உறவு முறிவு: வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயமாகலாம்

ஒருவர்மீது மிகுந்த விருப்பம் ஏன் ஏற்படுகிறது? இதை யாராலும் விளக்கமுடியாது. ஒருவர் தன்னுடைய காதலரைப்பற்றிய நல்ல விஷயங்களை அடுக்கலாம், அதனால்தான் நான் அவரை நேசிக்கிறேன் என்று சொல்லலாம், ஆனால், ஆழமாக யோசித்தால், அந்த அன்பு எதனால் ஏற்பட்டது என்று சொல்வது அத்துணை சுலபமில்லை. மனத்துக்குப் பிடித்த ஒருவருடன் நேரம் செலவிடுவது இதமாக இருக்கிறது, பரஸ்பரம் பேசிக்கொள்ளவும் சிரித்துக்கொள்ளவும் பல விஷயங்கள் உள்ளன, பல நேரங்களில் இருவருக்கும் ஒரே இசை, ஒரே புத்தகங்கள், திரைப்படங்கள், மனிதர்களைப் பிடித்திருக்கிறது. ஆக, எல்லாம் நல்லபடி நடக்கிறது, காதலர்கள் மகிழ்ச்சியாக உணர்கிறார்கள். இந்த உறவு வாழ்நாள்முழுக்கத் தொடரும் என்று நம்புகிறார்கள்.

ஆனால், எல்லா உறவுகளும் அப்படித் தொடர்வதில்லை. சில உறவுகள் முறிந்துபோகின்றன. ஒவ்வொரு காதலும் திருமணத்தில் முடிவதில்லை. அத்துடன், எல்லாக் காதலர்களும் திருமணத்தை விரும்பிக் காதலிக்கத்தொடங்குவதில்லை. 'இவரை எனக்குப் பிடிக்கும், இவரோடு நேரம்செலவிடுவது எனக்குப் பிடித்திருக்கிறது' என்கிற எண்ணத்தில்தான் பல காதல்கள் தொடங்குகின்றன. ஆரம்பத்தில் இருவரும் இப்படி உணர்கிறார்கள். பின்னர் திடீரென்று ஒருநாள், அவர்களில் ஒருவர் 'எனக்குக் கொஞ்சம் தனிமை தேவை' என்கிறார். இது ஒரு முறிவின் தொடக்கமாக இருக்கலாம். முதன்முதலாக இந்த முறிவைச் சந்திக்கிற ஒருவர் மிகவும் சோகமாகிவிடுகிறார், மற்ற எல்லாவற்றையும் மறந்துவிட்டு, பழைய காதல் நினைவுகளில் மூழ்குகிறார். நண்பர்கள், குடும்பத்தினர், மதிப்பெண்கள், உணவு, உடற்பயிற்சி: எல்லாமே இரண்டாம்பட்சமாகிவிடுகிறது. உறவு முறிவு தரும் சோகம், விரும்பிய ஒருவருடைய மரணம் தரும் சோகத்துக்கு இணையானது. உறவு இறந்துவிட்டது, அதையெண்ணி இவர்கள் சோகத்தில் மூழ்குகிறார்கள்.

இப்படி நடக்கும் என்பதை அவர்கள் ஏன் முன்கூட்டியே கவனிக்கவில்லை? இதற்கான சான்றுகள் முன்பே தென்பட்டிருக்கும்; இப்படிப்பட்ட உறவு முறிவுகள் ஒருநாளில் நிகழ்ந்துவிடுவதில்லை. ஒருவர் 16 அல்லது 17 வயதில் ஒருவருடன் நேரம் செலவிடத்தொடங்குகிறார் ,இப்போது அவருக்கு வயது 20 அல்லது 21 என்று வைத்துக்கொள்வோம், இந்தக் காலகட்டத்தில் அவர்கள் வேறுபட்ட ஆளுமைகளாகியிருப்பார்கள், ஆரம்பத்தில் அவர்களுக்குமத்தியில் தென்பட்ட பொதுவான விஷயங்கள் இப்போது குறைந்திருக்கும். அல்லது, அவர்கள் இருவரில் ஒருவர் மற்றவரைச் சகித்துக்கொண்டிருந்திருப்பார், தன்னை மாற்றிக்கொண்டிருந்திருப்பார், இதை நெடுங்காலத்துக்குத் தொடர்ந்து செய்யச்செய்ய, அவருக்குள் ஒரு சலிப்பு ஏற்பட்டிருக்கும். அல்லது, அவர்களில் ஒருவர், வேறொரு நபருடன் நேரம்செலவிடுவதை விரும்பத்தொடங்கியிருப்பார். இதன் பொருள், இவருடைய காதல் குறைச்சலானது என்பதல்ல, அவருடைய தேவைகள் மாறிவிட்டன, அவ்வளவுதான்.

ஆகவே, அவர் தன்னுடைய குழப்பத்தை வெளிப்படையாகச் சொல்கிறார், 'எனக்குச் சிந்திக்கக் கொஞ்சம் நேரமும் தனிமையும் தேவை' என்கிறார். அது நியாயமான விஷயம்தான். அதன்பிறகு, காதலர்கள் இருவரும் சந்தித்து வெளிப்படையாகப் பேசவேண்டும், அந்தப் பேச்சின் நிறைவில், அவர்கள் தங்களுடைய உறவை இன்னும் பலமாக்கிக்கொண்டு இன்னொரு தளத்துக்கு நகரலாம், அல்லது, பிரிந்துசெல்லத் தீர்மானிக்கலாம். பிரியும்போது வலி இருக்கும். ஆனால், ஏதாவது ஒன்றை விரும்பும்போது, இந்த ஆபத்துக்கும் தயாராக இருக்கவேண்டும். பிரிவு ஏற்பட்டவுடன், யாருடனும் பேசாமல், எதிலும் ஆர்வம் காட்டாமல் தனியே இருக்கவேண்டும் என்றுதான் தோன்றும். அந்தக் காயம் ஆறுவதற்குச் சிலநாள் ஆகலாம், அதன்பிறகு, வழக்கமான வேலைகளுக்குத் திரும்பிவிடவேண்டும்.

இந்த உலகம் நல்ல மனிதர்களால் ஆனது. அதைக் கவனித்தால், ஆரம்பத்தில் இருந்த சோகம் குறையும், 'இனி எனக்கு எதுவுமே இல்லை, என் உலகமே முடிந்துவிட்டது' என்ற சிந்தனை மாறும். ஓர் உறவை 'நிரந்தரம்' என்று நினைப்பதற்குமுன்னால், ஒருவர் பல நண்பர்களைச் சந்திக்கவேண்டும், அவர்களை நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டும். முக்கியமாக, இந்த உரையாடல்களின் வழியே அவர் தன்னைத்தானே நன்றாகப் புரிந்துகொள்வார், மக்களை நன்கு புரிந்துகொள்வார். இதன்மூலம், திருமணம் போன்ற ஒரு தீவிர உறவுக்குத் தன்னை உட்படுத்திக்கொள்ள அவர் தயாராவார்.

ஒருவர் இப்படி ஓர் உறவு முறிவைச் சந்திக்கிறார், அதனால் மனச் சோர்வுக்கு ஆளாகிறார், உறவு முறிந்து பல மாதங்களுக்குப்பிறகும் கண்ணீரோடு இருக்கிறார் என்றால் என்ன ஆகும்? இது வெறும் சோகமல்ல, கொஞ்சம்கொஞ்சமாக அவரைச் சிதைக்கக்கூடிய விஷயம். இதனால், அவருடைய உடல்நலம், பள்ளிப்பணி, வழக்கமான தினசரிவேலைகளெல்லாம் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும், அவருக்கு மனச்சோர்வு ஏற்படவும் வாய்ப்புண்டு. இதுபோன்றதொரு சூழ்நிலையில், அவருடைய சிறந்த நண்பர்களுக்குக்கூட, அவரை எப்படித் தேற்றுவது என்று புரிவதில்லை. அப்போது, அவர் ஒரு மனநல நிபுணரைச் சந்தித்து உதவிபெறவேண்டியிருக்கலாம், நெடுநாளாக மனச்சோர்வைச் சந்திக்கும் சிலர் தியானத்தின்மூலம் அதிலிருந்து வெளிவரலாம்.

நம் நாட்டில், பெரும்பாலான பெற்றோர் தங்கள் மகன்கள்/மகள்களின் உறவுகளை அங்கீகரிப்பதில்லை. சரியான நேரத்தில் அவர்களாகப் பார்த்து ஒரு மாப்பிள்ளை/பெண்ணைத் தேர்ந்தெடுக்கவேண்டும் என்றே அவர்கள் கருதுகிறார்கள், நிச்சயிக்கப்பட்ட திருமணத்தையே அவர்கள் பெரிதாக எண்ணுகிறார்கள். பல இளைஞர்கள் இதனை ஏற்றுக்கொள்கிறார்கள். காரணம், அவர்களுக்குத் தங்கள் சமூகத்தில் உள்ள மற்ற உறுப்பினர்களைப் பிடித்திருக்கிறது, அவர்களோடு பழகுவதை விரும்புகிறார்கள், தங்கள் பெற்றோர் தங்களுக்கு நல்லதே செய்வார்கள் என்று நம்புகிறார்கள்.

சிலர், 'பணிவாழ்க்கை இலக்குகளை எட்டியபிறகுதான் உறவுகள்' என்றும் தீர்மானிக்கிறார்கள். இது சரிதானா? மற்ற எல்லாருக்கும் காதலன்/காதலி இருக்கிறார்கள் என்பதற்காக ஒருவர் காதலில் ஈடுபட்டால் அது முட்டாள்தனம். அது ஒரு பொய்யான உறவு. அதனால் சோகம்தான் வரும்.

பொதுவாக, உறவுகள் திட்டமிட்டு அமைவதில்லை. இரண்டுபேர் நண்பர்களாகப் பழகத்தொடங்குகிறார்கள், ஒருவரோடு ஒருவர் அதிகநேரம் செலவிடுகிறார்கள், தங்களை ஜோடியாக எண்ணத்தொடங்குகிறார்கள். இதனிடையே என்னவேண்டுமானாலும் நடக்கலாம்: உறவு மேம்படலாம், சிதைந்துவிடலாம், திடீரென்று நின்றுபோகலாம். பெரும்பாலான உறவுமுறிவுகளுக்கு முக்கியக் காரணம், எதார்த்தமில்லாத எதிர்பார்ப்புகள்தான். இரண்டுபேர் ஒருவரையொருவர் நன்றாகப் புரிந்துகொள்ளாமலே காதலிக்கிறார்கள், புரிந்துகொண்டுவிட்டதாக நினைக்கிறார்கள். அட, மற்றவர்களைப் புரிந்துகொள்வது இருக்கட்டும், பலர் தங்களைத் தாங்களே சரியாகப் புரிந்துகொள்வதில்லை. இந்தநிலையில் இன்னொரு சிக்கலான மனிதரிடம் என்ன எதிர்பார்ப்பது என்பது அவர்களுக்கு எப்படித் தெரியும்?

காரணம் எதுவானாலும் சரி, ஆரம்பத்தில் நன்றாகத் தோன்றிய ஓர் உறவு, எதிர்பார்த்தபடி மலராதபோது, முறிவில் சென்று நிற்கிறது. அது ஓர் அனுபவம்மட்டுமே, வாழ்க்கை என்கிற புத்தகத்தில் ஓர் அத்தியாயம், அவ்வளவுதான். அதை வைத்து ஒரு தனிநபருடைய மதிப்பை அளவிடக்கூடாது.

டாக்டர் ஷ்யாமளா வத்ஸா பெங்களூரைச் சேர்ந்த மனநல நிபுணர், இருபது ஆண்டுகளுக்குமேலாக இத்துறையில் பணியாற்றிவருகிறார். நீங்கள் பகிர்ந்துகொள்ள விரும்பும் கருத்துகள், கேள்விகள் எவையேனும் இருந்தால், இந்த மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்: columns@whiteswanfoundation.org

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org