ஊழியர் உதவித்திட்டத்தில் தற்கொலைத் தடுப்பு

ஒரு சிறந்த தற்கொலைத் தடுப்புத் திட்டம், சில பொதுவான கவலைகளைக் கையாளவேண்டும், அதேசமயம், நிறுவனத்தின் தேவைகளுக்கேற்ப மாற்றக்கூடியதாக அமையவேண்டும்

நாளுக்கு நாள் நமது தினசரி வாழ்க்கையில் அழுத்தம் அதிகமாகிக்கொண்டிருக்கிறது. ஆகவே, அலுவலகங்களில், பிற பணியிடங்களில் தற்கொலையெண்ணத்தைக் கண்டறிந்து தடுக்கவேண்டியது அவசியமாகிறது. பணியிடத்தில் தற்கொலையைத் தடுப்பதுபற்றி நாங்கள் வெளியிடவுள்ள நான்கு கட்டுரைகளில் இது இரண்டாவது. இதில் தற்கொலை எண்ணங்களுடன் இருக்கக்கூடிய ஊழியர்களுக்கு நிறுவனங்கள் ஆதரவு வழங்குவது எப்படி, அதன்மூலம் தற்கொலையைத் தடுப்பது எப்படி என்று விளக்குகிறார் ஶ்ரீரஞ்சிதா ஜெய்ர்கர்.

பெரும்பாலான பணியிடங்களில் ஓர் ஊழியர் உதவித் திட்டம் (EAP) அமலில் இருக்கும். அல்லது, ஓர் ஊழியர் ஆரோக்கியத் திட்டம் இருக்கும், இது ஊழியர்களுக்கு மருத்துவ ஆதரவை வழங்கும். இந்த EAPயுடன், ஒரு மனநலத் திட்டம் அல்லது ஒரு தற்கொலைத் தடுப்புத் திட்டத்தை இணைக்கலாம். இன்றைய பணிகளில் அழுத்தம் அதிகமாகிக்கொண்டே செல்கிறது, ஆகவே, நிறுவனங்கள் தங்களுடைய ஆரோக்கியக் கொள்கைகளில் மனநலத்தைச் சேர்க்கவேண்டிய தேவையைப் புரிந்துகொள்ளவேண்டும். அதேசமயம், சில குறிப்பிட்ட நிறுவனச் சூழல்களில், இவ்வாறு மனநலத்தை ஆரோக்கியக் கொள்கைகளில் சேர்ப்பது கட்டாயமாகிவிடுகிறது என்கிறார்கள் மனநல நிபுணர்கள். சாத்தியமுள்ள ஆபத்துகள், பாதிப்புகளைச் சுட்டிக்காட்டக்கூடிய சில முக்கியமான காரணிகள்:

  • தொழில்துறையின் தன்மை: அங்கே எப்படிப்பட்ட பணிகள் நிகழ்கின்றன? அவை எப்படிப்பட்ட சுற்றுச்சூழலில் நிகழ்கின்றன? ஊழியர்கள் செய்யவேண்டிய வேலைகள் எந்த அளவு அழுத்தம்மிகுந்தவை? அவர்களுடைய தினசரி வேலைகளில் எந்த அளவு ஆபத்து உண்டு?
  • ஊழியர்களின் விவரங்கள்: ஊழியர்கள் எங்கிருந்து வருகிறார்கள்? அவர்கள் நிறுவனத்தில் தங்களைப் பொருத்திக்கொள்ள, குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எதையேனும் செய்யவேண்டியிருந்ததா? (ஓர் ஊரிலிருந்து இன்னோர் ஊருக்கு மாறுதல், குடும்பத்திடமிருந்து பிரிந்து வாழ்தல் போன்றவை.) அவர்களுடைய பலங்கள், பலவீனங்கள் என்ன?
  • கலாசார மற்றும் இனப் பன்முகத்தன்மை: இந்தக் கலாசாரத்தில் பொருந்துவதற்காகச் சில ஊழியர்கள் கூடுதலாக முயற்சிசெய்யவேண்டியிருக்குமா? தாங்கள் வரவேற்கப்படுவதாக அவர்கள் உணர்வதற்கு ஏதேனும் செய்யப்படுகிறதா?

ஒவ்வொரு நிறுவனத்தின் தற்கொலைத் தடுப்புத் திட்டமும் மனநல நிபுணர்களின் ஆலோசனையுடன் உருவாக்கப்படவேண்டும், மேற்கண்ட அம்சங்கள், பிற நிறுவனம் சார்ந்த காரணிகளின் அடிப்படையில் அவை தன்மயமாக்கப்படவேண்டும்.

EAPயின் ஒரு பகுதியாக உருவாக்கப்படும் ஒரு சிறந்த தற்கொலைத் தடுப்புத் திட்டம் சில குறிப்பிட்ட அம்சங்களைக் கையாளவேண்டும் என்கிறார்கள் நிபுணர்கள்:

1. களங்கவுணர்வைக் குறைத்தல்

ஒரு குறிப்பிட்ட பிரச்னையைச் சமூகம் எந்த அளவு களங்கமாகப் பார்க்கிறதோ, அந்த அளவுக்கு அந்தப் பிரச்னையைக் கொண்டோர் அதைப்பற்றி வெளிப்படையாகப் பேசி, உதவி கேட்கத் தயங்குவார்கள். தற்கொலை மற்றும் மனநலப் பிரச்னைகளில் களங்கவுணர்வு மிகவும் வலுவானது. ஆகவே, மக்கள் இவைபற்றிப் பிறரிடம் பேச விரும்புவதில்லை. இதனால்தான், எந்தவொரு தற்கொலைத் தடுப்புத் திட்டத்தின் முதல் மற்றும் மிக முக்கியமான அம்சம், களங்கத்தைக் குறைப்பதாகவே இருக்கவேண்டும்.

மனநலம் அல்லது தற்கொலைத் தடுப்புத் திட்டத்தை EAPயுடன் இணைப்பதன்மூலம் மனநலப் பிரச்னைகளுடன் தொடர்புடைய களங்கவுணர்வு குறைகிறது. இதன்மூலம், ஒருவருக்கு இந்தப் பிரச்னை வரும்போது, அவர் பிறரிடம் உதவிகேட்கும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. ஒரு நிறுவனம் தனது ஆரோக்கியத் திட்டத்தில் மனநலத் திட்டத்தை இணைத்தால், பல நன்மைகள் உண்டு:

  • வருடாந்திர ஆரோக்கியப் பரிசோதனைகளில் மனநல ஆதரவை இணைக்கலாம். இதற்கு மனநல மதிப்பீடுகள் அல்லது, ஒரு மனநல நிபுணருடன் விவாதித்தல் ஆகியவற்றை இணைக்கவேண்டும். இதனால், யாருக்கு உதவி தேவை, யார் பாதிப்புக்குட்பட்டிருக்கக்கூடும் என்பதை அடையாளம் காணலாம். (இங்கே பாதிப்பு என்பது, பொதுவான மனநலக் குறைபாடுகள் ஆகும், குறிப்பாக, இது தற்கொலையைப்பற்றிப் பேசுகிறது).
  • ஒரு நிறுவனத்தில் பணியாற்றுவோரின் உடல்நலத்தைக் கவனித்துக்கொள்ள ஒரு மருத்துவர் இருப்பதுபோல, அவர்களுடைய மனநலத்தைக் கவனித்துக்கொள்கிற மனநல நிபுணர் ஒருவரையும் பணியில் அமர்த்தலாம். இதன்மூலம் மனநலம் தொடர்பான ஆலோசனைகள் தேவைப்படும் ஊழியர்கள் அதற்கான நிபுணரை எளிதில் சந்திக்கலாம், ஆலோசனை பெறலாம். இத்துடன், என்னென்னமாதிரியான மனநலப் பராமரிப்பு வசதிகள் உள்ளன என்பதையும் ஊழியர்கள் தெரிந்துகொள்வார்கள். இது அவர்களுக்குப் பின்பு எப்போதாவது பயன்படலாம்.
  • ஓர் ஊழியர் மனநல ஆதரவுத் திட்டமானது ஊழியர்களின் சமாளிக்கும் திறனையும் மேம்படுத்துகிறது, பாதிப்பைக் குறைக்கிறது, பணி அழுத்தம், போட்டி, பணியிட முரண்கள், அவர்களது நலனைப் பாதிக்கும் பிற பிரச்னைகளால் உண்டாகும் அழுத்தங்களைக் குறைத்து, அதன்மூலம் தற்கொலைகளைத் தடுக்கிறது.
  • எல்லா ஆரோக்கிய உதவித் திட்டங்களிலும் உள்ளதுபோல், இதற்கென்று ஒரு தெளிவான ரகசியக்காப்பு ஒப்பந்தம் உருவாக்கப்படவேண்டும். இதன்மூலம் ஊழியர்கள் பாதுகாப்பாக உணர்வார்கள்.
  • மனநலப் பிரச்னைகளும் மற்ற உடல்நலப் பிரச்னைகளைப்போலதான், பெரிய வித்தியாசம் ஒன்றும் கிடையாது எனும் விவரம் எல்லாருக்கும் தெரிவிக்கப்படவேண்டும், இதன்மூலம், மனநலப் பிரச்னைகளைப்பற்றிய களங்கவுணர்வைக் குறைக்கலாம், உதவி தேவைப்படும் ஊழியர்கள் அதனை நாடச்செய்யலாம்.

ஊழியர்கள் தாங்கள் சந்தித்த மனநலப் பிரச்னைகளைப்பற்றிப் பேசலாம் என்று அவர்களுடைய நிறுவனம் ஊக்குவிக்கவேண்டும், அவர்கள் எப்படி அதைத் தாண்டி வந்தார்கள் என்பதையும் அந்த ஊழியர்கள் பகிர்ந்துகொள்ளலாம், இதன்மூலம், மனநலப் பிரச்னைகள் பேசக்கூடாதவை அல்ல, அவற்றைப்பற்றிப் பேசினால், அந்த ஊழியர்கள்மீது பாரபட்சம் காட்டப்படாது என்று ஊழியர்களுக்குத் தெரிவிக்கலாம்.

2. நுண்ணுணர்வாக்கல் திட்டங்கள்

உதவி தேவைப்படும் ஊழியர்கள் தாங்களே முன்வந்து நம்பிக்கையுடன் அதைக் கேட்கவேண்டும் என்றால், ஒரு நிறுவனம் தனது மேலாளர்கள், குழுத் தலைவர்கள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளுக்கு ஒரு நுண்ணுணர்வாக்கல் தொகுப்பை உண்டாக்கவேண்டியது முக்கியம். இதன்மூலம், மனநலம் தொடர்பான விஷயங்களில் ரகசியத்தன்மை பராமரிக்கப்படும், களங்கவுணர்வு குறையும், ஒட்டுமொத்த மனநலத் திட்டம் மேலும் சிறப்பாகச் செயல்படும்.

உயர்மட்டங்களில் உள்ள மேலாளர்கள் அல்லது அதிகாரிகள் மனநலம் தொடர்பான தங்களது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டால், குறிப்பாகத் தற்கொலை சம்பந்தப்பட்ட அனுபவங்களைப் பேசினால், ஊழியர்களுக்கு நம்பிக்கை பிறக்கிறது. தற்கொலை எண்ணங்கள், நோக்கங்கள் என்பவை, உண்மையில் உதவி கோரும் கதறல்கள்தான் என்பதுபற்றித் திறந்த விவாதங்களுக்கு ஏற்பாடு செய்யவேண்டும், இதன்மூலம் ஊழியர்கள் தங்களுடைய சொந்தப் பிரச்னைகளைப் பேச முன்வருவார்கள், மற்றவர்கள் அதைத் தீர்ப்புச்சொல்லாத ஒரு வழியில் அணுகுவார்கள், தங்களை ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்புவார்கள்.

3. விழிப்புணர்வை உருவாக்குதல்

பணியிடத்தில் மனநலம் மற்றும் தற்கொலைத் தடுப்புபற்றிய உரையாடல்களைக் கொண்டுவருவதற்கான திட்ட்டங்களை வடிவமைக்கலாம். உதாரணமாக, மனநலம் அல்லது தற்கொலைத் தடுப்புபற்றிய கையேடுகள், சுவரொட்டிகள், பேச்சுகள், விவாதங்கள், திரைப்படங்களைத் திரையிடுதல், பிற செயல்பாடுகள் ஆகியவற்றுக்குத் திட்டமிடலாம். இதுபற்றிய திறந்த விவாதங்களை அதிகப்படுத்தினால், மனநலம்பற்றிப் பேசுவதில் எந்தத் தவறும் இல்லை என்று ஊழியர்கள் எண்ணத்தொடங்குவார்கள்.

பொதுவாகத் தற்கொலைபற்றி மக்களிடையே இருக்கும் தவறான நம்பிக்கைகளையும் உடைக்கவேண்டும். உதாரணமாக, தற்கொலை எண்ணங்களைக் கொண்ட ஒருவர் பலவீனமானவர், அவர் வாழ விரும்பவில்லை, ஒருவரிடம் அவருக்குத் தற்கொலை எண்ணங்கள் வருகின்றனவா என்று கேட்டால் அவர் நிஜமாகவே தற்கொலை செய்துகொண்டுவிடுவார்... இப்படிப் பல தவறான நம்பிக்கைகள் உள்ளன, அவற்றை மாற்றுவது அவசியம்.

4. மனத்துயரில் உள்ளவர்களை அடையாளம் காணுதல்

ஒரு தற்கொலை திடீரென்று நடந்துவிடுவதில்லை என்கிறர்கள் மனநல நிபுணர்கள். பொதுவாக, ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் ஒருவர் தற்கொலைமூலம் தன் வாழ்க்கையை முடித்துக்கொள்வதுபற்றிச் சிந்திக்கிறார். ஒரு நிறுவனம், தனது ஊழியர்கள்மத்தியில் இப்படிப்பட்ட மனத்துயரத்துடன் இருப்பவர்கள் யார் என்று அடையாளம் கண்டால், அந்த நிலைமையைச் சமாளிக்க அவர்களுக்கு என்ன உதவி தேவை என்பதைச் சிந்தித்து, அந்த உதவி அவர்களுக்குக் கிடைக்குமாறு செய்யலாம்.

மனத்துயரில் உள்ள ஊழியர்களை அடையாளம் காண ஒரு சிறந்த வழி, நிறுவனத்தில் பாதுகாவலர்களை உருவாக்குவது! பாதுகாவலர்கள் என்போர், மனநல நிபுணர்களாக இருக்கவேண்டும் என்று அவசியமில்லை. அதேசமயம், ஒருவர் மனத்துயரத்தில் உள்ளதற்கான அறிகுறிகளைக் கண்டறியும் பயிற்சி அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அப்படி யாரையாவது இவர்கள் பார்த்தால், அவர்களுக்கு ஆரம்பகட்ட உணர்வுநிலை ஆதரவை இவர்களே வழங்குகிறார்கள், கூடுதல் உதவிக்காக, அவரை ஒரு மனநல நிபுணரிடம் அனுப்பிவைக்கிறார்கள். ஒவ்வொரு நிறுவனமும் தனது ஊழியர்கள் சிலருக்குப் பாதுகாவலர் பயிற்சி அளிக்கலாம், அவ்வாறு செய்வதன்மூலம், மனத்துயரின் அறிகுறிகள், அல்லது சிவப்புக் கொடிகளைக் கண்டறியக்கூடிய மக்களின் ஓர் அகலமான வலைப்பின்னலை உருவாக்கலாம். Nimhans நல மையம் தனது பயிற்சிப்பட்டறைகள்மூலம் மக்களுக்குப் பாதுகாவலர் பயிற்சி வழங்குகிறது.

தேவைப்பட்டால், இந்தத் திட்டம் பாதுகாவலர்களுக்குப் பொருந்தும் விவரங்களையும் வழங்கலாம், இதன்மூலம் அவர்களால் தங்களுடைய சக ஊழியர்களுக்கு இன்னும் சிறப்பாக உதவ இயலுகிறது:

  • பாதுகாவலர்களுக்கான எதார்த்தமான மற்றும் பயனுள்ள விவரங்கள்: ஒரு சக ஊழியருக்கு உதவி தேவை என்று அவர்கள் கண்டறிந்தால், அடுத்து என்ன செய்யவேண்டும்? யாருக்குத் தெரிக்கவேண்டும்? அந்த ஊழியருக்கு என்ன உதவி கிடைக்கும்?
  • பாதுகாவலர் கொண்டிருக்கக்கூடிய கவலைகளுக்குப் பதிலளிக்கும் பிற விவரங்கள்: பாதுகாவலரின் கடமைகள் என்ன? பாதுகாவலர் தனது கடமைகளைத் தாங்க இயலாமல் சிரமப்பட்டால், என்ன செய்வது? பாதுகாவலர்களுக்கு என்ன ஆதரவு கிடைக்கிறது? ஒரு பாதுகாவலர் அறிந்துவைத்திருக்கவேண்டிய வரம்புகள் என்ன?

5. நெருக்கடி மேலாண்மை

நிறுவனமானது நெருக்கடிச் சூழல்களுக்கான நெறிமுறை அல்லது சிபாரிசு செய்யப்படும் செயல் திட்டத்தை வரையறுக்கவேண்டும், அதாவது, ஒருவர் மனத்துயரத்தில் உள்ளதாகத் தெரிந்தால், என்ன செய்யலாம் என்று தீர்மானிக்கவேண்டும்! ஒருவர் பாதிப்படைந்த நிலையில் உள்ளதாகத் தெரிந்தால், அல்லது, அவரே உதவி கோரினால், என்ன செய்யவேண்டும்? அதற்கான செயல்திட்டம் என்ன? நிஜமாகவே ஒருவர் தற்கொலைமூலம் தன் உயிரை முடித்துக்கொண்டால், அப்போது என்ன செய்யவேண்டும்?

6. சிபாரிசு அமைப்பு மற்றும் ஒருவரது நலனைத் தொடர்ந்து உறுதிசெய்துகொள்ளும் ஏற்பாடுகள்

மனநலம் அல்லது தற்கொலைத் தடுப்புத் திட்டமொன்றை உருவாக்குகிறவர்கள் அதில் அவசியம் சேர்க்கவேண்டிய ஒரு பகுதி, ஒரு பகுதிநேர அல்லது முழுநேர மனநல நிபுணரை நிறுவனத்தில் சேர்ப்பது, ஊழியர்களுக்கு உதவி தேவைப்படும்போது, அவர்கள் இவர்களைத் தொடர்புகொள்ளச்செய்வது. மனநலம்சார்ந்த உதவி தேவைப்படும் ஊழியர்கள் இந்த நிபுணர்களிடம் பேசலாம், ஆலோசனை பெறலாம், அவர்களுக்குக் கூடுதல் ஆதரவு தேவைப்பட்டால், வேறு குறிப்பிட்ட மனநல நிபுணர்களிடம் செல்லுமாறு அவர் சிபாரிசு செய்வார். இந்த ஏற்பாட்டைச் செய்யும் ஒரு நிறுவனம், தன்னுடைய ஊழியர்களிடையே பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய குழுக்களை அடையாளம் காணலாம், அதாவது, மனத்துயரத்தில் உள்ள நபர்களைக் கண்டறியலாம், அவர்களுக்கு விரைவில் உதவி கிடைப்பதை உறுதி செய்யலாம். இதற்காக, நிறுவனங்கள் தங்களது EAP பராமரிப்பு வழங்குநருடன் ஒப்பந்தம் செய்துகொள்ளலாம், அவர்களது EAP அமைப்பில் ஒரு மனநல நிபுணரும் இடம்பெறும்படி செய்யலாம்.

மனநலம் மற்றும் தற்கொலைத் தடுப்பு தொடர்பாக ஊழியர்களுக்கு என்னென்ன ஆதரவுகள் கிடைக்கின்றன என்பதை அந்நிறுவனம் தெளிவுபடுத்தவேண்டும். இதற்காக அவர்கள் சுவரொட்டிகள், கையேடுகளைப் பயன்படுத்தலாம், நிறுவன இணையத்தளத்தில் எல்லாரும் காணும்படி அறிவிப்புகளை வெளியிடலாம், மேலாளர்-ஊழியர் அல்லது ஊழியர்-HR கூட்டங்களின்போது இதுபற்றி விவாதிக்கலாம். இதனால், தற்கொலை எண்ணம் கொண்ட ஊழியர்கள் பிறரிடம் உதவி கேட்கத் தொடங்குவார்கள், அதன்மூலம் தற்கொலைகளைக் கட்டுப்படுத்தலாம்.

7. ரகசியக்காப்பு வாசகங்கள்

மனநலப் பிரச்னை அல்லது தற்கொலை எண்ணம் கொண்ட ஓர் ஊழியர், அதைப்பற்றிப் பிறரிடம் பேசுவதற்கோ உதவி கேட்பதற்கோ தயங்குகிறார். அதற்குக் காரணம், அவர்கள் சொல்லும் விஷயம் ரகசியமாக இருக்குமா, அல்லது பிறருக்குத் தெரிந்துவிடுமா என்று அவர்கள் கவலைப்படுவதுதான். ஆகவே, தற்கொலைத் தடுப்புத் திட்டத்தில்

ஊழியர்களின் கவலைகளைப் புரிந்துகொண்டு அவற்றுக்குப் பதிலளிக்கும் ரகசியக்காப்பு வாசகங்கள் இடம்பெறவேண்டும்: ஊழியர்களின் தனிப்பட்ட விவரங்கள் யாரிடம் பகிர்ந்துகொள்ளப்படும்? அந்த விவரங்கள் எந்த அடிப்படையில் பகிர்ந்துகொள்ளப்படும்? ஓர் ஊழியர் தனது மனநலப் பிரச்னை அல்லது தற்கொலை எண்ணங்களைப்பற்றிப் பேசினால், அது அவர்களுடைய பதவி அல்லது வேலையைப் பாதிக்குமா?

இவைபற்றி ஒரு நிறுவனம் துல்லியமான விவரங்களை வழங்கினால், அதன் ஊழியர்கள் திருப்தியடைவார்கள், தங்கள் நிறுவனம் தங்கள்மீது அக்கறை வைத்திருக்கிறது என்று புரிந்துகொள்வார்கள், தாங்கள் சொல்லும் விவரங்கள் நுண்ணுணர்வுடன் கையாளப்படும் என்று எண்ணுவார்கள், தங்களுக்கு வந்துள்ள மனநலப் பிரச்னை காரணமாகத் தங்கள்மீது பாரபட்சம் காட்டப்படாது என்றூ நம்புவார்கள். இதனால், தங்களுக்கு உதவி தேவைப்படும்போது, அவர்கள் தயங்காமல் உதவி கோருவார்கள்.

8. பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய குழுக்களின் கவலைகளைப்பற்றிப் பேசும் ஒரு தொகுப்பு

ஒரு நிறுவனத்தில் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய குழுக்கள்:

  • வழக்கமாகத் தாங்கள் வேலை செய்யும் பாணியிலிருந்து திடீரென்று மாறுகிற ஊழியர்கள் (உதாரணமாக: செயல்திறன் குறைதல், நேரத்துக்கு வேலைக்கு வராமலிருத்தல் அல்லது வேலைத் தரம் குறைதல்)
  • வேலை பறிபோகக்கூடும்/ பொறுப்புகள் குறைக்கப்படக்கூடும்/ சம்பளம் குறையக்கூடும் என்கிற நிலையில் உள்ள ஊழியர்கள்
  • தங்கள் சொந்த ஊரிலிருந்து மாறி வந்து வேலைக்குச் சேர்ந்திருக்கிறவர்கள், புதிய சூழலில் பொருந்தச் சிரமப்படுகிறவர்கள், அதன்மூலம் பயமுறுத்தலுக்கு ஆளாகிறவர்கள்
  • நிதி அல்லது உணர்வுத் துயரில் உள்ள ஊழியர்கள், அதற்கான காரணம் அவர்களுடைய வேலை தொடர்பானதாக இருந்தாலும் சரி, வேறுவிதமாக இருந்தாலும் சரி.

சில நிறுவனங்களில், பாதிப்பை உண்டாக்கக்கூடிய காரணிகளை ஊழியர்கள் அதிகம் காண்பார்கள், உதாரணமாக, ராணுவம் அல்லது பாதுகாப்புப்பணியில் உள்ளவர்கள் வன்முறையை அடிக்கடி காண நேரிடும், வேறு சில நிறுவனங்களில், ஒருவர் தற்கொலைமூலம் தன் உயிரை முடித்துக்கொள்வதற்கான வாய்ப்புகள் எளிதில் கிடைக்கும், உதாரணமாக, மருந்துத் தயாரிப்பு நிறுவனங்கள் அல்லது, கன ரக இயந்திரங்களை அதிகம் பயன்படுத்தும் நிறுவனங்கள், இதுபோன்ற நிறுவனங்கள் தங்களுடைய திட்டத்தைத் தயாரிக்கும்போது, இந்த அம்சங்களைக் கருத்தில் கொள்ளவேண்டும்.

9. செயல் திட்டம்

ஒரு தற்கொலைத் தடுப்புத் திட்டம் சிறப்பாகச் செயல்படவேண்டுமென்றால், அதற்கு ஒரு குறிப்பிட்ட செயல் திட்டம் இருக்கவேண்டும். இதில் பின்வருவன இடம்பெறும்:

  • தற்கொலைத் தடுப்புத் திட்டத்தில் இடம்பெறும் செயல்பாடுகளின் பட்டியல்
  • ஒவ்வொரு செயல்பாட்டையும் நிறைவேற்றும் பொறுப்பு யாருடையது? அதாவது, ஆரோக்கியம், HR அல்லது பிற துறைகளைச் சேர்ந்த பொறுப்பான ஊழியர்களின் பெயர்கள்
  • ஒவ்வோர் ஆண்டுக்கும் செயல்பாடுகளின் நேர வரிசை
  • இந்தச் செயல்பாடுகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட வளங்கள், இதன்மூலம், நெருக்கடி நேரங்களில் அநாவசிய ஆவணத் தாமதங்கள் இல்லாமல், ஒவ்வொரு செயலையும் செய்யவேண்டிய துறைகள் சுதந்தரமாக இயங்கலாம்
  • திட்டத்தின் தாக்கத்தைக் கண்காணிக்கும் ஓர் அமைப்பு: அதாவது, இந்தச் செயல்பாடுகள் சரியான நேரத்தில் திட்டமிடப்படுதல், அவற்றின் செயல்திறன் அல்லது அவற்றால் கிடைத்துள்ள பலனை மதிப்பிடுதல்.

இந்தத் தொடர் வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷனால் தொகுக்கப்பட்டது. இதற்கான கருத்துகளை வழங்கியவர்கள்: டாக்டர் குருராஜ் கோபாலகிருஷ்ணா, தொற்றுநோயியல் பிரிவுத் தலைவர், NIMHANS, டாக்டர் பிரபா சந்திரா, உளவியல் பேராசிரியர், NIMHANS, டாக்டர் சீமா மெஹ்ரோத்ரா, மருத்துவ உளவியல் கூடுதல் பேராசிரியர், NIMHANS, டாக்டர் பூர்ணிமா போலா, உதவிப் பேராசிரியர், மருத்துவ உளவியல் துறை, NIMHANS, டாக்டர் செந்தில் குமார் ரெட்டி, உளவியல் துணைப் பேராசிரியர், NIMHANS.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org