கவனித்துக்கொள்வோரின் சுமையைப் புரிந்துகொள்ளவேண்டும்

கவனித்துக்கொள்வோரின் சுமையைப் புரிந்துகொள்ளவேண்டும்

என்னுடைய முந்தைய கட்டுரையில், கவனித்துக்கொள்ளுதலால் உடல்நலத்தில் ஏற்படும் தாக்கத்தைப்பற்றிப் பார்த்தோம், இப்போது இன்னொரு முக்கியமான பிரச்னையைப்பற்றிப் பேசுவோம்: கவனித்துக்கொள்வோரின் மனநலம். எங்களுடைய சமூகப்பணிக்காக, கவனித்துக்கொள்வோர் பலரை நாங்கள் சந்திக்கிறோம். அப்போது, அவர்களில் பலரும் மன அழுத்தம், பதற்றம் அல்லது சமூகத்திலிருந்து விலகியிருத்தல், மோசமான மனநலத்தை அனுபவித்தல் போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதற்குக் காரணம், கவனித்துக்கொள்ளுதல்பற்றிய உடனடிக் கவலைகள், அல்லது, நீண்டகால விளைவுகள்.

இன்னொருவரைக் கவனித்துக்கொள்வது மிகுந்த உழைப்பைக்கோரும் ஒரு பணி. அந்தப் பணியைச் செய்கிற எல்லாரும் அவ்வப்போது திகைப்பில் மூழ்குவது இயல்புதான். இந்த உணர்வுகளை எண்ணி அவர்கள் கூச்சப்படக்கூடாது. கவனித்துக்கொள்வோரிடம் மற்றவர்கள் பலவிதமாகப் பேசுவார்கள். உதாரணமாக, "நீங்கள் ஒரு தேவதைதான். எப்படிதான் இந்த அளவு அக்கறையாக இவரைக் கவனித்துக்கொள்கிறீர்களோ!" என்பார்கள், அல்லது, "சிறப்புப் பெற்றோருக்குதான் சிறப்புக் குழந்தைகள் பிறப்பார்கள், அவள் உங்களிடம்தான் வரவேண்டும் என்று எழுதப்பட்டிருக்கிறது" என்பார்கள். இதுபோன்ற கருத்துகளைக் கேட்கும் ஒருவர் ஊக்கம் பெறலாம், அதேசமயம் இவை எதிர்மறையான விளைவுகளையும் உண்டாக்கலாம். கவனித்துக்கொள்கிறவர்கள் தங்களுடைய பணி கடுமையாக இருக்கிறது என்று புகார் சொல்லக்கூடாது, இந்தப் பணி கடினமானது என்று அவர்கள் எண்ணுவதே தவறு என்று சமூகம் அவர்களை நம்பச்செய்கிறது.

கவனித்துக்கொள்கிறவர்களுக்கு அந்தப் பணியின் சில குறிப்பிட்ட அம்சங்கள் மிகவும் சிரமமாக இருக்கலாம். உதாரணமாக, தங்களுடைய உறவினர் நடந்துகொள்ளும் விதத்தைச் சமாளிக்க இயலாமல் அவர்கள் சிரமப்படலாம், அல்லது, தினமும் தூக்கம் தொடர்ந்து கெடுவதால் அவர்கள் அவதிக்குள்ளாகலாம். ஒருவர் கவனித்துக்கொள்ளும் பணியைப் பல நாள்களாகச் செய்யும்போது, அது பெரிய சவாலாகிறது, அழுத்தம் அதிகரிக்கிறது. குறிப்பாகச் சில உறவுகள் கூடுதல் அழுத்தத்தை உண்டாக்கக்கூடும். உதாரணமாக, தங்களுடைய மனைவி/கணவரைக் கவனித்துக்கொள்கிறவர்களுக்கும், வயதான காலகட்டத்தில் பிறரைக் கவனித்துக்கொள்ளவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டவர்களுக்கும் மன அழுத்த அறிகுறிகள் அதிகம் வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.  

இந்தச் சுமைகளை அவர்களோடு பகிர்ந்துகொள்ள யாரும் இல்லை என்றால், பதற்றம், அழுத்தம், தனிமையுணர்வு அதிகரிக்கிறது. அவர்களுடைய சுமைகளை எதார்த்தமாகப் பகிர்ந்துகொள்வது முக்கியம். உதாரணமாக, அவர்களுடைய கவனித்துக்கொள்ளும் பொறுப்புக்கு ஒரு சிறு ஓய்வு தரலாம், அல்லது, வீட்டில் அவர்களுடைய வேலைகளை யாராவது பகிர்ந்துகொள்ளலாம். இதுபோன்ற சிறு உதவிகள் அவர்களுக்குப் பெரிய அளவில் நன்மை தரும். அதேபோல், உணர்வுசார்ந்த ஆதரவுக் கட்டமைப்புகளில் சுமைகளை இறக்கிவைப்பதற்கான வாய்ப்பும் இருக்கவேண்டும். உதாரணமாக, 'இதையெல்லாம் வெளியே சொன்னால் யார் என்ன நினைப்பார்களோ?' என்று எண்ணாமல், ஒருவர் தன்னுடைய பக்கத்துவீட்டுக்காரர் அல்லது நண்பரிடம் தன் சுமைகளைப் பேசலாம், அல்லது, ஒரு சுய உதவிக்குழுவில் இணைந்து, மற்ற கவனித்துக்கொள்வோருடன் பேசலாம், அல்லது, ஓர் அனுபவமிக்க நிபுணரிடம் ஆலோசனை பெறலாம்.

இதையெல்லாம் செய்யாமல் விட்டுவிட்டால், அவர்களுக்கு வேண்டிய ஆதரவை அளிக்காவிட்டால், கவனித்துக்கொள்வோர் அனுபவிக்கும் மன மற்றும் உணர்வுச் சுமைகள் குறிப்பிடத்தக்க மன நலப் பிரச்னைகளாக மாறக்கூடும், இதனால் அவர்களுடைய சொந்த வாழ்க்கையும் கெடும், அவர்களால் கவனித்துக்கொள்ளப்படுகிறவர்களுடைய வாழ்க்கையும் பாதிக்கப்படும்.

இப்போது, சில குறிப்பிட்ட சவால்களைக் காண்போம். இவற்றிலிருந்து, உங்களுக்குத் தெரிந்த கவனித்துக்கொள்ளும் ஒருவருக்கு உதவக்கூடிய வழிகளை நீங்கள் கண்டறியக்கூடும்...

அழுத்தம், கவலை: கவனித்துக்கொள்ளும் பொறுப்பு பலரை அழுத்தத்தில் தள்ளுகிறது, கவலைக்குள்ளாக்குகிறது. இவர்கள் எப்போதும் தங்களுடைய அன்புக்குரியவரின் பிரச்னையைப்பற்றியும், தாங்கள் செய்யவேண்டிய கவனித்துக்கொள்ளுதல் பணிகளைப்பற்றியும்தான் சிந்தித்துக்கொண்டிருப்பார்கள். அந்தச் சிந்தனையை அவர்களால் நிறுத்தவே இயலாது. கவனித்துக்கொள்கிறவர்களுக்குப் பொதுவாகத் தூக்கம் சரியாக வருவதில்லை, இவர்கள் அதிகம் சாப்பிடுகிறார்கள், அல்லது, குறைவாகச் சாப்பிடுகிறார்கள், இவர்களுடைய மனோநிலை அடிக்கடி பாதிக்கப்படுகிறது. இந்த நிலை நெடுநாள் நீடித்தால், கவனித்துக்கொள்பவரின் மனநலம் சரிந்துகொண்டேயிருக்கும், அவர்கள் பாதிப்புக்குள்ளாகக்கூடும்.

சமூகத் தனிமை: கவனித்துக்கொள்ளும் பலரால் சமூகத்தில் பிறருடன் பழக இயலுவதில்லை, அல்லது, தங்களுடைய பொழுதுபோக்குகள், பிற ஆர்வங்களில் ஈடுபட இயலுவதில்லை. எங்களுடன் பேசிய கவனித்துக்கொள்வோரில் 88% பேர் 'எங்களுக்கு எங்களைக் கவனித்துக்கொள்ள நேரமில்லை' என்றார்கள். ஒருவேளை அவர்கள் தங்களைக் கவனித்துக்கொண்டாலும்கூட, அதைப்பற்றி அவர்கள் குற்றவுணர்ச்சி கொள்ளக்கூடும். கவனித்துக்கொள்கிறவரைப்பற்றி, அல்லது, அவரால் கவனித்துக்கொள்ளப்படுகிறவரைப்பற்றிச் சமூகம் களங்கமாகப்பேசுமோ என்று அவர்களுக்குக் கவலை ஏற்படுகிறது. இதனால், இவர்கள் பெரும்பாலும் தங்களுடைய கவனித்துக்கொள்ளுதல் பொறுப்புகளைப்பற்றிப் பிறரிடம் பேசுவதில்லை. இதனால், இவர்கள் மிகவும் தனிமையாக உணரலாம், பதற்றம் மற்றும் மன அழுத்தம் போன்ற மனநலப் பிரச்னைகளுக்கு ஆளாகலாம். எங்களுடன் பணிபுரியும் கவனித்துக்கொள்வோரில் 77% பேருக்கு இந்தப் பிரச்னைகள் இருக்கின்றன.

விரக்தியும் கோபமும்: கவனித்துக்கொள்கிறவர்களுக்கு அடிக்கடி விரக்தியும் கோபமும் வரலாம், குறிப்பாக, அவர்கள் இந்தக் கவனித்துக்கொள்ளும் கடமையால் தங்களுடைய சொந்த வாழ்க்கையை அல்லது வேலையைத் தியாகம் செய்திருந்தால் இந்த விரக்தி, கோபம் அதிகரிக்கும். தங்களுக்கு வேறு வழியே இல்லை, இதைச் செய்துதான் ஆகவேண்டும் என்று அவர்கள் உணரக்கூடும். சில நேரங்களில், இந்தக் கோபம் பிற குடும்ப உறுப்பினர்களின்மீது பாயலாம், அல்லது, அவர்கள் யாரைக் கவனித்துக்கொள்கிறார்களோ அவர்கள்மீதே பாயலாம். இப்படிக் கோபப்பட்ட மறுகணம், அவர்கள் குற்றவுணர்ச்சிக்கு ஆளாகிறார்கள். இந்த உணர்வுகளின் சுழல் அவர்களைக் கடுமையாகப் பாதிக்கிறது.

குறைந்த சுய மதிப்பு: கவனித்துக்கொள்ளும் பணி ஒருவருடைய சுய மதிப்பில் மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கக்கூடும். 'என்னைக் கவனித்துக்கொள்ளும் அளவுக்கு எனக்குத் தகுதியில்லை' என்று கவனித்துக்கொள்கிறவர் எண்ணக்கூடும், தன்னுடைய நேரம்முழுக்கத் தன் அன்புக்குரியவரைக் கவனித்துக்கொள்வதற்குதான் என்று அவர் நினைக்கக்கூடும். கவனித்துக்கொள்கிறவர்கள் தங்கள்மீதே நம்பிக்கையிழப்பதும், 'இந்த ஒருவேலையைத்தவிர வேற எதுக்கும் நான் தகுதியில்லை' என்று எண்ணுவதும் சகஜமே.

பணம்பற்றிய கவலைகள்: கவனித்துக்கொள்கிறவர்களுக்கு நிறைய செலவுகள் உண்டு. கூடுதல் பராமரிப்புக்கு, மருத்துவச் சேவைகளுக்கு, மருந்துகளுக்கு, சிகிச்சைகளுக்கு, சாதனங்களுக்கு, போக்குவரத்துக்கு என்று பல செலவுகள். இதனால், அவர்களுடைய நிதி நிலைமை பாதிக்கப்படலாம், அவர்கள் வேறு விஷயங்களில் மிச்சம்பிடிக்கவேண்டியிருக்கலாம். எதார்த்தத்தில் இது பல பிரச்னைகளையும் கூடுதல் அழுத்தத்தையும் கொண்டுவரக்கூடும். கவனித்துக்கொள்கிறவர்கள் பலரால் செலவுகளைச் சமாளிக்க இயலுவதில்லை, அதற்காக அவர்கள் கடன் வாங்குகிறார்கள். எங்களுடன் தொடர்ந்து பணிபுரியும் கவனித்துக்கொள்வோரில் 90% பேர் பணப்பிரச்னைகளில் உள்ளதாகச் சொல்கிறார்கள்.

கவனித்துக்கொள்கிறவர்களுடைய மனநலத்தைக் காக்கவேண்டும். இது ஓர் அவசியத்தேவை. கவனித்துக்கொள்வோருக்கு இத்தகைய அவசியமான அக்கறை கிடைக்கவேண்டுமென்றால், நம் சமூகம் கவனித்துக்கொள்வதுபற்றி வெளிப்படையாகப் பேசவேண்டும், நம்மிடையே இந்தப் பிரச்னை எந்த அளவு உள்ளது என்று உணரவேண்டும். இது யாருக்கோ நடப்பது என்று எண்ணக்கூடாது. இங்குள்ள ஒவ்வொருவரும் ஏதோ ஒருகட்டத்தில் பிறரைக் கவனித்துக்கொள்ளவேண்டியிருக்கலாம், அல்லது, பிறருடைய கவனிப்பை எதிர்பார்க்கவேண்டியிருக்கலாம், சிலர் இந்த இரு சூழ்நிலைகளையும்கூடச் சந்திக்க நேரலாம்.

என்னுடைய அடுத்த கட்டுரையில், கவனித்துக்கொள்வோருக்கு ஆதரவளிப்பதற்கான எதார்த்தமான மற்றும் உணர்வுப்பூர்வமான வழிகளைப்பற்றிப் பேசலாம், அவர்களுடைய மன நலத்தைக் காப்பதற்கு கேரர்ஸ் வேர்ல்ட்வைட் எப்படி உதவுகிறது என்று தெரிந்துகொள்ளலாம்.

டாக்டர் அனில் படீல், ‘கேரர்ஸ் வேர்ல்ட்வைட்’ அமைப்பின் நிறுவனர், செயல் இயக்குநர். சம்பளம் பெறாத, குடும்பம் சார்ந்த கவனித்துக்கொள்வோரின் பிரச்னைகளை வெளிச்சம்போட்டுக்காட்டிக் கையாள்கிறது கேரர்ஸ் வேர்ல்ட்வைட். 2012ல் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு, UKல் பதிவுசெய்யப்பட்டுள்ளது. வளரும் நாடுகளில் உள்ள கவனித்துக்கொள்வோருடன்மட்டும் இணைந்து பணிபுரிகிறது. டாக்டர் படீல் இந்தப் பத்தியை ருத் படீலுடன் இணைந்து எழுதுகிறார். ருத் படீல் கேரர்ஸ் வேர்ல்ட்வைடின் தன்னார்வலர். மேலும் விவரங்களுக்கு நீங்கள் கேரர்ஸ் வேர்ல்ட்வைட் இணையத்தளத்துக்குச் செல்லலாம். இந்தப் பத்தியின் ஆசிரியர்களுடன் மின்னஞ்சல்மூலம் உரையாட columns@whiteswanfoundation.orgக்கு எழுதலாம்

இந்தப் பத்தியில் வெளிப்படுத்தப்பட்டுள்ள கருத்துகள் ஆசிரியருடையவை, வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷனின் பார்வைகளை அவை பிரதிநிதித்துவப்படுத்தாமலிருக்கலாம்.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org