தேர்வுப் பதற்றத்தைப்பற்றி யாரிடமாவது பேசலாம்

தேர்வுக்கு முந்தைய நாள்கள் பலரைத் திகைப்புக்குள்ளாக்கும். சிலர், பாடத்திட்டம் பெரிதாக இருக்கிறதே என்று திகைப்பார்கள், வேறு சிலர், பெற்றோர், சக மாணவர்களால் இன்னும் நன்றாக மதிப்பெண்கள் எடுக்கவேண்டும் என்கிற அழுத்தத்துக்குள்ளாவார்கள், சிலர் தங்களுக்குத் தாங்களே அழுத்தம் தந்துகொள்வார்கள். இன்னும் சிலர், தேர்வு என்று நினைத்தாலே பதற்றமாகிவிடுவார்கள். தேர்வுப்பதற்றம் எல்லாருக்கும் வருவதுதான். மிக நன்றாகப் படிக்கிறவர்கள்கூட இதனால் பாதிக்கப்படலாம். ஆகவே, தாங்கள்மட்டும்தான் தேர்வுகளை எண்ணிப் பதறுகிறோம் என்று யாரும் நினைக்கவேண்டியதில்லை. மாணவர்களுக்குப் பதற்றம் வரும்போது, அவர்கள் தாங்கள் மிகவும் நம்புகிற ஒருவரிடம் பேசலாம் என்கிறார்கள் உளவியலாளர்கள்: அது ஒரு நண்பராக இருக்கலாம், தந்தை/தாயாக இருக்கலாம், அல்லது, ஓர் ஆலோசகராக இருக்கலாம்.

இப்படிப் பேசுவதால் என்ன நன்மை?

பிரச்னை இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ள உதவும்: தேர்வுக்கு முன்னால் பதற்றம் ஏற்படும்போது, பலர் அதனை அலட்சியப்படுத்திவிடுவார்கள், தொடர்ந்து படித்துக்கொண்டே இருப்பார்கள். இதுபற்றிப் பேசுவதால், பிரச்னை இருக்கிறது என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள், புரிந்துகொள்கிறார்கள், தேவைப்பட்டால், உடனே உதவி கேட்கவேண்டும் என்று உணர்கிறார்கள்.

எண்ணங்களை ஒழுங்குபடுத்தலாம்: தேர்வுக்கு முந்தைய நாள்களில், மாணவர்கள் குழப்பமாகவும் பதற்றமாகவும் இருப்பார்கள், தாங்கள் ஏன் இப்படி உணர்கிறோம் என்று அவர்களுக்கே தெரியாது. அந்த உணர்வுகளைச் சொற்களால் வெளிப்படுத்தும்போது, எண்ணங்களும் ஒழுங்காகின்றன. ஒருவர் தன்னுடைய உணர்வுகளைப்பற்றிப் பேசும்போது, அவற்றை ஒழுங்குபடுத்திக்கொள்கிறார், சூழலைத் தன் மனத்தில் தெளிவாக்கிக்கொள்கிறார்.

சுமையைக் குறைக்க உதவுகிறது: தேர்வுப் பதற்றத்தை அனுபவிக்கும் ஒருவர் அதைப்பற்றி இன்னொருவரிடம் பேசினால், அவர் மனத்தில் இருக்கும் அழுத்தத்தின் சுமை கொஞ்சம் குறையும், அவர் கனமற்ற நிலையை உணர்கிறார். பேச்சுச் சிகிச்சை என்பது, அழுத்தத்தைக் குறைக்கிற ஒரு மிகச்சிறந்த வழி ஆகும். ஒரு மாணவர் இன்னொரு மாணவரிடம் பேசும்போது, பிறரும் தன்னைப்போன்ற பிரச்னைகளை அனுபவிக்கிறார்கள் என்பதை உணர்கிறார்.

ஒரு புதிய பார்வைக்கோணம் கிடைக்கிறது: பல நேரங்களில், பிரச்னை சிறிதாகவே இருக்கும், ஆனால், அது ஒரு பெரிய சுமையாகத் தோன்றும். ஒருவருடைய மனநிலை சரியில்லை, அவர் பதற்றமாக இருக்கிறார் என்றால், அதுவே அவருடைய சுய மதிப்பை வரையறுக்கத்தொடங்குகிறது, அவர் தனது வலிமைகள், திறமைகளைக் காண்பதில்லை. இதுபோன்ற சூழ்நிலைகளில் அவர் தனது தந்தை/தாய், ஆசிரியர், ஆலோசகர் அல்லது பெரிய வகுப்பில் படிக்கும் ஒரு மாணவரோடு பேசலாம். அப்போது அவர்கள் இவருடைய சூழ்நிலையை வேறு கோணத்தில் காண்பிப்பார்கள், அவருடைய திறமைகளை அவருக்கு நினைவுபடுத்துவார்கள். ஒரு நடுநிலையான கவனிப்பாளர், அந்த மாணவருடைய நிலையை நன்கு உணர்ந்து, அவருடைய நேர்விதத் தன்மைகள், எதிர்மறைத் தன்மைகளைத் தெளிவாக எடுத்துரைப்பார். உதாரணமாக, தாங்கள் தேர்வுகளை எப்படிச் சந்தித்தோம் என்பதை அவர்கள் சொல்லலாம், தேர்வுகளின்போது வந்த பதற்றத்தைத் தாங்கள் எப்படிக் கடந்துவந்தோம் என்று விளக்கலாம்.

பயனுள்ள உதவிக்குறிப்புகளைப் பெறலாம்: ஒரு மாணவர் தன்னுடைய சக மாணவருடன், அல்லது, அடுத்த வகுப்பில் இருக்கும் மூத்த மாணவருடன், அல்லது, ஆசிரியருடன், அல்லது, தந்தை/தாயுடன் பேசும்போது, அவர் தன்னை எப்படிக் கையாள்வது, தனது நேரத்தை எப்படி நிர்வகிப்பது என்பதற்கான பயனுள்ள உதவிக்குறிப்புகளைப் பெறலாம். உதாரணமாக, அவருடைய நம்பிக்கைக்குரிய ஒரு சக மாணவர் தன்னுடைய நேர மேலாண்மைக் குறிப்புகளைப் பகிர்ந்துகொள்ளலாம், அல்லது, கல்லூரியில் படிக்கும் ஒரு மூத்த மாணவர் எந்தெந்தப் பகுதிகள் முக்கியம் என்று விவரிக்கலாம்.

யாரிடம் பேசவேண்டும்?

யாரிடம் பேசுவது என்று தீர்மானிப்பது ஒரு முக்கியமான விஷயம். பொதுவாக, மாணவர்கள் தங்களுக்கு நம்பிக்கையானவர்களிடமும், அவர்கள் யாருடைய கருத்தை மிகவும் மதிக்கிறார்களோ அவர்களிடமும்தான் பேச விரும்புவார்கள். உதாரணமாக, ஒரு சக மாணவர், தந்தை/தாய், மேல்வகுப்பிலிருக்கும் மூத்த மாணவர், ஆசிரியர் அல்லது ஆலோசகரிடம் அவர் பேசலாம். ஒருவேளை அவர் ஒரு சக மாணவரிடம் பேசத் தீர்மானித்தால், ஏற்கெனவே பதற்றத்தில் இருக்கும் ஒருவரைத் தேர்ந்தெடுக்கவேண்டாம். தன்னைப்போலவே பிரச்னையில் இருக்கும் ஒருவரிடம் பேசுவது ஆரம்பத்தில் இதமாக இருக்கும், ஆனால், பதற்றமாக உள்ள ஒருவர் இன்னொரு பதற்றமான மாணவரிடம் பேசும்போது, அவர்கள் இருவருமே பயத்தில் மூழ்கிவிடக்கூடும். அதேபோல், இந்தப் பிரச்னையைக் கேட்கிற அவரால், இவருடைய பிரச்னையைத் தீர்க்க இயலாமலிருக்கலாம். ஒரு மாணவர் எதிர்பார்க்கும் நிம்மதி, உதவியை ஒரே நபரிடமிருந்து பெற இயலவில்லையென்றால், அவர் இன்னொருவரிடம் பேசலாம், அல்லது, மனநல நிபுணர் ஒருவரைத் தொடர்புகொள்ளலாம்.

பேசுவதற்குப்பதில் நாட்குறிப்பு எழுதலாமா?

எழுதலாம். பேசுவதைப்போலவே, நாட்குறிப்பு எழுதுவதிலும் பல நன்மைகள் உண்டு. பேசுவதைப்போலவே, எழுதுவதாலும் மாணவரின் எண்ணங்கள் ஒழுங்காகும், அவர் தனது பிரச்னைகளைப் புறநிலையிலிருந்து பார்க்கத்தொடங்குவார், தன்னுடைய கவலைகளைச் சொற்களின்மூலம் வெளிப்படுத்திவிட்டதால், ஒரு பாரம் இறங்கிவிட்டதைப்போல் உணர்வார்.

எப்போது ஒரு கல்லூரி ஆலோசகரின் உதவியை நாடவேண்டும்?

அழுத்தம் அல்லது பதற்றத்தை அனுபவிக்கும் எந்தவொரு மாணவரும், அதைப்பற்றிப் பேசுவதற்காகத் தனது கல்லூரியின் ஆலோசகரைச் சந்திப்பதற்கு நேரம் கேட்கலாம். அதேசமயம், அவருடைய பதற்றம் மிக அதிகமாக இருந்தால், தேர்வுகள் என்று நினைத்தவுடன் அவருக்குள் இருக்கும் அனைத்து நம்பிக்கையும் வறண்டுபோனால், அது அவருடைய தினசரி வேலைகளைப் பாதித்தால், அவர் உடனே ஆலோசகரைச் சந்திக்கச் செல்லவேண்டும். ஒருவேளை அவருடைய கல்லூரியில் ஆலோசகர்களே இல்லை என்றாலோ, அவர் ஒரு மனநல நிபுணருடன் பேசமுடியாத சூழ்நிலையில் இருந்தாலோ, அவர் ஓர் உதவித் தொலைபேசியை அழைத்துப் பேசலாம்.

இந்தக் கட்டுரை, NIMHANS மருத்துவ உளவியல் துறைத் துணைப் பேராசிரியர் டாக்டர் மஞ்சுளா அவர்களின் குறிப்புகளுடன் எழுதப்பட்டது.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org