வாழ்வின் உருவகங்கள்: உளவியலின் புதிய எல்லைகள்

மனித வாழ்க்கைபற்றிய உங்கள் பார்வை என்ன? மூன்று சொற்களில், அல்லது அதைவிடக் குறைவான சொற்களில் சொல்லுங்கள். அது போர்க்களமா? அதிர்ஷ்டக் குலுக்கலா? அல்லது, சதுரங்கம்போன்றதொரு வியூக விளையாட்டா? ஒருவேளை அது ஒரு பயணமோ? பள்ளியோ? அது ஒரு புதிரோ? மர்மக்கதையோ? அது ஒரு விளையாட்டான விஷயமோ? நடனமோ? கொண்டாட்டமோ? கடற்கரையில் நடக்கும் அனுபவமோ? இன்றைக்கு உலகெங்குமுள்ள மக்களிடம் வாழ்க்கையைப்பற்றிக் கேட்டால், இந்த உருவகங்களைப் பயன்படுத்துவார்கள். இதுபோல, நீங்களும் ஓர் உருவகத்தை எண்ணியிருப்பீர்கள், மனித வாழ்க்கை, மனிதனின் ஆளுமை எப்படிப்பட்டது? நாம் இயந்திரங்களா? பூச்செடிகளா? விதையிலிருந்து வரும் மரங்களா? வேறொன்றா? அன்பான உறவுகளைப்பற்றிய உங்கள் உருவகம் என்ன? மகிழ்ச்சியான பாடலா, இணைந்த பயணமா, கொந்தளிக்கும் கடலா? இந்தக் கேள்விகளுக்கு நீங்கள் சொல்லும் பதில்கள்தான் உங்களுடைய தீர்மானமெடுத்தலை, தினசரி நடவடிக்கைகளைத் தீர்மானிக்கும் என்கிறார்கள் உளவியலாளர்கள். ஒருவருடைய மைய அல்லது வேர் உருவாகத்தில் கவனம் செலுத்தி, அதன்மூலம் தனிநபர்கள் மற்றும் தம்பதியரிடையே மாற்றங்களைக் கொண்டுவர இயலும் என்று பலர் நம்புகிறார்கள், இதை அடிப்படையாகக் கொண்டு பல சிகிச்சைகளும் நிகழ்த்தப்படுகின்றன. அந்த அளவுக்கு இந்த வளரும் துறைமீது ஆர்வம் அதிகரித்துள்ளது.

சிறந்த உளவியலாளர்களின் உருவகங்கள்

முக்கியமான உளவியல் சிந்தனைகள் அனைத்தும், ஓர் உருவகத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தோன்றுகிறது. உதாரணமாக, சிக்மண்ட் ஃப்ராய்ட் வாழ்ந்த காலகட்டத்தில் நீராவி எஞ்சின் தொழில்நுட்பம் பிரபலமாக இருந்தது. இன்றைக்குக் கணினிகள் எங்கும் இருப்பதைப்போல, அன்றைக்கு நீராவி எஞ்சின்கள் இருந்தன. இதனால், மனித மனத்தின் 'உபகரண'த்தை விளக்க முனைந்த ஃப்ராய்ட், அதற்கு நீராவி எஞ்சினை உருவகமாகப் பயன்படுத்தினார். அதில் 'மனம்சார்ந்த ஆற்ற'லானது 'மனம்-இயக்க' அமைப்பில் ஓடுகிறது, இதனை உருவாக்கவோ அழிக்கவோ இயலாது என்றார். அடையாளம், தன்முனைப்பு, மிகைத்தன்முனைப்பு என்கிற மூன்று அம்சங்களைக்கொண்ட தனது ஆளுமை மாதிரியை விளக்கும்போது, ஃப்ராய்ட் இன்னோர் உருவகத்தைத் தேர்ந்தெடுத்தார்: அடையாளம் என்பது ஒரு காட்டுக்குதிரைபோல, மனிதனின் தன்முனைப்பு என்பது அதன்மீது அமர்வதற்காக வாழ்நாள்முழுக்கப் போராடும் ஒரு வீரனைப்போல.      

இதுபோல, இன்னும் பல உளவியல் வல்லுநர்கள் வெவ்வேறு உருவகங்களைத் தேர்ந்தெடுத்துள்ளார்கள். அமெரிக்கப் பழக்கவழக்கவியலை உருவாக்கிய ஜான் பி வாட்ஸனும் பி எஃப் ஸ்கின்னெரும் புதிதாகப் பிறந்த குழந்தையைக் 'காலி சிலேட்' என்று வர்ணிக்கவில்லை. ஆனால், அவர்களுடைய பழக்கவழக்க அணுகுமுறையைப் பலரும் அந்த உருவகத்தோடு இணைத்துப் பேசுவார்கள். இரண்டாம் உலகப்போருக்குப்பிறகு, அமெரிக்காவில் மனிதத்தன்மைசார்ந்த உளவியல் பரவியது. அதனைக் கண்டறிந்த கார்ல் ரோஜெர்ஸ் மற்றும் ஆப்ரஹாம் மாஸ்லோ ஆகியோர் புதிய உருவகங்களைத் தேடினார்கள். ரோஜர்ஸ் நம்மைப் பூச்செடிகளுடன் ஒப்பிட்டார். 'செடி வளர்வதற்குக் காற்று, மண், சூரிய ஒளி தேவைப்படுவதுபோல, நமக்கு உளவியல் தேவைகள் உள்ளன' என்றார். மாஸ்லோ மனிதர்களைச் 'சிறு விதையிலிருந்து வளரும் பிரமாண்டமான மரங்கள்' என்றார்.

பின்னர், கணினித்தொழில்நுட்பம் வளர்ந்தபோது, சில உளவியலாளர்கள் கணினியை ஓர் உருவகமாகப் பயன்படுத்தினார்கள்: மனிதர்கள் உண்மையில் சிக்கலான விவரங்களைச் செயல்படுத்தும் கணினி அமைப்புகளைப்போல, அவர்கள் தன்னை உணர்வது உண்மையில் ஒரு மாயைதான் என்றார்கள்.  முதன்முதலாக இவ்வாறு அறிவித்தவர், செயற்கை அறிவு (AI) என்கிற கொள்கையை உருவாக்கியவரான MITயைச் சேர்ந்த தத்துவ அறிஞர் மார்வின் மின்ஸ்கி. இவர் 1988ல் எழுதிய 'மனச் சமூகம்' என்ற புத்தகத்தில், 'மனித மனமானது மைக்ரோசிப்பைப்போன்ற பல பாகங்களின் தொகுப்பு, அந்தப் பாகங்களுக்குத் தனித்தனியே மனம் கிடையாது' என்றார். ஆகவே, நாம் மீண்டும் இயந்திர உருவகத்துக்குத் திரும்புகிறோம்!                                             

வாழ்க்கை உருவகங்கள், ஆளுமை

மனித இயல்புபற்றிய உருவகங்கள் பலவும் வந்துபோகின்றன. ஆனால், சுமார் ஒரு நூற்றாண்டுகாலத்துக்குமுன்பாக, 'ஒவ்வொருவரும் வாழ்க்கையைக் கையாள்வதற்கு ஒரு குறிப்பிட்ட உருவகத்தை வைத்திருக்கிறார்கள்' என்று வாதிட்டார் ஆல்ஃப்ரெட் அட்லெர். அட்லெரைப் பொறுத்தவரை, இந்த வாழ்க்கைத் திட்டமானது நமது குழந்தைப்பருவத்தில் தொடங்குகிறது. ஆறு வயதில் உறுதியாக நிலைபெற்றுவிடுகிறது. வாழ்வின் நிச்சயமற்றதன்மையை நாம் எவ்வாறு அணுகுகிறோம் என்பதை இதுதான் தீர்மானிக்கிறது. இது எங்கே தொடங்குகிறது? அட்லெர், பிற நிபுணர்களைப் பொறுத்தவரை, மனிதனின் வாழ்க்கைத்திட்டமானது அவனுக்குள்ளிருக்கும் உடல்சார்ந்த மற்றும் மனம்சார்ந்த பலங்களிலிருந்தும், குடும்ப உறுப்பினர்கள், பிறருடன் நாம் கொண்டிருக்கும் அனுபவங்களிலிருந்தும் வருகிறது. பொதுவாக, மனிதன் தன்னுடைய வாழ்க்கைத்திட்டத்தை உணர்வதில்லை என்றார் அட்லெர். வெளியே நிகழும் விஷயங்கள் அதனைச் செயலற்றதாக்குவதாகத் தோன்றும்போதுதான் மனிதன் அதைக் கவனிக்கிறான் என்பது அவருடைய கருத்து. அவருடைய மகனான மனநல நிபுணர் குர்ட் அட்லெருடன் நான் பேசினேன். அவர், "இந்தச் சிகிச்சையின் நோக்கம், ஒருவருடைய வாழ்க்கைத்திட்டம் எப்படி, எப்போது தொடங்கியது என்பதை அவரே உணரச்செய்வதுதான்" என்றார். "அதன்பிறகு, அவர் அதனை மாற்றலாம், அதிக மகிழ்ச்சியை அனுபவிக்கலாம்."

அட்லெர், அவரைச்சார்ந்த நிபுணர்களைத்தவிர மற்ற சமூக அறிவியல் நிபுணர்கள் யாரும் பலகாலமாக வாழ்க்கைத்திட்டம், உருவகங்களைப் பொருட்படுத்தவில்லை. ஆனால், 1980ல் இந்த நிலை மாறியது. அப்போதுதான் "நம்மை வாழவைக்கும் உருவகங்கள்" பிரசுரிக்கப்பட்டது. இதனை எழுதியோர், அமெரிக்காவைச் சேர்ந்த அறிவாற்றல் மொழிநிபுணர் ஜார்ஜ் லாகாஃப், தத்துவ அறிஞர் மார்க் ஜான்சன் ஆகியோர். இவர்களுடைய கருத்து, "உருவகங்கள் வெறுமனே கவிதைசார்ந்த சொல் விளையாட்டுகள் இல்லை, அவை மனிதனின் உலகப்பார்வையை, சிந்தனையை, செயல்களைப் பாதிக்கின்றன. எதார்த்தவாழ்க்கையே உருவகங்களால்தான் வரையறுக்கப்படுகிறது." லாகாஃப், ஜான்சன் இருவரும் தங்களுடைய பார்வையை நிரூபிக்கும் அனுபவத் தரவுகளை வழங்கவில்லை. "நேரமும் பணமும் ஒன்றே" என்பதுபோன்ற பிரபலமான பேச்சுகளையே சான்றுகளாகப் பயன்படுத்தினார்கள். அதேசமயம், தன் கருத்தை வலுவாக வெளிப்படுத்திய இந்தப் புத்தகம் பலதுறைசார்ந்த ஆய்வாளர்களிடம் தாக்கத்தை உண்டாக்கியது. தொழில் மேலாண்மை, நிறுவனக் கோட்பாட்டியலில் தொடங்கி, சைக்கோதெரபி, வாழ்க்கையெல்லை உளவியல்வரை இதன் தாக்கங்களைக் காணமுடிந்தது.

உதாரணமாக, 1995ல் ரிச்சர்ட் கோப் முன்வைத்த உருவகக் கோட்பாடு, தனிநபர்கள், தம்பதியருக்கு உருவகங்களின்மூலம் சிகிச்சை அளிக்கலாம் என்று தெரிவித்தது. இந்த அணுகுமுறையில், சிகிச்சை பெறுவோர் தங்களது தனிப்பட்ட வாழ்க்கைகள் மற்றும் உறவுகளை விவரிக்க என்ன அணுகுமுறைகளைப் பயன்படுத்துகிறார்கள் என்பதைச் சிகிச்சையளிப்போர் ஆராய்கிறார்கள். நியூசிலாந்தைச்சேர்ந்த சிகிச்சையாளர் டேவிட் க்ரோவ், "உருவகங்கள் அறிந்த மற்றும் அறியா மனத்திடையே இணைப்பை உருவாக்குகின்றன" என்றார். ஆகவே, "என்னுடைய ஓட்டத்தை ஒரு சுவர் தடுப்பதுபோல் தோன்றுகிறது" என்று ஒருவர் சொன்னால், க்ரோவ் அவரிடம் தொடர்ந்து பல கேள்விகளைக் கேட்கிறார். உதாரணமாக, "அந்தச் சுவர் எதனால் ஆனது? அதன் உயரம் என்ன? அதைக் கட்டியது யார்? அது ஒரே இடத்தில் நிற்கிறதா? அல்லது, நகர்ந்துகொண்டிருக்கிறதா? நீங்கள் எந்தத் திசையில் ஓடுகிறீர்கள்?" இந்தக் கேள்விகளுக்கு ஒருவர் சொல்லும் பதில்களைத் தொகுத்துப்பார்த்தால், அவருடைய உருவகக்களம் புரியும் என்கிறார் க்ரோவ். அதுதான் வளர்ச்சிக்கான பின்னணியை அமைக்கிறது.

உலகெங்கும் உருவக ஆய்வு

தென் அமெரிக்கர்கள்மத்தியில் வாழ்க்கை-உருவகங்களைப்பற்றிய அனுபவத் தரவுகள் அதிகம் இல்லை. ஆகவே, நான் சமீபத்தில் கொலம்பியாவில் இரு ஆய்வுகளை நடத்தினேன். டாக்டர் வில்லியம் காம்ப்டன், கேடலினா அகோஸ்டா ஒராஜ்கோ ஆகியோர் இதில் சக ஆய்வாளர்களாகத் திகழ்ந்தார்கள். இந்த ஆய்வுகள் கல்லூரி மாணவர் சஞ்சிகையில் வெளியிடப்பட்டன. இவை முறையே கல்லூரி மாணவர் தலைவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்களிடையே நிகழ்த்தப்பட்டன. இந்த உருவக ஆய்வானது, மாணவர்களின் அடிப்படை மதிப்புகள், தனிப்பட்ட இலக்குகள் மற்றும் தீர்மானமெடுக்கும் வியூகங்கள் ஆகியவற்றைக் கண்டறிய உதவின. இந்த இரு குழுக்களும், பெரும்பாலும் "வாழ்க்கை ஒரு பயணம்" என்கிற உருவகத்தைதான் பயன்படுத்தினார்கள், "வாழ்க்கை ஒரு சிறைச்சாலை" என்கிற உருவகத்தை அவர்கள் அதிகம் நிராகரித்தார்கள். இரு குழுக்களைச் சேர்ந்த மாணவர்களும் அதிகம் ஏற்றுக்கொண்ட உருவகங்கள் சுறுசுறுப்பானவையாக, நேர்விதமானவையாக, தன்னைச்சார்ந்தவையாக இருந்தன. ஆனால், தலைமைப்பொறுப்பில் இருந்த மாணவர்களுடைய வாழ்க்கை-உருவகங்கள் பிறரையும் உள்ளடக்கிச்செல்வதாக இருந்தன, ஆன்மிகம் சார்ந்தவையாக இருந்தன.

மூப்பியல் என்கிற வளரும் துறையைச் சார்ந்த ஆய்வாளர்களும் உருவகங்களில் கவனம் செலுத்துகிறார்கள். கனடாவில் உள்ள விக்டோரியா பல்கலைக்கழகத்தின் செவிலியர் பள்ளியில், டாக்டர் ரோஸன்னெ ப்யூதினும் அவரது சக ஊழியர்களும் ஓர் ஆய்வை நிகழ்த்தினார்கள். நாள்பட்ட நோய்களுக்காக மருந்துகளை எடுத்துவரும் முதியவர்கள் என்ன உருவகங்களைப் பயன்படுத்துகிறார்கள் என்று இவர்கள் கண்டறிந்தார்கள். இது ஒரு முக்கியமான தலைப்பாகும். காரணம், முதியவர்கள் மருந்தை ஒழுங்காக எடுத்துக்கொள்வது அவசியம், இல்லாவிட்டால் அவர்கள் உயிருக்கே ஆபத்து வரக்கூடும். இவர்களிடம் 'மருந்துகளைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?' என்று கேட்கப்பட்டபோது, அவர்கள் பெரும்பாலும் இந்த உருவகங்களைப் பயன்படுத்தினார்கள்: கைவிலங்குகள், புதிய நம்பிக்கை, வெளிச்சக்தியொன்றை நம்பியிருத்தல், மருத்துவத்துறை சார்ந்தோருடன் பேசப் பயப்படுதல்.

நமது காலத்துக்கான புதிய உருவகங்கள்?

நிறைவாகக் கருத்தில் கொள்ளவேண்டிய ஒரு கேள்வி: இன்றைய நவீன வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் புதிய உருவகங்கள் உருவாகின்றனவா? நிச்சயமாக உருவாகின்றன. 1999-2003ல் மேட்ரிக்ஸ் வரிசைத் திரைப்படங்கள் மூன்று வெளியாகின. இவற்றைப் பார்த்து வியந்த பலர், 'நமது உயர்-தொழில்நுட்ப நாகரிகவாழ்க்கைக்கு இதுவோர் ஆற்றல் வாய்ந்த உருவகத்தை வழங்குகிறது' என்று பாராட்டினார்கள். காரணம், இன்றைய மனிதர்களின் தினசரி வாழ்க்கைமீது இயந்திரங்கள் அதிகம் ஆதிக்கம் செலுத்துகின்றன, எதார்த்தம்பற்றிய நமது பார்வையைக்கூட வடிவமைக்கின்றன. உதாரணமாக, அமெரிக்க வலைப்பதிவாளர் மார்ட்டின் லாஸ் இவ்வாறு எழுதினார்: "மேட்ரிக்ஸ் வரிசைத் திரைப்படங்களை வெறும் புதிய அறிவியல் புனைகதை/தற்காப்புக்கலை/அடிதடித் திரைப்படங்கள் என்று எண்ணிவிடக்கூடாது. அது நமது தனித்தனி மற்றும் ஒட்டுமொத்த உணர்வின்மையின் நவீன உருவகம். அநேகமாக அவ்வாறு எண்ணிதான் அது உருவாக்கப்பட்டிருக்கும் என்று எண்ணுகிறேன்."

பல சமூக ஆய்வாளர்கள், இன்றைய வாழ்க்கைக்கு இணையத்தை உருவகமாக்கலாம் என்கிறார்கள். அதாவது, தொடர்ந்த, முடியாத பயணம்தான் இன்றைய வாழ்க்கை. நாம் எல்லாரும் பயணிகள், ஓர் இணையத்தளத்திலிருந்து இன்னோர் இணையத்தளத்துக்குச்செல்கிறோம், அல்லது, ஓர் இணைய உறவிலிருந்து இன்னோர் இணைய உறவுக்குச் செல்கிறோம். நமக்கு 'வீடு' என்கிற உணர்வோ, மையமான ஓர் அடையாளமோ உண்மையில் இல்லை. இதை எல்லாரும் ஏற்றுக்கொள்வார்களா என்பது தெரியாது. ஆனால், ஒரு விஷயம் நிச்சயம்: உளவியல் இத்தனை ஆண்டுகளாக உருவகங்களை நேசித்துவந்துள்ளது, ஆகவே, புதிய உருவகங்கள் நிச்சயம் வரும். குறுகியகாலத்துக்கோ நீண்டகாலத்துக்கோ உங்களுடைய வாழ்க்கை உருவகங்கள் உங்களைப் பிரதிபலிக்கும், நீங்கள் எங்கே செல்கிறீர்கள் என்பதைக் காட்டும்.

டாக்டர் எட்வர்ட் ஹாஃப்மன் நியூ யார்க் நகரத்தில் உள்ள யெஷிவா பல்கலைக்கழகத்தில் கூடுதல் இணை உளவியல் பேராசிரியர். உரிமம்பெற்ற மருத்துவ உளவியலாளரான இவர், தனிச்சேவை புரிந்துவருகிறார். உளவியல் மற்றும் அதுதொடர்பான துறைகளில் 25க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். டாக்டர் ஹாஃப்மன் சமீபத்தில் டாக்டர் வில்லியம் காம்ப்டனுடன் இணைந்து நேர்வித உளவியல்: மகிழ்ச்சி, மலர்ச்சியின் அறிவியல் என்ற நூலை எழுதியுள்ளார். இந்திய நேர்வித உளவியல் சஞ்சிகை மற்றும் மனிதாபிமான உளவியல் சஞ்சிகையின் ஆசிரியர் குழுக்களில் பணியாற்றுகிறார். நீங்கள் அவரைத் தொடர்புகொள்ள இந்த மின்னஞ்சலைப் பயன்படுத்தலாம்: columns@whiteswanfoundation.org

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org