பதின்பருவமும் நல்லுறவும்

நான் ஏற்கெனவே சொன்னதுபோல், பதின்பருவத்தில் உள்ள ஒருவருடைய மிகப்பெரிய சொத்து, அவர் தன்னுடைய பெற்றோருடன் வெளிப்படையான, நம்பிக்கையான உறவைக் கொண்டிருப்பதுதான். அவர் நினைத்தபோது தன் பெற்றோரை அணுக இயலவேண்டும், அவர்கள் என்ன சொல்வார்களோ என்று பயந்துநிற்கக்கூடாது. எல்லாப் பெற்றோரும் தங்கள் பிள்ளைகளின் நலனைதான் விரும்புகிறார்கள். அவர்களில் சிலர், மிகவும் அர்த்தமற்றவகையில் நடந்துகொள்வதாகத் தோன்றலாம். ஆனால் அவர்களுக்குள்ளும் தங்கள் பிள்ளையின் நலன்தான் முக்கிய நோக்கமாக உள்ளது. அதேசமயம், தன் மகன், மகளுக்கு இதுதான் சரி என்று ஒரு பெற்றோர் நினைப்பதும், அந்த மகன், மகள் தனக்கு எது சரி என்று நினைப்பதும் ஒன்றாக இல்லாமலிருக்கலாம். அவர்களில் ஒருவர் நினைப்பது தவறாக இருக்கலாம். அல்லது, யார்மீதும் தவறில்லாமலிருக்கலாம்.

பெற்றோர், குழந்தைகளிடையே நான் காணும் மிகப் பொதுவான பிரச்னைகள்:

  • கல்விச் செயல்திறன் மற்றும் பெற்றோரின் எதிர்பார்ப்புகள்
  • சமூக ஊடகங்கள்/ இணையத்தைக் காண்பதில் செலவழிக்கும் நேரம்
  • வீட்டுக்கு நேரத்துக்கு வருதல், நண்பர்களுடன் வெளியே அதிகநேரம் சுற்றுதல்
  • ஆண்/பெண் நண்பருடன் பழகுதல்
  • மது, புகை மற்றும் போதைமருந்துப் பழக்கங்கள்
  • பெற்றோர்மீது எதிர்மறையான அல்லது இணக்கமற்ற மனப்போக்கு
  • வீட்டு விதிமுறைகளைப் புறக்கணிக்கும் பழக்கங்கள், உதாரணமாக, காலி பிட்ஸா பெட்டிகளைப் படுக்கைக்குக் கீழே தள்ளுதல்
  • நிஜமான மனநலப் பிரச்னைகளுடன் தொடர்புடைய அறிகுறிகள்

இந்தப் பிரச்னைகளையெல்லாம் தீர்க்கவேண்டுமென்றால், அந்த இளைஞருக்கும் அவருடைய பெற்றோருக்கும் இடையே ஒரு நல்ல உறவு இருக்கவேண்டும், அது குழந்தைப் பருவத்தில் தொடங்கிப் பல ஆண்டுகளாக வளர்ந்திருக்கவேண்டும். எந்தவோர் உறவிலும் அடிப்படைச் செங்கற்கள், நம்பிக்கையும் மரியாதையும்தான். குறிப்பாக, நம்பிக்கை மிக முக்கியம். ஒவ்வொரு குழந்தையும் தன் பெற்றோர்மீது நம்பிக்கையுடன்தான் வளர்கிறது. இதைத் தக்கவைத்துக்கொள்வது, வளர்ப்பது பெற்றோரின் வேலை. குழந்தை நடக்கிறது, வளர்கிறது, பதின்பருவத்துக்குள் நுழைகிறது... அந்தக் காலகட்டத்தில் பெற்றோர்மீதான அதன் நம்பிக்கையும் வளரவேண்டும். அவ்வப்போது சில விஷயங்களில் அவர்கள் ஒத்துப்போகாமலிருக்கலாம், வாக்குவாதம் செய்யலாம், அதைத் தவிர்க்க இயலாது, இதுபோன்ற சூழல்களில்தான் மரியாதை முக்கியமாகிறது. கருத்துமோதல்களை ஜனநாயகமுறையில், அர்த்தமுள்ளவகையில் தீர்க்கவேண்டும். அப்படியில்லாமல் “நான் சொன்னதைச் செய்” என்று அதட்டக்கூடாது, அடிக்கக்கூடாது. அவ்வாறு பெற்றோர் குழந்தையிடம் நல்லுறவை வளர்த்துக்கொண்டால், குழந்தை அவர்களை நம்பும், மேற்சொன்ன சூழல்களில் எப்போதாவது தனக்கும் தன் பெற்றோருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும், அவர்கள் காலில் வெந்நீர் ஊற்றியதுபோல் குதிக்கமாட்டார்கள், விவாதத்துக்கும் தீர்வுக்கும் இடமிருக்கும் என்று எண்ணும்.

சில நேரங்களில், பெற்றோரும் குழந்தைகளும் ஒரு பிரச்னையைப்பற்றித் தெளிவாகச் சிந்திக்கிறார்கள், ஆனால், அவர்களால் ஒரு தீர்வைக் கண்டறிய இயலுவதில்லை. அப்போது, அவர்கள் ஒரு மூன்றாம் நபரை அழைக்கிறார்கள், அவர் இந்தப் பிரச்னையை விசாரித்துத் தீர்த்துவைக்கிறார். பொதுவாக இந்த நபர் ஓர் உறவினராகவோ பெற்றோரின் நண்பராகவோ இருப்பார். இதுவும் வேலைசெய்யவில்லை என்றால், ஒரு தொழில்முறை நிபுணரை அணுகலாம், விவாதிக்கலாம், யார்பக்கமும் சாயாமல் அவர் ஒரு தீர்ப்பு வழங்குவார். உதாரணமாக, சென்ற ஆண்டு, 15 வயதுப் பெண்ணொருத்தி என்னிடம் வந்திருந்தாள். அவளுடைய பெற்றோர் அவளை அழைத்துவந்திருந்தார்கள். அவள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண் வாங்கவில்லையாம். அதற்குக் காரணம், அவளுடைய சோம்பேறித்தனம்தான் என்று அவளுடைய பெற்றோர் கருதினார்கள், அவள் நெடுநேரம் படித்தால் நல்ல மதிப்பெண் வாங்குவாள் என்றார்கள். ஆனால் உண்மையில் அவளுக்குக் கவனச்சிதறல் மிகைச்செயல்பாட்டுக் குறைபாடு (ADHD) இருந்தது, அவளுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது, அவள் தனது ICSE தேர்வுகளில் மிக நல்ல மதிப்பெண் வாங்கினாள்.

பதின்பருவத்தில் உள்ள ஒருவர் மோசமாக நடந்துகொள்கிறார் என்றால், அவருக்கு உண்மையிலேயே ஏதாவது ஒரு மனநலப் பிரச்னை இருக்கலாம், அதைச் சமாளிப்பதற்காக அவர் இவ்வாறு நடந்துகொள்ளலாம். இது எப்போதும் வெளிப்படையாகத் தெரியாது, ஆகவே, இதனை எல்லாரும் தவறாகவே எண்ணுகிறார்கள். மிகவும் பதற்றமாக உள்ள இளைஞர்கள் பலர் புகை பிடிக்கிறார்கள், மது அருந்துகிறார்கள், அதன்மூலம் தங்கள் பதற்றத்தைத் தணித்துக்கொள்கிறார்கள். உளவியல் சீர்குலைவு நிலையைத் தொடப்போகும் இளைஞர்களும் இப்படிதான் நடந்துகொள்கிறார்கள். அவர்களுடைய தலைக்குள் மிரட்டும் குரல்கள் கேட்கலாம், தங்களுடைய மடிக்கணினிகளை யாரோ தவறாக அணுகிப் பயன்படுத்துகிறார்கள் என்று அவர்கள் நம்பலாம். பொதுவாகத் தங்கள் பிள்ளையை என்னிடம் அழைத்துவரும் பெற்றோர் சொல்லும் காரணங்கள் சில: “அவனுக்குக் கல்லூரியில் வருகைப்பதிவு போதவில்லை”, “இவள் ராத்திரிமுழுக்க மடிக்கணினியில் வேலைசெய்துவிட்டு, பகல்முழுக்கத் தூங்குகிறாள்”, இப்படிச் சொல்லும் பெற்றோருக்கு, அவர்களுடைய குழந்தைகளின் தலைக்குள் இருந்தபடி அவர்களுடன் போராடுகிற சாத்தான்களைப்பற்றித் தெரிவதில்லை.

இன்னொரு விஷயத்தையும் இங்கே சொல்லவேண்டும். சில குழந்தைகளால் இயல்பாகவே ஆபத்துகளை மதிப்பிட இயலாது, தாங்கள் செய்கிறவற்றின் பின்விளைவுகளை முன்கூட்டியே அறிய இயலாது. இதனால், அவர்கள் எங்கு சென்றாலும் ஏதாவது ஒரு பிரச்னை வந்துவிடுகிறது. பிறர் எப்படி உணர்கிறார்கள் என்பதை அவர்களால் புரிந்துகொள்ள இயலுவதில்லை, சமூகம், குடும்பத்தினர் அவர்களிடம் என்ன எதிர்பார்க்கிறார்களோ அதற்கு அவர்கள் இணங்குவதில்லை. இது முற்றிலும் வேறுவிதமான பிரச்னை, இந்தவகை இளைஞர்களுக்கும் அவர்களுடைய பெற்றோருக்கும் இடையே ஏற்படும் பிரச்னைகளை எளிதில் தீர்க்க இயலாது.

பதின்பருவத்தில் உள்ள ஒருவர் நடந்துகொள்ளும் விதத்தைப் பெரியவர்கள் பிரச்னையாகக் கருதலாம், ஆனால், அவர் அப்படி நடந்துகொள்வதற்கான மூலகாரணத்தைக் கண்டறிய நிறையப் பொறுமை தேவை. இதற்காக ஒரு நிபுணரின் உதவியைக் கோரினால், தாங்கள் நல்ல பெற்றோர்கள் இல்லை என்று அர்த்தமாகிவிடுமோ என்று பெற்றோர் எண்ணக்கூடாது. ஒரு குழந்தைக்குக் காய்ச்சல் வந்தால் அந்த நோய்த்தொற்று எதனால் ஏற்பட்டது என்று மருத்துவரிடம் கேட்பதுபோல்தான் இதுவும்.

பெற்றோர்தான் குழந்தையின் மிகப்பெரிய ஆதரவு, குழந்தைகள்தான் பெற்றோரின் மிகப்பெரிய மகிழ்ச்சி. ஆகவே, இந்த உறவை ஒரு மதிப்புமிக்க, புனிதமான உறவாகக் குழந்தைகளும் பெற்றோரும் கருதிக் காக்கவேண்டும். அதுவே பதின்பருவத்தின் துயரங்களுக்கு எதிரான ஒரு வலுவான அரணாக இருக்கும்.

டாக்டர் ஷ்யாமளா வத்ஸா பெங்களூரைச் சேர்ந்த மனநல நிபுணர், இருபது ஆண்டுகளுக்குமேலாக இத்துறையில் பணியாற்றிவருகிறார். இளைஞர்களுக்கான இந்தப் பத்தி, பதினைந்து நாள்களுக்கு ஒருமுறை இந்தப் பகுதியில் வெளியாகும். நீங்கள் பகிர்ந்துகொள்ள விரும்பும் கருத்துகள், கேள்விகள் எவையேனும் இருந்தால், இந்த மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்: columns@whiteswanfoundation.org

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org