நிலைகொள்ளாத கால்கள் குறைபாடு

Q

நிலைகொள்ளாத கால்கள் குறைபாடு என்றால் என்ன?

A

நிலைகொள்ளாத கால்கள் குறைபாடு (RLS) என்பது நரம்பியல் சார்ந்த ஒரு பிரச்னை. இந்தக் குறைபாடு கொண்டவர்களுக்கு அவ்வப்போது தங்களுடைய கால்களை நகர்த்திக் கொண்டேயிருக்கவேண்டும் என்கிற தீவிர உணர்வு ஏற்படும். அவர்களுடைய கால்கள் நகராமல் ஒரே இடத்தில் இருந்தால் இவர்கள் மிகவும் அசௌகரியமாக உணர்வார்கள், கால்களை நகர்த்தினால் அல்லது சிறிதுதூரம் நடந்தால் பொதுவாக இவர்களுடைய அசௌகரியமும் சிரமமும் குறைந்துவிடும். RLS பிரச்னையினால் பாதிக்கப்பட்டவர்கள் தூங்குவதற்கும் சிரமப்படுவார்கள், காரணம் அவர்களுக்குத் தங்களுடைய கால்களை அசைத்துக் கொண்டேயிருக்கவேண்டும் என்கிற உணர்வு தொடர்ந்து தூக்கத்தின்போதும் இருக்கும், இரவில் பலமுறை இப்படிச் செய்யவேண்டும் என்று உணர்வார்கள், ஆகவே அவர்களுடைய தூக்கத்தின் தரம் கெட்டுப்போகும், மறுநாள் பகல் நேரத்தில் அவர்கள் தூக்கக் கலக்கத்துடன் இருப்பார்கள்.

RLS பிரச்னை கொண்டவர்களால் அதிக தூரம் பயணம் செய்ய இயலாது, காரிலோ, விமானத்திலோ பயணம் செய்யும்போது இந்தப் பிரச்னை அவர்களை மிகவும் சிரமப்படுத்தும்.

RLS மிகவும் அழுத்தம் தருகிற ஒன்றுதான், அதே சமயம் சரியான மருந்துகள், வாழ்க்கைமுறை மாற்றங்களின் மூலம் இதைப் பெரும்பாலும் குணப்படுத்திவிடலாம்.

Q

RLSன் அறிகுறிகள் என்ன?

A

RLSன் முக்கியமான அறிகுறிகள்:

  • கால்களில் அசௌகரியமான உணர்வு: இந்தப் பிரச்னை கொண்டவர்களுக்கு அவ்வப்போது கால்களில் எரிச்சல், நமைச்சல் அல்லது ஏதோ ஊர்ந்து செல்வது போன்ற உணர்வு ஏற்படும். இதனால் அவர்கள் கால்களை நகர்த்தவேண்டும் என்று எண்ணுவார்கள், அப்படி நகர்த்தினால் இந்த உணர்வு சென்று விடுவது போல் உணர்வார்கள். சில நேரங்களில் இதே போன்ற உணர்வு அவர்களுடைய கையிலோ மற்ற உடல் பாகங்களிலோகூட ஏற்படலாம், ஆனால் இது பொதுவாகக் கால்களில்தான் அதிகம் காணப்படுகிறது.
  • இந்த உணர்வு ஒருவர் ஓய்வில் இருக்கும்போதுதான் நிகழ்கிறது: அதாவது அவர் அசையாமல் அமர்ந்திருக்கும்போது அல்லது படுத்துக் கொண்டிருக்கும்போதுதான் இப்படிப்பட்ட உணர்வுகள் ஏற்படுகின்றன.
  • பகல் நேரத்தில் தூக்கக் கலக்கம்: இரவு நேரத்தில் கால்களை நகர்த்திக் கொண்டேயிருக்கவேண்டும் என்கிற உணர்வு தொடர்ந்து இருப்பதால் அவர்களுடைய தூக்கத்தின் தரம் பாதிக்கப்படும், மறுநாள் பகல் நேரத்தில் அவர்கள் களைப்பாகவும் தூக்கக் கலக்கமாகவும் உணர்வார்கள். தூக்கம் போதாத காரணத்தால் இவர்கள் மற்றவர்களிடம் எரிச்சலோடு பேசவும் கூடும்.
  • RLS பிரச்னை கொண்ட பலர் இது ஒரு தீவிரமான பிரச்னை அல்ல என்று எண்ணிவிடுகிறார்கள், அது அவர்களுடைய வாழ்க்கைத் தரத்தை எந்த அளவிற்குப் பாதிக்கிறது என்பதை அவர்கள் உணர்வதில்லை.

உங்களுடைய அன்புக்குரிய யாராவது அடிக்கடி நெளிந்துகொண்டு, தசை வெட்டி இழுப்பதைப்போல் நடந்துகொண்டு அல்லது ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு நகர்ந்துகொண்டே இருக்கிறார் என்றால் அல்லது RLSன் மற்ற அறிகுறிகள் காணப்பட்டால் நீங்கள் அவர்களிடம் இந்தக் குறைபாட்டைப்பற்றிப் பேசவேண்டும், அவர்கள் ஒரு மனநல நிபுணரைச் சந்திப்பது நல்லது என்று சொல்லவேண்டும்.

Q

RLS எதனால் ஏற்படுகிறது?

A

RLSக்கான காரணம் ஒவ்வொருவருக்கும் மாறுபடுகிறது, சில நேரங்களில் இதற்கான காரணமே தெரிவதில்லை. இதுபற்றி நிகழ்ந்திருக்கும் ஆய்வுகளைத் தொகுத்துப் பார்த்தால் RLS என்பது மூளையில் டோபமைன் சமநிலையின்மையால் உண்டாகக்கூடும் என்று தெரியவருகிறது. டோபமைன்தான் தசைகளின் அசைவுகளைக் கட்டுப்படுத்துகிறது, ஆகவே டோபமைன் சமநிலையற்றுக் காணப்பட்டால் RLS பிரச்னை ஏற்படலாம்.

RLSக்கான மற்ற சில காரணங்கள்:

  • இரும்புச்சத்து குறைபாடு: இரும்புச்சத்து ஒருவருடைய உடலில் குறைவாக இருந்தால் அவர்களுடைய மூளை செல்களில் தகவல் தொடர்பில் பிரச்னைகள் வரும், அது RLSஐ உண்டாக்கக் கூடும்.
  • குடும்ப வரலாறு: சில நேரங்களில் குடும்பத்தில் யாராவது ஒருவருக்கு RLS இருந்தால் அவர்களுடைய வாரிசுகளுக்கும் RLS வரலாம். ஒருவேளை முந்தைய தலைமுறையில் ஒருவருக்கு இளம்வயதிலேயே இந்தப் பிரச்னை வந்திருந்தால் அடுத்த தலைமுறையில் உள்ளவர்களுக்கு இந்தப் பிரச்னை வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாகின்றன.
  • மற்ற மருத்துவநிலைகள்: சிறுநீரகச் செயலிழப்பு, நீரிழிவு நோய், நரம்புச் சேதம், மூட்டுவலி மற்றும் ரத்த சோகை ஆகிய பிரச்னைகளாலும் RLS வரலாம். அதே சமயம் இந்தப் பிரச்னைகளுக்கு ஒருவர் சிகிச்சை பெற்று, இவற்றைக் குணப்படுத்திக் கொண்டால் RLSன் அறிகுறிகளும் குறைய ஆரம்பிக்கும்.
  • கர்ப்பம்: கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு RLS உணர்வு ஏற்படக்கூடும். அதே சமயம் அவர்கள் குழந்தை பெற்று ஒரு மாதத்திற்குள் இந்த அறிகுறிகள் குறைந்துவிடும்.

Q

RLSக்குச் சிகிச்சை பெறுதல்

A

RLSக்கான சிகிச்சை ஒவ்வொருவருக்கும் மாறுபடும்; சிலருக்கு வெறுமனே வாழ்க்கைமுறை மாற்றங்களைச் செய்தால் போதும், சிலருக்கு RLSஐ உண்டாக்கக்கூடிய மருத்துவப் பிரச்னைகளைக் குணப்படுத்துவதற்கான மருந்துகள் தரப்படும், சிலருக்கு RLSன் அறிகுறிகளைக் குணப்படுத்தக்கூடிய மருந்துகள் தரப்படும்.

ஒருவர் RLSக்குச் சிகிச்சை பெறச்செல்லும்போது, முதலில் அவர் சில எளிய மாற்றங்களைச் செய்யுமாறு மருத்துவநிபுணர் கோருவார். உதாரணமாக, தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்தல், உடல் எடை அதிகமாக இருந்தால் அதைக் குறைத்தல், புகைப்பிடித்தல் மற்றும் கஃபைன் பழக்கங்களை நிறுத்துதல் போன்றவை.

ஒரு வேளை RLSக்கு இரும்புச்சத்துக் குறைபாடுதான் காரணம் என்றால் இரும்புச்சத்தை வழங்கும் துணைப்பொருள்களை மருத்துவர் சிபாரிசு செய்யக்கூடும். இதுபோன்ற பொருள்கள் மருத்துவரால் சிபாரிசு செய்யப்பட்டால் மட்டுமே எடுத்துக்கொள்ளப்படவேண்டும்.

இந்தச் சிகிச்சைகள் எவற்றாலும் இந்தப் பிரச்னை குணமாகவில்லை என்றால் பின்வரும் மருந்துகளில் ஏதேனும் ஒன்று வழங்கப்படலாம்:

பார்க்கின்சன் நோய்க்கான மருந்து: இந்த மருந்துகள் மூளையில் டோபமைனின் அளவை அதிகரிக்கின்றன, RLSன் அறிகுறிகளைக் குறைக்க உதவுகின்றன. ஒருவருக்கு RLS இருக்கிறது என்பதாலேயே அவருக்கு பார்க்கின்சன்ஸ் பிரச்னை இருக்கிறது என்று பொருள் இல்லை.

மயக்கமூட்டும் வலி நிவாரணிகள்: இந்த வகை மருந்துகளை opioids என்பார்கள். இந்த மருந்துகள் RLSன் அறிகுறிகளைக் குணப்படுத்தக்கூடும், ஆனால், பாதிக்கப்பட்டவர் இவற்றுக்கு அடிமையாகிவிடுகிற ஆபத்து உள்ளது.

தூக்க மாத்திரைகள் மற்றும் தசைகளைத் தளர்விக்கும் மருந்துகள்:  இந்த மருந்துகள் பாதிக்கப்பட்டவர் எளிதில் தூங்குவதற்கு உதவுகின்றன, அதே சமயம் இவை RLSன் அறிகுறிகளை முற்றிலும் குணப்படுத்துவதில்லை, பாதிக்கப்பட்டவர் இந்த மருந்துகளை எடுத்துக்கொண்ட பிறகும் பகல்நேரத்தில் தூக்கக் கலக்கமாகவே உணரக்கூடும்.

RLS பிரச்னை கொண்ட ஒருவர் அதைக் குணப்படுத்துவதற்காக மருத்துவரை அணுகி அவர் வழங்கும் சிகிச்சைத் திட்டம் மற்றும் மருந்துகளை முறைப்படி எடுத்துக்கொள்வது அவசியம். வெவ்வேறு மருந்துகள் வெவ்வேறு நபர்களிடம் வெவ்வேறு விதமாகச் செயல்படும், சிலருக்கு RLSன் அறிகுறிகள் குணமாகும், சிலருக்கு அவை மோசமாகக்கூடும். ஆகவே RLSக்குச் சிகிச்சை பெறுகிற ஒருவர் தான் எடுத்துக்கொள்ளும் மருந்துகள் தன்னை எப்படிப் பாதிக்கின்றன என்பதுபற்றி மருத்துவருக்கு அவ்வப்போது சொல்லிவருவது அவசியம்.

Q

RLS கொண்ட ஒருவரைக் கவனித்துக் கொள்ளுதல்

A

உங்களுக்குத் தெரிந்த யாருக்காவது RLS பிரச்னை உள்ளது என்றால் அவர்கள் ஏற்கனவே மிகுந்த அழுத்தத்திற்கு உட்பட்டிருக்கிறார்கள் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும். பல பேருக்கு இது ஒரு மருத்துவப் பிரச்னை என்பதே தெரிவதில்லை, இதைக் குணப்படுத்த இயலும் என்பதும் தெரிவதில்லை. ஆகவே இதனால் அவர்கள் தொடர்ந்து சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஆகவே நீங்கள் இந்தப் பிரச்னையைப்பற்றி அதிகம் தெரிந்துகொள்வது நல்லது, ஒரு வேளை உங்களுடன் வசிப்பவருக்கு RLS பிரச்னை இருந்தால் உங்களுக்கும் தூக்கப் பிரச்னை ஏற்படக்கூடும்.

ஆகவே நீங்கள் பொறுமையாக இருக்கவேண்டும், RLS பிரச்னை என்பது பாதிக்கப்பட்டவருடைய கட்டுப்பாட்டில் இல்லை என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். இந்தப் புரிந்துகொள்ளலுடன் நீங்கள் அவர்களிடம் இந்தப் பிரச்னையைப்பற்றிப் பேசவேண்டும், அவர்கள் ஒரு மனநல நிபுணரைச் சந்திப்பது நல்லது என்று அறிவுறுத்தவேண்டும். அவர்கள் மனநல நிபுணரிடம் செல்லும்போது நீங்களும் கூட வருவதாகச் சொல்லுங்கள், இது உங்களுடைய ஆதரவைக் காட்டும்.

மனநல நிபுணர் வழங்கும் சிகிச்சைத் திட்டத்தை அவர் முறையாகப் பின்பற்றுவதை நீங்கள் உறுதி செய்யுங்கள், சிபாரிசு செய்யப்படாத எந்த மருந்தையாவது அவர் எடுத்துக்கொள்கிறாரா என்பதையும் கவனித்துப்பார்த்து மருத்துவரிடம் அதனைத் தெரிவியுங்கள்.

Q

RLSஐச் சமாளித்தல்

A

RLS உடன் வாழ்தல் மிகவும் மன அழுத்தம் தருகிற ஒரு விஷயம். அதே சமயம் சில உத்திகளைப் பின்பற்றி இந்தப் பிரச்னையால் வரக்கூடிய சிரமங்களைக் குறைக்கலாம்.

உதாரணமாக RLS பிரச்னை கொண்ட ஒருவர் தொடர்ச்சியாக உடற்பயிற்சிகள் செய்யத் தொடங்கலாம், சரியான நேரத்தில் தூங்கச் செல்லும் வழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளலாம். தூங்குவதற்குமுன் வெந்நீரில் குளித்தல், கால்களை மசாஜ் செய்துவிடுதல் மற்றும் சூடான அல்லது குளிர்ந்த நீரால் ஒத்தடம் கொடுத்தல் போன்றவற்றின்மூலம் கால் தசைகள் தளர்வடையும், அது RLS பிரச்னை கொண்டவருக்கு ஓரளவு நிவாரணம் தரக்கூடும்.

RLS பிரச்னை கொண்ட ஒருவருக்குப் புகைப் பழக்கம் மற்றும் கஃபைன் பழக்கம் போன்றவை இருந்தால் அவற்றை விடுவது நல்லது, இதன்மூலம் அவருடைய தூக்கம் மேம்படும்.

முக்கியமாக RLSக்குச் சிகிச்சை பெறுகிற ஒருவர் தன்னுடைய சிகிச்சைத் திட்டத்தைக் கவனமாகப் பின்பற்றவேண்டும், அவர்களுடைய அறிகுறிகளில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டால் அவற்றை மருத்துவருக்கு உடனடியாகத் தெரிவிக்கவேண்டும்.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org