கோடு எங்கே?

ஆசிரியர்கள் தங்களுடைய மாணவர்களின் நலனுக்குப் பங்களிப்பது முக்கியம். அதேசமயம், அதில் அவர்கள் அளவுக்கதிகமாக ஈடுபட்டுவிடக்கூடாது, மனநல நிபுணரின் உதவி தேவைப்படும் சூழ்நிலைகளில் அவர் கவனமாக ஒதுங்கி நிற்கவேண்டும்.

ஒரு மாணவரைப்பற்றி ஒரு சக ஊழியரிடம் விவாதித்தல்: ஒரு மாணவர் அசாதாரணமாக நடந்துகொள்வதை ஆசிரியர் கவனிக்கிறார், அந்தச் சூழலைத் தான் சரியாகப் புரிந்துகொண்டிருக்கிறோமா என்று உறுதிப்படுத்திக்கொள்ள விரும்புகிறார். ஆகவே, அதே வகுப்பிற்குப் பாடம் சொல்லித்தரும் இன்னோர் ஆசிரியரிடம் அவர் இதைப்பற்றிப் பேச விரும்பலாம். அதுபோன்ற நேரங்களில், அவர் ரகசியமாகச் செயல்படவேண்டும், ரகசியம் காக்கிற சக ஊழியர்களிடம்மட்டுமே இதைப்பற்றிப் பேசவேண்டும். அதேசமயம், ஒரு மாணவர் ஓர் ஆசிரியரிடம் தன்னுடைய பிரச்னையைப் பகிர்ந்துகொள்கிறார் என்றால், அவர் அந்த ஆசிரியர்மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறார் என்று பொருள். ஆகவே, அந்த உரையாடல்பற்றிய விவரங்களை எப்போதும் அவர் மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ளக்கூடாது. ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையை, எப்படிக் கையாள்வது என்று ஆசிரியருக்குப் புரியாவிட்டால், அவர் கல்லூரி ஆலோசகரிடம் பேசலாம்.

ஆசிரியர், மாணவர் இடையே நடைபெறும் எதிர்பாலினச் சிக்கல்களை எப்படிக் கையாள்வது: ஒரு வளாகச்சூழலில், மாணவர்களுடைய பெற்றோரின் கடமையை ஆசிரியர்கள் ஆற்றுகிறார்கள். அவர்கள் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி. ஆகவே, சில நேரங்களில் பெண் ஆசிரியர்களிடம் ஆண் மாணவர்கள் தங்களுடைய கவலைகள், பிரச்னைகளைப் பகிர்ந்துகொள்ளலாம், அபூர்வமாகச் சில சூழ்நிலைகளில் பெண் மாணவிகள் ஆண் ஆசிரியர்களை அணுகி உதவி கேட்கலாம். இது ஒரு பிரச்னை அல்ல. அதேசமயம், ஆசிரியர், மாணவர் இருவருடைய சவுகர்யவுணர்வையும் கருத்தில் கொள்ளவேண்டும். அத்துடன், அந்தக் கல்லூரியில் எதிர்பாலினத்தவரோடு பழகுவதற்காகச் சில கொள்கைகள் அமலில் இருக்கும். அவற்றை ஆசிரியர் அறிந்துவைத்திருக்கவேண்டும்.

ஓர் ஆசிரியர் மாணவர்களுடன் அதிக நேரம் செலவிடுவதை எப்படி அறியலாம்: ஓர் ஆசிரியர் தன்னுடைய மாணவர்கள்மத்தியில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவர எண்ணலாம், அவர்களோடு அக்கறையான உறவை வளர்த்துக்கொள்ள நினைக்கலாம், அதேசமயம் அவர்கள் ஒரு மாணவருடன் அதிகமாக உணர்வு முதலீட்டைச் செய்துவிடக்கூடாது. உதாரணமாக, ஒரு மாணவர் தன்னுடைய பிரச்னைகளையெல்லாம் ஓர் ஆசிரியரிடம் பகிர்ந்துகொண்டு, அதில் நிம்மதி காணலாம், அதன்மூலம், அவரையே சார்ந்திருக்கத் தொடங்கிவிடலாம். ஆசிரியர்கள் தங்களைத்தாங்களே உணர்ந்திருக்கவேண்டும், தங்களுடைய உணர்வு நலனைக் கவனித்துக்கொள்ளவேண்டும். எந்தவொரு சூழ்நிலையிலும்:

  • மாணவர்கள் அவரை அணுகக்கூடியவகையில் இருக்கவேண்டும். அதேசமயம், தனக்குச் சவுகர்யமான நேரத்தை அவர்களிடம் சொல்லிவிடவேண்டும், அந்த நேரத்தில் அவரை அணுகலாம் என்று மாணவர்களுக்குப் புரியவேண்டும்.

  • ஒரு குறிப்பிட்ட மாணவரின் பிரச்னையை எப்படித் தீர்ப்பது என்று ஆசிரியருக்குப் புரியாவிட்டால், அவரை ஓர் ஆலோசகரிடம் அனுப்பவேண்டும்.

  • மாணவரிடம் சொல்லும் விஷயங்களை அடிக்கடி மாற்றக்கூடாது. அவற்றைச் சொல்லாலும் செயலாலும் வெளிப்படுத்தவேண்டும். உதாரணமாக, 'மூன்று மணிக்கு என்னை வந்து பார்' என்று ஓர் ஆசிரியர் சொன்னால், மூன்று மணிக்கு அவர் அந்த மாணவரைச் சந்திக்கத் தயாராக இருக்கவேண்டும்.

  • ஒருவேளை, ஒரு குறிப்பிட்ட மாணவர் தன்னுடைய நேரத்தை, ஆற்றலை அதிகமாக எடுத்துக்கொள்கிறார் என்று ஓர் ஆசிரியர் உணர்ந்தால், தன்னைச் சார்ந்திருக்காமல் அவர் தன்னுடைய பிரச்னைகளைத் தானே கையாள்வதற்கு அவரைப் படிப்படியாகத் தயார்செய்யவேண்டும். அப்படிச் செய்யும்போது, படிப்படியாக அவரிடமிருந்து விலகி வருகிற சுய கட்டுப்பாடும் வேண்டும். அதேநேரம், 'உனக்குத் தேவைப்படும்போது நான் இருப்பேன்' என்று அந்த மாணவருக்கு உறுதி தரவேண்டும்.

ஆசிரியர்கள் ஆலோசகர்கள் இல்லைதான். அதேசமயம், இன்றைய சூழலில் ஆசிரியர்கள் மாணவர்கள்மீது பச்சாதாபம் காட்டவேண்டும், அவர்களைப் புரிந்துகொள்ளவேண்டும்.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org