டிஸ்கால்குலியா

Q

டிஸ்கால்குலியா என்றால் என்ன?

A

டிஸ்கால்குலியா என்பது ஒரு விஷேசக் கற்றல் குறைபாடு. இந்த குறைபாடு உள்ள குழந்தையால் எண்களைப் பற்றிய அடிப்படை உண்மைகளை நினைவில் வைத்துக்கொள்ள இயலாது, ஆகவே அந்த குழந்தை கணிதம் சம்பந்தப்பட்ட செயல்களை மெதுவாகவும் துல்லியமின்றியும் செய்யும். இதற்கான அறிகுறிகள் குழந்தைக்குக் குழந்தை மாறுபடலாம். சில குழந்தைகளுக்குக்  கணிதத்தில் வரும் சொற்களால் அமைந்த கணக்குகளைப் போட இயலாமல் இருக்கலாம், சில குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட  தீர்வைப்  பெறுவதற்கான வரிசையான படிநிலைகளைப் புரிந்துக்கொள்ள இயலாமல் சிரமப்படலாம், சில குழந்தைகள் கணிதத்தில் இருக்கும் சில குறிப்பிட்ட கோட்பாடுகளைப் புரிந்துக்கொள்ள இயலாமல் சிரமப்படலாம்.

Q

எது டிஸ்கால்குலியா இல்லை?

A

பொதுவாகப் பெரும்பாலான குழந்தைகளுக்குக் கணிதம் ஒரு சிரமமானப் பாடமாகக் கருதப்படுகிறது. சில குழந்தைகள் அதனை மெதுவாகக் கற்றுக்கொள்வார்கள், ஒரே கணக்கைத் திரும்பத் திரும்பப் போட்டுப் பார்த்து பயிற்சி எடுத்து அவர்கள் கோட்பாடுகளைக் கற்றுக் கொள்வார்கள்.

சில குழந்தைகளுக்குக் கணிதம் சவாலான ஒரு பாடமாகத் தோன்றலாம், அவர்கள் இதை  எண்ணிப் பதற்றத்துடனோ அழுத்ததுடனோ காணப்படலாம். இதனால் அவர்கள் தேர்வில் சுமாரான மதிப்பெண்களை வாங்கலாம்.

இவையெல்லாம் டிஸ்கால்குலியாவின் அறிகுறிகள் அல்ல.

Q

டிஸ்கால்குலியாவின் அறிகுறிகள் என்ன?

A

ஒவ்வொரு குழந்தையும் வெவ்வேறு வேகத்தில் கற்றுக் கொள்கிறது. கணிதக் கோட்பாடுகளைக் கற்றுக்கொள்வதற்கு ஒரு சராசரியான குழந்தைக்கு நேரமும் தொடர்ச்சியான பயிற்சியும் தேவை. ஆனால் ஒரு குழந்தைக்குப் போதுமான நேரமும் கூடுதல் கவனமும், வழிகாட்டுதலும், பயிற்சியும் தரப்பட்டப் பிறகும் கூட அந்தக் குழந்தை கணக்கைப் புரிந்துக் கொள்ளாமல் சிரமப்பட்டால், கணிதக் கோட்பாடுகளை அது புரிந்துக்கொள்வதில் குறிப்பிடத் தக்க இடைவெளியும் தாமதமும் ஏற்பட்டால் அந்தக் குழந்தைக்கு டிஸ்கால்குலியா பிரச்னை இருக்கலாம்.

இதற்கான அறிகுறிகள் குழந்தைக்குக் குழந்தை வேறு மாதிரியாக இருக்கும், ஒவ்வொரு நிலையிலும் இதன் அறிகுறிகள் வெவ்வேறு விதமாக அமையும்.

பள்ளிக்கு முன்

  • எண்ணுவதற்குக் கற்றுக் கொள்ளுதல்
  • அச்சிடப்பட்ட எண்களை அடையாளம் காணுதல்
  • எண்களை நிஜவாழ்க்கைப் பொருள்களுடன் இணைத்தல் (உதாரணமாக 3 குதிரைகள், 5 பென்சில்கள் என்பது போல)
  • எண்களை மனப்பாடம் செய்தல்
  • சின்னங்கள், பாணிகள், வடிவங்கள் ஆகியவற்றை அடையாளம் காணுதல், பொருள்களை ஒழுங்குபடுத்துதல் (உதாரணமாக வட்டமாக இருக்கும் பந்துகளை ஓர் இடத்தில் வைப்பது, சதுரமாக இருக்கும் அட்டைகளை இன்னொரு பெட்டியில் வைப்பது போன்றவை)

தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி

  • எண்களையும் சின்னங்களையும் அடையாளம் காணுதல்
  • கணிதச் செயல்பாடுகளைக் கற்றுக் கொள்ளுதல் - கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல்
  • கணிதத்தில் எழுத்துகளால் குறிப்பிடப்படும் கணக்குகளைப் போடுதல்
  • பொருள்களை அளத்தல்
  • மனக்கணக்குப் போடுதல்
  • தொலைபேசி எண்களை நினைவில் வைத்திருத்தல்
  • எண்களைக் கொண்டிருக்கும் விளையாட்டுகள், திட்டமிடுதல் மற்றும் தர்க்க ரீதியிலான சிந்தனை தேவைப்படும் விளையாட்டுகளில் பங்கேற்றல்

பதின் பருவத்தினர் மற்றும் வளர் இளம் பருவத்தினர்

  • விலைகளைக் கணக்கிடுதல், செலவுகளைக்  கூட்டுதல்
  • கணிதத்தில் அடிப்படைக் கோட்பாடுகளைத் தாண்டிக் கற்றுக் கொள்ளுதல்
  • கணக்குகளை நிர்வகித்தல்
  • பொருள்களை அளத்தல்
  • நேரம், வெளி, தூரம் ஆகிய கோட்பாடுகளைப் புரிந்து கொள்ளுதல்
  • மனக்கணக்குப் போடுதல்
  • ஒரே கணக்கை வெவ்வேறு விதமாகத் போடக் கூடிய வழிகளைக் கண்டறிதல்
  • வேகத்தையும் தொலைவையும் மதிப்பிட வேண்டியிருக்கும் செயல்பாடுகளில் பங்கேற்றல், உதாரணமாக விளையாடுதல், வண்டி ஓட்டக் கற்றுக் கொள்ளுதல் போன்றவை. குழந்தைக்குத் தன்னம்பிக்கையில்லாமல் அது இந்த செயல்பாடுகளைத் தவிர்க்கக் கூடும்.

Q

டிஸ்கால்குலியா எதனால் ஏற்படுகிறது?

A

டிஸ்கால்குலியாவிற்கான சரியான காரணத்தை நிபுணர்கள் இன்னும் கண்டறியவில்லை, அதே சமயம் மரபணுக்கள் மற்றும் மரபு வழி ஆகியவை டிஸ்கால்குலியாவை உண்டாக்கும் காரணிகளில் ஒன்றாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.

Q

டிஸ்கால்குலியா எப்படிக் கண்டறியப்படுகிறது?

A

டிஸ்கால்குலியாவைக் கண்டறிவதற்கான குறிப்பிட்ட பரிசோதனை எதுவுமில்லை. குழந்தை நல மருத்துவர் அல்லது உளவியல் நிபுணர் சில குறிப்பிட்ட மதிப்பீடுகள் மற்றும் பரிசோதனைகளை நடத்தி இந்த நிலையைக் கண்டறியலாம்.

  • மருத்துவ வரலாறு: டிஸ்கால்குலியாவானது கற்றல் குறைபாட்டின் பிற வகைகள் அல்லது ADHDஉடன் இணைந்து இருக்கக்கூடும். ஆகவே இந்த நிலையைக் கண்டறிவதற்கு முன், அதற்கு சிகிச்சை வழங்குவதற்கு முன் நிபுணர் குழந்தையின் மருத்துவ வரலாற்றை முழுவதுமாகப் பரிசோதிப்பார்.

  • கண்டறிதல்: இந்த நிலையைக் கண்டறிவதற்கு விஷேசக் கல்வி நிபுணர் சில குறிப்பிட்ட பரிசோதனைகளை நடத்துகிறார். குழந்தையின் கல்விச் செயல்திறனும் கருத்தில் கொள்ளப்படுகிறது. குழந்தை இந்த நிலையைச் சமாளிப்பதற்காக மாற்றுக் கல்வி முறைகளும் உத்திகளும் பயன்படுத்தப்படுகின்றன.

Q

டிஸ்கால்குலியாவுக்குச் சிகிச்சை பெறுதல்

A

டிஸ்கால்குலியாவுக்கான குறிப்பிட்ட பரிசோதனை என்று ஏதுமில்லை. இந்த நிலையைக் கண்டறிவதற்குப் பல மதிப்பீடுகளும் தேர்வுகளும் நடத்தப்படுகின்றன.

  • பள்ளியில் ஆதரவு: பெற்றோர் குழந்தையின் நிலையை ஆசிரியர்களுக்கு விளக்கி அவர்களுடைய ஆதரவைக் கோரவேண்டும். ஆசிரியர்கள் அந்தக் குழந்தைக்குக் கணிதம் கற்றுத் தருவதற்கு ஒரு தனித்துவமான கல்வித் திட்டத்தைப் பயன்படுத்தலாம். அந்தக் குழந்தைக்குத் தேர்வுகளில் கூடுதல் நேரம் தரப்படலாம் அல்லது அது கால்குலேட்டரைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்படலாம், இவ்வாறு அந்தக் குழந்தைக்குக் கூடுதல் ஆதரவை வழங்க வேண்டும். ஆசிரியர்கள் அந்தக் குழந்தையின் முன்னேற்றத்தை தொடர்ந்து பதிவு செய்ய வேண்டும், முந்தைய பயிற்சி முறை சிறப்பாகப் பலன் தராவிட்டால் அந்த முறையை மாற்றி வேறொரு முறையை முயற்சி செய்ய வேண்டும், குழந்தை சரியாகக் கணிதத்தைக் கற்றுக் கொள்ளத் தொடங்கும் வரை இப்படி மாற்றி மாற்றி முயற்சி செய்து கொண்டே இருக்கவேண்டும்.
  • சிகிச்சைக்கான எதிர்வினைகள்: மெதுவாகக் கற்றுக் கொள்ளும் குழந்தைகளுக்காக சில பள்ளிகள் இந்தத் திட்டத்தை நடத்துகின்றன. ஒரேயொரு குழந்தைக்கோ குழுவாகச் சில குழந்தைகளுக்கோ கூடுதல் வழிகாட்டல் வழங்கப்படுகிறது.
  • உளவியல் நிபுணர்/ஆலோசகர்: எந்த ஒரு கற்றல் குறைபாடும் குழந்தையின் சுய மதிப்பையும் நம்பிக்கையையும் பாதிக்கக்கூடும். இதனால் குழந்தைக்கு நிறைய அழுத்தமும் பதற்றமும் ஏற்படலாம். ஓர் உளவியல் நிபுணர் அல்லது ஓர் ஆலோசகர்  குழந்தையின் நிலைமையைப் புரிந்துகொண்டு அதனைச் சமாளிப்பதற்கு உதவுவார்.

Q

டிஸ்கால்குலியா பிரச்னை கொண்ட ஒருவரைக் கவனித்துக் கொள்ளுதல்

A

பெற்றோர் என்ற முறையில் நீங்கள் காட்டும் அன்பும் ஆதரவும் தான் உங்கள் குழந்தை இந்தப் பிரச்னையிலிருந்து குணமாவதற்கு மிகப்பெரிய உதவி.

ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானது என்பதை நீங்கள் புரிந்துகொள்வது முக்கியம், ஒவ்வொரு குழந்தைக்கும் தனித்தனி வளங்களும் திறன்களும் இருக்கின்றன. நீங்கள் பல்வேறு கற்றல் முறைகளைப் பயன்படுத்திப் பார்த்து அவற்றில் எது உங்களுடைய குழந்தையின் கணிதத் திறன்களை மேம்படுத்துகிறது என்று  கண்டறிய வேண்டும்.

நீங்கள் பின்வரும் வழிகளில் உங்கள் குழந்தைக்கு உதவலாம்:

  • டிஸ்கால்குலியாவைப் புரிந்துக் கொள்ளுதல்: டிஸ்கால்குலியாவைப் பற்றி நிறையப் படித்து தெரிந்துக் கொள்ளலாம். ஒரு குழந்தை இந்தப் பிரச்னையிலிருந்து குணமாவதற்கான முதல் படி அதன் பெற்றோர் அதைப்பற்றித் தெரிந்து கொள்வதும் அந்தக் குழந்தையின் நிலைமையைப் புரிந்து கொள்வதும்தான். குழந்தையிடம் அவர்கள் தங்களுடைய அன்பையும் ஆதரவையும் வெளிப்படையாகச் சொல்லவேண்டும். இதற்காக, அவர்கள் தங்கள் குழந்தையிடம் தொடர்ந்து பேசவேண்டும், அவர்களுடைய சிரமம் தங்களுக்குப் புரிகிறது என்று சொல்லவேண்டும்.

  • கணித விளையாட்டுகளை விளையாடுதல்: வீட்டிலிருக்கும் பொருள்களான பொம்மைகள், பாத்திரங்கள், மளிகை சாமான்கள், காய்கறிகள் அல்லது பழங்கள் போன்றவற்றைப் பயன்படுத்திக் குழந்தைகளுக்கு எண்களைச் சொல்லிக் கொடுக்கலாம். தினசரி நடவடிக்கைகளின்மூலமே அவர்கள் எண்களைக் கற்றுக்கொள்ளட்டும். குழந்தை கால்குலேட்டரைப் பயன்படுத்த அனுமதிக்கலாம். வெவ்வேறு முறைகளைப் பயன்படுத்திப் பார்க்கலாம், அதில் எந்த முறை தங்கள் குழந்தைக்குச் செளகரியமாக இருக்கிறது என்பதைக் கண்டறியலாம். தினசரி வாழ்க்கையில் கணிதம் அவசியம் தேவை என்பதால், இந்தப் பெற்றோர் தங்கள் குழந்தைக்குப் பணம் மற்றும் நேர மேலாண்மையைப் பற்றிச் சொல்லிக் கொடுக்கலாம்.

  • ஊக்கம் மற்றும் ஆதரவு: பெற்றோர் தங்கள் குழந்தையின் பலங்களை அடையாளம் காணவேண்டும், தங்கள் குழந்தை ஆர்வம் காட்டுகிற எந்தவொரு செயலையும் அது தொடர்ந்து செய்ய ஊக்கம் தரவேண்டும். இது குழந்தையின் சுய மதிப்பை மேம்படுத்தும், நம்பிக்கையை அதிகரிக்கும். பெற்றோர் குழந்தையின் முன்னேற்றங்களைக் கவனித்து உண்மையாகப் பாராட்டி அதன்மீது அன்பு செலுத்தினால் அது பாதுகாப்பாக உணரும், விரைவில் இந்த பிரச்னையிலிருந்து குணமாகும்.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org