அச்சக்கோளாறுகள்

Q

அச்சக்கோளாறு என்றால் என்ன?

A

அச்சக்கோளாறு என்பது நமது பாதுகாப்புக்குக் குந்தகத்தை விளைவிக்கக்கூடிய ஒரு சூழலுக்கு நாம் ஆற்றும் இயல்பான எதிர்வினை. உதாரணமாக சிலர் பாம்புகளைப் பார்த்து பயப்படலாம், விமானத்தில் பறப்பது பற்றிப் பயப்படலாம், இருட்டைப் பார்த்துப் பயப்படலாம். ஆனால் சிலருக்கு தங்களுக்கு ஆபத்து வந்துவிடுமோ என்கிற எண்ணம் அர்த்தமற்ற வகையில் மிகைப்படுத்தப்படும், அதாவது காரணமே இல்லாமல் பயப்படுவார்கள், அச்சக்கோளாறினால் இவர்களுக்கு மிகுந்த பதற்றம் உண்டாகும். உதாரணமாக உயரமான இடங்களைப் பார்த்துப் பயப்படும் ஒருவர் நிஜமாகவே ஓர் உயரமான கட்டடத்துக்குள் செல்ல நேர்ந்தால் அவர் மிகவும் அசௌகரியமாக உணர்வார். பாம்புகளைப் பார்த்துப் பயப்படுகிற அச்சக்கோளாறு கொண்ட ஒருவர் தொலைக்காட்சியில் பாம்பைப் பார்த்தால் கூட மிகவும் பதற்றம் கொள்ளக்கூடும்.

Q

அச்சக்கோளாறுகளின் அறிகுறிகள் என்ன?

A

அச்சக்கோளாறுப் பிரச்னை உள்ளவர்கள் பொதுவாகப் பின்வரும் அறிகுறிகளைக் கொண்டிருப்பார்கள்:

  • சில பொருள்கள் அல்லது சூழ்நிலைகளைப் பார்த்து அர்த்தமில்லாமல் பயப்படுவார்கள், அவற்றால் எந்த வகையான ஆபத்தும் வராது என்றாலும் கூட இவர்கள் தொடர்ந்து பயப்படுவார்கள்.
  • பயம் அல்லது பதற்றத்தை உண்டாக்கக்கூடிய சூழ்நிலைகளைத் தவிர்ப்பார்கள்.
  • அச்சக்கோளாறு ஏற்படும் போது இவர்களுக்கு உடல் ரீதியில் உண்டாகக் கூடிய அறிகுறிகள் அதிர்ச்சித் தாக்குதலைப் போலவே இருக்கலாம், உதாரணமாக இதயத்துடிப்பின் அளவு அதிகரித்தல், அதிகம் வியர்த்தல், மயக்கம் போன்றவை.
  • உங்களைச் சுற்றியிருப்பவர்களிடம், உதாரணமாக உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள், அலுவலகத்தில் உள்ளோரிடம் இந்த அறிகுறிகளை நீங்கள் கவனிக்கலாம். அது போன்ற சூழ்நிலைகளில் அவரிடம் இதைப்பற்றிப் பேசுங்கள், ஒரு மனநல நிபுணரிடம் ஆலோசனை பெறுமாறு சொல்லுங்கள்.

Q

அச்சக்கோளாறுகள் எதனால் ஏற்படுகின்றன?

A

அதிர்ச்சி தரும் நிகழ்வுகள்: ஒருவருடைய சிறு வயதில் ஏதேனும் அதிர்ச்சி தரும் நிகழ்வு நடந்திருக்கலாம், உதாரணமாக சிறு வயதில் நாயால் கடிக்கப்பட்ட ஒருவருக்கு பின்னர் அச்சக்கோளாறு வரலாம்.

குடும்ப வரலாறு: பெற்றோரில் ஒருவருக்கு மன நோய் இருந்தால் அவர்களுடைய குழந்தைகளுக்குப் பதற்றம் அல்லது அச்சக்கோளாறுப் பிரச்னை இருக்கக்கூடும் என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. சில நேரங்களில் பெற்றோருக்கு இருக்கும் அதே அச்சக்கோளாறு குழந்தைகளுக்கும் வருகிறது.

நீண்ட காலமாகத் தொடரும் அழுத்தம்: இதனால் பாதிக்கப்பட்டவர்களால் சில சூழ்நிலைகளைச் சமாளிக்க இயலாது, அதன் மூலம் அவர்களுடைய பதற்றம் மற்றும் பயம் அதிகரிக்கிறது. தொலைநோக்கில் பார்க்கும் போது இதுவும் அச்சக்கோளாறாக மாறலாம்.

Q

அச்சக்கோளாறுகளின் வகைகள் என்ன?

A

அச்சக்கோளாறுகள் பின்வரும் படி வகைப்படுத்தப்பட்டுள்ளன:

  • விலங்கு அச்சக்கோளாறு: விலங்குகளைப் பார்த்துப் பயப்படுதல், உதாரணமாக நாய்கள், பூச்சிகள், பாம்புகள் போன்றவற்றைப் பார்த்துப் பயப்படுதல்.
  • இயற்கைச் சூழல் அச்சக்கோளாறு: இயற்கைச் சூழல்களைப் பார்த்துப் பயப்படுதல், உதாரணமாக உயரத்தைப் பார்த்துப் பயப்படுதல், தண்ணீரைப் பார்த்துப் பயப்படுதல் அல்லது இருட்டைப் பார்த்துப் பயப்படுதல்.
  • சூழ்நிலை அச்சக்கோளாறு: சில குறிப்பிட்ட சூழ்நிலைகளைப் பார்த்துப் பயப்படுதல், உதாரணமாக ஒரு லிப்ட்டுக்குள் செல்வதை எண்ணிப் பயப்படுதல், விமானத்தில் பறப்பதை எண்ணிப் பயப்படுதல்.
  • பிற அச்சக்கோளாறுகள்: ரத்தத்தைப் பார்த்துப் பயப்படுதல், ஊசிபோட்டுக் கொள்வதைப் பார்த்துப் பயப்படுதல், தீவிர அறுவை சிகிச்சையை எண்ணிப் பயப்படுதல் அல்லது தனக்கு காயம் பட்டுவிடுமோ என்று பயப்படுதல்.

Q

அச்சக்கோளாறுக்குச் சிகிச்சை பெறுதல்

A

மக்கள் பொதுவாக அச்சக்கோளாறுகளுக்குச் சிகிச்சை பெற எண்ணுவதில்லை. காரணம் அது அவர்களுடைய தினசரி வாழ்க்கையில் குறுக்கிடுவதில்லை. அவர்கள் தங்களுக்கு அச்சக்கோளாறு உண்டாக்கக்கூடிய சூழ்நிலைகளை முற்றிலும் தவிர்த்துவிடுவார்கள், அச்சக்கோளாறுக்குப் பணிந்து விடுவார்கள். அதே சமயம் இது அச்சக்கோளாறுக்குத் தீர்வு ஆகாது. நீங்கள் ஒரு மனநல நிபுணரிடம் ஆலோசனை பெறுவது முக்கியம். இதற்கான சிகிச்சைகள் மருந்து வடிவிலோ சிகிச்சையாகவோ இரண்டையும் கலந்தோ வழங்கப்படுகின்றன. பொதுவாக இதற்கான சிகிச்சை ஒருவர் எதைப் பார்த்துப் பயப்படுகிறாரோ அதை அவர் சந்திக்கும் படிச் செய்வது, அப்போது அதனால் அவருக்கு எந்தப் பாதிப்பும் வந்துவிடாதபடிக் கட்டுப்படுத்துவது, அதன் மூலம் அவருடைய அச்சக்கோளாறைக் குணப்படுத்துவது.

Q

அச்சக்கோளாறு கொண்ட ஒருவரைக் கவனித்துக் கொள்ளுதல்

A

அச்சக்கோளாறு கொண்ட ஒருவரைக் கவனித்துக் கொள்கிறவர்கள் அவருக்கு நிறைய ஆதரவும் அரவணைப்பும் தேவைப்படுகிறது என்பதைப் புரிந்துக் கொள்ள வேண்டும். அவர்கள் உணரும் பயமும் பதற்றமும் மிகவும் உண்மையானது, அதைக் குறைத்து மதிப்பிடக் கூடாது, கேலி செய்யக் கூடாது. அவர்கள் உரிய நிபுணரிடம் சிகிச்சை பெற வேண்டும் என்று நீங்கள் ஊக்கம் தர வேண்டும், அவர்களுடைய பயங்களைப் பற்றி அவர்களிடமே பேசி புரிந்துக் கொள்ள வேண்டும், அது போன்ற நேரங்களில் என்ன செய்தால் அவருக்கு உதவியாக இருக்கும் என்று கண்டறிய வேண்டும். அவர்களுடைய அச்சக்கோளாறை அதிகரிக்கும் படி எதையும் செய்யாதீர்கள், அவர்கள் பயப்படுகிற எந்தச் சூழ்நிலைக்கும் அவர்களை வலிய உட்படுத்தாதீர்கள்.

Q

அச்சக்கோளாறைச் சமாளித்தல்

A

அச்சக்கோளாறைச் சமாளிப்பதற்கு அச்சக்கோளாறின் மூலம் ஏற்படக்கூடிய பயம் மற்றும் பதற்றத்தை எப்படிக் கையாள்வது என்று ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும். தொலைநோக்கில் பார்க்கும் போது அவர்களால் தங்களுடைய பயங்களைக் கட்டுப்படுத்த இயலும் என்று அவர்கள் உணர்வதற்கு இது உதவும். மனத்தைத் தளர்வாக வைத்துக் கொள்வது, முழு மன உணர்வுடன் இருத்தல் போன்ற உத்திகள் அவர்களுக்கு மிகவும் பயன்படும். ஓர் ஆதரவுக் குழுவில் இணைந்து இதே அச்சக்கோளாறு கொண்ட மற்றவர்களுடன் பேசுவதன் மூலம் அவர்கள் தங்களுடைய பயங்களைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். அதே சமயம் மேலே சொல்லப்பட்டுள்ள எவையும் ஒரு மனநல நிபுணரிடம் ஆலோசனை பெறுவதற்குச் சமமாகிவிடாது, அச்சக்கோளாறுப் பிரச்னை கொண்ட ஒருவர் உடனே செய்யவேண்டிய முதல் நடவடிக்கை இது தான்.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org