உங்களுடைய விரக்திகளால், உங்கள் குழந்தையின் மனநலம் பாதிக்கப்படுகிறதா?

என்னுடைய அறிமுகக்கட்டுரையில், குழந்தைவளர்ப்புக்கும் மனநலனுக்கும் இடையிலுள்ள இணைப்பைப்பற்றிப் பேசுவதாகச் சொல்லியிருந்தேன். இந்தக் கட்டுரையில், பெற்றோரின் விரக்திகளால் குழந்தையின் மனநலம் எப்படிப் பாதிக்கப்படக்கூடும் என்பதைப்பற்றிப் பார்ப்போம்.

சமீபத்தில், ஒரு வளர்இளம்பருவக் குழந்தை என்னிடம் வந்தது. ஆறாம் வகுப்பு படிக்கும் அந்தக் குழந்தையின் கல்வித்தரம் சரியில்லை என்று அதன் ஆசிரியர் என்னிடம் அனுப்பிவைத்தார். அந்தக் குழந்தையால் எதையும் கவனித்துச் செய்ய இயலுவதில்லை, எளிதில் கவனம்சிதறிவிடுகிறது என்று அந்த ஆசிரியர் தெரிவித்தார். இதுபற்றி அதன் பெற்றோரிடமும் அவர் பேசியிருக்கிறார். அதன்பிறகுதான், பிரச்னை இன்னும் ஆழமானது என்று அவர் புரிந்துகொண்டார். ஆகவே, இந்த இளம் பெண் என்னிடம் வந்தார். நல்லவேளையாக, நாங்கள் மிகவிரைவில் ஒருவருடன் ஒருவர் நன்றாகப் பேசத் தொடங்கிவிட்டோம்.

கொஞ்சம் தோண்டித்துருவியபோது, அந்தப் பெண் தன்னுடைய கால்களில் இருந்த சில தழும்புகளை எனக்குக் காட்டினார். அந்தக் குழந்தையின் தாய், பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பியைக்கொண்டு அவளுக்குச் சூடு போட்டிருக்கிறார். அந்தத் தழும்புகள்தான் அவை. நான் அதிர்ந்துபோனேன். ஓர் ஆலோசகராக நீங்கள் எவ்வளவுதான் அனுபவம் பெற்றிருந்தாலும் சரி, சில சூழ்நிலைகளில் நீங்களே அதிர்ந்துநிற்பீர்கள். அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை இது. என் மகளுக்கும் கிட்டத்தட்ட அதே வயதுதான். எப்படி ஒரு தாயால் தன் மகளிடம் இப்படி நடந்துகொள்ள இயலும் என்று நான் திகைத்தேன்.

இந்தப் பிரச்னையை எப்படித் தீர்ப்பது என்று யோசித்தேன். இதனை உடனே தீர்த்துவிட இயலாது என்று எனக்குப் புரிந்தது. ஒரு நீண்ட போராட்டத்துக்குத் தயாரானேன். முதலாவதாக, அந்தக் குழந்தையின் பெற்றோரைச் சந்தித்துப் பேசத் தீர்மானித்தேன், அப்போதுதான் என்னால் பிரச்னையை முழுமையாகப் புரிந்துகொள்ள இயலும், அல்லது, குறைந்தபட்சம், அவர்கள் இதை எந்த அளவு என்னிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறார்களோ அந்த அளவு புரிந்துகொள்ள இயலும். ஒரு தாய் தன் குழந்தைக்கு இப்படி ஒரு வலியைக் கொடுக்கிறார் என்றால், அதற்கு என்ன காரணமாக இருக்கும்?

பலமுறை அழைத்தபிறகு, அவளுடைய பெற்றோர் என்னைச் சந்திக்க வந்தார்கள். அவர்கள் இருவருமே முழுநேரப் பணியில் இருக்கிறவர்கள். அவர்களுடைய மகள் பள்ளியில் சரியாகப் படிக்கவில்லை, நல்ல மதிப்பெண் வாங்கவில்லை, இதுபற்றி விசாரித்தபோது, அவருக்குக் கற்றல் குறைபாடு இருப்பது தெரியவந்தது. ஆகவே, பள்ளி நிர்வாகம் பெற்றோரை அழைத்துப் பேசியது, ‘உங்கள் குழந்தையை இன்னும் நன்கு கவனித்துச் சொல்லித்தரவேண்டும்’ என்று சொன்னது. பள்ளி நிர்வாகம் அத்துடன் நிற்கவில்லை. மறைமுகமாக, அந்தக் குழந்தையின் தாய் அவளை இன்னும் அதிகம் கவனிக்கவேண்டும் என்று அழுத்தம் தந்தது. இதனால், தாய்க்கு விரக்தி ஏற்பட்டது, குழந்தையைக் கவனிப்பதற்காகத் தனது முழுநேரப் பணியை விட்டார்.

அவருக்கு என்ன விரக்தி? குழந்தைக்காக வேலையை விடுவது ஒருபக்கம், பாலினச் சமநிலைபற்றிய கேள்விகள் இன்னொருபக்கம் (குழந்தைக்கு ஒரு பிரச்னை என்றால், தாய்தான் தன்னுடைய வேலையை விடவேண்டுமா? தந்தை விடக்கூடாதா?); சுய-மதிப்புப் பிரச்னைகள் (வேலைக்குச் செல்கிற ஒருவரை வெளியுலகம் அதிகமாக மதிக்கும், வீட்டிலிருந்து குழந்தைகளை வளர்ப்போரை அவ்வாறு மதிக்காது); தன்னுடைய திருமண உறவுபற்றிய திருப்தியின்மை இன்னொருபக்கம் (அவர் வேலையை விடவேண்டும் என்று அவருடைய கணவர் ஏன் வற்புறுத்தினார்? தன் மனைவிக்கு என்ன தேவை என்று அவருக்கு ஏன் புரியவில்லை? அவர் அதை ஏன் செய்யவில்லை); தன் பெற்றோர், மாமனார், மாமியார்மீது கோபம் ஒருபக்கம் (அவர்கள் வந்து குழந்தையைக் கவனித்துக்கொள்ளலாமல்லவா?)

இத்தனை பிரச்னைகள்! இதற்குமேலும் அவருக்குப் பல விரக்திகள் இருந்திருக்கலாம். அவர் அன்றைக்கு அவ்வளவுதான் பேசினார். அதன்பிறகு, அவர் என்னைச் சந்திக்க வரவில்லை.

இத்தனை விரக்தியும் எங்கே பாய்ந்தது? எந்தத் தவறும் செய்யாத ஒரு 13 வயதுக் குழந்தைமீது பாய்ந்தது. அந்தக் குழந்தைக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. ‘என் நண்பர்களின் பெற்றோர்களெல்லாம் அவர்கள்மீது எவ்வளவு அன்பு செலுத்துகிறார்கள், என் தாய்மட்டும் என்னை ஏன் இப்படி வெறுக்கிறார்?’ என்று புரியாமல் தவித்தது அந்தக் குழந்தை. எந்த நேரத்தில் தன் தாய் தன்மீது பாய்வாரோ என்று புரியாமல் அந்தக் குழந்தை பயத்திலேயே வாழ்ந்தது, வலியோடு வாழ்ந்தது: உணர்வு வலி, உடல் வலி. இதைப்பற்றியெல்லாம் வெளியே யாரிடமாவது சொல்லலாம் என்றால், அதற்கும் வழியில்லை, ‘வீட்டு விஷயங்களை வெளியே பேசக்கூடாது’ என்று சொல்லித்தந்து அவளை வளர்த்திருந்தார்கள். ஆகவே, அவளுடன் பேச யாரும் இல்லை, அவளுடைய சுமை குறையவே இல்லை. தன்னுடைய குடும்பத்துக்குத் தான் ஒரு சாபமாகிவிட்டோம் என்று அவள் நினைத்தாள், தான் எதற்கும் லாயக்கில்லை என்று வருந்தினாள். இந்த நிலையில், அவளால் பள்ளியில் கவனம் செலுத்திப் படிக்க இயலுமா?

நான் அந்தப் பெண்ணை ஓரிருமுறைதான் சந்தித்தேன். அதன்பிறகு, அவளுடைய பெற்றோர் அவளை வேறு பள்ளியில் சேர்த்துவிட்டார்கள். அவர்களுக்குக் குடும்ப சிகிச்சை தேவை என்று நான் பலமுறை சொன்னேன். ஆனால், அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. காரணம், பிரச்னை பள்ளியிடம்தான் இருக்கிறது என்று அவர்கள் நினைத்தார்கள், தங்களிடம் உள்ள பிரச்னையைப் புரிந்துகொள்ளவில்லை!

ஆகவே, அந்தக் குழந்தையைப்பற்றி எனக்குப் பல கேள்விகள் உள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கே கேட்கிறேன்.

ஒருவேளை அந்தத் தாய் தன்னுடைய பிரச்னைகளை அடையாளம் கண்டு, அவற்றை ஏற்றுக்கொண்டு, அவற்றைத் தீர்க்க முனைந்திருந்தால், இந்தச் சூழ்நிலை எப்படி மாறியிருக்கும்? அந்தத் தாய் கொண்ட விரக்தியை நான் தவறு என்று சொல்லமாட்டேன். அவருடைய விரக்தி நியாயமானதுதான். அதேசமயம், அவர் அந்த விரக்தியைக் கவனித்துச் சரிசெய்திருந்தால், அதையெல்லாம் தன் குழந்தைமீது கொட்டியிருக்கமாட்டார். விரக்தியைக் கவனிப்பதன் முதல் படி, அதனை அடையாளம் காண்பது, ஏற்றுக்கொள்வது, என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்வது!

இப்படி அவர் தன்னுடைய சொந்த விரக்திகளைத் தன் குழந்தைமீது கொட்டிக்கொண்டிருந்தால், அந்தக் குழந்தையின் மனநலன், ஆரோக்கியம் என்ன ஆகும்? இதுபற்றி என்னிடம் எந்தப் புள்ளிவிவரங்களும் இல்லை. ஆகவே, ஊகத்தின் அடிப்படையில்தான் நாம் பேசவேண்டும். அவள் வளர்ந்து பெரியவளாகும்போது, மிகவும் குறைந்த சுய-மதிப்போடு இருக்கலாம், அது அவளது தனிப்பட்ட, தொழில்முறை உறவுகளைப் பாதிக்கலாம். அவளால் தன்னுடைய வாழ்க்கையில் வரும் பிற உறவுகளை நம்ப இயலாமல் போகலாம். அவள் தன்னுடைய திறமைக்கேற்ப சாதிக்காமலிருக்கலாம், காரணம், அவள் தனது சவுகர்ய எல்லையிலிருந்து வெளியே செல்ல மிகவும் அவசியமான பாதுகாப்பு வலை அவளுக்கு இருக்காது. அவள் மிகவும் பதற்றமான பெண்ணாக வளரலாம். இன்னும் கொடுமை, அவள் தனக்குப் பிறக்கும் குழந்தைகள்மீது தனது விரக்திகளைக் கொட்டலாம், இதனை ஒரு சுழலாகவே மாற்றிவிடலாம் – காரணம், அவளுக்குத் தெரிந்த குழந்தைவளர்ப்புமுறை இது ஒன்றுதானே.

அநேகமாக அவளுடைய தாய்க்கும் இப்படி ஓர் அனுபவம் இளவயதில் ஏற்பட்டிருக்கலாம், அதை அவள் தன் மகள்மீது காட்டியிருக்கலாம். இந்த பாணியை நாம் எவ்வளவு சீக்கிரம் கண்டறிந்து உடைக்கிறோமோ, அந்த அளவுக்கு நம் குழந்தைகள் நலன் பெறுவார்கள். நமது குழந்தைகளின் மனநலத்தைக் கருத்தில்கொண்டு, நாம் ஓர் உறுதி எடுத்துக்கொள்வோம்: நமது விரக்திகளை நாமே கையாளுவோம், அவற்றை வேறு யாரிடமும் காட்டவேண்டாம். மற்ற யாருக்காக இல்லாவிட்டாலும், நம் குழந்தைகளுக்காக இதைச் செய்வோம். அதற்காக, விரக்தியடையவே கூடாது என்று அர்த்தமில்லை, விரக்தியடைவது தவறல்ல. பல சூழல்கள் நம்மை விரக்திக்குள்ளாக்கலாம், அது இயல்புதான், இயற்கைதான். ஆனால், அந்த விரக்தியை நாம் மனத்தளவில் உணரவேண்டும், அது நம்மை எங்கே கொண்டுசெல்கிறது என்பதை அறியவேண்டும், தேவைப்படும்போது அதைக் கட்டுப்படுத்தவேண்டும்.

இங்கே நான் தந்துள்ள உதாரணம் கொஞ்சம் அதீதமாகத் தோன்றலாம். அது நம்முடைய சூழலுக்குப் பொருந்தாது என்று நாம் நினைக்கலாம். ஆகவே, நாம் இதைக் கவனிக்காமலே இருந்துவிடலாம். ஆமாம், இது அதீதமானதுதான், அதனால்தான் நான் அதை நினைவில் வைத்திருக்கிறேன். சில சமயங்களில் ‘அதீதமான’ விஷயங்கள்தான் நம்மைச் செயல்படத் தூண்டுகின்றன. விரக்திகள் மிகவும் மெலிதான வடிவத்திலும் வரலாம், – கணவனை இழந்த ஒரு தாய், வளர்இளம்பருவத்தில் இருக்கும் தன்னுடைய இரு குழந்தைகளை வளர்த்தபடி வாழ்க்கையை ஓட்டவேண்டியிருக்கலாம்; ஐந்து குழந்தைகளைக்கொண்ட ஒரு தாயின் கணவர் இன்னொரு நாட்டில் இருக்கலாம், அப்போது அந்தத் தாய் எல்லாக் குழந்தைகள்மீதும் சம கவனம் செலுத்தவேண்டியிருக்கலாம், இரண்டாவது மனைவியாக வந்த ஒரு பெண், தன்னுடைய கணவரின் முதல் மனைவிக்குப் பிறந்த குழந்தையை நன்கு படிக்கவைத்துத் தன்னுடைய 'மதிப்பை' நிரூபித்துக்காட்டவேண்டியிருக்கலாம்; இல்லத்தரசியான ஒரு தாயின் எல்லாக் குழந்தைகளும் சுதந்தரமாக வெளியே சென்றபிறகு, அவர் தனது கட்டுப்பாடு போய்விடுமோ, தன் வாழ்க்கைக்கு அர்த்தமில்லாமல்போய்விடுமோ என்று கருதலாம். இப்படிப் பல காரணங்கள்.

விரக்திகள் பல வடிவங்களில் வரலாம் – நாம் அவற்றை அடையாளம் காணவேண்டும், ஏற்றுக்கொள்ளவேண்டும், அவை நம்முடையவைதான் என்று ஒப்புக்கொள்ளவேண்டும். அவற்றை நம் குழந்தைகள்மீது சுமத்தவேண்டாம்.

மௌலிகா ஷர்மா பெங்களூரைச் சேர்ந்த ஆலோசகர். மனநலத்துறையில் பணிபுரிவதற்காகத் தனது கார்ப்பரேட் பணியை விட்டவர். மௌலிகா வொர்க்ப்ளேஸ் ஆப்ஷன்ஸ் என்ற சர்வதேச ஊழியர் நல நிறுவனத்தில் பணிபுரிகிறார், பெங்களூரில் உள்ள தி ரீச் க்ளினிக்கில் ஆலோசனை வழங்குகிறார். இந்தப் பத்தியைப்பற்றி உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால், இந்த மின்னஞ்சலுக்கு எழுதுங்கள்: columns@whiteswanfoundation.org. இந்தப் பத்தி பதினைந்து நாளைக்கு ஒருமுறை பிரசுரிக்கப்படும், அப்போது உங்கள் கேள்விகளுக்குப் பதிலளிக்கப்படும்.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org