பத்திகள்

ஆரோக்கிய உள்ளம்

டாக்டர் எட்வர்ட் ஹாஃப்மன்
எழுச்சியை உண்டாக்கக்கூடிய அனுபவங்கள்
டாக்டர் எட்வர்ட் ஹாஃப்மன்

காதரின் மன்ஸ்ஃபீல்டின் பிரபலமான சிறுகதையொன்று, பேரின்பம். அந்தக் கதையில் வரும் ஒரு மேற்கோள், "உங்கள் வயது 30. உங்கள் தெருவில் நடந்துகொண்டிருக்கிறீர்கள். தெரு முனையில் திரும்புகிறீர்கள், திடீரென்று ஓர் இன்ப உணர்வு, அற்புதமான பேரின்பம் உங்களை மூழ்கடிக்கிறது. அந்தப் பிற்பகல் வேளையின் ஒரு பிரகாசமான துண்டைத் திடீரென்று நீங்கள் விழுங்கிவிட்டதுபோல் உணர்வீர்கள். அந்தச் சூழ்நிலையில் உங்களால் என்ன செய்யமுடியும்?" இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சேர்ந்த பிரிட்டிஷ் எழுத்தாளர் காதரின் மன்ஸ்ஃபீல்ட். இதை எழுதியபோது அவருக்கு வயது 30தான் என்பது தற்செயலல்ல. இந்தக் கதையை எழுதியபிறகு, அவர் நான்கு ஆண்டுகள்தான் உயிர்வாழ்ந்தார். ஒரு நாள்பட்ட நோயால் அவர் உயிரிழந்தார். எனினும், அவருடைய வாழ்க்கை பரவசமான கணங்களால் நிரம்பித் துடிதுடிப்பாக இருந்தது. இதுபோன்ற பரவசமான கணங்கள் நமது உணர்வு நலனுக்கு, ஏன் உடல்நலனுக்கும்தான் எந்த அளவு முக்கியமானவை என்பதைக் கண்டறிவதற்கான அறிவியல் தேடலில் ஈடுபட்டார் ஆபிரஹாம் மாஸ்லௌ. ஒருவேளை மன்ஸ்ஃபீல்ட் இதைப்பற்றி அறிந்திருந்தால், இந்த ஆய்வை அவர் பாராட்டியிருக்கக்கூடும்.

மாஸ்லௌ இவற்றைச் சிகர அனுபவங்கள் என்றார். 1940களின் முற்பகுதியில் தொடங்கி அவர் உணர்வுரீதியில் ஆரோக்கியமான, அதிகம் சாதிக்கிற மனிதர்களை ஆராய்ந்துவந்தார். இவர்களை அவர் பின்னர் "சுய இயல்பாக்கம் கொண்டவர்கள்" என்று அழைத்தார். இவர்களுடன் நிகழ்த்திய ஆய்வுகளின் அடிப்படையில்தான் சிகர அனுபவங்கள் தோன்றின. அப்போது மாஸ்லௌ நியூ யார்க் நகரத்தில் ஓர் இளம் பேராசிரியராக இருந்தார். தன்னுடைய ஆராய்ச்சி புரட்சிகரமானது என்பதை அவர் உணர்ந்துகொண்டார். ஏனெனில், அதுவரை உளவியல் என்பது பெரும்பாலும் மனநலப் பிரச்னை கொண்டோர் அல்லது சராசரி மனிதர்களின் செயல்பாடுகளில்தான் கவனம் செலுத்திவந்தது.  இதுபற்றி மாஸ்லௌ பின்னர் குறிப்பிடுகையில், "ஒரு மனிதனால் எவ்வளவு வேகமாக ஓட இயலும் என்பதை நாம் அறிய விரும்பினால், மக்கள் தொகையில் ஒரு பகுதியினரைத் தேர்ந்தெடுத்து, அவர்களுடைய வேகத்தின் சராசரியைக் கணக்கிட்டால் போதாது" என்றார். "அதற்குப்பதிலாக, நாம் ஒலிம்பிக்ஸில் தங்கப் பதக்கம் வென்றவர்களை ஆராயவேண்டும், அவர்களால் எந்த அளவு வேகமாக ஓடமுடியும் என்று பார்க்கவேண்டும்."

மாஸ்லௌ பெரிய சாதனையாளர்களைப் பேட்டிகாணும்போது, அவர்கள் தங்களுடைய தினசரி வாழ்க்கையில் அடிக்கடி மிகுந்த மகிழ்ச்சியையும் முழுமையுணர்வையும் அனுபவித்ததாகச் சொன்னார்கள். அதைவிடச் சுவாரஸ்யமான விஷயம், அத்தகைய கணங்களை விவரிக்க அவர்கள் பயன்படுத்திய சொற்களில் பல, சரித்திரத்தின் சிறந்த ஆன்மிகவாதிகள் மற்றும் முனிவர்களின் அனுபவங்களை ஒத்திருந்தன. சமய மரபைப்பற்றி மாஸ்லௌவுக்கு நெடுநாளாகச் சந்தேகம் இருந்தது. ஆகவே, இந்த முடிவுகள் அவருக்குக் குழப்பத்தைத் தந்தன. அதேசமயம், அவரால் அறிவியல் சான்றைப் புறக்கணிக்க இயலாது. மெதுவாக, அவர் வெவ்வேறுவிதமான மனிதர்களின் வாழ்க்கையிலிருந்து தரவுகளைத் திரட்டினார், வெவ்வேறு துறைகளில் பெரிய வெற்றியடைந்த ஆண்கள், பெண்களை விரிவாகப் பேட்டியெடுத்தார், கல்லூரி மாணவர்களிடையே கணக்கெடுப்புகளை நடத்தினார்... நிறைவாக, அவர் தன்னுடைய கண்டுபிடிப்புகளை அறிவியல் உலகிடம் பகிர்ந்துகொள்ளத் தயாராகிவிட்டார். அவருடைய ஆய்வுக்கட்டுரையானது, 1956ம் ஆண்டு அமெரிக்க உளவியல் அமைப்பு மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டது. இதில் "மனித இயல்பின் உயர்ந்த எட்டல்கள்" மற்றும் சிகர அனுபவங்கள் இடையிலான தொடர்பு பேசப்பட்டது. இதில் கிட்டத்தட்ட 20 உயர்ந்த அனுபவங்களின் சிறப்பம்சங்கள் விவரிக்கப்பட்டிருந்தன. உதாரணமாக, மிகுந்த மகிழ்ச்சி, பிரமிப்புணர்வு, நேரம், இடம் புரியாத தாற்காலிகக் குழப்பம், முழுமையாகப் பயமில்லாத உணர்வு, பிரபஞ்சத்தின் ஆடம்பரத்துக்குமுன்னால் தற்காப்புணர்வு போன்றவை.

அநேகமாக இந்த ஆய்வுக்கட்டுரையின் மிக முக்கியமான அம்சம், சிகர அனுபவங்கள் பெரும்பாலும் ஆழமான, மாற்றத்தை உண்டாக்கக்கூடிய தாக்கங்களைத் தந்துசெல்கின்றன என்று குறிப்பிட்டார் மாஸ்லௌ. இதுபற்றி அவர் தெரிவித்த கருத்து, பொதுவாகவே "அந்த நபர் வாழ்க்கை மதிப்புமிக்கது என்று உணர்கிறார், அது வழக்கமாக மங்கிப்போய், சாதாரணமாக, வலி மிகுந்ததாக, அல்லது, மனநிறைவற்றதாக இருந்தாலும் இப்போது அவர் அதன்மீது மதிப்பு வைக்கிறார், காரணம், அழகும், உண்மையும் பொருளுள்ளதன்மையும் உண்டு என்பதை அவர் கண்டுவிட்டார்." பிந்தைய ஆண்டுகளில் மாஸ்லௌ இதுபற்றிப் பேசும்போது, மனச்சோர்வு, மதுப்பழக்கம் மற்றும் போதைமருந்துப்பழக்கம் உள்ளவர்கள் பலர் அத்தகைய அருமையான கணங்களுக்காகப் "பட்டினி கிடக்கிறார்கள்" என்று ஊகித்தார், போதைமருந்துகளைப் பயன்படுத்தினால் சிகர அனுபவத்தை அடையலாம் என்ற தவறான நம்பிக்கையால் அதில் ஈடுபடுகிறார்கள் என்றார். ஆகவே, அவர் எழுதிய தாக்கம் மிகுந்த புத்தகமான மதங்கள், மதிப்புகள் மற்றும் சிகர அனுபவங்கள் என்ற நூலில் மாஸ்லௌ கவித்துவமாக இப்படிக் குறிப்பிட்டார், "சிகர அனுபவங்களின் ஆற்றலானது, வாழ்க்கைபற்றிய ஒருவருடைய மனப்போக்கை நிரந்தரமாகப் பாதிக்கக்கூடும். ஒரே ஒருமுறை சொர்க்கத்தைப் பார்த்துவிட்டால் போதும், அது இருக்கிறது என்பது உறுதியாகிவிடும். அதன்பிறகு அதை அனுபவிக்காவிட்டால்கூடப் பரவாயில்லை."

கடந்த பத்தாண்டுகளில் என் சக ஊழியர்களும் நானும் உலகெங்கும் இளமையான மற்றும் மத்திய வயதுச் சிகர அனுபவங்களை ஆராய்ந்துள்ளோம். ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு மதத்திலும்... இந்தியா தொடங்கி ஜப்பான்வரை, பிரேசில் தொடங்கி சிலிவரை... பிறருடனான உறவுகளில் மகிழ்ச்சியைக் கொண்டுவருகிறவர்கள்தான் அதிகம். இதன் பொருள், நாம் நம்முடைய அன்புக்குரியவர்கள், முக்கியமாகக் குடும்ப உறுப்பினர்களோடு இருக்கும்போதுதான் நமக்கு மறக்க இயலாத மகிழ்ச்சிக் கணங்கள் கிடைக்கிற வாய்ப்பு அதிகம். சில நேரங்களில் சிகரங்கள் இவைதொடர்பான நிகழ்ச்சிகளோடும் தொடர்புபடுத்தப்படுகின்றன: அழகியல் மகிழ்ச்சி, இயற்கை, வெளிச் சாதனை, மதச் செயல்பாடு, திறனில் சிறந்து விளங்குதல். சமீபத்தில் டாக்டர் கரிமா ஶ்ரீவத்ஸவா மற்றும் டாக்டர் சோனியா கபூர் ஆகியோருடன் நான் ஓர் ஆய்வை நடத்தினேன். இது நேர்வித உளவியலுக்கான இந்திய சஞ்சிகையில் பதிப்பிக்கப்பட்டது. இந்த ஆய்வில் நாங்கள் இந்தியாவின் மதிப்புமிகுந்த மருத்துவப் பல்கலைக்கழகம் ஒன்றில் செவிலியர் பயிற்சி பெற்றுக்கொண்டிருந்த மாணவர்களிடையே இளமைத்தன்மை கொண்ட சிகர அனுபவங்களைப்பற்றி விசாரித்தோம். அப்போது நாங்கள் கண்டறிந்த விஷயம், வெளிச்சாதனைகளோடு தொடர்புடைய சிகரங்கள் மிகப் பொதுவாகக் காணப்படுகின்றன. அதன்பிறகு, பிறரோடு பழகும் மகிழ்ச்சி, வளர்ச்சி மைல்கல் மற்றும் ஒரு பொருளை/பரிசைப் பெறுதல் ஆகியவை வருகின்றன. எங்கள் பார்வையில், இந்தக் கண்டுபிடிப்புகளை வைத்து இந்தியச் செவிலியர் கல்வியைச் சிறப்பாக்கலாம். அதற்கான முக்கியத் தாக்கங்களை இந்தக் கண்டுபிடிப்புகள் கொண்டிருக்கின்றன.

பீடபூமி அனுபவங்கள்

பின்னாள்களில், தினசரி வாழ்க்கையில் காணப்படுகிற இன்னொரு வகையான உணர்வு எழுச்சியில் ஆர்வம்கொண்டார் மாஸ்லௌ. இந்த ஆய்வு பெரும்பாலும் அவருடைய சொந்த மனநிலைகள் மற்றும் அவருடைய சகமனிதர்களுடன் நிகழ்த்தப்பட்ட பேட்டிகளின் அடிப்படையில் நடந்தது. இதன் அடிப்படையில் அவர் "பீடபூமி அனுபவங்கள்" என்ற கருத்தை உருவாக்கினார். இவற்றை முக்கியமாக வாழ்வின் மத்தியில் இருக்கும் நிலை, அல்லது முதுமையுடன் அவர் இணைத்தார். மாஸ்லௌ “பீடபூமி அனுபவங்கள்” என்பதை இவ்வாறு விவரித்தார்: அருமையான மன அமைதி, உள் அமைதியைத் தரும் நீண்ட காலகட்டங்கள். இவை பல மணிநேரம், பல நாள், அதற்குமேல்கூட நீடிக்கக்கூடும். உதாரணமாக, ஆண்களும் பெண்களும் இந்தப் “பீடபூமி”யை விவரிக்கப் பயன்படுத்திய பொதுவான சொற்கள்: மென்மை, அமைதி, அமைதியான மகிழ்ச்சி... இந்தக் கணங்கள் அதீத ஆற்றல்கொண்ட களிப்புகளாக இல்லை. மாஸ்லௌவுக்கும் அத்தகைய கணங்கள் வந்ததுண்டு. உதாரணமாக, தன் பேத்தி ஜீனியுடன் மதியப்பொழுதுகளைச் செலவிடும்போது, அல்லது, கடலை வேடிக்கைபார்க்கும்போது. சிகர அனுபவங்களில் இருக்கும் உணர்வு/உடல்சார்ந்த தீவிரம் “பீடபூமி”களில் இல்லை என்றார் மாஸ்லௌ. அதேசமயம், மனித உடலுக்கு வயதாக வயதாக, அது உயிரியல்ரீதியில் அதிகம் பொருந்திப்போகிறது என உணர்ந்தார்.

தனிப்பட்ட வளர்ச்சிக்கான ஓர் ஒத்திசைந்த திட்டத்தை மாஸ்லௌ உருவாக்கவில்லை. ஆனால், நமது தினசரி வாழ்க்கையில் “பீடபூமி”களை அதிகரித்தால் நம் எல்லாருக்கும் நன்மை இருக்கும் என்று அவர் நம்பினார். இதைச் செய்ய ஒரு வழி, உலகைப் புதிதாகப் பார்ப்பது. தினசரி வேலைகளாக, வழக்கமானவையாகத் தோன்றும் விஷயங்களைப்பற்றிய நம் பார்வையைப் புதுப்பித்துக்கொள்வது. “பீடபூமி” அனுபவங்களின்போது தங்களைச்சுற்றியிருக்கிற எல்லாமே புனிதமானவையாக, தெய்விக வெளிப்பாடுகளாகத் தோன்றியதாகச் சிலர் சொன்னார்கள். 1968ல் மாஸ்லௌவுக்கு ஒரு பெரிய இதய அதிர்ச்சி வந்தது. அதில் அவர் உயிர்பிழைத்துவிட்டார். ஆனால், அதன்பிறகு, அவருடைய உணர்வுநிலை இப்படி மாறிவிட்டதை அவர் கண்டார். ஒரு பத்திரிகை ஆசிரியருக்கு அவர் வழங்கிய பேட்டியில், இதைப்பற்றித் தெளிவாகப் பேசியுள்ளார்:

          ”நான் எளிதில் இறந்திருக்கக்கூடும், ஆகவே, இப்போதைய என்னுடைய வாழ்க்கை, ஒரு போனஸ்போல... ஆகவே, நான் ஏற்கெனவே இறந்துவிட்டதுபோல் எண்ணிக்கொண்டு வாழலாமே. இறப்புக்குப்பிந்தைய இந்த வாழ்க்கையின் ஒரு மிக முக்கியமான அம்சம், எல்லாமே இருமடங்கு விலைமதிப்புமிக்கதாகிவிடுகிறது... பூக்கள், குழந்தைகள், அழகிய பொருள்கள்... வாழ்தல், நடத்தல், மூச்சுவிடுதல், சாப்பிடுதல், நண்பர்களோடு நேரம் செலவிடுதல், அரட்டையடித்தல்... எல்லாமே பெரிதாகத் தோன்றுகிறது. எல்லாமே முன்பைவிட அழகாகத் தோன்றுகிறது. அதிகத் தீவிரமான அற்புத உணர்வு ஏற்படுகிறது.

வழிநடத்தப்படும் செயல்பாடு

உங்கள் வாழ்க்கையில் ஒரு சிகர அனுபவத்தைக் குறிப்பிடுங்கள் - அது சென்ற ஆண்டில் நிகழ்ந்திருந்தால் நல்லது. அதுபற்றி இந்தக் கேள்விகளுக்குப் பதிலளியுங்கள்: அப்போது உங்களோடு யார் இருந்தார்கள்? அல்லது, நீங்கள் தனியே இருந்தீர்களா? மிகுந்த மகிழ்ச்சியான இந்தக் கணத்தைத் “தூண்டியது” எது? வாழ்க்கைபற்றிய உங்களுடைய பார்வையில் அது எத்தகைய தாக்கத்தை உண்டாக்கியது? அத்தகைய அருமையான, எழுச்சியை உண்டாக்கக்கூடிய அனுபவங்களை அதிகம் பெறுவதற்கு நீங்கள் என்ன செய்யலாம்?

டாக்டர் எட்வர்ட் ஹாஃப்மன், நியூ யார்க் நகரத்தில் உள்ள யெஷிவா பல்கலைக்கழகத்தில் உளவியல் கூடுதல் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிகிறார். டாக்டர் ஹாஃப்மனின் சமீபத்திய புத்தகம், மகிழ்ச்சிக்கான பாதைகள்: தினமும் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியைச் சேர்க்க 50 வழிகள் உளவியல், அதுதொடர்பான துறைகளில் அவர் 20க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்/தொகுத்துள்ளார். டாக்டர் ஹாஃப்மன் தன்னுடைய மனைவி, இரு குழந்தைகளுடன் நியூ யார்க் நகரத்தில் வசிக்கிறார். அவருடைய ஓய்வுநேர ஆர்வங்கள், புல்லாங்குழல் வாசித்தல் மற்றும் நீந்துதல்.