மனச்சோர்வு: கவனித்துக்கொள்கிறவரையும் தாக்கலாம்!

தன் அன்புக்குரிய ஒருவர் பாதிக்கப்பட்டபோது, அவரைக் கவனித்துக்கொண்டிருந்தார் இந்தப் பெண், அதனால் தனக்கு ஏற்பட்ட பதற்றம், மனச்சோர்வை விளக்குகிறார், தான் வென்ற கதையைச் சொல்கிறார்

அருணா ராமன்

நான் எல்லாம் செய்யநினைக்கிற பெண்: பாடம்சொல்லித்தருவேன், இளம் உள்ளங்களை வளர்த்து, கற்பனை எல்லைகளை உடைக்கக் கற்றுத்தருவேன், சமூகத்தில் பல கடமைகள் எனக்குண்டு, உட்கார்ந்த இடத்தில் ஊர் சுற்றுவேன், இப்போதுதான் உண்மையாக ஊர் சுற்றத் தொடங்கியிருக்கிறேன், என் சுதந்தரத்தைக் கொஞ்சம் தயக்கத்துடனே அனுபவிப்பேன். எனக்கு அவ்வப்போது மனச்சோர்வும் பதற்றமும் வரும். சில நேரங்களில் அது என்னை முடக்கிப்போட்டுவிடும்.

அதைச் சரி செய்யவேண்டும் என்று நான் நினைக்கவில்லை. எல்லாவற்றையும் அவ்வப்போது மறந்துவிடுவேன், இந்தப் பிரச்னையைச் சொல்லி யாரிடமும் உதவி கேட்கவில்லை, சிகிச்சை பெறவில்லை. எனக்கு உதவிசெய்ய யாரும் இல்லை என்று நான் சொல்லமாட்டேன். நான் '80களில் பதின்பருவத்திலும், '90களில் இருபதுகளிலும் வளர்ந்தவள். அப்போதெல்லாம் மனச்சோர்வு, பதற்றம் என்றாலே பைத்தியம் என்றுதான் அர்த்தம். ஆகவே, நான் யாரிடமும் உதவி கேட்கத் தயங்கினேன். ஆனால், இரண்டு ஆண்டுகளுக்குமுன்னால், என் வாழ்க்கையையே மாற்றிய ஒரு சூழ்நிலை: என் வாழ்க்கையில் முக்கியமான சில நபர்களுக்கு அடுத்தடுத்துப் பிரச்னைகள் வந்தன, அவர்களுடைய உயிருக்கே ஆபத்து ஏற்பட்டது. அவர்களில் சிலரை நான் கவனித்துக்கொள்ளவேண்டியிருந்தது. அப்போதெல்லாம், தினமும் ஏதேதோ வேலைகள் என்னை மூழ்கடிக்கும்: பில்லுக்குப் பணம் செலுத்துவது, வேலைகளைக் கவனிப்பது, மருத்துவர்களிடம் செல்வது... இதையெல்லாம் முடித்து, இரவு வந்ததும், எனக்குள் ஒரு கனமான பயம் ஏற்படும், அது என்னைக் கட்டிப்போட்டுவிடும், என்னை விட மறுக்கும். ஒருபக்கம், என்னுடைய பதற்றப்பிரச்னைகள், இன்னொருபக்கம், நான் வலுவாக இருந்தாகவேண்டிய தேவை. இரண்டும் சேர்ந்து என்னை உள்ளிருந்து தின்றன. நான் ஒரே நேரத்தில் இரண்டு சண்டைகளில் மோதவேண்டியிருந்தது.

பாதிக்கப்பட்டவர்களைப் பார்த்துக்கொள்வது என்பது ஒரு பெரிய பொறுப்பு. யாரும் அதை விரும்பி ஏற்றுக்கொள்வதில்லை. நம்மில் பலர் திடீரென்று நிகழ்ந்த எதிர்பாராதவொரு சூழ்நிலையால் அந்தப் பொறுப்பில் தள்ளப்படுகிறோம். அப்போது, நண்பர்கள், குடும்பத்தினர் எல்லாரும் நோய்வாய்ப்பட்டவரையோ விபத்தில் காயம்பட்டவரையோதான் கண்டுகொள்வார்கள். அவரைக் கவனித்துக்கொள்கிறவர் ஓரமாக நிற்பார், அவரும் சண்டையிட்டுக் களைத்திருப்பார், மிகவும் சிக்கலான உணர்வுகளைக் கையாண்டுகொண்டிருப்பார்.

பாதிக்கப்பட்டவரைக் கவனித்துக்கொள்கிறவர்தான் அவர்சார்பாக எல்லாரிடமும் பேசவேண்டும், மருத்துவ நிபுணர்கள், குடும்ப உறுப்பினர்கள், நலம்விரும்பும் நண்பர்கள், நிதி அமைப்புகள் (காப்பீட்டு நிறுவனங்கள் உள்பட)... எல்லாரிடமும் அவர்தான் பேசவேண்டும். ஆனால், இந்த அழுத்தத்தை யாராவது புரிந்துகொள்கிறார்களா? பாதிக்கப்பட்டவரைக் கவனித்துக்கொள்கிறவர் மன அமைதியுடன் இந்தச் சூழலைக் கையாளவேண்டும் என்று எல்லாரும் எதிர்பார்க்கிறார்கள், அவர்கள் தங்களுக்கென்று கவலைப்படக்கூடாது, தங்கள் ஆரோக்கியத்தைக் கவனிக்கக்கூடாது, நிச்சயமற்றதன்மையை எண்ணித் திகைக்கக்கூடாது. என்னைப்பொறுத்தவரை, ஒருபக்கம் என்னால் அனைத்தையும் சமாளிக்க இயலவில்லை, இன்னொருபக்கம் எனக்கே பல உணர்வுப் பிரச்னைகள் இருந்தன, ஆகவே நான் சுருங்கிப்போனேன், சில நேரங்களில் பிறர்முன்னே சுருங்கினேன், சில நேரங்களில் என் மனத்துக்குள்ளேயே சுருங்கிப்போனேன்.

ஆனால், நான் விடவில்லை, மெதுவாக அந்நிலையிலிருந்து வெளியே வந்தேன், அதற்கு என் நண்பர் வட்டம்தான் உதவியது. என்னைநானே நேர்மையாக மதிப்பிட்டுக்கொண்டேன், நான் யார் என்று கேட்டுக்கொண்டேன், ஒவ்வொருநாளும் எனக்கு மகிழ்ச்சியும் கண்ணியமும் வேண்டும் என்று சொல்லிக்கொண்டேன். அப்போது எனக்கு உதவிய சில குறிப்புகள்:

  • மருத்துவச் சேவை வழங்குநர்களுடன் பழகுதல் – மருத்துவர் என்பவர் சேவை வழங்குநர், மற்றவர்கள் அவரிடம் சேவை பெறுகிறார்கள், மற்றபடி இவர்கள் இருவரும் ஒரே தளத்தில்தான் இருக்கிறார்கள், இதைப் புரிந்துகொள்வதற்கு எனக்கு நெடுநாள்கள் ஆயின. மருத்துவர்களில் பலவகை. சிலர் அதிகம் பேசமாட்டார்கள், ஓர் அமைதியான அணுகுமுறையைக் கொண்டிருப்பார்கள். 'நீங்கள் உங்கள் வாழ்க்கையை, அல்லது, உங்கள் அன்புக்குரியவரின் வாழ்க்கையை என்னிடம் நம்பி ஒப்படைக்கலாம்' என்று காட்டுவதுபோல் நடந்துகொள்வார்கள். அவர்கள்மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. ஆனால், பல நேரங்களில் நான் சந்தித்த மருத்துவர்கள் பெரிய திறமைசாலிகளாகவும், பிறரை எடுத்தெறிந்து பேசுகிறவர்களாகவும் இருந்தார்கள். ஒருமுறை, ஒரு மருத்துவர் என்னிடம் மிகவும் கொடூரமாகப் பேசினார். அவரை மாற்றவேண்டும் என்று நான் சொன்னேன். ஆனால், நான் யாரைக் கவனித்துக்கொண்டிருந்தேனோ, அவருக்கு அந்த மருத்துவரைப் பிடித்திருந்தது. அதன்பிறகு, நான் அவருடன் அந்த மருத்துவரைச் சந்திக்கவில்லை, அவரை யாராவது கவனித்துக்கொள்கிறார்கள் என்பதைமட்டும் நிச்சயப்படுத்திக்கொண்டேன்.  

  • காலிக் குரலைக் கையாளுதல் – ஒருவருக்கு உடம்பு சரியில்லை என்றால், அவர் சிகிச்சை பெறும்போது அவரைப் பார்க்கப் பலர் வருவார்கள், அவர்கள் அவரைக் கவனித்துக்கொண்டிருக்கிற உங்களையும் பார்ப்பார்கள், பேசுவார்கள். சிலருக்கு, உண்மையான அக்கறை இருக்கும். வேறு சிலர், 'இதைவிட மோசமான நிலைமையில இருந்தவங்களையெல்லாம் நான் பார்த்திருக்கேன்' என்பார்கள். அதுபோன்ற காலிக்குரல்களைக் கேட்கும்போது, நான் என் மனத்துக்குப் பிடித்த ஒரு பாடலை நினைத்துக்கொள்வேன். என் நண்பர் ஒருவர்தான் இந்த யோசனையை எனக்குச் சொல்லிக்கொடுத்தாள்.

  • வெளிவிடுதல் – ஒருவரைக் கவனித்துக்கொள்ளுதல் என்பது, உடலளவிலும் உணர்வளவிலும் நம்மை உறிஞ்சிவிடக்கூடியது. அதுபோன்ற நேரங்களில் நாம் நமக்காக ஏதாவது சிறிய வேலையைச் செய்துகொண்டாலும், உடனே குற்றவுணர்ச்சி ஏற்படும். உதாரணமாக, ஒருமுறை நான் ஷாப்பிங் சென்றிருந்தேன். திடீரென்று என் கைகள் நடுங்கத்தொடங்கின, "இந்த நேரத்தில் இது உனக்குத் தேவையா?" என்று யோசிக்க ஆரம்பித்தேன். அதன்பிறகு, என்னை நல்லபடியாகக் கவனித்துக்கொள்வதில் எந்தத் தவறும் இல்லை என்று நான் புரிந்துகொண்டேன். என்னுடைய மீட்சிக்கு அதுதான் உதவும் என்று உணர்ந்தேன். நான் உணர்ந்த இன்னொரு விஷயம், மனத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டிருக்கக்கூடாது, வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் அதைத் தளரவிடவேண்டும், அதனால் அழுகையோ கூச்சலோ வந்தால்கூடப் பரவாயில்லை! ஒருமுறை, எங்கேயோ ஒரு குழாய் ஒழுகிக்கொண்டிருந்தது. அதைப்பார்த்ததும், வாழ்க்கை எனக்கு எதிராகச் சதிசெய்கிறது என்று நினைத்து நான் அழ ஆரம்பித்தேன். ஆனால், அந்த அழுகை நல்லதுதான். பல மாதங்களாக அடக்கிவைத்திருந்த வலி, அப்படி வெளிப்பட்டது.

  • தன்னை-நேசித்தல் –  பாதிக்கப்பட்டோரைக் கவனித்துக்கொள்கிறவர்கள், பொதுவாக தங்களுடைய தேவைகளைப் புறக்கணித்துவிடுவார்கள் (அல்லது, அவர்கள் அப்படிப் புறக்கணிக்கவேண்டும் என்று மற்றவர்கள் எதிர்பார்ப்பார்கள்.) ஆனால், அப்படித் தியாகியாக வாழ்ந்து என்ன பலன்? சில சிந்தனைகள்:

    • என் கண்ணெதிரே சிலருடைய உயிர் கேள்விக்குறியாகிக்கொண்டிருந்ததால், என் உயிரின் நிலையாமையை நான் உணர்ந்தேன். ஏற்கெனவே எனக்கு மனச்சோர்வு உண்டு, இந்த பயங்களும் அதோடு சேர்ந்து பலமடங்காகின. அதனால், என்னை யாருக்குமே பிடிக்கவில்லை. நண்பர்கள் என்னைவிட்டு விலகிச்சென்றார்கள். அதேசமயம், ஒரு நண்பர்மட்டும் எனக்கு தைரியம் கொடுத்தார், 'இந்தப் பயங்களெல்லாம் இயல்பானவை' என்று என்னையே ஒப்புக்கொள்ளச்செய்தார். மெதுவாக, நான் என் பயங்களை எதிர்கொள்ளத்தொடங்கினேன், அவற்றைப்பார்த்து "அதனால் என்ன?" என்று கேள்வி கேட்க ஆரம்பித்தேன். இப்படி நான் கேட்ட பல "அதனால் என்ன"கள்தான், என்னை இருட்டிலிருந்து வெளியே கொண்டுவந்தன.

    • பாதிக்கப்பட்ட ஒருவரைக் கவனித்துக்கொள்கிறவர், தனிமையைப் பழகவேண்டும். நான் அவர் பக்கத்திலேயே இல்லாவிட்டால், ஏதாவது மோசமாக நடந்துவிடும் என்று நான் பயப்படுவேன். அப்போது, ஒரு நல்ல உறவினர் எனக்கு இந்த உண்மையை விளக்கிச்சொன்னார், 'நீ இருந்தாலும் இல்லைன்னாலும், நடக்கவேண்டியது நடக்கும், நடக்கக்கூடாதது நடக்காது.' அதன்பிறகு, நான் அவ்வப்போது பிறருடைய உதவியைக் கோரிப்பெற ஆரம்பித்தே, எனக்கென்று நேரம் செலவிடத்தொடங்கினேன். அவ்வப்போது சினிமாவுக்குச் செல்வேன், சில நேரங்களில் தனியாக, சில நேரங்களில் நண்பர்களுடன். வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் என் நெருங்கிய நண்பர்களைச் சந்திப்பேன், ஸ்பாவுக்குச் செல்வேன், ஓடுவேன், உடம்பைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வேன்.

  • உதவியை நாடுதல் – ஒரு நல்ல நண்பர் ஒருமுறை சொன்னார், "பாதிக்கப்பட்டவரைவிட அவரைக் கவனித்துக்கொள்கிறவருடைய நிலைமைதான் இன்னும் சிரமம். ஏனெனில், பாதிக்கப்பட்டவருக்காவது சிகிச்சைத் திட்டம் இருக்கிறது, அவர் எப்போது குணமாவார் என்பது அவருக்குத் தெரியும். கவனித்துக்கொள்கிறவர்களுக்கு? அவர்களுடைய மனநிலை என்ன என்று அவர்களுக்கே தெரியாதே!" ஒருபக்கம் ஒருவரைக் கவனித்துக்கொண்டபடி இன்னொருபக்கம் பதற்றத்தால் பாதிக்கப்பட்ட நான், அதிலிருந்து மீள முயன்றேன், முதலில் என்னுடைய நட்பு வட்டத்தில் சிலரைச் சேர்த்தேன்: எந்தத் தீர்ப்பும் வழங்காமல் நான் சொல்வதை அக்கறையாகக் கேட்கிறவர்கள்; என்மீது எப்போதும் நம்பிக்கை இழக்காதவர்கள்; எனக்கு என்னுடைய சுயமதிப்பை நினைவுபடுத்திய மன நல நிபுணர்கள்; நான் விலகி வந்துவிட்ட, ஆனால் இப்போதும் அவ்வப்போது சந்திக்கிற 'தீவிர விமர்சனப் பேர்வழிகள்' (ஆம், அவர்களுக்கும் நான் நன்றியுடன் இருக்கிறேன்).

  • மனம் திறந்து பேசுதல் –அப்போதைய நிலைமையில், நான் மனம்விட்டுப் பேசுவதற்கே நெடுநாள் ஆனது. காரணம், 'நோய்வாய்ப்பட்டவரைவிடவா நான் அதிக வேதனையில் இருக்கிறேன்?' என்று நானாக எண்ணிக்கொண்டதுதான். அதனால், நான் பேசத் தயங்கினேன். ஒருகட்டத்தில், நான் பேச ஆரம்பித்தேன். என்னுடைய ஆழமான பயங்களை என் நட்பு வட்டத்திடம் பகிர்ந்துகொண்டேன். அது எனக்கு வலிமை தந்தது. கொஞ்சம்கொஞ்சமாக, நான் குணமாக ஆரம்பித்தேன், என்னுடைய பதற்றங்களைப்பற்றி இயல்பாகப் பேச ஆரம்பித்தேன். அவை முன்பு என்னிடம் இருந்தவை என்றல்ல, இப்போது என்னுடைய ஒரு பகுதியாக இருக்கிறவை என்பதுபோல! ஆரம்பத்தில், இப்படிப் பேசும்போதெல்லாம் எனக்குப் பதற்றம் வரும், "அடடா, அவர்கள் என்னைப்பற்றி என்ன நினைப்பார்களோ" என்று பயப்படுவேன். கொஞ்சம்கொஞ்சமாக, நான் பயப்படுவது என்னுடைய விமர்சனத்துக்குதான் என்று நான் புரிந்துகொண்டேன்; மற்றவர்கள் என்னுடைய பிரச்னைகளை அலட்சியப்படுத்தவில்லை, சொல்லப்போனால், சிலர் தங்களுடைய தனிப்பட்ட வலி மற்றும் வேதனையைக்கூடப் பகிர்ந்துகொண்டார்கள், அதன்மூலம் எனக்குப் பல நீண்டகால நட்புகள் கிடைத்தன.

என்னுடைய பயணம் இன்னும் முடியவில்லை - நான் கவனித்துக்கொள்கிறவர்கள் நன்றாக இருக்கிறார்கள், நான் மனச்சோர்வு, பதற்றத்துடன் வாழ்நாள்முழுக்கப் போராடவேண்டியிருக்கும் என்று எனக்குத் தெரியும். அதேசமயம், என்னுடைய சொந்தக் குரலில், உறுதியில் நான் வலிமையைக் காண்கிறேன் -- ஒவ்வொரு நாளும் பலமாகிறேன்.

அருணா ராமன் தற்போது ஓர் அமெரிக்கப் பல்கலைக்கழகத்துடன் பணியாற்றிவரும் சமூகப் புதுமையாக்க நிபுணர். அவர் தனது பதற்றம் மற்றும் மனச்சோர்வுப் பிரச்னைகளைச் சமாளிப்பதற்காக, தினமும் மனநிறைவான வாழ்க்கைமுறையைப் பயின்றுவருகிறார்.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org