கர்ப்பத்தின்போது தூக்கப் பிரச்னை

கர்ப்பமாக இருக்கும் பெண் பல ஹார்மோன் மற்றும் உடல்சார்ந்த மாற்றங்களை அனுபவிக்கிறார். இதனால், அவரது தூக்கத்தின் தரம் பாதிக்கப்படக்கூடும். அடுத்தடுத்த மாதங்களில், இந்தத் தூக்கத் தொந்தரவுகள் மாறுகின்றன. கர்ப்பத்தின்போது ஏற்படும் சில பொதுவான தூக்கத் தொந்தரவுகள்:

·         கர்ப்பத்தினால் உண்டான உணர்வு, உடல் அழுத்தத்தால் தூக்கம் பாதிக்கப்படுதல்

·         ப்ரொஜெஸ்டெரோன் அளவு அதிகமாவதால், அடிக்கடி கழிப்பறைக்குச் செல்லவேண்டியிருத்தல்

·         கரு வளர்வதால் ஏற்படும் பொதுவான அசௌகர்யம், வலிகள்

·         இரவில் சரியான தூக்கம் இல்லாததால் பகல்நேரத்தில் தூக்கக்கலக்கமாக உணர்தல்

·         பொதுவான களைப்பாலும், கூடுதல் எடையைச் சுமப்பதாலும் கால்களில் பிடிப்பு

·         இரவில் படுத்திருக்கும்போது அதிகம் ஏற்படும் அசிடிட்டி, நெஞ்செரிச்சல்

·         ரத்த ஓட்டம் அதிகரிப்பதால், மூக்குச் சவ்வு உள்ளிட்ட பகுதிகளில் மூச்சடைப்பு

·         கால்களில் தொடர்ந்து கூச்சவுணர்வு ஏற்படுவதால், அவற்றை நகர்த்தத் தோன்றிக்கொண்டே இருப்பது, இதனை நிலைகொள்ளாத கால் குறைபாடு (RLS) என்பார்கள்

·         மூச்சடைப்பால் ஏற்படும் தூக்க அப்னீ, குறட்டை விடுதல்

·         அதிகப் பதற்றத்தால், தூக்கமின்மை

கர்ப்பமாக உள்ள ஒரு பெண் இந்தப் பிரச்னைகளை எப்படிச் சமாளிக்கலாம்?

கர்ப்பமாக உள்ள ஒரு பெண்ணுக்குத் தூக்கம் போதாவிட்டால், அல்லது மற்ற தூக்கப் பிரச்னைகள் இருந்தால், அவர் தன்னுடைய மருத்துவரிடம் இதுபற்றிப் பேசவேண்டும். இந்தச் சூழ்நிலைகளில் அவர்கள் நன்கு தூங்க உதவக்கூடிய சில உத்திகள்:

·         உடற்பயிற்சியானது தூக்கத் தரத்தை மேம்படுத்தலாம், ஆனால், தூங்கச்செல்லுமுன் உடற்பயிற்சி வேண்டாம்

·         காஃபைன் அதிகமுள்ள பொருள்களை உட்கொள்ளவேண்டாம், இவை தூக்கத்தைத் தொந்தரவுசெய்யும்

·         சர்க்கரையும் அவரது ஆற்றல் அளவுகளை அதிகரிக்கும், இரவில் அதைத் தவிர்ப்பது நல்லது

·         தூங்கச்செல்லுமுன் மனத்தைத் தளர்வாக வைத்திருக்கவேண்டும். உதாரணமாக, வெதவெதப்பான தண்ணீரில் குளிக்கலாம், மெல்லிசை கேட்கலாம், அவரைத் தளர்வடையச்செய்யும் எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபடலாம்

·         பகல் நேரத்தில் நிறைய திரவப்பொருள்களைக் குடிக்கலாம், தூங்கும் நேரம் நெருங்க நெருங்க, அதன் அளவைக் குறைத்துக்கொள்ளலாம்

·         பகல் நேரத்தில் தூக்கம் வந்தால், இயன்றவரை காலை நேரத்தில் தூங்கவேண்டும், இரவில் தூங்கவேண்டிய நேரத்துக்குப் பக்கத்தில் தூங்கவேண்டாம்

·         தூங்கச்செல்லுமுன் எதையாவது கொஞ்சம் சாப்பிட்டுவிட்டுப் படுத்தால், பசியினால் நடுராத்திரியில் எழுந்திருக்கவேண்டியிருக்காது

·         கூடுதல் தலையணைகளைப் பயன்படுத்தி முதுகு, வயிற்றில் அழுத்தத்தைக் குறைக்கலாம்

கர்ப்பமாக இருக்கும் பெண் எந்தப் பிரச்னையைச் சந்தித்தாலும் அதைத் தன் மருத்துவரிடம் சொல்வது முக்கியம். மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மருந்தையும் சாப்பிடவேண்டாம்.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org