போதைப் பொருட்களால் மன நலம் பாதிக்கப்படுமா?

போதைப் பொருட்களுக்கு மன நலப் பிரச்சினைகளுக்கும் தொடர்பு உண்டா?

2014ம் வருடம், ஆகஸ்ட் மாதம். 24 வயது ராகவ் என்னைச் சந்திக்க வந்தார். அவர் ஒரு வரைகலை வடிவமைப்பாளர். அவரது நண்பர்கள் அவரை என்னிடம் ஆலோசனைக்காக அழைத்துவந்தார்கள். அவர்கள் நாட்டின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து வந்தவர்கள், கடந்த ஓராண்டுக்குமேலாக ஒரே அடுக்ககத்தைப் பகிர்ந்துகொண்டு வாழ்ந்துவந்தார்கள். அவர்கள் ஒருவரையொருவர் நன்கு அறிந்திருந்தார்கள், ஒரு குடும்பத்தைப்போல் பழகினார்கள்.

ஆனால், சமீபத்தில் ராகவ் அவர்கள்மீது ஒரு குற்றம் சாட்டத் தொடங்கியிருக்கிறார், 'என் முதுகுக்குப் பின்னே நீங்கள் என்னைக் கேலி செய்கிறீர்கள்.' இப்போது, ராகவ் அவர்களை நம்புவதில்லை, இதை அவர்களிடம் நேரடியாகவே சொல்லிவிட்டார் அவர். முன்பெல்லாம், அவர் எப்போதாவது போதை தரும் இலைகளைப் புகைப்பதுண்டு. ஆனால் இப்போது, கடந்த ஒரு வாரமாக அவர் தொடர்ந்து நிறைய புகை பிடிக்கிறார். ஏன் என்று கேட்டால், "பரவசமூட்டும் இடத்துக்குச் செல்லவேண்டும், சில அருமையான பணிகளைச் செய்யவேண்டும்" என்கிறார். ராகவின் நண்பர்கள் எல்லாருமே அவ்வப்போது புகைக்கிறவர்கள்தான், ஆகவே, இப்போது அவரிடம் ஏதோ பிரச்னை என்பதை அவர்கள் புரிந்துகொண்டார்கள். ராகவ் அவர்களை நம்பாததுமட்டுமல்ல, அவர் சாப்பிடுவதையும் கிட்டத்தட்ட நிறுத்திவிட்டார். சரியாகத் தூங்குவதும் இல்லை. சாப்பிடலாம், வெளியே போகலாம் என்று யாராவது அவரிடம் சொன்னால், கோபப்படுகிறான். ராகவிடம் எல்லாருக்கும் பயம். காரணம், அவர் கொஞ்சம் வாட்டசாட்டமான ஆசாமி, கோபம் வந்தால் அடித்துப் பின்னிவிடுவார்.

2004ம் ஆண்டு, நான் ஆதியை முதன்முறையாகச் சந்தித்தேன். அப்போது அவருக்கு வயது 23, வர்த்தகத்துறையில் பட்டம் பெற்றிருந்தார். ஓராண்டாக, அவர் தன்னுடைய தந்தையின் நிறுவனத்தில் கணக்குப்பிரிவில் பணியாற்றிக்கொண்டிருந்தார். அவர் ஓர் அமைதியான, மென்மையான, கல்வியில் ஆர்வமுள்ள இளைஞர், அவரை வளர்ப்பதில் அவருடைய பெற்றோர் எந்தப் பிரச்னையையும் சந்தித்திருக்கவில்லை.

ஆனால், சமீபத்தில், ஏதோ மாறிவிட்டது. கடந்த சில வாரங்களாக, அவர் பிறருடன் அதிகம் பேசுவதில்லை. எங்கேயோ பார்த்துச் சிரிக்கிறார், அல்லது, கண்ணுக்குத்தெரியாத ஒரு நபருடன் பேசுவதுபோல் முணுமுணுக்கிறார். ஆரம்பத்தில் மற்றவர்கள் இதைப்பார்த்து விசாரித்தபோது, 'ஒரு பழைய ஜோக் ஞாபகத்துக்கு வந்தது' என்று சொல்லிச் சமாளித்தார் அவர். குடும்பத்தினரும் அதை நம்பி அவரை விட்டுவிட்டார்கள். படிப்படியாக, இந்தப் பழக்கம் அடிக்கடி தென்பட்டது, இப்போதெல்லாம் அவர் அதை விளக்குவதுகூடக் கிடையாது. அவர் அடிக்கடி வேலைக்கு வருவதில்லை, காரணம், இரவில் தூக்கமில்லாததுதான். முன்பெல்லாம் அவர் எப்போதாவது புகைபிடித்துக்கொண்டிருந்தார், ஆனால் இப்போது, ஒரு நாளைக்குப் பத்து சிகரெட்களைப் (வழக்கமான சிகரெட்கள்) புகைக்கிறார். ஒருநாள், அவருடைய தாய் அவரிடம் இதுபற்றி விசாரித்தார். சில நாள் முன்பு அவர் போதை தரும் இலைகளைப் புகைக்கத் தொடங்கியதாகவும், அதன்பிறகுதான் இந்த மாற்றம் தொடங்கியது என்றும் தெரிந்துகொண்டு அவர் பயந்துபோனார். ஆகவே, அவருக்குப் போதை இலைகள் கிடைக்காதபடி தடை போடப்பட்டது, கண்டிப்பான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

ஆனால், அடுத்தடுத்த மாதங்களில் அவருடைய பழக்கவழக்கங்கள் நல்லபடியாக மாறவில்லை. அப்போதுதான் அவர் ஆலோசனைக்கு அழைத்துவரப்பட்டார்.

போதை தரும் இலைகளைப் பலர் ஒரு பொழுதுபோக்காகக் கருதுகிறார்கள். பல நாடுகளில் இது சட்டப்படி அனுமதிக்கப்பட்டிருக்கிறது, பலர் இதனைப் புகைக்கிறார்கள். இதன்மூலம் ஸ்கிஜோஃப்ரெனியா ஏற்படக்கூடுமா என்று நிகழ்த்தப்பட்ட ஆய்வுகளில் ஒன்றுக்கொன்று முரணான முடிவுகள் கிடைத்துள்ளன. ஆனால், பெரும்பாலான மனநல நிபுணர்கள் இதனை ஏற்றுக்கொள்வார்கள்:

ஸ்கிஜோஃப்ரெனியா வரும் வாய்ப்பு அதிகமுள்ளவர்கள், அதாவது, ஸ்கிஜோஃப்ரெனியா பிரச்னை கொண்ட நெருங்கிய உறவினர்களைக் கொண்டவர்கள் போதை தரும் இலைகளைப் புகைத்தால், அவர்களுக்கு ஸ்கிஜோஃப்ரெனியா தூண்டப்படலாம்.

ஸ்கிஜோஃப்ரெனியா மரபுரீதியாக வருவதற்குக் காரணமாக அமைகிற ஒற்றை மரபணு என்று எதுவும் இல்லை. பல வெளிப்படுத்தப்படாத மரபணுக்கள் இதற்குக் காரணமாகின்றன. இவற்றை ஆபத்து மரபணுக்கள் என்கிறார்கள், ஸ்கிஜோஃப்ரெனியா பிரச்னை வரக்கூடிய சாத்தியமுள்ளவர்கள் போதை தரும் இலைகளைப் புகைத்தால், இவை தூண்டப்படலாம்.

ஒருவருக்கு ஸ்கிஜோஃப்ரெனியா ஒருமுறை வந்துவிட்டால், அதை மாற்ற இயலாது.

ராகவ், ஆதி இருவருடைய குடும்பத்திலும் முன்னமே ஸ்கிஜோஃப்ரெனியா இருந்திருக்கிறது. ராகவின் தந்தைவழி உறவினர் ஒருவர் பல ஆண்டுகள் இதற்காகச் சிகிச்சை பெற்றிருக்கிறார். ஆதியின் தாய்வழி உறவினர் ஒருவருக்கு ஒருவிதமான ஸ்கிஜோஃப்ரெனியா இருந்திருக்கிறது. இதனால் அவருடைய அறிவாற்றல், உணர்வு மற்றும் சமூகநிலை என அனைத்திலும் தேய்வு ஏற்பட்டிருக்கிறது. இத்துடன், ஆதியின் சகோதரிக்கு ஸ்கிஜோஃப்ரெனியா இருப்பதை இன்னொரு மனநல நிபுணர் 2008ல் கண்டறிந்தார். இந்தக் குடும்ப வரலாறு காரணமாக, ராகவ், ஆதி இருவருக்கும் போதை தரும் இலைகளைப் புகைக்கும் பழக்கத்தின் ஆபத்துகள் அதிகம், காரணம், ஸ்கிஜோஃப்ரெனியா ஆபத்துள்ளவர்களின் மூளைகள் இந்தப் போதை தரும் இலைகளுக்கு வேறுவிதமாக எதிர்வினை புரிகின்றன.

ராகவுக்கு வந்த மனநலம் சார்ந்த அறிகுறிகள் மனநலப் பிரச்னைகளுக்கு எதிரான மருந்துகளின்மூலம் கட்டுப்படுத்தப்பட்டன, ஆனால், அவர் போதை தரும் இலைகளைப் புகைப்பதை நிறுத்த மறுத்துவிட்டார். கடைசியாக அவர் என்னைப் பார்க்கவந்தபோது, 'போதை தரும் இலைகளின் பழக்கத்தை நான் குறைத்துக்கொள்வென்' என்று வாக்குறுதி தந்தார்.

ஆதிக்கு அடுத்த 6-7 ஆண்டுகள் தொடர்ந்து மருந்துகள் தரப்பட்டன, இதன்மூலம் அவரிடம் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது, அவரால் அலுவலகம் செல்ல இயன்றது. அதேசமயம், அவருடைய முந்தைய செயல்திறனுடன் ஒப்பிடும்போது, இப்போது அவரது செயல்திறன் குறைந்தபட்சம் 25-30% குறைவாகவே இருந்தது. கடந்த 5-6 ஆண்டுகளில் அவர் மூன்றுமுறை மனநிலை சார்ந்த பிரச்னைகளுக்கு ஆளாகியிருக்கிறார், இவை அனைத்தும், அவர் சில நாள் தொடர்ந்து மருந்துகளைச் சாப்பிடாதபோது நிகழ்ந்தவை, ஒவ்வொருமுறையும் அவருடைய நலன் சரிந்துகொண்டே வந்தது. இப்போது அவர் ஒரு மனநலப் பராமரிப்பு மையத்தில் இருக்கிறார், அவரால் எந்த வேலையும் செய்ய இயலாது, சும்மா பேச இயலும், அவ்வளவுதான், நோயால் அவருடைய புத்திசாலித்தனம் குறிப்பிடத்தக்க அளவு மழுங்கிவிட்டது.

ஆரம்பத்தில் போதை தரும் இலைகளைப் பயன்படுத்திக்கொண்டிருந்த ஆதி, பின்னர் அதனை முற்றிலும் குறைத்துவிட்டார். அதேசமயம், ஆபத்துக்குரிய மரபணுக்கள் தூண்டப்பட்டுவிட்டன, அவற்றை முடக்குவதற்கான வாய்ப்புகள் குறைவு. சுட்ட ரொட்டியைப் பழையபடி பச்சை ரொட்டியாக்க இயலுமா என்ன?

போதை தரும் இலைகளைப் புகைப்பது என்பது, மற்ற வேலைகளைப்போலவேதான். ஒரு ரோலர்கோஸ்டர் பயணத்தில் செல்வதன்மூலம் தங்கள் வாழ்க்கையே சிதைந்துபோகக்கூடும் என்று யாராவது எண்ணுவார்களா? அது ஒரு கொண்டாட்டமான செயல்போல் தெரிகிறது. ஆகவே, எல்லாரும் மற்றவர்களுடன் சேர்ந்து அதில் ஈடுபடுகிறார்கள். பலவீனமான முதுகைக்கொண்ட ஒருவர் ரோலர் கோஸ்டரில் சென்றால், அவருடைய வட்டில் காயம் ஏற்படக்கூடிய சாத்தியம் அதிகம், அதேசமயம், நல்ல முதுகு உள்ள ஒருவருக்கும் வட்டில் காயம் ஏற்படலாம், ஏனெனில், யாருக்கு எப்போது காயம் ஏற்படும் என்பதை யாராலும் கணிக்க இயலாது. ஏதாவது ஒரு பிரச்னை வரும்வரை, தங்களுடைய முதுகு வலுவானதா, பலவீனமானதா என்று யாருக்கும் தெரிவதில்லை.

அதேபோல, மரபுரீதியில் ஸ்கிஜோஃப்ரெனியா வரும் வாய்ப்புள்ளவர்கள் போதை தரும் இலைகளைப் பயன்படுத்தினால், அவர்களுக்கு ஸ்கிஜோஃப்ரெனியா வரக்கூடும். போதை தரும் இலைகளுக்கும் ஸ்கிஜோஃப்ரெனியாவுக்கும் என்ன இணைப்பு என்பதுபற்றி ஆய்வாளர்கள் இன்னும் விவாதித்துக்கொண்டிருக்கிறார்கள். ஸ்கிஜோஃப்ரெனியா வரும் வாய்ப்பு அதிகமுள்ளவர்கள் போதை தரும் இலைகளால் ஈர்க்கப்படும் வாய்ப்பும் அதிகமாக உள்ளது. இவை இரண்டும் ஒரே மரபணுவின் வெளிப்பாடுகளாக இருக்கலாம். இதுபற்றி உறுதியான தீர்மானம் எதுவும் இன்னும் எட்டப்படவில்லை.

இப்போதைக்கு, ஒருவருடைய குடும்பத்தில் யாருக்காவது ஸ்கிஜோஃப்ரெனியா இருந்தால், அவர்கள் போதை தரும் இலைகளைப் பயன்படுத்தவேண்டாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கக்கூடும். அதேசமயம், ஒருவருடைய குடும்பத்தில் யாருக்கும் ஸ்கிஜோஃப்ரெனியா இல்லையென்றால், போதை தரும் இலைகளால் அவருக்கு ஸ்கிஜோஃப்ரெனியா வராது என்று எந்த உத்தரவாதமும் இல்லை.

ஒருவருக்குப் பதின்பருவத்தில் வரும் மாற்றங்கள், ஆரம்பநிலை மனநலப் பிரச்னைகளை மறைத்துவிடக்கூடும் என்பதை இந்தத் தொடரில் சுட்டிக்காட்டுகிறார் டாக்டர் ஷ்யாமளா வட்ஸா. மனநலப் பிரச்னைகளின் ஆரம்ப அறிகுறிகளை, பதின்பருவத்தினரின் இயல்பான பழக்கங்களாகச் சிலர் எண்ணிவிடக்கூடும் என்பதை இந்தக் கட்டுரைகள் காட்டுகின்றன. இந்த நிகழ்வுகளில் வரும் இளைஞர்கள், தேவையில்லாமல் சிரமங்களைச் சந்தித்தவர்கள். ஆகவே, இளைஞர்களின் நண்பர்கள், உறவினர்கள் அவர்களுடைய பழக்கவழக்கங்களைக் கூர்ந்து கவனிக்கவேண்டும், ஏதேனும் ஒரு பழக்கம் வழக்கமான இயல்புநிலையிலிருந்து மாறுபட்டிருந்தால், விரைவில் உதவி கோரவேண்டும். பிரச்னை பெரிதாவதற்குமுன் உதவியை நாடினால், குணப்படுத்துவதற்கான சாத்தியம் அதிகரிக்கும்.

டாக்டர் ஷ்யாமளா வட்ஸா பெங்களூரைச் சேர்ந்த மனநல நிபுணர், இருபது ஆண்டுகளுக்குமேலாக இத்துறையில் இயங்கிவருகிறார். உங்களுக்கு ஏதேனும் கருத்துகள் அல்லது கேள்விகள் இருந்தால், columns@whiteswanfoundation.org என்ற முகவரியில் அவருக்கு எழுதலாம்

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org