டிஸ்லெக்ஸியா

Q

டிஸ்லெக்ஸியா என்றால் என்ன?

A

டிஸ்லெக்ஸியா என்பது கற்கும் திறன்கள் மற்றும் மொழியைப் புரிந்துகொண்டு செயல்முறைப் படுத்துதல் ஆகியவற்றில் ஏற்படும் ஒரு கற்றல் குறைபாடு. டிஸ்லெக்ஸியா பிரச்னை கொண்ட குழந்தைகளுக்கு வாசித்தல், எழுதுதல், ஸ்பெல்லிங் சொல்லுதல் அல்லது பேசுதல் ஆகிய நடவடிக்கைகளில் சிரமங்கள் இருக்கும். டிஸ்லெக்ஸியா பிரச்னை கொண்ட குழந்தைகளுடைய சில திறன்கள் பாதிக்கப்படலாம், ஆனால் இது அவர்களுடைய பொதுவான புத்திசாலித்தனத்துடன் தொடர்புடையது அல்ல.

டிஸ்லெக்ஸியாவின் தீவிரத்தன்மை குழந்தைக்குக் குழந்தை மாறுபடலாம். சில குழந்தைகளுக்கு வாசித்தல் மற்றும் எழுதுதலில் சிரமங்கள் இருக்கலாம், சில குழந்தைகளால் புதிய சொற்களை, அவற்றின் பொருள்களைப் புரிந்து கொள்ள இயலாமல் போகலாம், வேறு சில குழந்தைகளுக்கு இலக்கணத்தில் அல்லது ஒரு புதிய மொழியைக் கற்றுக் கொள்வதில் சிரமங்கள் ஏற்படலாம். மொழியைக் கற்றுக் கொண்டு பயன்படுத்துவதில் ஏற்படக்கூடிய இந்தச் சிரமங்களால் அந்தக் குழந்தையின் கல்வியில் பாதிப்புகள் ஏற்படலாம். டிஸ்லெக்ஸியா மற்ற கற்றல் குறைபாடுகளான ADHD அல்லது ஆட்டிசம் போன்றவற்றுடன் இணைந்து காணப்படலாம்.

Q

டிஸ்லெக்ஸியாவின் அறிகுறிகள் என்ன?

A

பொதுவாக ஒரு குழந்தை பள்ளிக்குச் செல்லும் போது அதன் பெற்றோரால் டிஸ்லெக்ஸியாவின் அறிகுறிகளை அடையாளம் காண இயலும்.

பள்ளி செல்வதற்குமுன்: குழந்தைக்குப் பின்வருவனவற்றில் சிரமங்கள் ஏற்படலாம்:

  • எழுத்துகள் மற்றும் சொற்களை அடையாளம் காணுதல்
  • எழுத்துகளை ஒலிகளோடு (ஒலிப்பு முறைகளோடு) இணைத்தல்
  • புதிய சொற்களைக் கற்றுக் கொள்ளுதல்
  • எழுத்துகள், எண்கள், குழந்தைப் பாடல்கள் மற்றும் ஒரே மாதிரி ஒலிக்கும் சொற்கள் ஆகியவற்றைக் கற்றுக் கொள்ளுதல்

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி: குழந்தைக்குப் பின்வருவனவற்றில் சிரமங்கள் ஏற்படலாம்:

  • தகவல்கள் மற்றும் எண்களை நினைவில் வைத்துக் கொள்ளுதல்
  • ஒழுங்காக எழுதுதல், பென்சிலைப் பிடித்து எழுதுதல்
  • வாசகங்கள் அல்லது பாடல்களை மனப்பாடம் செய்தல், எழுத்துகளுக்கிடையே வித்தியாசம் காணுதல் (b, d; m, w)
  • சொற்களுக்குத் துல்லியமாக ஸ்பெல்லிங் சொல்லுதல்
  • பேசுவதற்கான சரியானச் சொற்களைக் கண்டறிதல்
  • பிறர் சொல்லும் வழிமுறைகள் அல்லது நெறிமுறைகளைப் பின்பற்றுதல்
  • கணிதத்தில் சொற்களால் விவரிக்கப்படும் கணக்குகளைப் போடுதல்
  • ஒரு புதிய மொழியைக் கற்றுக் கொள்ளுதல்

பதின் பருவத்தினர் மற்றும் வளர் இளம் பருவத்தினர்: இவர்களுக்குப் பின்வருவனவற்றில் சிரமங்கள் ஏற்படலாம்:

  • எளிதாகப் படித்தல் அல்லது சத்தமாகப் படித்தல்
  • நகைச்சுவைகள், குழந்தைப் பாடல்கள், புதிர்கள் அல்லது பழமொழிகளைப் புரிந்துக் கொள்ளுதல்
  • வாசகங்கள் மற்றும் பாடல்களை மனப்பாடம் செய்தல்
  • ஒரு கதையைத் தொகுத்துச் சொல்லுதல் அல்லது அதன் சாராம்சத்தைச் சொல்லுதல்
  • நேரத்தை ஒழுங்காகக் கையாளுதல்
  • கணக்குகளைப் போடுதல்

Q

டிஸ்லெக்ஸியா எதனால் ஏற்படுகிறது?

A

டிஸ்லெக்ஸியாவுக்கான சரியானக் காரணத்தை ஆய்வாளர்கள் இன்னும் கண்டறியவில்லை. அதே சமயம் மரபணுக்களும் மூளையின் செயல்பாடுகளில் ஏற்படக்கூடிய மாற்றங்களும் டிஸ்லெக்ஸியாவை உண்டாக்கலாம் என இவர்கள் கருதுகின்றனர்.

Q

டிஸ்லெக்ஸியா எப்படிக் கண்டறியப்படுகிறது?

A

டிஸ்லெக்ஸியாவைக் கண்டறிவதற்குத் தனியான பரிசோதனை என்று எதுவுமில்லை. பல நிபுணர்கள் ஒன்றாகச் சேர்ந்து குழந்தையின் அறிகுறிகளை மதிப்பிடுவார்கள், அதன் அடிப்படையில் குழந்தைக்கு டிஸ்லெக்ஸியா வந்திருக்கிறதா இல்லையா எனக் கண்டறிவார்கள். இந்த நிபுணர்கள் கற்றல் குறைபாடு, ADHD அல்லது பிற பிரச்னைகளால் குழந்தையின் கற்கும் செயல்முறைப் பாதிக்கப்பட்டிருக்கிறதா என்பதைக் கண்டறிவதற்காகவும் சில பரிசோதனைகளை நடத்துவார்கள். ஆகவே நிபுணர்கள் தங்களுடைய ஆய்வின் போது பின்வரும் காரணிகளில் சிலவற்றைக் கருத்தில் கொள்வார்கள்:

  • குடும்பம் மற்றும் மருத்துவ வரலாறு
  • வாசித்தல் மற்றும் எழுதுதல் திறன்கள்
  • பார்வை மற்றும் கேட்டல்
  • கல்வி முன்னேற்றம்

Q

டிஸ்லெக்ஸியாக்குச் சிகிச்சை பெறுதல்

A

டிஸ்லெக்ஸியா பிரச்னை கொண்ட குழந்தைகளுக்காகச் சிறப்புக் கல்வி அனுகுமுறைகள் மற்றும் உத்திகள் உருவாக்கப்பட்டுள்ளன, இவற்றின் மூலம் அந்தக் குழந்தைகளுக்குச் சிகிச்சைத் தரப்படுகிறது. டிஸ்லெக்ஸியாவை முன்கூட்டியே கண்டறிந்து சரியான சிகிச்சை தந்தால் குழந்தைகள் அதனை நன்கு சமாளித்து வளர்வார்கள்.

இதற்குத் தரப்படும் சில சிகிச்சைகள்:

  • மாற்றுக் கல்வி முறைகள்: ஆசிரியர்களும் விஷேசக் கல்வி நிபுணர்களும் மாற்றுக் கல்விமுறைகளைப் பயன்படுத்திக் குழந்தைக்குச் சொல்லித் தருகிறார்கள். உதாரணமாக பாடங்களை ஆடியோ டேப்பில்  பதிவு செய்து கேட்டல், அந்தக் குழந்தை சொற்களை அடையாளம் கண்டு சொல்வளத்தைப் பெருக்கிக் கொள்வதற்காகப் படங்கள் மற்றும் புகைப்படங்களைப் பயன்படுத்துதல், அப்போது அந்தக் குழந்தையை எழுத்துகளின் வடிவங்களைத் தொட்டு உணரச் செய்தல் போன்றவை.
  • தனிப் பயிற்சி அளித்தல்: டிஸ்லெக்ஸியா பிரச்னை கொண்ட குழந்தைகளுடைய வாசிக்கும் திறனை மேம்படுத்துவதற்காக வாசிப்பியல் நிபுணர்கள் ஒலிப்பு முறைகள் மற்றும் பிற மாற்று முறைகளைப் பயன்படுத்துகிறார்கள்.
  • தனித்துவமானக் கல்வித் திட்டம் (IEP) : நன்கு வரையறுக்கப்பட்ட இலக்குகளுடன் கூடிய கட்டமைக்கப்பட்டக் கல்வித் திட்டம் குழந்தை கற்றுக் கொள்வதில் உதவுகிறது.

    குறிப்பு:

  • டிஸ்லெக்ஸியா பிரச்னை கொண்ட குழந்தைகளுக்கு ADHD வருகிற ஆபத்து இருக்கலாம், இதே போல் ADHD பிரச்னை கொண்ட குழந்தைக்கு டிஸ்லெக்ஸியா வருகிற வாய்ப்பு இருக்கலாம். ADHDயின்  அறிகுறிகள் டிஸ்லெக்ஸியாவிற்கானச் சிகிச்சையைப் பாதிக்கக்கூடும்.
  • டிஸ்லெக்ஸியா பிரச்னை கொண்ட குழந்தைகள் மிகவும் திறமைசாலிகளாக, படைப்புணர்வு கொண்டவர்களாக இருக்கலாம். போதுமான ஆதரவு, ஊக்கம் மற்றும் சரியான வளங்களை இவர்களுக்குத் தந்தால் இந்தக் குழந்தைகள் தாங்கள் விரும்பும் துறையில் மிகச் சிறப்பாக வளரக் கூடும்.

Q

டிஸ்லெக்ஸியாவுக்குச் சிகிச்சை தராவிட்டால் என்ன ஆகும்?

A

குழந்தைப் பருவத்தில் டிஸ்லெக்ஸியாவைக் கண்டறியவில்லை அல்லது அதற்குச் சிகிச்சை தரவில்லையென்றால் அதன் தாக்கங்கள் தொடரும், அந்தக் குழந்தை வளர்ந்து பெரியவராகும் போது அதன் கற்றல் செயல்முறை மற்றும் மொழித் திறன்களைப் பாதிக்கக் கூடும்.

டிஸ்லெக்ஸியாவுக்குச் சிகிச்சைத் தராவிட்டால் அது பின்வரும் பிரச்னைகளில் சிலவற்றை உண்டாக்கக் கூடும்:

  • கல்வி: டிஸ்லெக்ஸியா பிரச்னை கொண்ட குழந்தைகளுக்கு வாசித்தல் மற்றும் எழுதுதலில் சிரமங்கள் இருப்பதால் அவர்களால் நன்கு படிக்க இயலாமல் போகலாம், இதனால் தொலைநோக்கில் கல்வி சார்ந்த பல பிரச்னைகள் வரலாம்.
  • நேர மேலாண்மை:  குழந்தைகள் தங்களுடைய தினசரிச் செயல்பாடுகளுக்கு நேரம் ஒதுக்க இயலாமல் சிரமப்படலாம், உதாரணமாக பள்ளி வேலை, தேர்வுகள் போன்றவை.
  • சமூகத் திறன்கள்:  டிஸ்லெக்ஸியா பிரச்னை கொண்ட குழந்தைகளுக்குச் சுயமதிப்பு குறைவாக இருக்கலாம், பதற்றம், உணர்வு சார்ந்த பிரச்னைகள் வரலாம், இவர்கள் பிற குழந்தைகளுடன் பழகுவதற்கும், நண்பர்களை உருவாக்கிக் கொள்வதற்கும் சிரமப்படலாம்.

Q

டிஸ்லெக்ஸியா பிரச்னை கொண்ட ஒரு குழந்தையைக் கவனித்துக் கொள்ளுதல்

A

டிஸ்லெக்ஸியா பிரச்னை கொண்ட ஒரு குழந்தையைக் கவனித்துக் கொள்ளுதல் பெற்றோருக்கு மிகுந்த மன அழுத்தம் தரலாம். ஆனால் டிஸ்லெக்ஸியாபற்றிப் பெற்றோர் நன்கு தெரிந்துகொள்வதன்மூலம், தங்களுடைய குழந்தை இந்த நிலையைச் சமாளிப்பதற்கும் இதிலிருந்து குணமாவதற்கும் நன்கு உதவலாம்.

பெற்றோர் குழந்தைக்கு உதவக்கூடிய வழிகள் சில:

  • மேற்கண்ட அறிகுறிகளில் எவற்றையேனும் தங்கள் குழந்தையிடம் கவனித்தால்,  உடனடியாகத் தங்கள் குழந்தையைப் பரிசோதிக்கும் குழந்தைகள் நல மருத்துவரை அணுகி அவருடைய ஆலோசனையைப் பெறலாம்.
  • நிபுணர் சிபாரிசு செய்கிற சிகிச்சைத் திட்டத்தைப் பின்பற்றுவதற்குக் குழந்தைக்கு ஊக்கம் தரலாம்.
  • குழந்தைக்குக் கதைகளைச் சத்தமாகப் படித்துக் காட்டலாம். குழந்தை ஒலிப் புத்தகங்களைக் கேட்பதற்கு ஊக்கம் தரலாம்.
  • குழந்தைக்கு ஓரளவு வயதானதும் பெற்றோரும் அதனுடன் சேர்ந்தே கதைகளைப் படிக்கலாம். குழந்தை புத்தகங்களை, செய்தித்தாள்களைப் படிக்கலாம் என்று ஊக்கப்படுத்தலாம். குழந்தைகள் பல விஷயங்களைப் பெற்றோரிடமிருந்து கற்றுக்கொள்கிறார்கள். அவர்களும் வாசிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொண்டு தங்கள் குழந்தைக்கு ஒரு சிறந்த உதாரணமாகத் திகழலாம்.
  • தங்கள் குழந்தைக்கு எந்தச் செயல்பாடுகள் அல்லது பொழுதுபோக்குகளில் ஆர்வம் இருக்கிறதோ அவற்றில் ஈடுபடுமாறு ஊக்கப்படுத்தி ஆதரவு தரலாம்.
  • தங்கள் குழந்தையின் ஆசிரியரிடம் பேசி இந்தப் பிரச்னையை விளக்கலாம். ஆசிரியர், சிகிச்சையாளர் மற்றும் சிறப்புக் கல்வி நிபுணர் ஆகியோருடன் இணைந்து பணியாற்றி மாற்றுக் கல்வி முறைகளை அடையாளம் காணலாம் அல்லது ஒரு தனித்துவமான கல்வித் திட்டத்தை உருவாக்கலாம்.
  • ஓர் ஆதரவுக் குழுவில் இணைந்து இதே சூழ்நிலையில் இருக்கும் பிற பெற்றோருடன் பேசி அவர்களுடைய உதவி மற்றும் ஆதரவைப் பெறலாம்.
  • பெற்றோர் தங்கள் குழந்தைக்கு ஓர் அன்பான மற்றும் ஆதரவான சூழ்நிலையை உருவாக்கினால் அது மிகவும் பாதுகாப்பாக உணர்கிறது. ஆகவே, பெற்றோர் குழந்தைமீது தாங்கள் வைத்திருக்கும் அன்பையும் ஆதரவையும் வெளிப்படுத்தவேண்டும், தங்கள் குழந்தை செய்யும் முயற்சிகளைப் பாராட்டவேண்டும், அவர்கள் தங்களுடைய பலவீனங்களில் கவனம் செலுத்தாமல் பலங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று ஊக்கப்படுத்தவேண்டும், இவையனைத்தும் குழந்தை தனது சிரமங்களைக் குணப்படுத்திக் கொள்ள உதவும்.

Q

டிஸ்லெக்ஸியா பிரச்னை கொண்ட பெரியவர்கள்

A

பெரியவர் ஒருவருக்கு டிஸ்லெக்ஸியா இருப்பது கண்டறியப்பட்டால் அல்லது, குழந்தைப் பருவத்திலிருந்த டிஸ்லெக்ஸியாவை இதுவரை அவர்களால் சமாளிக்க இயலவில்லையென்றால் கவலைப்படவேண்டியதில்லை. இந்த நிலையில் உள்ள பெரியவர்களுக்கும் சிகிச்சை தந்து குணப்படுத்தலாம். ஒருவர் தனக்கு டிஸ்லெக்ஸியா இருப்பதாக நினைத்தால் ஒரு நிபுணரைச் சந்தித்து உதவி பெறலாம், தங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரையும் அணுகி ஆதரவு பெறலாம்.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org