குழந்தைக்குத் தயாராதல்!

சின்ன வயதில் நான் என்னைப்பற்றிப் பலவிதமாக எண்ணியதுண்டு. அப்போது, 27 வயதில் எனக்குத் திருமணமாகும் என்று நான் நினைத்தேன். காரணம், அப்போதுதான் எனக்கு ஒரு நல்ல கணவர் கிடைப்பார், ஒரு நல்ல வேலை கிடைக்கும், அதில் நான் சிறந்து விளங்குவேன். 30 வயதில் நான் குழந்தை பெற்றுக்கொள்வேன். 35 வயதில் மீண்டும் வேலைக்குத் திரும்புவேன்.

நிஜமாகவே எனக்கு முப்பது வயதானது. ஆனால், நல்ல வேலையும் கிடைக்கவில்லை, நல்ல கணவரும் கிடைக்கவில்லை. குழந்தையைப்பற்றிச் சிந்திக்கவே வாய்ப்பில்லை. என்னுடைய ஒவ்வொரு பிறந்தநாளின்போதும், என் தாய் என்னை ஒரு டைம் பாம்போல் பார்த்தார். 'எப்ப கல்யாணம் செஞ்சுக்கப்போறே?' என்று என்னைக் கேட்டுக்கொண்டிருந்த உறவினர்கள்கூட அமைதியாகிவிட்டார்கள். அதேநேரம், என் நண்பர்களெல்லாம் திருமணம் செய்துகொண்டார்கள், குழந்தை பெற்றுக்கொண்டார்கள். நான் அந்தக் குழந்தைகளுக்கு நல்ல அத்தையாக இருந்தேன், அவர்களுக்கு மற்ற யாரும் வாங்கித்தராத புத்தகங்களை நான் வாங்கித்தந்தேன்.

ஒருநாள், எனக்கு 35 வயதானது. அவ்வளவுதான், எனக்குக் கணவரும் கிடையாது, குழந்தையும் கிடையாது என்றார்கள் பலர்.

ஆனால், அடுத்த ஐந்து ஆண்டுகளில், நல்ல வேலை, நல்ல கணவர், குழந்தை என அனைத்தும் எனக்குக் கிடைத்தன. நான் அப்படி எண்ணித் திட்டமிடவில்லை. ஆனால், நான் அவற்றைப்பற்றிச் சிந்திப்பதை நிறுத்தியிருந்தேன். அதனால்தான் இதெல்லாம் நடந்திருக்குமோ என்று யோசிக்கிறேன்.

நான் தயாராக இருந்தேனா? ம்ஹூம், இல்லை. மற்றவர்களுடைய குழந்தைகளுக்கு அத்தையாக இருப்பதும், அவர்களுக்குக் குழந்தை உடைகள், புத்தகங்கள், பொம்மை வாங்குவதும், கண்ணாமூச்சி விளையாடுவதும் குழந்தை பெறுவதற்கான தகுதிகளா என்ன? ஒரு சின்னஞ்சிறிய ஜீவன், என் வாழ்க்கையையே மாற்றிவிடும், அதன்பிறகு நான் பழைய நிலைக்குத் திரும்பிச்செல்லவே இயலாது என்பதை நான் அப்போது உணரவில்லை. இப்போதும், தூங்கச்செல்லும்போது நான் அடிக்கடி யோசிப்பதுண்டு, 'ஒரே ஒருநாளாவது, திருமணத்துக்குமுன் இருந்ததைப்போல் நான் உணரமுடியுமா?' இதில் விநோதமான விஷயம், என் மகன் எனக்குச் சிரமம் தருவதே இல்லை, அவன் என்னைப் பெரும்பாலும் மகிழ்ச்சியாகவே வைத்திருக்கிறான், அவன் இல்லாத ஒரு வாழ்க்கையை என்னால் கற்பனை செய்துபார்க்கக்கூட முடியாது. அப்படியானால், நான் அவனுக்குத் தயாராக இருந்தேனா? இல்லை.

என் தோழி ஒருத்தி, அவள் பெயர் A என்று வைத்துக்கொள்வோம். அவளுடைய மகனுக்கும் என் மகனுக்கும் ஒரே பெயர்தான். அவளுடைய மகனின் வயது 18 என் மகனின் வயது 6. நானும் அவளும் ஒரே வயதுதான். ஹ்ம்ம்ம்... ஒருவேளை, நான் இளவயதிலேயே குழந்தைபெற்றிருக்கவேண்டுமோ? அப்போது, வாழ்க்கையின் மற்ற விஷயங்களை விரைவில் கவனித்திருக்கலாமோ? அவள் தன் பணிவாழ்க்கையின் இரண்டாவது நிலைக்குள் நுழைந்துவிட்டாள், புத்துணர்ச்சி, வேகத்துடன் தன்னுடைய புதிய தொழில் முயற்சியில் ஈடுபடுகிறாள். சென்ற ஆண்டு நாங்கள் சந்தித்தோம். முந்தைய 20 ஆண்டுகளில் அவளுடைய வாழ்க்கையின் பெரும்பகுதி ஒரு கருந்துளையாக இருந்துவிட்டதாக அவள் சொன்னாள். இதைக்கேட்டு நான் குற்றவுணர்ச்சியடைந்தேன். அவள் இரண்டு குழந்தைகளைச் சிரமப்பட்டு வளர்த்துக்கொண்டு, தன்னுடைய திறமையைத் தக்கவைத்துக்கொள்வதற்காக ஒரு புதிய பட்டத்தைப் பெற முயன்றுகொண்டு வீட்டையும் கவனித்துக்கொண்டு போராடியபோது, நான் தோளில் ஒரு பையோடு ஊர் சுற்றுவது, காதலில் விழுவது, காதலர்களை மாற்றுவது என்று இருந்திருக்கிறேன்.

குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள இதுதான் சரியான வயது என்று யாராவது சொன்னால், உண்மையில் அவர்கள் உடல்தகுதியைப்பற்றிமட்டுமே பேசுகிறார்கள். அதுகூட சரி என்று சொல்ல இயலாது. ஒருவர் இளமையாக இருக்கிறார் என்பதால்மட்டும் அவருடைய உடல் குழந்தை பெறத் தயாராகிவிடுவதில்லை, இன்னொருபக்கம், அவருக்கு வயதாகிவிட்டது என்பதால்மட்டும் அவருடைய உடல் அதற்குத் தயாராக இல்லை என்றாகிவிடாது. இதை என்னால் இப்படிப் பிரித்துப்பார்க்க இயலும் என்று நான் எப்போதும் நினைத்ததில்லை. ஆனால், குழந்தைக்குத் தயாராவதுபற்றிய இந்த முழு நிகழ்வில் நெருக்கமாகப் போட்டியிடும் மூன்று விஷயங்கள் இருக்கின்றன: உயிரியல் கடிகாரம், பணிவாழ்க்கைக் கடிகாரம், உணர்வுக் கடிகாரம். ஒரு வசதிக்காக, இதை மூன்று நேர மண்டலங்களாகப் பிரிக்கலாம். பெண்கள் பொதுவாக இந்த வயதில்தான் குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள்: 20கள், 30கள், 40கள். இதில் நடுவில் இருப்பவர்களுக்குதான் சிரமங்கள் அதிகம். ஆனால், பல பெண்கள் இந்த நேரத்தில்தான் குழந்தை பெற்றுக்கொள்ளத் தீர்மானிக்கிறார்கள்: முப்பதுகளின் முற்பகுதி

இதை இன்னொருவிதமாகவும் பார்க்கலாம்: இருபதுகளில் குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண்கள், நாற்பதுகளில் தங்களுடைய வாழ்க்கையைத் திரும்பப்பெற வாய்ப்புள்ளது. இன்னொருபக்கம், தாமதாகக் குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண்கள் தாங்கள் விரும்பியவற்றில் சிலவற்றை ஏற்கெனவே செய்திருப்பார்கள்.

ஆனால், இதுபற்றி அவர்கள் எவ்வளவு யோசித்தாலும் சரி, எத்தனை திட்டங்களைத் தயார்செய்தாலும் சரி, குழந்தை அதையெல்லாம் மாற்றியமைத்துவிடும், 'இதற்குதானா நான் ஆசைப்பட்டேன்' என்று யோசிக்கவைத்துவிடும். அதைவிட மோசம், இதற்கு மற்றவர்கள்தான் காரணம் என்று அவர்கள் எண்ணத்தொடங்கிவிடுவார்கள், அவர்களால்தான் இப்படி ஆனது என்று தீர்மானித்துக்கொண்டு, அவர்களை மன்னிக்கவேமாட்டார்கள்.

தாய்மை என்பது, திரும்பப்பெறமுடியாத ஒரு பெரிய மாற்றம். ஆனால், பலர் அதைப்பற்றி அதிகம் யோசிப்பதே இல்லை. பல பெண்கள் தங்களுக்கு என்ன நடக்கிறது என்பதைச் சரியாக மதிப்பிடக்கூட இயலாத வயதில் குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள், அல்லது, அதிக வயதில், சிந்திக்க நேரமில்லாத சூழ்நிலையில் குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள்.

என்னைக்கேட்டால், "தயாராகும்வரை காத்திருப்பது" என்ற செயல்முறையே அபத்தம் என்பேன், காரணம், அதன்மூலம் ஒருவர் பெற்றோராகத் "தயாராகமுடியும்" என்று அர்த்தமாகிறது. அது ஒரு குழந்தை. தாயைப்போலவே, அதுவும் ஊகிக்கமுடியாத ஓர் ஆளுமை.  இதுபற்றிய என் கருத்துகள்: தான் உண்மையாகத் தயாராகிவிட்டதாக ஒருவர் எப்போது நம்புகிறாரோ, அப்போது அவர் உண்மையாகக் குழந்தைக்குத் தயாராகிவிட்டார். காரணம், தான் யார், தன்னால் எதைத் தாங்கிக்கொள்ளமுடியும், எதைத் தாங்கிக்கொள்ளமுடியாது என்பதெல்லாம் குழந்தை பெற்றுக்கொண்டபிறகுதான் அவருக்குப் புரியும். அது எப்போதும் மகிழ்வாகச் செல்லக்கூடிய ஓர் இடமில்லை. காரணம், அங்கே எதைக் காணப்போகிறோம் என்பது அவருக்கே தெரியாது. ஆனால், ஒருவர் குழந்தை பெறவேண்டும் என்று நிஜமாக விரும்புகிறார் என்றால், அவர் அதற்குத் தயாராகிவிட்டார் என்று பொருள்.

ஒரு பெண் எப்போது தாய்மைக்குத் தயாராகிவிட்டார் என்று என்னால் சொல்ல இயலாது. ஆனால், அவர் எப்போது தயாராகவில்லை என்பதை ஓரளவு ஊகிக்கலாம்:

1.      ஒருவர் தான் விரும்பும் நிலையான வேலையில் இருக்கிறார் என்பதாலேயே அவர் குழந்தைக்குத் தயாராகிவிடமாட்டார்: குழந்தை பிறந்தபிறகு, அந்த வேலையைக் கவனிப்பது மிகவும் சிரமமாகிவிடும், காரணம், அதற்கு எப்போதும் அந்தப் பெண்ணின் தர்க்கரீதியிலான திறமை  தேவைப்படும், அது அந்த நேரத்தில் குறைவாகவே கிடைக்கும். அத்துடன், அவர் மும்முரமாகக் குழந்தையைக் கவனித்துக்கொண்டிருக்கிற நேரத்தில், வேறு சிலர் அவருடைய வேலைக்குப் போட்டிபோடலாம். அவர்கள் இவரைவிடத் திறமைசாலிகளாக, தொந்தரவு இல்லாதவர்களாக இருக்கலாம்.

2.      விருப்பமுள்ள ஒரு கணவர் இருக்கிறார் என்பதாலேயே ஒருவர் குழந்தைக்குத் தயாராகிவிடமாட்டார்: பெரும்பாலான ஆண்கள், குழந்தை உருவாகப் பங்களிப்பதோடு சரி. அதன்பிறகு அவர்களுக்குப் பணிசார்ந்த கடமைகள் அதிகமாகிவிடும், வீட்டுப்பக்கமே வர இயலாதபடி மாறிவிடுவார்கள். இதுபற்றி முன்கூட்டியே பேசிக்கொள்வது நல்லது.

3.      குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதுதான் முழுமையான, உயர்ந்த செயல் என்று ஒருவர் நினைப்பதாலேயே அவர் குழந்தைக்குத் தயாராகிவிடமாட்டார் : அதற்குப்பதிலாக, அவர்கள் விளையாட்டில் பதக்கங்களை வெல்லலாம், விற்பனை இலக்குகளை எட்டலாம். தங்களால் சிறப்பாகச் செய்ய இயலுகிற ஒரு விஷயத்தைச் செய்யாமலிருப்பதில் எந்த முழுமையும் கிடைக்காது.

4.      குழந்தை பெற்றுக்கொள்வதால் தன்னுடைய திருமணம் இன்னொரு நிலைக்குச் செல்லும் என்று சிந்திப்பதாலேயே ஒருவர் குழந்தைக்குத் தயாராகிவிடமாட்டார்: மாறாக, அந்தத் திருமண உறவிலேயே மிகவும் சிரமமான ஒரு நேரமாக இது இருக்கும். ஆனால், இதை அவருக்கு யாரும் சொல்லமாட்டார்கள். காரணம், ஒரு குழந்தை பிறக்கிறது என்றால் எல்லா நிறுவனங்களும் அதிகப் பொருள்களை விற்கலாம். நிறைய பணம் சம்பாதிக்கலாம்.

5.      பிறக்கப்போகும் குழந்தைக்கு இரண்டு தாத்தா, பாட்டிகள் இருக்கிறார்கள் என்பதாலேயே ஒருவர் குழந்தைக்குத் தயாராகிவிடமாட்டார்: பெரும்பாலான தாத்தா, பாட்டிகள் குழந்தையோடு புகைப்படம் எடுத்துக்கொள்வதுடன் சரி. அதன்பிறகு அவர்களைச் சமாளிப்பது சிரமம். அவர்கள் உணர்வுரீதியிலான பயமுறுத்துதலை மிக நன்றாகச் செய்வார்கள்.

6.      தன் நண்பர்கள் எல்லாருக்கும் குழந்தைகள் பிறந்துவிட்டன என்பதாலேயே ஒருவர் குழந்தைக்குத் தயாராகிவிடமாட்டார்: அவர்கள் உங்கள் குழந்தையோடு விளையாடுவார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

7.      ஒருவர் பூனை அல்லது பூனைகளை வளர்க்கிறார் என்பதாலேயே அவர் குழந்தைக்குத் தயாராகிவிடமாட்டார் : பூனைகள் பேசாது. அவை புலம்பாது. ஒரே புத்தகத்தை 29 முறை படிக்கச்சொல்லிக் கேட்காது.

8.      ஒருவர் தன் நண்பர்களின் குழந்தைகளை நன்றாகக் கவனித்துக்கொள்கிறார் என்பதாலேயே அவர் குழந்தைக்குத் தயாராகிவிடமாட்டார்: மற்ற நண்பர்களின் குழந்தைகளைப் பிடிக்காவிட்டால் வெளியே வந்துவிடலாம். சொந்தக் குழந்தையை அப்படி விட்டுவிடமுடியாது.

9.      ஒருவருக்குக் குழந்தைகளைப் பிடிக்கிறது என்பதாலேயே அவர் குழந்தைக்குத் தயாராகிவிடமாட்டார்: ஒரு குழந்தையோடு விளையாடுவது வேறு, அதனை 24X7X365 பார்த்துக்கொள்வது வேறு.

10.  ஒருவரிடம் போதுமான அளவு பணம் இருக்கிறது என்பதாலேயே அவர் குழந்தைக்குத் தயாராகிவிடமாட்டார்: அந்தப் பணம் போதுமா? யாருக்குத் தெரியும்?

11.  சிறிய குழந்தைகள் அப்பாவித்தனமாகப் பல கேள்விகளைக் கேட்கும், அப்போதெல்லாம் என்ன செய்வது என்று யாருக்கும் புரியாது, அவர்களுக்கு ஒரு லட்சிய பிம்பமாகத் திகழ்வது எப்படி என்று தெரியாது, அவர்களுக்கு நம்பிக்கை, வழிகாட்டுதலை வழங்குவது எப்படி என்று தெரியாது. அந்த அளவு வளர்ந்தவர்களாக யாருமே உணர்வதில்லை.

12.  ஒருவர் நிலையான திருமணத்தை எப்போதும் அனுபவிக்கமுடியாது: அப்படி ஒன்று கிடையவே கிடையாது.

குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண்ணின் மனமும் உடலும் குறிப்பிடத்தக்கவகைகளில் மாறிவிடுகிறது. உடலால் இவற்றையெல்லாம் கற்றுக்கொண்டு செய்யமுடியும்: தாய்ப்பாலூட்டுதல், குழந்தையை ஏப்பம் விடச்செய்தல், தாலாட்டுதல், சுத்தப்படுத்துதல், அழுக்குத்துணி துவைத்தல், குளித்தல், குழந்தையைக் குளிப்பாட்டுதல், தாய்ப்பாலூட்டுதல், மறுபடி சுத்தப்படுத்துதல், அழுக்குத்துணியை மாற்றுதல், தாய்ப்பாலூட்டுதல், மதிய உணவு உண்ணுதல், தாய்ப்பாலூட்டுதல், ஏப்பம் விடச்செய்தல், அழுக்குத்துணியை மாற்றுதல், தான் கழிப்பறைக்குச் செல்லுதல், மறுபடி தாய்ப்பாலூட்டுதல், ஏப்பம் விடச்செய்தல், பாடுதல், விநோதமான முகக்குறிப்புகளைச் செய்துகாட்டுதல், மறுபடி சுத்தப்படுத்துதல்.

ஆனால், இவையெல்லாம் மனத்துக்குச் சிரமம். குழந்தை பிறந்தவுடன் ஒரு பெண் தாய்மை முறைக்கு மாறிவிடுவதில்லை: அவருக்குள் கவலை, முரண், குழப்பம் போன்றவை உள்ளன, சில சமயங்களில் இவை மனச்சோர்வாக மாறிவிடுகின்றன, இதனைப் பேறுகாலத்துக்குப் பிந்தைய மனச்சோர்வு என்பார்கள். ஆனால், கர்ப்பமாக இருக்கும் பெண்கள் படிக்கிற அழகான 'குழந்தைப் புத்தகங்களில்' இவையெல்லாம் குறிப்பிடப்படுவதில்லையே. குழந்தையின் ஆடையை மடித்துவைப்பது, மருத்துவமனைப் பையில் என்னவெல்லாம் வைப்பது என்பதையெல்லாம் சொல்லித்தரும் இந்தப் புத்தகங்கள் 'பேறுகாலத்துக்குப் பிந்தைய மனச்சோர்வு' என்கிற பெயரைக்கூடக் குறிப்பிடுவதில்லை. இது பலருக்கு அதிர்ச்சி தரலாம்.

சில பெண்கள், இந்த நிலைமையைச் சமாளிப்பதற்காகப் பிறரிடம் பேசுகிறார்கள். குறிப்பாக, ஏற்கெனவே இதுபோன்ற நிலையைச் சந்தித்துள்ள பெண்களிடம் உரையாடுகிறார்கள். மற்றவர்கள் ஒரு கூடுக்குள் ஒடுங்கிவிடக்கூடும், பல மாதங்கள் வெளியே வராமலே இருக்கக்கூடும். அவர்கள் மனச்சோர்வில் மூழ்கிவிட்டார்கள் என்பதை மற்றவர்கள் உணராமலே இருக்கக்கூடும். பல பெண்களுக்குப் பிரசவத்துக்குப்பிந்தைய கவலைகள் வருகின்றன, அதை அவர்கள் ஒரு பெரிய சுமையாகச் சுமக்கிறார்கள், அதை எப்போதும் வெளியே சொல்வதில்லை, அப்படிச் சொல்வது தவறு என்று நம்புகிறார்கள்.

இவர்களுக்கு என்னுடைய ஒரே அறிவுரை: இதைப்பற்றி அவர்கள் பேசவேண்டும். தங்களுடைய அன்புவட்டத்தில் இருக்கும் யாரிடமும் அவர்கள் பேசலாம். தன் கணவர் தன் தாய் தன் நண்பர்கள் ஓர் ஆலோசகர் குழந்தை பெற்றபிறகு ஆலோசனை என்பதைப் பலரும் பெரிய விஷயமாக நினைப்பதில்லை. ஆனால், பல பெண்களுக்கு அது தேவை. போதுமான உதவி கிடைக்காவிட்டால், அந்தப் பெண்ணின் மனநலத்தில் பாதிப்பு உண்டாகக்கூடும், தொலைநோக்கில் அது அவரையும் அவருடைய குழந்தையையும் ஆழமாகப் பாதிக்கக்கூடும். குழந்தை பிறந்தபின்னர் மருத்துவ மனச்சோர்வினால் அவதிப்படும் பல பெண்கள் அதனை உணர்வதே இல்லை. தங்களுக்கு இப்படியொரு பிரச்னை இருபப்தை அறிவதே இல்லை. குழந்தைக்குத் தயாராகிற பிரச்னையைவிட, இதுதான் மிகவும் பயமுறுத்தும் பிரச்னையாகும்.

லலிதா ஐயர் ஒரு பத்தி எழுத்தாளர், "I'm Pregnant, not Terminally Ill, You Idiot!" என்ற நூலின் ஆசிரியர்.  ஓர் ஆறுவயதுச் சிறுவனும் சில பூனைகளும் அவரை வளர்க்கிறார்கள்.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org