அறிவாற்றல் பழகுமுறை சிகிச்சை

நாம் என்ன நினைக்கிறோமோ அதுதான் நாம். நம்முடைய எண்ணங்கள்தான் நம்மை உருவாக்குகின்றன. நம்முடைய எண்ணங்களால் நாம் உலகை உருவாக்குகிறோம் : கௌதம புத்தர்

ஒருவருடைய உணர்வு எதிர்வினைகளும், நடவடிக்கைகளும் அவர்களுடைய எண்ணங்கள், நம்பிக்கைகள் மற்றும் தினசரி வாழ்க்கையில் தாங்கள் காணும் நிகழ்வுகளைப்பற்றிய புரிந்துகொள்ளல்கள் ஆகியவற்றால் வலுவாகப் பாதிக்கப்படுகின்றன. ஆகவே, ஒருவர் என்ன சிந்திக்கிறார் என்பது அவர் எப்படி உணர்கிறார் என்பதைத் தீர்மானிக்கிறது, அதன்மூலம் அவர் எப்படி நடந்துகொள்கிறார் என்பதையும் தீர்மானிக்கிறது.

ஆகவே ஒருவர் மனத்துயரில் இருக்கும்போது தங்களைச் சுற்றியுள்ள விஷயங்களை, மனிதர்களை அவர்கள் புரிந்துகொள்ளும் விதமே மாறிவிடும், அது துல்லியமானதாக இருக்காது, அவர்களுடைய எண்ணங்களும் யதார்த்தத்துக்கு பொருந்தாதவையாக ஆகிவிடக்கூடும். இதன்மூலம் அவர்களுடைய நடவடிக்கைகள் மாறுகிறது, இது அவர்கள் தொழில், தனிப்பட்ட வாழ்க்கையை, உறவுகளை பாதிக்கக்கூடும்.

உதாரணமாக மனச்சோர்வு உள்ள ஒருவர் தன்னைப்பற்றியும், பிறரைப்பற்றியும், ஒட்டுமொத்த உலகத்தைப்பற்றியும் தவறான எண்ணங்களை, நம்பிக்கைகளை கொண்டிருக்கிறார். இத்தகைய தவறான நம்பிக்கைகளை திருத்தினால், ஒருவருடைய உணர்வு நிலை முன்னேறும், அதனால் அவர் உலகைப் புரிந்து வைத்திருக்கும் விதமும் மாறும்.

அறிவாற்றல் பழகுமுறை (CBT) என்றால் என்ன?

அறிவாற்றல் பழகுமுறை சிகிச்சை என்பது, மிகவும் ஆராய்ச்சி செய்யப்பட்ட மிகவும் பொதுவாகப் பயன்படுத்தப் படுகிற ஓர் உளவியல் சிகிச்சை ஆகும். இது கட்டமைப்பைக் கொண்ட சிகிச்சை, இலக்கு அடிப்படையிலான அணுகுமுறையைக் கொண்டது, பலவிதமான உணர்வு, நடவடிக்கை மற்றும் உளவியல் பிரச்னைகளுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. பதற்றம், மனச்சோர்வு போன்ற சில பிரச்னைகளுக்கு ஒருவர் CBT எடுத்துக்கொண்டால், அது மருந்துகளுக்கு இணையான பலனைத் தரக்கூடும். பல நேரங்களில் மருந்துகளின் செயல்பாட்டையே இது நிறுத்தக்கூடும். CBT என்பது ஒருவர் சந்திக்கும் பிரச்னைகளுக்குக் காரணமான பொருத்தமற்ற சிந்தனை பாணிகள் மற்றும் நடவடிக்கைகளை அடையாளம் காண்கிறது, அதன்மூலம் அந்தப் பிரச்னைகளைத் தீர்க்க உதவுகிறது. CBT சிகிச்சையை வழங்கும் நிபுணர்கள் பாதிக்கப்பட்டவர்களுடன் இணைந்து பணியாற்றுகிறார்கள், அவர்கள் நேர்விதமான திறன்கள், பழக்கங்களைக் கற்றுக்கொள்ளவும் மீண்டும் நினைவுபடுத்திக்கொள்ளவும் உதவுகிறார்கள், இதன்மூலம் வாழ்க்கையின் பல சூழல்களை அறிவார்ந்த சிந்தனையோடு சந்திக்க இயலுகிறது.

CBT என்பது தொலைநோக்கில் பயன் தரக்கூடிய ஒரு சிகிச்சை. ஒருவர் இதன்மூலம் கற்றுக்கொண்ட விஷயங்களைப் பயன்படுத்தி வாழ்க்கையில் வரக்கூடிய மற்ற பிரச்னைகளையும் தீர்க்க இயலும்.

பல்வேறு உளவியல் மற்றும் மனம்சார்ந்த பிரச்னைகளுக்கு CBT சிகிச்சை

CBTயானது பல்வேறு குறைபாடுகளுக்கு நல்ல சிகிச்சைதரக்கூடியதாக அறியப்படுகிறது. உதாரணமாக

  • உளவியல் குறைபாடுகள், மனச்சோர்வு, பதற்றம், உண்ணுதல் குறைபாடுகள், போதைப்பொருட்களைப் பயன்படுத்துதல், ஆளுமைக்குறைபாடுகள்.
  • குறிப்பு: இருதுருவக்குறைபாடு மற்றும் ஸ்கிஜோஃப்ரெனியா கொண்டவர்களுக்கு மருந்துகளுடன் CBT யும் சிபாரிசு செய்யப்படுகிறது.
  • உளவியல் அம்சங்களைக்கொண்ட மருத்துவப் பிரச்னைகள் - தீவிரமான அல்லது நாள்பட்ட மருத்துவ நிலைகள், தீவிர களைப்புக் குறைபாடு, மாதவிலக்குக்கு முந்தைய குறைபாடு, மூளைக்காயம், உடல்பருமன், அதிர்ச்சி மற்றும் சோமடோபார்ம் குறைபாடுகள்.
  • உளவியல் பிரச்னைகளான, கோபம், பதற்றம், உறவுகளில் பிரச்னைகள், சூதாடுதல் போன்றவை.
  • குழந்தைகளில் பதற்றக் குறைபாடுகள் அல்லது மனச்சோர்வு, நடவடிக்கைப் பிரச்னைகள்.
  • மற்ற பிரச்னைகள் அதாவது மன அழுத்தம், பதற்றம், தன்னம்பிக்கைக்குறைவு, உறக்கப் பிரச்னைகள், துயரம் மற்றும் இழப்பு, பணி சம்பந்தமான பிரச்னைகள் மற்றும் முதுமை காரணமாக வரும் பிரச்னைகள்.

CBTயின் பலன்கள் என்ன?

CBT என்பது பேச்சு அடிப்படையிலான ஒரு சிகிச்சை. இந்தச் சிகிச்சையை வழங்குபவர் பாதிக்கப்பட்டவருடன் பேசி, அவர் அறிவாற்றல், பழகுமுறை உணர்வுகளைக் கற்றுக்கொள்ளும் திறன்களை வளர்க்க உதவுகிறார், இதன்மூலம் அவர் தினசரி வாழ்க்கையின் பிரச்னைகளை அறிவார்ந்த சிந்தனையோடும் தன்மானத்தோடும் அணுகி சமாளிக்க இயலுகிறது.

CBTயின் பலன்கள்:

  • பாதிக்கப்பட்டவர் தங்களுக்குள் ஒளிந்திருக்கிற சிந்தனைகள், எண்ணங்கள் மற்றும் உணர்வுகளை வெளிப்படையாகப் பேசலாம்.
  • CBTயானது பல்வேறு உளவியல் சிகிச்சைகளுடன் இணைந்து பலன்தருகிறது, உதாரணமாக பாதிக்கப்பட்டவருக்கு வழங்கப்படும் அல்லது அவருக்கு வழங்கும் ஆலோசனைப்பேச்சுகள் இவற்றுடன் CBTஐ இணைத்துப் பயன்படுத்தலாம்.
  • இந்தச் சிகிச்சையில், சிகிச்சையை வழங்கும் நிபுணரோடு பாதிக்கப்பட்டவரும் இணைந்து சுறுசுறுப்பாக பணியாற்றும் ஒரு சூழல் நிலவுகிறது, அதனால் அவர்கள் இந்தச் சிகிச்சையை தொடர்ந்து எடுத்துக்கொள்ளவேண்டும் என்று தூண்டப்படுகிறார்கள். இந்தச் சிகிச்சையில் அவர்களுக்கு பலவிதமான பணிகள் தரப்படுகின்றன, அவற்றை அவர்கள் பூர்த்திசெய்யவேண்டும். தாங்கள் கற்றுக்கொண்டுள்ளவற்றை தினசரி வாழ்க்கையில் பயன்படுத்திப் பயிற்சி எடுக்கவேண்டும்.
  • CBT ஆனது இப்படித்தான் செய்யப்படவேண்டும் என்று பிடிவாதமான விதிமுறைகளைக்கொண்டிருப்பதில்லை. ஒவ்வொருவருடைய தேவைக்கேற்ப இதை மாற்றிக்கொள்ளும் நெறிமுறைகள் உண்டு, ஆகவே பாதிக்கப்பட்டவருடைய நோயின் தன்மை, அவர் சிகிச்சைக்கு எப்படி ஒத்துழைக்கிறார், தன்னை மாற்றிக்கொள்கிறார் என்பதைப் பொறுத்து இதனை மாற்றியமைக்கலாம்.
  • பாதிக்கப்பட்டவர் கற்றுக்கொள்கிற விஷயங்களை பல்வேறு வாழ்க்கைத் தருணங்களில் பொருத்திப்பார்க்கிறார். இதனால் சிகிச்சை முடிந்த பிறகும் அது அவருக்குத் தொடர்ந்து பலன் தருகிறது.

CBTயின் இலக்குகள் என்ன?

CBT ஆனது ஒருவரை சுறுசுறுப்புடன் இயங்கச் செய்கிற இலக்கு அடிப்படையிலான சிகிச்சை ஆகும். அதன்மூலம் பாதிக்கப்பட்டவர்கள் பின்வரும் திறன்களைக் கற்றுக்கொள்கிறார்கள்:

  • தங்களுடைய உணர்வுகளை அலசுதல், ஆரோக்கியமான, ஆரோக்கியமற்ற உணர்வுகளைப் பிரித்துக்காணுதல்.
  • தங்களைத் தாங்களே நன்கு உணர்தல், உணர்வுகளைக் கட்டுப்படுத்துதல்.
  • சிதைந்த எண்ணங்கள் மற்றும் புரிந்துகொள்ளல்கள் காரணமாக வலிதரும் உணர்வுகள் எப்படி ஏற்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளுதல்.
  • எதிர்மறையான எண்ணங்களை மாற்றி பகுத்தறிவோடு கூடிய நேர்மறையான எண்ணங்களைப் பெறுவதற்கான அறிவார்ந்த சிந்தனையோடு கூடிய குறிப்பிட்ட உத்திகளைக் கற்றுக்கொள்ளுதல்.
  • மனச்சோர்வை உண்டாக்கும் அறிகுறிகளை குறைப்பதற்காக, இப்போதைய சூழ்நிலையை அலசி இப்போதைய பிரச்னைகளை தீர்க்கக் கற்றுக்கொள்ளுதல்.
  • ஒருவருடைய சிரமங்களுக்கு முக்கிய காரணங்களாக அமைகிற அடிப்படை நம்பிக்கைகளை மாற்றுதல் அதன்மூலம் வருங்காலத்தில் அவர்களுக்கு உணர்வுத்துயர் ஏற்படாதபடி தடுத்தல்.

CBT எப்படி வேலை செய்கிறது?

CBTயின் முக்கிய நோக்கம் பாதிக்கப்பட்டவர் தங்களுடைய ஆரோக்கியமற்ற சிந்தனை பாணிகளை மாற்றி ஆரோக்கியமான நேர்மறையான சிந்தனைகளை ஏற்படுத்திக்கொள்ள உதவுவது.

இதற்காக, சிகிச்சை அளிப்பவர் பாதிக்கப்பட்டவரிடம் பேசி, அவர்கள் தங்களுடைய ஊகங்கள், நம்பிக்கைகள், புரிந்துகொள்ளல்கள் ஆகியவற்றை ஆராயச்செய்கிறார், அத்துடன், இந்த விவரங்களைத் தாங்கள் செயல்படுத்தும் விதத்தைப்பற்றிச் சிந்திக்கவைக்கிறார், இவை எப்படித் தானாக தன்னைப்பற்றிய, உறவைப்பற்றிய, எதிர்காலத்தைப்பற்றிய எதிர்மறை எண்ணங்களாக மாறுகின்றன என்பதை விளக்குகிறார். அறிவார்ந்த சிந்தனைக்குப் பொருந்தாத சிந்தனை பாணிகளை கண்டறிவதிலும் அவை எந்தச் சூழ்நிலைகளில் ஏற்படுகின்றன என்பதையும் நிபுணர் அடையாளம் காண்கிறார். உதாரணமாக மனச்சோர்வு கொண்டவர்கள் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் உள்ள எதிர்மறையான அம்சங்களை மட்டுமே தேர்ந்தெடுக்கக்கூடும். (சிலவற்றை மட்டும் கவனித்தல்). ஒரே ஒரு நிகழ்ச்சியை வைத்து மிகையாகப் பொதுப்படுத்தக்கூடும், ஒரு குறிப்பிட்ட நிகழ்வுக்கு தான்தான் காரணம் என எண்ணிக்கொள்ளக்கூடும், எந்த ஒரு விஷயத்தையும் இப்படி அல்லது அப்படி என இரண்டே வகையாகப் பிரித்துக் குழம்பக்கூடும், தானே மிகையாக விமர்சனம் செய்துகொள்ளக்கூடும். இவற்றையெல்லாம் அடையாளம் காண்பதற்கு நிபுணர் அவர்களுக்கு உதவுவார்.

CBT என்பது ஒரு கட்டமைப்பான நேர வரம்புக்கு உட்பட்ட ஒரு சிகிச்சை ஆகும், அதில் பின்வரும் வியூகங்கள் பயன்படுத்தப்படுகின்றன:

  • முதல் நிலையில் சிகிச்சை வழங்கும் நிபுணர் பாதிக்கப்பட்டவரை முழுமையாக மதிப்பிடுகிறார். அவர்களுடைய பழைய அனுபவங்களைப்பற்றி, மருத்துவ வரலாற்றைப்பற்றி கேட்கிறார் அதன் அடிப்படையில் அவர் எந்தப் பிரச்னைக்கு சிகிச்சை பெற வந்திருக்கிறார்கள் என்ற அடிப்படைத் தன்மையைப் புரிந்துகொள்கிறார்.
  • அதன்பிறகு சிகிச்சை அளிப்பவர் CBT செயல்முறையை பாதிக்கப்பட்டவருக்கு விளக்குகிறார், அது ஏன் பயன்படுத்தப்படுகிறது? எப்படி பயன்படுத்தப்படுகிறது? எப்படி பலன் தரும்? என்றெல்லாம் விளக்குகிறார்.
  • சிகிச்சை வழங்குபவர் இந்தச் சிகிச்சைக்கு எவ்வளவு நாளாகும் என்பதை விளக்குகிறார். இது பல்வேறு காரணிகளைப் பொறுத்து அமையும் என்பதை விளக்குகிறார். உதாரணமாக பிரச்னையின் சிக்கல்தன்மை, அடுத்தடுத்த சந்திப்புகளுக்கு சிகிச்சை வழங்குபவர் நேரம் ஒதுக்க இயலுதல். பாதிக்கப்பட்டவர் சிகிச்சைக்குத் தரும் ஒத்துழைப்பு, சிகிச்சையின் போது அவர் எந்த அளவு முனைப்புடன் பூர்த்தி செய்கிறார் என்பதன் தன்மை.
  • சிகிச்சை அளிப்பவர் பாதிக்கப்பட்டவருக்கு அவருடைய அறிகுறிகளைப்பற்றி விளக்கிச் சொல்கிறார். உதாரணமாக பதற்றத்தின் உளவியல் அடிப்படை என்ன, இதய அதிர்ச்சி போன்ற தீவிர பிரச்னைகளோடு ஒப்பிடும்போது இது எப்படி மாறுபடுகிறது, இதற்கான அறிகுறிகளை மக்கள் எப்படி தப்பாகப் புரிந்துகொள்கிறார்கள் என்பதை எல்லாம் விளக்குகிறார்.
  • சிகிச்சை வழங்குபவர் பாதிக்கப்பட்டவருக்கு தான் உருவாக்கியிருக்கிற சிகிச்சை திட்டத்தைப்பற்றி அவருடன் விவாதிக்கிறார். அதன் இலக்குகள் என்ன அதில் முன்னேறிச்செல்வது எப்படி கண்காணிக்கப்படும் என்பதை எல்லாம் பேசுகிறார்.
  • இந்தச் செயல்முறை பூர்த்தியானவுடன், சிகிச்சை அளிப்பவரும் இணைந்து பணியாற்றுகிறார்கள், தவறான அல்லது எதிர்மறையான சிந்தனை பாணிகளை அடையாளம் காண்கிறார்கள். அத்தகைய சிந்தனை, பாதிக்கப்பட்டவருடைய தினசரி வாழ்க்கையின் நடவடிக்கைகளை எப்படி பாதிக்கிறது என்பதை மதிப்பிடுகிறார்கள்.
  • அவர்கள் இருவரும் சேர்ந்து பிரச்னைகளை அடையாளம் காண்கிறார்கள், இலக்குகளைத் தீர்மானிக்கிறார்கள், மாற்றுத் தீர்வுகளை விவாதிக்கிறார்கள், ஒவ்வொரு மாற்றுத் தீர்விலும் இருக்கக்கூடிய நன்மைகள், அபாயங்களை எடை போடுகிறார்கள், இந்த விவாதத்தின் அடிப்படையில் ஒரு தீர்வைத் தேர்ந்தெடுக்கிறார்கள். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தீர்வை உடனே அமல்படுத்திவிடாமல், பாதிக்கப்பட்டவரும் சிகிச்சை அளிப்பவரும் ஒத்திகைபோல் அதனை முயன்று பார்க்கிறார்கள். உதாரணமாக ஒருவருக்கு அடிக்கடி கோபம் வருகிறது என்றால், எந்தச் சூழ்நிலைகளில் அவர் ஏன் கோபப்படுகிறார் என்பது அலசப்படுகிறது, அந்தச் சூழ்நிலையில் அவர் எப்படி அறிவார்ந்த சிந்தனையுடன் எதிர்வினையளிக்கிறார் என்பது ஆராயப்படுகிறது, கோபத்தைக் கட்டுப்படுத்துவதற்கான உத்திகள் கற்றுத்தரப்படுகிறது. அவற்றால் கோப உணர்வு குறைக்கிறதா என்பது மதிப்பிடப்படுகிறது... இவ்வாறே ஒரு சிகிச்சை கொஞ்சம் கொஞ்சமாக மேம்படுத்தப்படுகிறது.

சிகிச்சையின் போது செய்யப்படும் நடவடிக்கைகள்

  • ஒருவர் CBT சிகிச்சை செய்யும்போது, அவர்களுடைய சிந்தனைகள் தானாக எதிர்மறை சிந்தனைகளாக அமைகிறது என்பது சொல்லித்தரப்படுகிறது.
  • அவற்றை வேறு விதமான சிந்தனைகளாக மாற்றுவது எப்படி, அதாவது ஆக்கபூர்வமான, அறிவார்ந்த சிந்தனை அடிப்படையிலான சிந்தனைகளை உருவாக்கிக்கொள்வதற்கு எப்படி என்று அவர்களுக்குச் சொல்லித்தரப்படுகிறது.
  • தினசரி வாழ்க்கையில் அழுத்தத்தை சமாளிக்கும் விஷயங்களும் அவர்களுக்குக் கற்றுத்தரப்படுகிறது.
  • இதற்காக அவர்கள் ஒரு நாட்குறிப்பை எப்போதும் தங்களுடன் வைத்திருக்கவேண்டும். எந்தெந்த சூழ்நிலையில் தங்களுக்கு எதிர்மறையான எண்ணங்கள் வருகின்றன என்பதை அதில் பதிவு செய்யவேண்டும்.
  • சிகிச்சை வழங்குபவர் அவர்களுக்கு சில பயிற்சிகளையும் வீட்டுப்பாடங்களையும் தருவார், இவற்றை அவர்கள் கற்றுக்கொண்டு தங்கள் தினசரி வாழ்க்கையில் பயிற்சி செய்யவேண்டும்.
  • சிகிச்சை அளிப்பவர் அந்தச் சிகிச்சை பாதிக்கப்பட்டவருக்கு எப்படி பலன் தருகிறது என்பதை அவ்வப்போது மதிப்பிடுவார், அதன் அடிப்படையில் தேவையான மாற்றங்களைச் செய்வார்.

CBT சிகிச்சையை வழங்கும் நிபுணர்கள்

உளவியலாளர்கள், மனநல மருத்துவர்கள், உளவியல் செவிலியர்கள், உளவியல் சமூக ஊழியர் போன்ற மனநல நிபுணர்கள் CBTயில் பயிற்சி பெற்று திறன் மிகுந்த சிகிச்சையாளர்களாகிறார்கள், அவர்கள்தான் இந்தச் சிகிச்சையை வழங்குகிறார்கள். இந்தச் சிகிச்சையை வழங்குகிறவர்களுக்கு சில நன்னெறி கட்டுப்பாடுகள் உண்டு, அவற்றை அவர்கள் கவனமாகப் பின்பற்றவேண்டும்.

CBT எவ்வளவு நாட்கள் நடைபெறும்

அறிவாற்றல் சிகிச்சை என்பது ஒரு குறுகிய கால சிகிச்சை ஆகும். பாதிக்கப்பட்டவர் சந்திக்கும் சிரமம் மற்றும் அவரது வாழ்க்கைச் சூழல்களைப் பொறுத்து இது மாற்றியமைக்கப்படுகிறது. பொரும்பாலான பிரச்னைகளுக்கான CBT சிகிச்சை 5 முதல் 20 வாரங்கள் வரை இருக்கலாம். பாதிக்கப்பட்டவர் எந்த அளவு ஆர்வத்துடன் சிகிச்சையில் பங்கு பெறுகிறார், உரிய பலன்களைப் பெறுவதில் அவர் எந்த அளவு ஆர்வம் காட்டுகிறார் என்பதைப் பொறுத்துதான் அவர் எத்தனை முறை CBT நிபுணரைச் சந்திக்கவேண்டும் என்பது தீர்மானிக்கப்படும்.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org