பிரச்னைகள் நிறைந்த பதின்வயதுகள்

‘திடீரென்று, உலகம் பெரிதாகிவிட்டது, இன்னும் சரியாகச் சொல்வதென்றால் பல ஆண்டுகளாக நான் சிக்கிக்கிடந்த ஒரு குமிழி உடைந்துவிட்டதுபோலவும், இப்போதுதான் நான் சுதந்தரக் காற்றைச் சுவாசிப்பதுபோலவும் உணர்ந்தேன்.’

இதை எழுதியவர், பதின்பருவத்தில் இருக்கும் ஓர் இளைஞர். வளர்தலின் குணாதிசியங்களான அனைத்துவிதமான, கண்ணுக்குப் புலப்படாத மகிழ்ச்சி உணர்வுகளை ஒருவர் அனுபவிப்பதை இது அழகாகப் பிரதிபலிக்கிறது. திடீரென்று ஒருவர் விழித்தெழுகிறார், இந்த உலகம் பெரியது, இங்கே பலப்பல யோசனைகள், உணர்வுகள், மனிதர்கள், தொழில்நுட்பங்கள், இன்னும் நிறைய உள்ளன என்பதைத் தெரிந்துகொள்கிறார். இந்த உலகம் வெறும் இயற்பியல் வரம்புகளால் ஆனதல்ல. அதையெல்லாம் தாண்டிப் பரந்துவிரிந்தது.

முதன்முறையாக, எல்லாமே கருப்பு வெள்ளையாக இருப்பதில்லை, வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்திலும் தீர்மானங்களை எடுக்கும்போது, இந்த இரண்டுக்கும் நடுவே பலப்பல தெரிவுகள் தென்படுகின்றன. மதிப்பீடுகள், நண்பர்கள், தான் யார் என்று காட்டிக்கொள்வதற்காகத் தேர்ந்தெடுக்கும் ஆடைகள்கூட வெறுமனே 0, 1 என அமைந்துவிடுவதில்லை. ஏற்கெனவே உள்ள தர அமைப்புகள் கேள்வி கேட்கப்படுகின்றன. காரணம், ஓர் அடையாளத்தை அமைத்துக்கொள்வதற்காக உங்கள் நம்பிக்கைகளை வரிசைப்படுத்துவது முக்கியமாகிறது.

பதின்பருவத்தில் உள்ள ஒருவர், மிகவும் நம்பிக்கையோடு காணப்பட்டாலும், அவருக்குள் தன்னைப்பற்றிய சந்தேகங்கள் பதுங்கியிருக்கும். தன் வயதிலிருக்கும் மற்றவர்களுடன் போட்டியிடுவது, தன்னை அவர்களுடன் ஒப்பிட்டுக்கொள்வது போன்றவை மேலோட்டமாகப் பார்க்கும்போது அற்பமாகத் தோன்றலாம், ஆனால், பதின்பருவத்தினரால் இதனைத் தவிர்க்க இயலாது. காரணம், மற்றவர்களோடு சேர்த்துப்பார்க்கும்போது தான் எங்கே இருக்கிறோம் என்பதைக் காண்பதற்கான ஓர் இயல்பான வழி அது. இந்த அளவுகோலில் நீங்கள் உங்களை எங்கே வைத்துக்கொள்கிறீர்கள் என்பதைப்பொறுத்து, நீங்கள் வெற்றிபெற்றவராகவோ தோல்வியடைந்தவராகவோ உணர்கிறீர்கள். தன்னம்பிக்கை வேண்டுமென்றால், சாதித்த உணர்வு தேவை, தான் முக்கியம், தனது வாழ்க்கை முக்கியம் என்கிற நம்பிக்கை தேவை. இதுதான் மன ஆரோக்கியம். இதில் சமரசம் ஏற்பட்டுவிட்டால், உங்களை எதிர்மறை உணர்வுகள் மூழ்கடித்துவிடும். உதாரணமாக, பதற்றம், மனச்சோர்வு போன்றவை. இந்த உணர்வுகள் பதின்பருவத்தில் உள்ள ஒருவரை வெகுவாகப் பாதிக்கக்கூடும்.

ஆகவே, உடல்நலனுக்கு இணையாக, நலனுக்கும் முக்கியத்துவம் தரவேண்டும். சில நேரங்களில், இதில் ஏதாவது பிரச்னைகள் வரலாம் – அப்போது நீங்கள் இதைப்பற்றி உங்கள் பெற்றோரிடம் பேசவேண்டும்; சொல்லப்போனால், பதின்பருவத்தில் உள்ளவர்கள் தங்கள் பெற்றோருடன் ஓர் அன்பான, நம்பிக்கையான உறவைக்கொண்டிருப்பது மிகச்சிறந்தது. சில நேரங்களில், நீங்கள் செய்வதை உங்கள் பெற்றோர் ஏற்காமலிருக்கலாம். ஆனால், அவர்கள் எப்போதும் உங்கள் நலனையே விரும்புகிறார்கள். ஏதோ ஒரு காரணத்தால், உங்களால் உங்கள் பெற்றோரிடம் இதைப்பற்றிப் பேச இயலவில்லை என்றால், நீங்கள் நம்புகிற ஒரு பெரியவரிடம் பேசுங்கள், அல்லது ஒரு மனநல நிபுணரிடம் பேசுங்கள்.

உதாரணமாக, பதின்பருவத்தில் உள்ள ஒருவர் தன்னுடைய வாழ்க்கையைப்பற்றி என்ன சொல்கிறார் என்று பாருங்கள்:

பதின்பருவத்தில் இருப்பது மிகவும் சிரமம். பெரியவர்கள் தொடர்ந்து உங்களிடம் எதையாவது எதிர்பார்த்துக்கொண்டே இருப்பார்கள், நிறைய சாதித்த குழந்தைகளை உதாரணமாகக் காட்டி, நீங்கள் அவர்களைப் பின்பற்றவேண்டும் என்பார்கள். மிக எளிமையான சில காரணிகளைக்கொண்டு உங்களுடைய மதிப்பைக் கணக்கிட்டுவிட இயலும் என்பதுபோல் சிலர் நடந்துகொள்வார்கள். இந்த அழுத்தத்தில் சிலர் உடைந்துபோய்விடக்கூடும்.

மற்றவர்களை விடுங்கள், உங்கள் தலைக்குள்ளேயே ஏகப்பட்ட அழுத்தம் இருக்குமே. நீங்கள் எப்போதும் உங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப்பார்த்துக்கொண்டே இருக்கிறீர்களா? நீங்கள் நுழையும் ஒவ்வொரு துறையிலும் மிகப்பெரிய ஒருவரோடு உங்களை ஒப்பிட்டுப்பார்த்து நீங்கள் பயனற்றவர் என்று நினைத்துக்கொள்கிறீர்களா? சில நேரங்களில் நான் அப்படிச் செய்வதுண்டு, அது மிகவும் களைப்புத்தரும் ஒரு செயல். உண்மையாகச் சொல்லவேண்டுமென்றால், யார் என்ன சொன்னாலும் இப்படி நினைப்பதை என்னால் நிறுத்த இயலாது.

நீங்கள் உங்கள் வாழ்க்கையை எப்படி வாழ விரும்புகிறீர்கள்? உங்களைப்பொறுத்தவரை ‘வெற்றி’ என்றால் என்ன? ‘தோல்வி’ என்றால் என்ன? இந்தக் குழப்பமான விஷயங்களுக்கு நீங்களே வரையறை அமைத்துக்கொண்டு அதன்படி வாழ்வது சிரமம். ஒருவேளை அந்த வரையறைகளை உங்கள் பெற்றோர் ஏற்காவிட்டால், இன்னும் சிரமம்.

அதன்பிறகு, தர்ம சங்கடங்கள்! பள்ளியில் வேலை அதிகமாக வரும்போதுதான் இந்தத் தர்ம சங்கடங்கள் உங்களைத் தாக்கும். நீங்கள் தர்மப்படி தவறான விஷயங்களைச் செய்ய விரும்பாவிட்டால், மற்றவர்களோடு பொருந்தமாட்டீர்கள், தனிமையாக உணர்வீர்கள். அல்லது, அழுத்தத்துக்குப் பணிந்துவிடுவீர்கள், முக்கியம் என்று நினைத்தவற்றை மறந்துவிடுவீர்கள், அதனால் பள்ளியைச் சமாளிக்க இயலாமல் சிரமப்படுவீர்கள்.

சூழ்நிலைகளும் மக்களும் கருப்பு வெள்ளை அல்ல, அவை வேண்டுமென்றே சாம்பல் நிறத்திலும் இருக்கலாம். என்னுடைய நம்பிக்கை அமைப்பு மிகப்பெரிய எழுச்சியைச் சந்தித்தது. சில விஷயங்கள் முற்றிலும் தவறு என்று பெரியவர்கள் சொல்கிறார்களே, அதை என்னால் இன்னும் முழுமையாக ஏற்க இயலவில்லை. பெரியவர்கள் சொல்பவை எல்லாமே சரி என்றும் என்னால் ஏற்க இயலவில்லை.

சில சமயங்களில், என்னுடைய பிரச்னைகள் தீர்க்க இயலாதவையாகத் தோன்றுகின்றன, அவற்றின் அளவு கிறுகிறுக்கவைக்கிறது. அநேகமாக, என் மூளைக்குள் அந்தப் பிரச்னைகள் அங்குமிங்கும் குதித்து எதிரொலித்துக்கொண்டிருக்கின்றன என்று நினைக்கிறேன். அதனால்தான் நான் இப்படி எண்ணுகிறேனோ? ஆனால், சில சமயங்களில் நான் யோசிப்பதுண்டு – பதின்பருவத்தில் உள்ள ஒருவர் இப்படிதான் உணரவேண்டுமா?

இது ஒரு பெண்ணின் கதைதான். பதின்பருவத்தில் உள்ள ஒவ்வொருவரும் தன்னுடைய சொந்த லென்ஸ்வழியே வாழ்க்கையைப் பார்க்கிறார்கள், அவர்களுக்குள் பல கேள்விகள் இருக்கும், அவற்றுக்குப் பதில்கள் தேவை. அடுத்த சில வாரங்களில், இந்தப் பத்திவழியே பதின்பருவத்தினரின் மனநலம்பற்றிய பிரச்னைகளைப் பேசுவோம்.

டாக்டர் ஷ்யாமளா வத்ஸா பெங்களூரைச் சேர்ந்த மனநல நிபுணர், இருபது ஆண்டுகளுக்குமேலாக இத்துறையில் பணியாற்றிவருகிறார். இளைஞர்களுக்கான இந்தப் பத்தி, பதினைந்து நாள்களுக்கு ஒருமுறை இந்தப் பகுதியில் வெளியாகும். இதுபற்றி உங்களுக்கு ஏதேனும் கருத்துகள், கேள்விகள் இருந்தால், இந்த மின்னஞ்சல் முகவரியில் எழுதுங்கள்: columns@whiteswanfoundation.org

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org