மனநலப் பிரச்னைகளுக்கு மருத்துவரின் தொடர்ந்த ஆய்வுகள் அவசியம்

ஆயிஷா சுல்தானாவுக்குப் பதினான்கு வயது. எல்லாரையும்போல் ஒரு சாதாரணமான, மகிழ்ச்சியான வாழ்க்கையை அனுபவித்துக்கொண்டிருந்த பெண் அவர். ஆயிஷா சிறுகுழந்தையாக இருக்கும்போதே அவருடைய தந்தை இறந்துவிட்டார். இப்போது ஆயிஷா தன் தாய், அண்ணனுடன் வசிக்கிறார். அவருக்குப் பள்ளிக்குச் செல்வது மிகவும் பிடித்திருந்தது. மாணவர்கள், ஆசிரியர்கள் எல்லாரும் அவரிடம் நன்கு பழகினார்கள்.

திடீரென்று ஒருநாள் காலை, ஆயிஷா அழத்தொடங்கினார், "எனக்குப் பயமாக இருக்கிறது" என்றார், அதையே திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டு, பள்ளி செல்ல மறுத்துவிட்டார். அந்த நேரத்தில்தான் நான் அவரைச் சந்தித்தேன். அழுது அழுது அவரது முகம் வீங்கியிருந்தது. அவர் ஒரு வேட்டையாடப்பட்ட மிருகத்தைப்போல் தோன்றினார், மிகவும் பயந்திருந்தார், குழம்பியிருந்தார். நாங்கள் பேசத்தொடங்கியதும், அவர் கொஞ்சம் இயல்பானார். அவருடைய பயத்துக்குக் காரணம், அவருக்குள் ஏதோ குரல்கள் கேட்கின்றன, மணியொலிபோல, கிசுகிசுப்புபோல... நிஜத்தில் அப்படி எந்த ஒலியும் இல்லாதபோதுகூட, அவருக்குள் அந்த ஒலிகள் கேட்டன. சில மாதங்களாகவே, அவர் இந்த ஒலிகளை அடிக்கடி கேட்டுக்கொண்டிருந்தார். பொதுவாக, தேர்வுகளுக்குமுன்னால்தான் இந்த ஒலிகள் அதிகம் கேட்டன. ஆனால், அவற்றின் ஒலியளவு மிகுதியாக இல்லை, அல்லது, அவை சட்டென்று நின்றுவிட்டன. ஆகவே, ஆயிஷா பயப்படவில்லை. ஆனால் இன்று காலை, அந்த ஒலி மிக அதிகமாகக் கேட்கத்தொடங்கியது. "என் தலைக்குள் மாறிமாறி மணிகள் ஒலிப்பதுபோல் உணர்ந்தேன்" என்றார் அவர்.

வைபவ், இருபதுகளின் தொடக்கத்தில் உள்ள ஓர் இளைஞர். திடீரென்று ஒருநாள், அவர் தன்னுடைய கைகள் காணாமல்போய்விட்டதைப்போல் உணர்ந்தார். வண்டி ஓட்டும்போது, திடீரென்று கைகள் காணாமல்போய்விடும், ஆகவே அவர் வண்டியை நிறுத்திவிடுவார். நடந்துகொண்டிருக்கும்போது, திடீரென்று தரை நடுங்கத்தொடங்கும், அவர் நடப்பதை நிறுத்திவிடுவார். இதையெல்லாம் பார்த்து அவர் பயந்துபோனார். உடனே ஒரு மருத்துவரைச் சந்தித்தார். ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், 'உங்களிடம் எந்தப் பிரச்னையும் இல்லை' என்றார்கள்.

இதுபோன்ற சூழ்நிலைகளில், அவருக்கு வந்திருக்கும் அறிகுறிகளைக் கட்டுப்படுத்துவதற்கான சிகிச்சை வழங்கப்படும். ஆயிஷா, வைபவ் இருவருக்கும் ஆன்ட்டிசைகோடிக் மருந்துகள் குறைந்த அளவில் வழங்கப்பட்டன. அவை நல்ல பலன் தந்தன. அவர்கள் தங்களுடைய வழக்கமான வாழ்க்கைக்குத் திரும்பினார்கள், தொடர்ந்து மருந்துகளை எடுத்துக்கொண்டார்கள். இவர்களுடைய உடனடி பயத்தைக் கட்டுப்படுத்தியவுடன், தங்களுக்கு என்ன நடந்தது என்று இவர்கள் சிந்திக்கிறார்கள், மருத்துவரால் அவர்களுடைய எண்ணங்களை, பார்வைகளைப் புரிந்துகொள்ள இயலுகிறது, அதன் அடிப்படையில் அவர்களுக்கு என்ன பிரச்னை என்று கண்டறிய இயலுகிறது.

ஆயிஷா இப்போது கல்லூரியில் இரண்டாம்வருடம் படிக்கிறார். அடுத்த நான்கு ஆண்டுகளில், அவருக்கு அவ்வப்போது இந்த அறிகுறிகள் வந்தன, ஆனால், அவை அதிகத் தீவிரமாக இல்லை. அவர் தொடர்ந்து மருந்துகளைச் சாப்பிட்டுவந்தார். இரண்டு ஆண்டுகளுக்குமுன்பாக, ஆயிஷாவுக்குப் பதினெட்டு வயதாகியிருந்தபோது, அவருக்குத் தீவிர மனோநிலை மாற்றங்கள் ஏற்பட்டன, அதற்கான மருந்துகளையும் அவர் எடுத்துக்கொண்டார். சென்றவாரம், ஆயிஷாவின் தாய் என்னைத் தொலைபேசியில் அழைத்தார். ஆயிஷாவுக்கு மீண்டும் தீவிர பயம் வந்துவிட்டதாகவும், அவர் கல்லூரிக்குச் செல்ல மறுப்பதாகவும் சொன்னார். ஆறு வருடங்களாக இல்லாத பிரச்னை, இப்போது மீண்டும் வந்துவிட்டது என்றார்.

வைபவும் தொடர்ந்து மருந்துகளை எடுத்துக்கொண்டார், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை என அடுத்த ஓராண்டுக்கு என்னை வந்து பார்த்தார். அவருடைய விநோதமான அறிகுறிகள் முற்றிலும் நின்றுவிட்டன.  இப்போது அவரிடம் புதிய அறிகுறிகள் காணப்பட்டன, மருத்துவரீதியில் அவரை ஆராய்வது சாத்தியமானது. நிறைவாக, அவருக்கு என்ன பிரச்னை என்று கண்டறியப்பட்டது, அதற்கான மருந்துகள் தரப்பட்டன. கடந்த பத்தாண்டுகளாக, அவர் இந்த மருந்துகளை உட்கொண்டுவருகிறார். சில மனநலப் பிரச்னைகளுக்கு வாழ்நாள்முழுக்க மருந்துகள் தேவைப்படலாம். இடையில் அவர் சில நாள்கள் மருந்து சாப்பிடாமல் இருந்தார். ஆனால், பழைய அறிகுறிகள் திரும்பவும் வந்துவிட்டதால், மறுபடி மருந்து சாப்பிடத் தொடங்கினார். அவருக்குத் திருமணமாகிவிட்டது, ஒரு வெற்றிகரமான தொழிலை நடத்துகிறார், அதாவது, ஓர் இயல்பான வாழ்க்கையை வாழ்கிறார்.

ஆயிஷா, வைபவ் போன்றோரின் ஆரம்ப அறிகுறிகளைத் தொடர்ந்து கண்காணிக்கவேண்டும். அவர்களுடைய ஆரம்ப அறிகுறிகளைமட்டும் வைத்து அவர்களுக்கு என்ன பிரச்னை என்று உறுதியாகச் சொல்ல இயலாது. காரணம், அவர்களுக்குள் என்ன நடக்கிறது என்பது இன்னும் தெளிவாகவில்லை. ஆகவே, ஆரம்பநிலை ஆய்வுகளின் அடிப்படையில் அவர்களுக்கு மருந்துகள் தரப்படுகின்றன, அவை அவர்களுக்கு நல்ல பலன் தருகின்றன, அவர்களுடைய வாழ்க்கை இயல்பாகிறது.

அதன்பிறகு, அவர்களைத் தொடர்ந்து ஆராயவேண்டும், அப்போதுதான் அவர்களுக்கு என்ன பிரச்னை என்பது கொஞ்சம்கொஞ்சமாக விளங்கும். சில நேரங்களில், எல்லா அறிகுறிகளும் சில வாரங்களில் அல்லது சில மாதங்களில் காணாமல் போய்விடும், கூடுதல் சிகிச்சை தேவைப்படாது. ஆனால், பல நேரங்களில் பிரச்னை தொடரும், சிகிச்சையும் தேவைப்படும். ஆயிஷாவைப் பொறுத்தவரை, அவருடைய பிரச்னை நான்கு ஆண்டுகளுக்குக் கட்டுக்குள் இருந்தது, பிறகு புதிய அறிகுறிகள் தோன்றின, பின்னர் இரண்டு ஆண்டுகள் அது கட்டுக்குள் இருந்தது, பிறகு, பிரச்னை மீண்டும் தொடங்கியது. பெரும்பாலான இளைஞர்களின் மனநலப் பிரச்னைகள் இவ்வாறுதான் அமைகின்றன.

ஆகவே, அரைகுறையான விவரங்களின் அடிப்படையில் ஒருவருக்கு இந்தப் பிரச்னைதான் வந்திருக்கிறது என்று தீர்மானிக்கக்கூடாது, அதனால் எந்தப் பலனும் இல்லை, சொல்லப்போனால், அது அவர்களை, அவர்களுடைய குடும்பத்தினரைப் பாதிக்கக்கூடும். அவர்களைத் தொடர்ந்து கவனித்துவரவேண்டும், புதிய அறிகுறிகளை அலசவேண்டும், அதன் அடிப்படையில் அவர்களுக்கு என்ன பிரச்னை என்பதைக் கண்டறியவேண்டும், அதற்கேற்ப சிகிச்சைகளை மாற்றவேண்டும்.

இந்தத் தொடரில், டாக்டர் ஷ்யாமளா வத்ஸா, பதின்பருவ மாற்றங்கள் ஆரம்பநிலை மனநலப் பிரச்னைகளை மறைத்துவிடக்கூடும் என்ற உண்மையை எடுத்துரைக்கிறார். மனநலக் குறைபாட்டின் ஆரம்பநிலைக் குறைபாடுகள், பதின்பருவத்தினரின் வழக்கமான செயல்பாடுகளைப்போல் தோன்றக்கூடும் என்பதை இந்தக் கட்டுரைகளில் காணலாம். இதனால், பல இளைஞர்கள் காரணமில்லாமல் சிரமம் அனுபவிக்கிறார்கள். அவர்களுடைய நண்பர்கள், குடும்பத்தினர் இதனைக் கவனிக்கவேண்டும், யாராவது இயல்பான நிலையிலிருந்து வேறுவிதமாக நடந்துகொண்டால், அதனை அடையாளம் காணவேண்டும், பிரச்னை பெரிதாவதற்குமுன் நிபுணரின் உதவி பெறவேண்டும்.

டாக்டர் ஷ்யாமளா வத்ஸா பெங்களூரைச் சேர்ந்த மனநல நிபுணர், இருபது ஆண்டுகளுக்குமேலாக இத்துறையில் பணியாற்றிவருகிறார். நீங்கள் பகிர்ந்துகொள்ள விரும்பும் கருத்துகள், கேள்விகள் எவையேனும் இருந்தால், இந்த மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்: columns@whiteswanfoundation.org

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org