சிந்தனை நேர்மை: கல்வியின் நோக்கம்

இன்னொருவருடைய சிந்தனைகளைத் தன்னுடையதாக வெளியே சொல்வது 'கருத்துத்திருட்டு' எனப்படும். உதாரணமாக, ஒருவர் தன் சக மாணவருடைய வீட்டுப்பாடத்தைப் பிரதியெடுக்கலாம், அல்லது, இணையத்தில் கிடைக்கும் விஷயங்களை எடுத்துச் சமர்ப்பிக்கலாம், இவை அனைத்தும் கருத்துத் திருட்டுகளாகும். புரியும்படி சொல்வதென்றால், இவை ஏமாற்றுவேலைகள்.

இவற்றிலிருந்து ஒருவர் வெளியே வருவது எப்படி? ஏமாற்றுவதன் உடனடி நன்மை, வீட்டுப்பாடம் சமர்ப்பிக்கப்பட்டுவிடுகிறது. ஆனால், தொலைநோக்கில் சிந்திக்கிறபோது, இதில் பல பிரச்னைகள் உள்ளன. ஒருமுறை திருடுகிறவர் பலமுறை திருடக்கூடும், இதுவே அவர்களுக்குப் பழக்கமாகிவிடக்கூடும், அவர்களுடைய வயதில் உள்ள மற்றவர்கள் எளிதாகச் செய்கிற விஷயங்களைக்கூட இவர்களால் செய்ய இயலாது, எதற்கும் ஏமாற்றுவேலையில் இறங்குவார்கள், இது அவர்களை நிரந்தரமாகப் பாதிக்கும். ஆரம்பத்தில், 'ஆசிரியரை ஏமாற்றிவிட்டோம்' என்று அவர்கள் மகிழக்கூடும். ஆனால் உண்மையில், அவர்கள் தங்களுடைய முழுத்திறமையைக் காட்டும் ஒரு வாய்ப்பை இழந்துவிட்டார்கள். பின்னர் அவர்கள் கல்லூரிக்குச் செல்லும்போது, இந்தத் திறமையில்லாமல் அவர்கள் சிரமப்படுவார்கள்.

கல்வியின் மிக முக்கியமான நோக்கம், தீவிர சிந்தனையைத் தூண்டுவதுதான். குழந்தைகள் வெறுமனே மனப்பாடம் செய்வதில்லை, 'இது ஏன்?' என்று கேள்வி கேட்கப் பழகுகிறார்கள், பின்னர் அவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் அல்லது வேலைசெய்கிற இடத்தில் இந்தத் திறனைப் பயன்படுத்தலாம்.  அவர்கள் தங்களுடைய சொந்தச் சிந்தனையைப் பயன்படுத்தி வீட்டுப்பாடம் எழுதுகிறார்கள், ஆசிரியர் தரும் பிற பணிகளைச் செய்கிறார்கள்.

உதாரணமாக, பதின்பருவத்தில் உள்ள ஒருவர், ஒவ்வொரு விஷயத்தையும் தர்க்கரீதியில் சிந்திக்கப்பழகினால், அவர் போதைப்பொருள்களோடு விளையாடமாட்டார். ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான ஸ்டீவ் வாஜ்நாய்க் சொன்னது: “நீங்கள் ஒரு போதைப்பொருளை எடுத்துக்கொண்டால், வேலைசெய்வது நீங்கள்மட்டுமல்ல, அந்தப் போதைப்பொருளும் சேர்ந்துதான் உங்களோடு பணியாற்றுகிறது. இல்லையா? என்னுடைய திறமை என்னுடைய பணியின் அடிப்படையில்தான் தீர்மானிக்கப்படவேண்டும், வேறு எந்தப்பொருளும் அதற்கு உதவக்கூடாது”. ஆகவே, அவருக்குப் போதைப்பொருள்கள் தேவைப்படவில்லை. மற்ற குழந்தைகள், 'நீ போதைப்பொருளை எடுத்துக்கொண்டால் உன்னுடைய மனம் விரிவடையும், தேர்வுகளில் நல்ல மதிப்பெண் வாங்குவாய்' என்று சொன்னபோதும், ஸ்டீவ் வாஜ்நாய்க் அதனை ஏற்கவில்லை.

நம்முடைய கல்விமுறையில் (இந்தியாவிலும் பிற இடங்களிலும்), பெற்றோர், குழந்தைகள் இலக்கை மறந்துவிட்டார்கள். ஆகவே, பள்ளிப்பணி என்பது வெறுமனே மதிப்பெண்களைத் துரத்துகிற விளையாட்டாகிவிட்டது, குழந்தைகளுடைய தனிப்பட்ட விவரக்குறிப்பை மேம்படுத்தவேண்டும், அப்போதுதான் அவர்கள் பன்னிரண்டாம் வகுப்பை முடித்தபிறகு நல்ல கல்லூரிக்குச் செல்லமுடியும் என்கிற இலக்கோடுமட்டுமே எல்லாரும் செயல்படுகிறார்கள். இதனால், குழந்தைகள்மீது பெரிய சுமை ஏற்படுகிறது. அவர்கள் எல்லாவற்றையும் சிறப்பாகச் செய்யவேண்டும் என்கிற எதிர்பார்ப்பைச் சமாளிக்க இயலாமல் சிரமப்படுகிறார்கள். ஆகவே, இதுபோன்ற குறுக்குவழிகளை நாடுகிறார்கள். உதாரணமாக, தனக்குத்தரப்பட்ட ஒரு பணியைப் பூர்த்திசெய்ய, இணையத்திலிருந்து விவரங்களைக் கோத்து எழுதிவிடுகிறார்கள்.

ஒருவரைச் செயல்படத்தூண்டுவது எது? அவர் உண்மையிலேயே ஒன்றை விரும்பவேண்டும். இந்த விருப்பவுணர்வு மூளையின் லிம்பிக் அமைப்பு என்ற பகுதியில் தொடங்குகிறது. இந்த அமைப்பானது மூளையின் முன்பகுதிக்குத் துடிப்புகளை அனுப்புகிறது, அங்கேதான் சிந்தனைகள் செயல்முறைப்படுத்தப்படுகின்றன. மூளையின் முன்பகுதி உருவாக்கும் பரவசமான எண்ணங்களின் அடிப்படையில்தான் மக்கள் வெவ்வேறு வேலைகளைச் செய்கிறார்கள். எல்லாரும் ஒரே விஷயத்தில் ஆர்வம் காட்டுவதில்லை. ஆகவே, பள்ளியில் படிக்கும் ஒரு குழந்தை, சிந்திக்காமல் இன்னொருவருடைய எண்ணங்களைப் பிரதியெடுக்கப் பழகிவிட்டால், அது ஒரு தவறான தீர்மானம் ஆகும். காரணம், அவர்களைப்பொறுத்தவரை பிரதியெடுப்பதே இயல்பான வேலையாகிவிடும், சிந்திப்பது அல்ல. இப்படிப்பட்ட மாணவர்கள் சிந்திப்பதே இல்லை, தங்கள் நண்பர்கள் ஒரு குறிப்பிட்ட கல்லூரிக்குச் செல்கிறார்கள் என்பதற்காக அதே கல்லூரியில் சேர்கிறார்கள், பிறகு, அழுத்தம், மனச்சோர்வு அல்லது தோல்வி காரணமாக அதைக் கைவிடுகிறார்கள்.

இளவயதில் ஏற்பட்ட பிரதியெடுக்கும் பழக்கம், அவர்களை எப்போதும் தொடர்ந்துவரக்கூடும். இன்றைக்கு, பலர் மற்றவர்களுடைய வாழ்க்கைமுறையைக்கூடப் பிரதியெடுக்கிறார்கள், அதைப்பற்றிச் சிந்திப்பதே இல்லை. இப்படிப் பிரதியெடுக்கப்பட்ட வாழ்க்கைமுறைகள் அவர்களுக்குப் பொருந்தாமல்போகலாம், இதனால் அவர்களுக்குக் குழப்பம், அழுத்தம், மகிழ்ச்சியின்மை ஏற்படலாம். அதீத பதற்றத்தால், இவர்களுடைய மூளையின் வேதியியல் மாறிப்போகிறது, இவர்களுக்கு மனச்சோர்வுக்கான மருந்துகள் தேவைப்படுகின்றன. பதற்றத்தைக் குறைத்து, இவர்களுடைய உள்மனத்தைக் கண்டறிவதற்காக, இவர்களுக்குப் பல மணி நேரச் சிகிச்சை தேவைப்படுகிறது, காரணம், பல ஆண்டுகளாக இவர்கள் யார்யாரையோ பிரதியெடுத்துத் தங்கள் மனத்தில் சேமித்துவைத்திருக்கிறார்கள், அவற்றை விலக்கி நிஜமான உள்மனத்தைக் கண்டறிவது சிரமம்.

கல்வியின் நோக்கம், குழந்தைகள் தங்களுடைய மனத்தை நம்பவேண்டும், அதன்மூலம் சிந்திக்கவேண்டும், கருத்துகளை உருவாக்கிக்கொள்ளவேண்டும். ஆரம்பத்திலிருந்தே சிந்தனை நேர்மையை வலியுறுத்தவேண்டும், பின்னர் அது அவர்களுடைய வாழ்நாள்முழுக்கத் தொடரும். நேர்மை, தெளிவான சிந்தனை ஆகியவை அவர்களுடைய வளர்இளம்பருவத்திலும், பின்னர் அவர்கள் பெரியவர்களானபிறகும் நன்கு உதவும், அவர்களுக்குள் கொந்தளிப்பும் மனச்சோர்வும் ஏற்படாமல் தடுக்கும்.

டாக்டர் ஷ்யாமளா வத்ஸா பெங்களூரைச் சேர்ந்த மனநல நிபுணர், இருபது ஆண்டுகளுக்குமேலாக இத்துறையில் பணியாற்றிவருகிறார். நீங்கள் பகிர்ந்துகொள்ள விரும்பும் கருத்துகள், கேள்விகள் எவையேனும் இருந்தால், இந்த மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்: columns@whiteswanfoundation.org

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org