கர்ப்பகாலத்தில் நலம்

மனிதர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய தினசரிச் செயல்பாடுகளைச் சிறப்பாகச் செய்ய மனநலம் முக்கியம். ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும்போது, அவளுக்குள் இன்னொரு மனிதக்குழந்தையும் இருக்கிறது; ஆகவே, அவரது மனநலம் இன்னும் முக்கியமாகிறது. கர்ப்பமாக இருத்தல் என்பது ஒரு மகிழ்ச்சியான, ஆனந்தமான அனுபவம் என்றுதான் எல்லாரும் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில், கர்ப்பமாக இருக்கும் பெண்ணுக்குள் பல ஹார்மோன் மாற்றங்கள் நிகழ்கின்றன, அதனால் உணர்வு ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுகின்றன, இதனைப் பலர் புரிந்துகொள்வதில்லை. இத்துடன், தனது உடல்சார்ந்த மாற்றங்களையும் அந்தப்பெண் சமாளிக்கவேண்டும்.

இதனால், முதன்முறையாகக் குழந்தை பெறப்போகும் ஒரு பெண் சிலவிதங்களில் அழுத்தத்தை உணரலாம். ஒரு குறிப்பிட்ட வயதுக்குமேலுள்ள பெண்களுக்கு, தங்களுடைய குழந்தையின் ஆரோக்கியத்தைப்பற்றிப் பதற்றங்களும் கவலைகளும் வருகின்றன. இதனால் அவர்களுக்குப் பலவிதமான பயங்கள் ஏற்படலாம்.

கர்ப்பமாகுமுன்:

கர்ப்பமாகவிரும்பும் பெண் தனது மருத்துவர் அல்லது மகப்பேறு நிபுணரை அணுகி தன்னுடைய நலனைப்பற்றிய விவரங்களைப் பெறவேண்டும். அவருக்கு ஏதேனும் கவலைகள் இருந்தால், அதனை வெளிப்படுத்தவேண்டும், எல்லாக் கேள்விகளுக்கும் பதில்பெறவேண்டும். இதுபற்றி அவர் நன்கு படித்து, கேட்டுத் தெரிந்துகொள்ளவேண்டும். இந்த விஷயங்கள், அவர் கர்ப்பமானபின் உதவும்.

கர்ப்பத்தின்போது:

ஒரு பெண் தன்னுடைய உடலில் ஏற்படும் மாற்றங்களை எப்படிச் சமாளிக்கலாம்?

கர்ப்பமாக இருக்கும் பெண்ணின் வாழ்க்கையே மாறிவிடுகிறது. அவரது உடலும் ஆரோக்கியமும் பல சவால்களுக்கு உட்படுகிறது, அந்த மாற்றங்களுக்கேற அவர் தன்னை மாற்றிக்கொள்ளவேண்டியிருக்கிறது. கர்ப்பமாக இருக்கும் பெண்கள் தங்களுடைய உடல்நலம், மனநலம் இரண்டையும் கவனித்துக்கொள்ளவேண்டும். கர்ப்பகால மாற்றங்களை ஒரு பெண் ஆரோக்கியமானமுறையில் கையாள்வதற்கான சில வழிகள்:

  • கர்ப்பம், பிரசவம்பற்றி அவர் நன்றாகத் தெரிந்துகொள்ளவேண்டும். இதற்காக அவர் தன் தாயுடன் பேசலாம், அல்லது, ஏற்கெனவே குழந்தைபெற்ற சகோதரி அல்லது நண்பர்களுடன் பேசலாம், இதுபற்றிய புத்தகங்களை வாசிக்கலாம்.

  • இந்த மாற்றங்கள் தன்னை மிகவும் திகைப்புக்குள்ளாக்கும்போது யாரிடம் சென்று பேசலாம் என்று அவர் யோசிக்கவேண்டும். இதற்கான ஒரு நண்பர், உறவினர் அல்லது ஓர் ஆலோசகரை அடையாளம்காணவேண்டும்.

  • ஹார்மோன் மாற்றங்களால் பதற்றங்கள் வரலாம், மனோநிலை அடிக்கடி மாறலாம். இவற்றைப்பற்றி அவர் தனது மகப்பேறு மருத்துவரிடம் பேசலாம், எவையெல்லாம் இயல்பானவை, எவற்றுக்கெல்லாம் உதவிபெறவேண்டும் என்று தெரிந்துகொள்ளலாம்.

கர்ப்பமாக உள்ள பெண் தனது மனநலனை மேம்படுத்துவது எப்படி?

  • பெரும்பாலான பெண்கள் தங்களுடைய தினசரிச் செயல்பாடுகளை எப்போதும்போல் தொடரலாம். சில பெண்களுக்குமட்டும் இந்தச் செயல்பாடுகளை மாற்றுமாறு அவர்களுடைய மருத்துவர் ஆலோசனை சொல்லக்கூடும். வீட்டுவேலைகளைச் செய்ய எந்தத் தடையும் இல்லை!

  • அவர்கள் தங்களுடைய உடல் என்ன சொல்கிறது என்று கவனிக்கவேண்டும். போதுமான அளவு ஓய்வெடுக்கவேண்டும்.

  • தொடர்ந்து உடற்பயிற்சி செய்யவேண்டும். யோகாசனம், நடைப்பயிற்சி போன்ற எளிய உடற்பயிற்சிகள் கர்ப்பமாக உள்ள பெண்ணின் உடலை ஆரோக்கியமாக வைக்கும்.

  • கர்ப்பத்தில் உள்ள குழந்தை அசையத்தொடங்கியதும், அவர் தன் குழந்தையிடம் பேசலாம், பாடலாம். இதனால் குழந்தை பிறக்குமுன்பே அதற்கும் தாய்க்கும் ஓர் அன்புப்பிணைப்பு உருவாகும்.

  • கர்ப்பமாக உள்ள பெண் தனது உணர்வுகளை, கவலைகளைக் குடும்பத்தினர், நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளலாம்

  • மகிழ்ச்சியாக நேரம் செலவிடலாம்: புத்தகம் படிக்கலாம், இசை கேட்கலாம் அல்லது படம் பார்க்கலாம்

  • ஊட்டச்சத்துமிக்க உணவை உண்ணலாம்: வண்ணமயமான உணவு பசியை அதிகரிக்கலாம். சரிவிகித உணவை உண்ணவேண்டும். அதேசமயம் எதையேனும் சாப்பிடவேண்டும்போல் மிகவும் ஆசையாக இருந்தால், அதையும் சாப்பிடலாம்.

  • மகிழ்ச்சியான வண்ணங்களைக்கொண்ட, நன்கு பொருந்துகிற, தனக்குச் சவுகர்யமான ஆடைகளை அவர் அணியவேண்டும்; இதன்மூலம் அவருக்குத் தன் உடலைப்பற்றிய நம்பிக்கை வரும்

  • குழந்தைக்காகத் திட்டமிடும்போது, அதில் தனது கணவரையும் ஈடுபடுத்தலாம்; கர்ப்பகாலப் பரிசோதனைகளுக்கு அவரையும் அழைத்துச்செல்லலாம்

  • கர்ப்பமாக உள்ள ஒரு பெண் தனது தேவைகளை முக்கியமாக முன்வைக்கவேண்டும். அவர் தன்னைக் கவனமாகப் பார்த்துக்கொள்ளவேண்டும், தன்னைச் சுற்றியுள்ளவர்களிடம் தனது தேவைகளைத் தெளிவாகச் சொல்லவேண்டும்.

  • சில பெண்களுக்கு, கர்ப்பத்தைப்பற்றி நிறைய படித்தால் பதற்றம் வரும், அவர்கள் அப்படிப்பட்ட நூல்களைப் படிப்பதை நிறுத்திவிடலாம். கர்ப்பமாக உள்ள பெண்களிடம் நிகழும் மாற்றங்களைப் பின்தொடர உதவக்கூடிய சில இணையத்தளங்கள் உள்ளன, அவற்றில் இந்தப் பெண்களுக்கான வழிகாட்டுதலும் கிடைக்கும். இவற்றைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

  • இதுபற்றி ஏதேனும் சந்தேகம் அல்லது கவலை எழுந்தால், மருத்துவரிடம் பேசத் தயங்கக்கூடாது

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org