இணைந்த குரல்கள்

எண்ணங்களை ஒரு நாட்குறிப்பில் எழுதிப்பழகினால், அதனால் மனத்துயர் குறையும்

மனநலப் பிரச்னை கொண்ட ஒருவருடைய மனத்துயரைக் குறைக்க, மருந்துகள் மற்றும் உளவியல் சிகிச்சையுடன், பல்வேறு செயல்பாடுகளும் உதவும். வலைப்பதிவாளர் ஷைலஜா விஷ்வநாத்திடம் அவர் தனது எண்ணங்களை எழுதி எழுதி, அதன்மூலம் தனது பிரச்னைகளிலிருந்து விடுதலை பெற்றவர். அதுபற்றி அவரிடம் கேட்டு எழுதுகிறார் வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷனைச் சேர்ந்த சஞ்சய் பட்நாயக்.

உங்களுக்கு இந்தப் பிரச்னை கண்டறியப்பட்டதைப்பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள். உங்கள் குடும்பம், உங்கள் துணைவர் இதை எப்படிப் பார்த்தார்கள்?

எனக்கு மனச்சோர்வும், தீவிர மனச்சோர்வும் வந்திருப்பதைப் பிறர்தான் கண்டுபிடித்தார்கள், எனக்கு அப்போது அது தெரிந்திருக்கவில்லை. எனக்கு ஒரு தீவிரமான மனநலப் பிரச்னை வந்திருப்பது உறுதிசெய்யப்பட்டபோது, நான் ஏற்கெனவே பல சிரமங்களைச் சந்திக்கத் தொடங்கியிருந்தேன், சில நேரங்களில் தீவிரமான மாயத்தோற்றங்கள் என்னைத் துன்புறுத்தும், சில நேரங்களில் பிறர்மீது கோபத்துடன் எரிந்துவிழுந்தேன், அல்லது, தொடர்ந்து அழுதுகொண்டிருந்தேன், இவையெல்லாம் இரண்டு மணிநேரத்துக்குமேல்கூட நீடித்தன. இதனால், ஒருபக்கம் நான் முடங்கிக்கிடந்தேன், இன்னொருபக்கம் பயந்து நடுங்கினேன், அவற்றின் தீவிரத்தை யாராலும் நம்பக்கூட இயலாது.

நான் ஒரு சிகிச்சையாளரைப் பார்க்கவேண்டும் என்று எல்லாரும் சொன்னார்கள், ஆனால் நான் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. நெடுநாள்கழித்துதான் அதற்குச் சம்மதித்தேன். ஆரம்பத்தில், ஒரு சிகிச்சையாளர் எங்கள் வீட்டுக்கு வந்தார். என் பெற்றோரிடம் பேசினார், என்னிடமும் பேசினார். அவரது சிகிச்சையை நான் ஏற்றுக்கொள்ளவில்லை, முரண்டுபிடித்தேன், கோபப்பட்டேன், ஆத்திரப்பட்டேன், சில நேரங்களில் எனக்குள் இருக்கும் வலியை என்னால் தாங்கவே இயலவில்லை, என் வாழ்க்கையை முடித்துக்கொள்ளலாமா என்றுகூடச் சிந்திக்கத் தொடங்கிவிட்டேன், அதற்கான முயற்சிகளிலும் இறங்கினேன்.

நல்லவேளையாக, மனநல நிபுணர் ஒருவர் என்னைப் பரிசோதித்து எனக்கு என்ன பிரச்னை என்று கண்டறிந்தார். எனக்கு அப்போது அது ஒரு மிக நல்ல விஷயமாக அமைந்தது, காரணம், எனக்குப் பல விஷயங்கள் தெளிவாகின. முதலாவதாக, இது ஓர் உண்மையான, உடல்சார்ந்த பிரச்னைதான். இது மூளையில் இருக்கும் ஹார்மோன்களின் வேதிச் சமநிலையைப் பாதிக்கிறது, அதனால் உடல்சார்ந்த நடவடிக்கைகளில் தொந்தரவை ஏற்படுத்துகிறது. இரண்டாவதாக, இந்த விஷயம் எனக்கு அப்போது முழுமையாகப் புரியவில்லை, ஆனால், அந்தநேரத்தில் எனக்கு என்னுடைய பெற்றோரின் அரவணைப்புமட்டும்தான் முக்கியமாகத் தோன்றியது. அவர்களுடைய அரவணைப்பில் இருந்தபோதுதான் நான் சவுகர்யமாக இருப்பதாக உணர்ந்தேன். மூன்றாவதாக, எனக்குள் தீவிரமாக அலைமோதிக்கொண்டிருந்த தாக்குதல் எண்ணங்கள், மருந்துகளால் கட்டுக்குள் வந்தன. ஆகவே, நான் உரிய கண்காணிப்பின்கீழ் மருந்துகளைச் சாப்பிடத் தொடங்கினேன், அது நான் குணமாக மிகவும் உதவியது.

இன்றைக்கு நான் உயிரோடு இருக்கிறேன், இதைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறேன் என்றால், அதற்கு ஒரே காரணம் என்னுடைய குடும்பம்தான். குறிப்பாக, என் கணவரைப்பற்றிச் சொல்லவேண்டும். யோசித்துப்பாருங்கள், புதிதாகத் திருமணமான ஒருவர் தன் மனைவியை இப்படியா பார்க்க விரும்புவார்? தினமும் தீவிர பதற்றம், தீவிர அழுகை, செயல்படவிடாமல் செய்யும் பயத்தோடு ஒரு பெண் இருந்தால், அதைப் பார்த்துக்கொண்டு அவளுடைய கணவரால் நிம்மதியாக இருக்க இயலுமா? அந்தச் சூழ்நிலையில் இன்னோர் ஆண் இருந்திருந்தால், எப்போதோ ஓடிப்போயிருப்பார். ஆனால் என் கணவர், அப்போதும் என்னருகே இருந்தார், எனக்கு ஆதரவாக இருந்தார், நான் அதிர்ஷ்டசாலி என்று நினைக்கிறேன்!

நீங்கள் உளவியல் சிகிச்சை பெற்றுக்கொண்டீர்களா? அது அவசியம் என்று நினைக்கிறீர்களா? இப்போதும் உங்களுக்கு மருந்துகள் அல்லது ஆலோசனைகள் தேவைப்படுகின்றனவா?

ஆரம்பத்தில், அதாவது, இந்தப் பிரச்னை கண்டறியப்படுவதற்குமுன் நான் மிகுந்த வலியை உணர்ந்தேன், உடலிலும் வலி, மனத்திலும் வலி. போதாக்குறைக்கு, என் உணர்வுகளும் சிதைந்துபோயிருந்தன, என்னுடைய எதிரிக்குக்கூட அப்படியொரு நிலைமை வரக்கூடாது!

தனிமையுணர்வு, தூக்கமின்மை, தீவிரமான நடவடிக்கைகள்... இவையெல்லாம் என்னுடைய தினசரிப் பழக்கமாகிவிட்டன. இது கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்குத் தொடர்ந்தது. இப்போதும் நான் ஆச்சர்யத்தோடு யோசிக்கிறேன், நான் இப்படி ஆவேசமாகக் கத்தியபோதும், ஒன்றும் பேசாமல் மூலையில் முடங்கிக்கிடந்தபோதும், என் கணவர் அமைதியோடு இருந்திருக்கிறார், அதுவும் ஒருநாள், இரண்டுநாள் இல்லை, பலநாள்! ஒருவேளை, அவருடைய நிலையில் நான் இருந்திருந்தால், அத்தனை நாள் பொறுமையோடு இருந்திருப்பேனா என்பது சந்தேகம்தான்.

துரதிருஷ்டவசமாக, மனித மனம் எப்படி வேலை செய்கிறது என்பது நமக்குத் தெரிவதில்லை. நாம் பயிற்சிபெற்ற மனநல நிபுணர்கள் இல்லை, ஆகவே, ஒருவருக்குப் பதற்றப் பிரச்னை உள்ளது, அல்லது, பெயர் சொல்ல இயலாத ஒரு பயம் ஏற்படுகிறது என்றால், அவர்கள் உண்மையில் எப்படி உணர்கிறார்கள் என்பதை நாம் அறிந்திருப்பதில்லை. என்னுடைய பெற்றோருக்கும், என்ன நடக்கிறது என்று புரியவில்லை. அவர்கள் என்னை ஓர் உளவியல் நிபுணரிடம் அழைத்துச்சென்றார்கள். அதுதான் என்னைக் காப்பாற்றியது என்று நினைக்கிறேன்.

என்னுடைய மனநலத்தை ஓர் உளவியலாளர் மதிப்பிட்ட அந்தச் செயல், நான் குணமாவதில் ஒரு முக்கியப்பங்கு வகித்தது. அந்த நிபுணர், என் சூழலை அறிந்திருந்தார், அத்துடன் அவரது அனுபவமும் சேர்ந்துகொண்டதால், என்னுடைய சூழ்நிலையைக் கையாள எனக்கு அவர் சிறப்பாக உதவினார்.

ஆம், நான் ஓர் உளவியல் நிபுணரைச் சந்தித்தேன், ஒன்பது மாதங்கள் தொடர்ந்து மருந்துகளை எடுத்துக்கொண்டேன். அந்த மருந்துகளை மருத்துவர்தான் சிபாரிசு செய்தார், ஒன்பது மாதங்களும் அவர் என்னைக் கண்காணித்துவந்தார், அந்த மருந்துகளுக்குப் பலன் இருப்பதை உறுதிசெய்துகொண்டார். கொஞ்சம்கொஞ்சமாக, மருந்துகளின் அளவு படிப்படியாகக் குறைக்கப்பட்டது, ஒன்பது மாதங்களுக்குப்பிறகு, மருந்துகள் நிறுத்தப்பட்டன.

அதன்பிறகு, 13 ஆண்டுகளாகிவிட்டன, நான் எந்த மருந்தும் சாப்பிடவில்லை, எனக்கு எந்த ஆலோசனையும் தேவைப்படவில்லை. சிலநாள்களில், பிரச்னை வரப்போகிறது என்று எச்சரிக்கை விடுக்கும் தூண்டுதல்கள், அறிகுறிகள் வரும், ஆனால் அவை என்னைத் திணறடிக்குமுன் நானே அவற்றைக் கண்டுபிடித்துவிடுவேன். சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால், ஒருவர் தான் என்ன சொல்கிறோம் என்ன செய்கிறோம் என்பதைக் கட்டுப்படுத்த இயலாத நிலையில் உள்ளபோது, அவருக்கு உளவியல் சிகிச்சைதான் நல்லது, அதுதான் அவருக்கு அவசியம்.

எழுத்தே உங்களுக்கு சிகிச்சையாக அமைந்தது. அதை எப்படிக் கண்டுகொண்டீர்கள்?

எழுத்து எப்போதுமே எனக்குச் சிகிச்சையாகதான் இருந்துவந்திருக்கிறது. மனச்சோர்வு மற்றும் இருதுருவக்குறைபாடு என்கிற மனநலப் பிரச்னைகள் என்னுடைய ஆன்மாவை உறிஞ்சுவதற்குமுன்பாகவே, நான் என்னுடைய சிந்தனைகளைத் தாளில் எழுதி நிம்மதிபெற்றதுண்டு. என்னுடைய மனநலப்பிரச்னைக்கு நான் சிகிச்சைபெற்றுக்கொண்டிருந்தபோது, என்னுடைய எண்ணங்களை எழுத்தில் பதிவுசெய்யுமாறு ஒரு நிபுணர் என்னைக் கேட்டார். அப்போது என் சிகிச்சை தொடங்கிச் சில மாதங்களாகியிருந்தன. ஆனால், அப்போது என்னால் எழுத இயலவில்லை. காரணம், நான் மிகவும் சோகத்தில் மூழ்கியிருந்தேன். இது நடந்தது 2002ம் ஆண்டின் தொடக்கப்பகுதி. அப்போது எல்லாரும் கணினிகளைப் பயன்படுத்தித் தங்களுடைய சிந்தனைகளைப் பதிவுசெய்துகொண்டிருக்கவில்லை. காகிதத்தில் பேனா பிடித்துதான் எழுதவேண்டும். அப்படி ஒரு பேனாவை எடுத்து, எனக்குள் இருந்த சிந்தனைகளுக்கு ஒரு குரல் கொடுப்பது என்பது, அப்போது எனக்கு இயற்கையாக வரவில்லை, அது ஓர் எளிய விஷயமாக இல்லை. அதற்குமுன் நான் என்னுடைய கோபப் பிரச்னைகளைக் கையாள்வதற்காக அனிச்சையாக எழுத்தைப் பயன்படுத்தியதுண்டு. ஆனால், அந்தநேரத்தில், அது எனக்குக் கைகொடுக்கவில்லை.

என் மகள் பிறந்து ஒரு வருடம் கழித்து, நான் தினமும் எழுத ஆரம்பித்தேன். ஓர் வலைப்பூ தொடங்கினேன். ஆரம்பத்தில் நான் நாட்குறிப்பைப்போலதான் எழுதிக்கொண்டிருந்தேன், பிள்ளைவளர்ப்பைப்பற்றி ஒரு புதிய தாய் என்ன உணர்வாரோ அதைதான் எழுதினேன், அதன்பிறகு, மெதுவாக நான் எனக்குள் சில கேள்விகளைக்கேட்டு, அந்தத் தேடலைப்பற்றி எழுதத்தொடங்கினேன், ஆழமான சிந்தனைகளை எழுதத்தொடங்கினேன். 2013ம் ஆண்டு மத்தியில், நான் என்னுடைய வலைப்பூவில் மிகவும் தீவிரமாகவும் தனிப்பட்ட சிந்தனைகளையும் எழுதிக்கொண்டிருந்தேன். ஆச்சர்யமான விஷயம், இதனைப் பலர் புரிந்துகொண்டார்கள், சரியாக உணர்ந்துகொண்டார்கள்.

2015ம் ஆண்டுத் தொடக்கத்தில், நான் மனச்சோர்வு, இருதுருவக் குறைபாட்டுடன் போராடியதைப்பற்றிப் பகிரங்கமாகப் பேசத் தீர்மானித்தேன், அதன்பிறகு எல்லாம் அதிவேகமாக நடந்தது. திடீரென்று, பல குரல்கள் என் குரலுடன் இணைந்ததைக் கண்டேன். பலர் என்னுடைய பிரச்னையைப் புரிந்துகொண்டார்கள், அவர்களும் மனநலப் பிரச்னைகளோடு போராடியதாகச் சொன்னார்கள், அவர்களில் சிலர், மனநலப் பிரச்னைகளைச் சந்தித்து, வென்றுவந்தவர்கள், இன்னும் சிலர், அப்படிப்பட்டவர்களைக் கவனித்துக்கொண்டவர்கள்.

என்னுடைய பிரச்னைகளைப்பற்றி எழுதியது எனக்கு இருவகைகளில் உதவியது: என்னுடைய பிரச்னையை நானே ஓர் ஆரோக்கியமான கோணத்தில் பார்க்கத் தொடங்கினேன், அத்தனைச் சிரமங்களுக்குமத்தியில் நான் என்னுடைய மனநலப் பிரச்னையை வென்றதை நினைத்து மகிழ்ந்தேன், என்னைப்போல் இன்னும் பலர் இருப்பதை உணர்ந்தேன், அவர்களுக்குத் தங்களுடைய பிரச்னைகளைச் சொல்வது சிரமமாக இருந்தது, நான் அவர்களுடன் கலந்துபேசத்தொடங்கினேன். எழுதுதல் என்பது, ஓர் இருவழிப்பயணம்: நமக்காக எழுதுவது, வாசிக்கும் பிறருக்காக எழுதுவது. இவை இரண்டுமே ஒருமித்து நிகழ்ந்தால், நமக்கு ஓர் அருமையான திருப்தி கிடைக்கிறது.

நீங்கள் சந்தித்ததைப்போன்ற மனநலப் பிரச்னைகளைச் சந்திக்கிறவர்களுக்கு நீங்கள் என்ன சொல்லவிரும்புவீர்கள்?

உண்மையில் நான் இதைப்பற்றி நிறையப் பேசவேண்டும். ஆனால், இயன்றவரை அதைச் சுருக்கமாகச் சொல்கிறேன்.

முதலில், நீங்கள் தனியாக இருப்பதாக நினைக்காதீர்கள். இங்கே யாருமே நிஜத்தில் தனியாக இல்லை. உங்களுடைய பிரச்னையை எதிர்கொள்ள உதவக்கூடிய ஒரு நல்ல ஆதரவு அமைப்பைக் கண்டறியுங்கள். உங்களுடைய குடும்பத்தினர், உங்களுடைய அன்புக்குரியவர்கள் உங்களுக்கு உதவினால் நன்றாக இருக்கும். அது இயலாது என்றால், இந்த நேரத்தில் உங்களுக்கு உதவக்கூடிய வேறு நம்பிக்கையான நண்பர்கள் சிலரைக் கண்டறியுங்கள்.

அடுத்து, நீங்கள் உங்களையே குற்றம்சாட்டிக்கொள்ளக்கூடாது. யாரும் தானே விரும்பி மனநலப் பிரச்னையை வரவழைத்துக்கொள்வதில்லை. நீரிழிவுநோய்போல, புற்றுநோய்போல, அது தானாக வருவதுதான். இதையெல்லாம் நீங்கள் கற்பனை செய்துகொள்கிறீர்கள், நீங்கள் நினைத்தால் சொடக்குப்போடும் நேரத்தில் இதிலிருந்து வெளியே வந்துவிடலாம் என்றெல்லாம் யாராவது சொன்னால், நம்பாதீர்கள். உங்களைப்போல், இதே பிரச்னையை வென்றிருக்கும் வேறு சிலரைச் சந்தியுங்கள், உங்கள் கதையை அவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். கடினமான காலகட்டத்தில் உங்களுக்கு உதவுவதற்கு இணையத்தில் அல்லது வெளியே ஓர் ஆதரவுக்குழுவை அமையுங்கள்.

மூன்றாவதாக, எனக்குத் தெரிந்து பலபேர் சமூகம் என்ன சொல்லுமோ என்று நினைத்து, மனநலப் பிரச்னைக்குச் சிகிச்சை பெறாமலே இருந்துவிடுகிறார்கள். தான் ஓர் ஆலோசகரை, ஒரு மனநல நிபுணரைச் சந்தித்தோம் என்பதை யாரிடமாவது சொன்னால், அவர்கள் தன்னைப் 'பைத்தியம்' என்று முத்திரை குத்திவிடுவார்களோ என்று அவர்கள் பயப்படுகிறார்கள். அதைப்பற்றிக் கவலைப்படாதீர்கள், உங்களைப்போல் சிந்திக்கக்கூடிய ஒருவர், அல்லது ஒரு குடும்ப உறுப்பினருடன் சென்று மனநலச் சிகிச்சையாளர் ஒருவரைச் சந்தியுங்கள். சமூகத்தில் இருக்கிறவர்கள் பேசினால் பேசட்டும், நீங்கள் என்ன செய்தாலும் அவர்கள் பேசுவார்கள். இங்கே கவனிக்கவேண்டிய அம்சம், நீங்கள் பதற்றத் தாக்குதல்களைச் சமாளிக்கிறீர்கள், முடக்கிப்போடும் பயத்தை வெல்கிறீர்கள், தளரவைக்கும் நடுக்கத்தை ஜெயிக்கிறீர்கள், இவற்றையெல்லாம் செய்வது நீங்கள்தான், தனியே நீங்கள்தான் வெல்கிறீர்கள், சமூகம் உங்களுக்கு உதவுவதில்லை. ஆகவே, கைநீட்டிப் பேசுகிறவர்களைவிட்டு விலகிச்செல்லுங்கள், நல்ல ஆரோக்கியத்தைப் பெறுங்கள்.

நிறைவாக, மனநலப் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கிடைக்கக்கூடிய பல்வேறு சிகிச்சைமுறைகளைப்பற்றி நன்கு தெரிந்துகொள்ளுங்கள் அது மிகவும் முக்கியம். மருத்துவர்கள் எங்கே இருக்கிறார்கள், என்னென்ன மருந்துகளைத் தருகிறார்கள் என்பதையெல்லாம் தெரிந்துகொள்ளுங்கள், நம்பகமானவர்களுடன் பேசி இரண்டாவது கருத்துகளைப் பெறுங்கள், மற்ற பெரிய நோய்களை எப்படி அணுகுவீர்களோ, அதேபோல் இதையும் அணுகுங்கள். எச்சரிக்கைகள் அல்லது அறிகுறிகள் வரும்போது, அவற்றை அலட்சியப்படுத்தாதீர்கள். ஞாபகமிருக்கட்டும், மனநலப் பிரச்னைக்கு எவ்வளவு சீக்கிரம் சிகிச்சையைத் தொடங்குகிறோமோ, அவ்வளவு நல்லது.

ஷைலஜா விஷ்வநாத் எழுத்தாளர், ஆசிரியர், பேரார்வத்துடன் வலைப்பதிவுகளை எழுதுகிறவர். தனக்கு மிகவும் ஆர்வமூட்டும் விஷயங்களாக அவர் குறிப்பிடுபவை: பிள்ளைவளர்ப்பு, வாசிப்பு, எழுதுதல், நீச்சல் மற்றும் சமூக வலைப்பின்னல்கள்.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org