனநலப் பிரச்னை என்றால், அதற்கு யாரும் உதவ நினைப்பதில்லை.

இங்கே உளவியலாளர்கள், மனநல நிபுணர்கள், உளவியல் சமூக ஊழியர்கள், மனநலச் செவிலியர்கள் மற்றும் பணிசார்ந்த சிகிச்சையாளர்கள் போன்றோர் இருக்கிறார்கள். ஆக, நாம் நமது ஆற்றல்களை ஒருங்கிணைத்து, சிகிச்சைகள் மற்றும் பராமரிப்பின் தரத்தை உயர்த்த நம்மால் இயன்றதைச் செய்யவேண்டும். ஆனால், அது ஒரு பெரிய வேலைதான், ஒரே ராத்திரியில் நடந்துவிடாது.

நான் ஓர் இளம் மனநல நிபுணராக இருந்தபோது, மிகவும் பின்தங்கிய நிலையிலிருந்த மருத்துவமனைகளில் பணியாற்றியிருக்கிறேன், அங்கே பெரிதாக எந்த வசதிகளும் இருக்காது. இப்போது, நிலைமை குறிப்பிடத்தக்க அளவு மாறிவிட்டது. வெளிநோயாளிகளை அனுமதிக்கும் மருத்துவமனைகளெல்லாம் வந்துவிட்டன. ஆக, நேரம் செல்லச்செல்ல, புதிய சாத்தியங்கள் வருகின்றன, அரசு வளங்களை அதிகரிக்கும் முயற்சி நடைபெறுகிறது, இந்த விஷயத்தில் அவர்கள்தான் முதன்மை வழங்குநர்கள்.

இந்தியாவைப்பொறுத்தவரை, இந்த மாற்றங்கள் இன்னும் ஓரிரு நாள்களில் நடைபெற்றுவிடும் என்று எண்ணக்கூடாது. மாறாக, இதற்கான சாத்தியங்களைச் சிந்திக்கவேண்டும், ஒரு சமூகத்தின் மனநலம்சார்ந்த, குறிப்பிட்ட தேவைகளைக் கவனிக்கவேண்டும், அதன்மூலம் நாம் மெதுவாக முன்னேறலாம். நான் எப்போதும் எனக்குச் சொல்லிக்கொள்கிற விஷயம், நிலைமையை மேம்படுத்துகிற பாதை நம்மிடம்தான் உள்ளது. அதேசமயம், நாம் ஒரு லட்சியவாத உலகை மனத்தில் கொண்டு செயல்படக்கூடாது. அது எதார்த்தத்தில் சாத்தியமில்லை, அதனை நோக்கிச் சென்றால், நாம் தோல்வியடைவோம், ஊக்கமிழந்துபோவோம். நான் பார்த்தவரை, பல விஷயங்கள் நம்பிக்கை தருகின்றன, வெவ்வேறு பகுதிகளில் நிகழ்ந்துவரும் முயற்சிகளை நாம் பாராட்டவேண்டும். உங்களைவிட நாங்கள் வெகுவாக முன்னேறிவிட்டோம் என்ற தோற்றத்தை நான் உண்டாக்கவிரும்பவில்லை. நாம் யோசனைகளைப் பகிர்ந்துகொள்வோம். வெவ்வேறு விஷயங்களை எப்படி மேம்படுத்துவது என்று பேசுவோம், பிறகு, அந்த எண்ணங்களைச் செயல்படுத்துவோம்.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org