குறுகியகால உளவியல் குறைபாடு

Q

குறுகியகால உளவியல் குறைபாடு என்றால் என்ன?

A

நீனாவின் கணவர் திடீரென்று ஒரு விபத்தில் இறந்துவிட்டார். இந்த அதிர்ச்சியை நீனாவால் தாங்கிக் கொள்ளவே இயலவில்லை. தன் கணவர் இறந்துவிட்டார் என்பதை ஏற்றுக் கொள்ளக்கூட மனமில்லாமல் அவர் திகைத்துப்போய் அமர்ந்திருந்தார். நீனா அழக்கூட இல்லை. ஒரு வினோதமான பார்வையுடன் எங்கேயோ பார்த்துக் கொண்டு மணிக்கணக்காக அமர்ந்திருப்பார், நகரமாட்டார், பேசக்கூடமாட்டார். இந்த நிலை சுமார் இரண்டு வாரங்களுக்கு நீடித்தது. அதன்பிறகு அவர் மெதுவாகச் சுய நினைவுக்குத் திரும்பினார், தன்னுடைய வாழ்க்கையைத் தொடர்ந்தார்.

இது ஓர் உண்மைக் கதை அல்ல, இந்தக் குறைபாடு நிஜ வாழ்க்கையில் எப்படித் தோன்றும் என்பதை உங்களுக்குப் புரிய வைப்பதற்காக எழதப்பட்டது.

குறுகியகால உளவியல் குறைபாடு என்பது ஒரு குறுகியகாலப் பிரச்னை. இதில் பாதிக்கப்பட்ட நபருக்கு திடீரென்று உளவியல் பிரச்னைகள் தோன்றத் தொடங்குகின்றன, இதன்மூலம் அவர் மாயத் தோற்றங்களைக் காணக் கூடும், நடக்காத ஒன்றை நடந்ததாகச் சொல்லக்கூடும், ஒழுங்கற்ற முறையில் பேசக்கூடும், அசாதாரணமாக நடந்துகொள்ளக்கூடும், இவர்கள் மணிக்கணக்காக அசையாமல் ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டிருக்கவும் (கேட்டடோனிக்) கூடும்.

இதுபோன்ற நிகழ்வுகள் சற்றும் எதிர்பாராத அதிர்ச்சிகரமான சம்பங்கள் நிகழும்போது ஏற்படுகின்றன. உதாரணமாக ஒரு விபத்து அல்லது குடும்ப உறுப்பினர் ஒருவருடைய மரணம் அல்லது தொழிலில் பெரிய நஷ்டம் போன்றவை. இதுபோன்ற சம்பவங்கள் ஏற்படும்போது அவற்றைச் சந்திக்கிறவர்கள் எதார்த்தத்தை உணர இயலாமல் குறுகியகாலத்திற்கு உளவியல் பிரச்னைகளால் பாதிக்கப்படுகிறார்கள், அந்த அழுத்தம் அவர்களை இயல்பாக இயங்கவிடாதபடிச் செய்துவிடுகிறது. இந்த நிலை சில நாள்களுக்கு நீடிக்கும், அதன்பிறகு அவர் தன்னுடைய பழைய நிலைமைக்குத் திரும்பி வந்துவிடுவார்.

குறிப்பு: குறுகியகால உளவியல் குறைபாடு இப்படிப்பட்டவர்களுக்குத் தான் வரும் என்று எந்த விதிமுறையும் கிடையாது, நன்கு ஆரோக்கியமாக வாழ்கிறவர்கள் கூட திடீரென்று குறுகியகாலத்திற்கு இதுபோன்ற பிரச்னைகளால் பாதிக்கப்படலாம்.

Q

குறுகியகால உளவியல் குறைபாட்டின் அறிகுறிகள் என்ன?

A

குறுகியகால உளவியல் குறைபாட்டின் சில அறிகுறிகள் இவை:

  • ஒழுங்கற்ற பேச்சு அல்லது யாரிடமும் பேச மறுத்தல்
  • மாயை உணர்வு (நடந்திருப்பது உண்மையல்ல என்று நம்புதல் அல்லது நடக்காத ஒன்றை நம்புதல்)
  • மாயத்தோற்றங்கள் (உண்மையல்லாத தோற்றங்களைக் காணுதல் அல்லது ஒலிகளைக் கேட்டல்)
  • தர்க்கரீதியில் பொருந்தாத, குழம்பிய சிந்தனைகள் மற்றும் செயல்பாடுகள்
  • அசாதாரணமான நடவடிக்கைகள்
  • ஒரு குறிப்பிட்ட நிலையில் பல மணிநேரம் அமர்ந்திருத்தல் (கேட்டடோனியா)
  • உணர்வுக் கொந்தளிப்பு அல்லது குழப்பம்

உங்களுடைய குடும்ப உறுப்பினர் அல்லது நண்பர் யாரிடமாவது இதுபோன்ற அறிகுறிகளை நீங்கள் கண்டால் நீங்கள் அவர்களுக்கு உதவலாம், அவர்களை நன்கு கவனித்துக் கொண்டு இந்தப் பிரச்னையிலிருந்து அவர்கள் மீளச் செய்யலாம்.

Q

குறுகியகால உளவியல் குறைபாடு எதனால் ஏற்படுகிறது?

A

எந்த ஒரு பெரிய அதிர்ச்சி தரும் சம்பவம் அல்லது சூழ்நிலை இந்தப் பிரச்னையைத் தூண்டக்கூடும். பலவிதமான சூழ்நிலைகளைச் சமாளிக்கக் கற்காதவர்கள் அல்லது ஆளுமைக் குறைபாடுகளைக் கொண்டவர்களிடம் இந்தப் பிரச்னை அடிக்கடி வருவதை மருத்துவர்கள் கவனித்துள்ளார்கள். சில நேரங்களில் குழந்தைப்பேற்றுக்குப் பிந்தைய மனச் சோர்வில் இருக்கும் பெண்களூக்கு இந்தக் குறுகியகால உளவியல் குறைபாடுகள் வருகின்றன.

Q

குறுகியகால உளவியல் குறைபாட்டிற்குச் சிகிச்சை பெறுதல்

A

பெரும்பாலான நேரங்களில் குறுகியகால உளவியல் குறைபாட்டின் அறிகுறிகள் ஓரிரு வாரங்களில் நின்றுவிடும்.

ஒரு வேளை இந்த அறிகுறிகள் ஓரிரு வாரங்களுக்குள் நிற்காமல் தொடர்ந்தால் அல்லது இன்னும் தீவிரமானால் உடனடியாக ஒரு மனநல நிபுணரைக் காணுங்கள். அவர்கள் சில விசேஷப் பரிசோதனைகள் மற்றும் நேர்காணல்களை நிகழ்த்தி பிரச்னையின் தீவிரத்தைக் கண்டறிவார்கள், அதற்கேற்ப என்ன சிகிச்சை தருவது எனத் தீர்மானிப்பார்கள்.

பொதுவாக இந்தப் பிரச்னை கொண்டவர்களுக்கு ஆலோசனைகள் பலனளிக்கலாம் அல்லது மருந்துகள் பலனளிக்கலாம் அல்லது இவை இரண்டையும் சேர்த்து பயன்படுத்தவேண்டியிருக்கலாம். அதே சமயம் பாதிக்கப்பட்டவர் தன்னைத் தானே துன்புறுத்திக் கொள்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அவர்களைச் சில நாள்கள் மருத்துவமனையில் சேர்த்து கவனமாகப் பார்த்துக் கொள்வது நல்லது. ஒருவர் இந்தப் பிரச்னையிலிருந்து மீண்டபிறகும் சில நாள்களுக்கு அவருக்கு ஆலோசனையைத் தொடரவேண்டியிருக்கலாம், அப்போதுதான் மீண்டும் இதே போன்ற பிரச்னையை அவர் சந்திக்கிற சூழ்நிலையைத் தவிர்க்க இயலும்.

Q

குறுகியகால உளவியல் குறைபாடு கொண்டவர்களைக் கவனித்துக் கொள்ளுதல்

A

குறுகியகால உளவியல் குறைபாடு கொண்டவர்களுடைய குடும்பத்தினரும் நண்பர்களும் அவர்களுக்கு வெகுவாக உதவ இயலும், அதன்மூலம் அவர்கள் இந்த நிலைமையைச் சமாளித்து பிரச்னையிலிருந்து விரைவில் மீண்டு விடுவார்கள்.

உங்களுக்குத் தெரிந்த யாராவது ஒரு பெரிய சோகத்தையோ அதிர்ச்சியையோ சந்தித்திருந்தால் அவர்களுக்கு குறுகியகால உளவியல் குறைபாடு ஏற்பட்டிருப்பதை நீங்கள் உணர்ந்தால் அவர்களை நீங்கள் நன்கு கவனித்துக் கொண்டு, அவர்கள் பிரச்னையிலிருந்து விரைவில் மீள்வதற்கு உதவலாம். இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்ட உங்களுடைய நண்பர் அல்லது உறவினர்க்கு நீங்கள் உதவ விரும்பினால் பின்வரும் உத்திகளைப் பயன்படுத்தலாம்:

  • குறுகியகால உளவியல் குறைபாட்டைப் பற்றி நன்கு தெரிந்து கொள்ளுங்கள், இந்தப் பிரச்னை எப்படிப்பட்டது என்பதை நீங்கள் புரிந்து கொண்டால்தான் அவர்கள் என்ன மாதிரி அனுபவத்தைச் சந்திக்கிறார்கள் என்பதை உணர்ந்து அதற்கேற்ப அவர்களுக்கு உதவ இயலும்.
  • அவர்களுக்கு உணர்வுப்பூர்வமான ஆதரவைக் கொடுங்கள், அவர்களுடன் தொடர்ந்து பேசுங்கள், அவர்கள் சொல்வதை அக்கறையுடன் கேளுங்கள், அனுதாபம் காட்டுங்கள், இதன் மூலம் ஒருவேளை அவர்களுடைய உளவியல் குறைபாடுகள் பெரிதாகக்கூடும் என்றால் அதற்கான அறிகுறிகளை நீங்கள் விரைவில் கவனித்து மருத்துவரின் உதவியுடன் அதனைத் தடுத்து அவர் குணமாகச் செய்யலாம்.
  • தினமும் சிறிது நேரம் உங்களுடைய நண்பர் அல்லது உறவினரைச் சிறிது தொலைவு நடக்கச் செய்யுங்கள்.
  • அவர்களைத் தனியே விடாதீர்கள், அதே சமயம் மிகவும் நெருங்கிச் சென்று தொந்தரவு செய்யாதீர்கள், அவர்கள் எப்போதும் உங்கள் கண் பார்வையில் இருக்கும்படிப் பார்த்துக்கொள்ளூங்கள்.
  • அவர்களுடைய பேச்சைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருங்கள், தங்களைத் தாங்களே காயப்படுத்திக் கொள்வதுபற்றி அவர்கள் ஏதாவது பேசினால் உடனடியாகச் சம்பந்தப்பட்ட சிகிச்சையாளர் அல்லது மருத்துவருக்குத் தெரிவியுங்கள்.

Q

குறுகியகால உளவியல் குறைபாட்டின் வகைகள்

A

குறுகியகால உளவியல் குறைபாடுகள் விளிம்பு நிலை ஆளுமைக் குறைபாடுகள் மற்றும் ஸ்கிஜோஃப்ரெனியா குறைபாடுகளுடன் தொடர்புடையவையாக அறியப்பட்டுள்ளன.

  • ஒரு வெளிப்படையான அழுத்தம் தரும் சம்பவத்தால் நிகழும் குறுகியகால உளவியல் குறைபாடு: இதில் பாதிக்கப்பட்டவர் ஏதாவது ஒரு வெளிப்படையான அதிர்ச்சியைச் சந்தித்திருப்பார், உதாரணமாக அவருடைய குடும்ப உறுப்பினர் ஒருவர் மரணமடைந்திருக்கலாம் அல்லது சொந்தக் கணவர்/மனைவியை அவர் இழந்திருக்கலாம், உடல் ரீதியில் யாராவது அவரைத் தாக்கியிருக்கலாம், அவருடைய பணமோ நகையோ பறிக்கப்பட்டிருக்கலாம், அவர் ஒரு பெரிய விபத்தையோ இயற்கைச் சீரழிவையோ சந்தித்திருக்கலாம். இதுபோன்ற நேரங்களில் ஏற்படும் குறுகியகால உளவியல் குறைபாடு சில வாரங்களுக்குள் தானாகக் குணமாகிவிடும், இவர்களுக்கு எந்தச் சிகிச்சையும் தேவைப்படாது.
  • வெளிப்படையான அழுத்தச் சம்பவம் ஏதும் இல்லாத குறுகியகால உளவியல் குறைபாடு: சில நேரங்களில் வெளிப்படையாக எந்த விதமான அதிர்ச்சிச் சம்பவத்தையும் சந்திக்காதவர்கள் கூட குறுகியகால உளவியல் குறைபாட்டிற்கு ஆளாகக்கூடும். இவர்கள் எதனால் இந்தப் பாதிப்பிற்கு உள்ளானார்கள் என்பது யாருக்கும் தெரியாது, இது போன்ற சூழ்நிலைகளில் இவர்களுடைய உளவியல் பிரச்னைகள் சிறிது காலத்திற்குத் தொடரும், பெரும்பாலும் ஒரு மாதத்திற்குள் இது குணமாகிவிடும்.
  • குழந்தைப்பேற்றுக்குப் பிந்தைய மனச்சோர்வுடன் வரும் குறுகியகால உளவியல் குறைபாடு: குழந்தைப்பேற்றுக்குப் பிந்தைய மனச்சோர்வை அனுபவிக்கும் தாய்மார்களுக்குக் குறுகியகால உளவியல் குறைபாடும் வரக்கூடும், இது சில மாதங்களுக்குத் தொடரலாம், அதன்பிறகு அவர்கள் இதிலிருந்து குணமாகிவிடுவார்கள்.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org