ஓர் உயிரைக் காத்திடுங்கள்

ஒருவர் தற்கொலையைப்பற்றிச் சிந்திக்கும்போது, யார்வேண்டுமானாலும் அவர்களுடைய எண்ணத்தை மாற்றி உதவலாம், நீங்கள்கூட...

எழுதியவர்: டாக்டர் பிரபா சந்திரா மற்றும் பத்மாவதி

அன்று காலை, சரோஜா அலுவலகத்துக்குத் தாமதமாகதான் வந்தார். அவர் மிகவும் வருத்தமாகத் தோன்றினார். அழுது அழுது அவருடைய கண்கள் வீங்கியிருந்தன. இதைப்பற்றி நான் சற்றே விசாரிக்க, சரோஜா உண்மையைச் சொன்னார்: அவருடைய கணவர் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்திருக்கிறார், குழந்தைகள்முன்னால் பெரிய சண்டை. கடந்த ஒருமாதமாகவே இந்தப் பிரச்னை தொடர்ந்துவந்திருக்கிறது. சரோஜா தன் வாழ்க்கையை முடித்துக்கொண்டுவிடலாமா என்று பலமுறை யோசித்திருக்கிறார்.

சரோஜாவின் மனத்தில் என்ன உள்ளது என்று எனக்குப் புரிந்தது. அவருக்கு எந்தவிதமான உதவியும் கிடைக்கவில்லை, திகைத்துநிற்கிறார். உடனே, நான் என்னுடைய வேலைகள் அனைத்தையும் நிறுத்திவிட்டேன். அவர் சொன்னதைப் பொறுமையுடன் கேட்டேன். பத்து நிமிடத்தில் அவரது மனச்சுமை குறைந்தது.

நான் அவருடைய பலங்களைச் சுட்டிக்காட்டினேன்: அவர் அன்பானவர், பிரமாதமான உழைப்பாளி, மிகவும் நேர்மையானவர். அவரோடு வேலைசெய்கிற எல்லாரும், அவரை மிகவும் மதிக்கிறார்கள். ஆகவே, அவருக்குப் பலரும் பக்கபலமாக நிற்பார்கள் என்று நான் வலியுறுத்தினேன். அவருடைய கணவரின் பிரச்னையைப்பற்றி என்ன செய்யலாம் என்று தெரிந்துகொள்வதற்காக, ஒரு மருத்துவரைச் சிபாரிசு செய்யட்டுமா என்று கேட்டேன்.

நான் அவருடைய பிரச்னைகளைத் தீர்க்கவில்லை, அதேசமயம், அவரது மனம் லேசானது, அதன்பிறகு எப்போது அவருக்குத் தற்கொலை எண்ணம் வந்தாலும், என்னிடம் பேசுவதாக, உதவி கோருவதாக அவர் உறுதிதந்தார்.

தற்கொலை என்பது, உதவி கேட்கும் கதறல். சில சூழ்நிலைகளில், சிலர் தற்கொலையைப்பற்றிச் சிந்திக்கிறார்கள், வேறு சிலர், அதைவிட மோசமான சூழ்நிலைகளிலும் தற்கொலையைப்பற்றிச் சிந்திப்பதில்லை. இது ஏன் என்று விளக்குவது சிரமம். தற்கொலைக்கு முயற்சி செய்த பலரும், அதற்குமுன் கலவையான உணர்ச்சிகளை உணர்ந்ததாகச் சொல்கிறார்கள். அவர்களுக்கு வாழ்க்கை என்கிற வலியிலிருந்து தப்பித்துவிடவேண்டும் என்ற துடிப்பு ஏற்பட்டிருக்கிறது, அதேநேரம், உள்ளுக்குள் வாழும் ஆசையும் இருந்திருக்கிறது. தற்கொலை எண்ணம் கொண்ட பலர், உண்மையில் இறக்க விரும்புவதில்லை. அப்போதைய சூழ்நிலை அவர்களைத் திகைக்கவைத்துவிடுகிறது, இதற்கு எந்த உதவியும் கிடைக்கப்போவதில்லை என்று தீர்மானித்துவிடுகிறார்கள், அதனால், தற்கொலையைத் தேர்ந்தெடுக்கிறார்கள். மேலே நாம் கண்ட கதையைப்போல், தற்கொலை எண்ணத்தில் இருக்கும் ஒருவரிடம் யாராவது ஆதரவாக, அனுதாபத்துடன் பேசினால், வாழும் விருப்பம் அதிகரிக்கும், தற்கொலை ஆபத்து குறையும்.

தற்கொலையைப்பற்றி எண்ணும் ஒருவர், ஏதாவது ஒருகட்டத்தில் தங்கள் விருப்பத்தை வெளிப்படையாகக் காட்டிவிடுவார், அது ஓர் எச்சரிக்கை மணி. அந்த நேரத்தில், நாம் ஒவ்வொருவரும் பாதுகாவலர்களாகச் செயல்படலாம்.

யாரெல்லாம் பாதுகாவலர்களாகச் செயல்படலாம்?

'பாதுகாவலர்' என்பவர், தற்கொலையைத் தடுக்க இயலும் என்று நம்புகிறவர், அதற்காகத் தன்னுடைய நேரத்தையும் உழைப்பையும் வழங்கத் தயாராக உள்ளவர். உதாரணமாக, ஓர் ஆசிரியர், பெற்றோர், வார்டன், பக்கத்து வீட்டுக்காரர், முதலாளி, வாட்ச்மேன், பேருந்து நடத்துநர், கடைக்காரர் அல்லது ஒரு சமூகத் தலைவர் பாதுகாவலராகச் செயல்படலாம். பாதுகாவலராகச் செயல்படும் ஒருவர், தன்னருகே இருக்கிறவர்களைக் கூர்ந்து கவனிக்கவேண்டும், யாராவது மிகவும் மனத்துயரத்துடன் காணப்பட்டால், உடனே எச்சரிக்கைக் கொடியை உயர்த்தவேண்டும், அவர்களுக்கு ஆரம்பகட்ட உணர்வுநிலை ஆதரவை வழங்கவேண்டும், அதன்பிறகு, அவர்களை ஒரு மனநல நிபுணரிடம் அனுப்பவேண்டும். ஒருவர் தற்கொலையைப்பற்றிச் சிந்தித்துக்கொண்டிருக்கிறார் என்று ஒரு பாதுகாவலர் கருதினால், அவரிடம் "இந்த வாழ்க்கையை வாழ்வது அவசியம்தானா என்று எப்போதாவது நினைக்கிறீர்களா?" என்பதுபோன்ற ஒரு கேள்வியைக் கேட்கலாம். இதன்மூலம், அவர்கள் தங்களது தற்கொலை எண்ணங்களைப் பகிர்ந்துகொள்வதற்கான சூழல் ஏற்படும். சாதாரணமாக இருக்கும் ஒருவரிடம் இப்படிக் கேட்டால், அவருக்குள் தற்கொலை எண்ணங்கள் தூண்டப்பட்டுவிடுமோ என்று பலர் பயப்படுகிறார்கள். அதற்கு அவசியமே இல்லை. சொல்லப்போனால், இதுபோன்ற கேள்விகள்தான் ஒருவரை மனம் திறந்து பேசவைக்கும், அவர்கள் மனத்தில் தற்கொலை எண்ணங்கள் இருந்தால், அதைச் சொல்லவைக்கும். பொதுவாக, தற்கொலை எண்ணங்களைக் கொண்டிருக்கும் ஒருவர், அந்த எண்ணங்களுக்காக வெட்கப்பட்டுக்கொண்டுதான் இருப்பார். தன்னைப்பற்றித் தீர்ப்புச் சொல்லாமல், தன்னைப் பலவீனமாக எண்ணாமல் ஒருவர் இதைப்பற்றி விசாரிக்கிறார் என்றால் அவர் நிம்மதியடைவார், தன் மனத்தில் உள்ளதை வெளிப்படையாகப் பேசுவார்.

ஒரு பாதுகாவலர் என்ன செய்யவேண்டும்?

தற்கொலையைப்பற்றிச் சிந்திப்பவர் சொல்பவற்றைப் பொறுமையுடன் கேட்கவேண்டும், அவரை மதிப்போடு நடத்தவேண்டும், அவருடைய உணர்வுகளை அனுதாபத்துடன் அணுகவேண்டும், நம்பிக்கையோடு அவரை அரவணைக்கவேண்டும். அவர் இப்படிதான் என்று தீர்ப்பு வழங்கக்கூடாது, அவர்மீது குற்றம் சாட்டக்கூடாது, அவர் மேலும் அந்நியர்களாக உணரும்படி செய்யக்கூடாது. 'தற்கொலை என்பது பலவீனத்தின் அடையாளம்' என்பதுபோல் பேசக்கூடாது. அவர்மேல் கோபப்படக்கூடாது, அவருடைய பிரச்னைகளை அலட்சியப்படுத்தக்கூடாது. அவருடைய பலங்களில் கவனம் செலுத்தவேண்டும், அவருடைய வாழ்க்கையில் உள்ள நல்ல விஷயங்களைச் சிந்திக்குமாறு ஊக்கப்படுத்தவேண்டும். நெருக்கடி நீடிக்கும்வரை, தற்கொலைக்கு உதவக்கூடிய பொருள்கள் (கூரான பொருள்கள், மருந்துகள், பூச்சிக்கொல்லிகள் போன்றவை) அவர்களுக்குக் கிடைக்காதபடி பார்த்துக்கொள்ளவேண்டும், அவர்களைத் தனியே விடக்கூடாது.

சிறிதளவு பயிற்சிபெற்றால், நீங்களும் பாதுகாவலர் ஆகலாம்.

பத்மாவதி, NCWBயில் உளவியல் செவிலியர், டாக்டர் பிரபா சந்திரா, NIMHANSல் உளவியல் பேராசிரியர்.

தற்கொலைத் தடுப்புக்கான பாதுகாவலர் பயிற்சி நிகழ்வு, ஒருமாதம் விட்டு ஒருமாதம் பெங்களூர் BTM லேஅவுட்டில் உள்ள NIMHANS நல மையத்தில் (NCWB) நடத்தப்படுகிறது.

நீங்கள் பாதுகாவலராகப் பயிற்சி பெற விரும்பினால், இந்தத் தொலைபேசி எண்களில் NCWBஐத் தொடர்புகொள்ளலாம்: 080-26685948 / 9480829670.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org