நேர்வித உளவியல் என்றால் என்ன?

இப்போதெல்லாம் நேர்வித உளவியலைப்பற்றிப் பலரும் பேசுகிறார்கள். 'மகிழ்ச்சி' என்ற சொல்லைக்கொண்ட புத்தகங்கள் அதிகமாகிவிட்டன. முன்பெல்லாம் கல்விசார்ந்த சஞ்சிகைகளில்மட்டுமே காணப்பட்ட எதிர்த்துநிற்கும் திறன், நலன், நன்றியுணர்வு, மனமுழுமை போன்ற சொற்களெல்லாம் இப்போது வெகுஜனப் பத்திரிகைகளிலும் தென்படுகின்றன. அமெரிக்காவில் 200க்கும் மேற்பட்ட கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் (என்னுடைய பல்கலைக்கழகம் உள்பட) இந்தத் துறையில் படிப்புகளை வழங்குகின்றன. இந்தத் துறைபற்றிய கட்டுரைகளை வெளியிடும் புதிய தொழில்முறைப் பத்திரிகைகளும் தோன்றியுள்ளன. உதாரணமாக, 'மகிழ்ச்சி ஆய்வுகள் சஞ்சிகை' போன்றவற்றைக் காண இயலுகிறது.

இந்தத் திடீர் ஆர்வத்தால், இத்துறைசார்ந்த ஒரு பெரிய மாற்றம் வந்துள்ளது. ஒரு நூற்றாண்டுக்கும்மேலாக, உளவியல் கோட்பாடுகள், செயல்பாடுகள் ஆகிய இரண்டுமே செயல்திறன் கோளாறுகள், மனநலப் பிரச்னை, உணர்வுச் சேதத்தைச் சரிசெய்தல் போன்றவற்றில்தான் கவனம் செலுத்தின. இதில் நாம் ஆச்சர்யப்படுவதற்கு எதுவும் இல்லை. காரணம், இத்துறையில் சிறந்து விளங்கிய சிக்மண்ட் ஃப்ராய்ட் போன்றோர் மருத்துவர்கள், இவர்களுக்கு நோய்க்கூறுகளை எப்படிக் கண்டறிவது என்பதில்தான் பயிற்சி அளிக்கப்பட்டது, ஆரோக்கியத்தைக் கண்டறிவதில் அல்ல. பிறகு, 1998ல், பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் மார்ட்டின் செலிக்மன் ஒரு மாற்றத்தைத் தொடங்கிவைத்தார். அப்போது அவர் அமெரிக்க உளவியல் கழகத்தின் தலைவராக இருந்தார். அந்தப் பதவியைப் பயன்படுத்தி, அவர் ஓர் அறிவியல் ஆய்வை முன்னிறுத்தினார். அதனை அவர் 'மனித பலங்கள் மற்றும் நல்லொழுக்கங்களின் ஆய்வு என்று அழைத்தார். இதில் கருணை, ஆர்வம், படைப்புணர்வு, தைரியம், மன்னித்தல், நம்பிக்கை, பேரார்வத்தோடிருத்தல், தலைமைக்குணம் போன்றவற்றில் கவனம் செலுத்தப்பட்டது.

'நேர்வித உளவியல்' என்ற சொல்லை உருவாக்கியவர் செலிக்மன்தான், ஆனால், அவருக்கு 60 ஆண்டுகளுக்குமுன்பாகவே இன்னொரு பிரபலமான அமெரிக்க உளவியலாளர் 'ஒருவரிடம் எது சரியில்லை என்பதைக் கவனிக்காதீர்கள், அவரிடம் எது சரியாக உள்ளது என்பதைக் கவனியுங்கள்' என்றார். அவர்: ஆப்ரஹாம் மாஸ்லோ. ஆளுமை, ஊக்கம் போன்ற துறைகளில் பல வருங்காலச் சாத்தியங்களைக்கொண்ட ஆய்வுகளை நிகழ்த்தியவர் அவர். சுய-இயல்பாக்கம், உச்ச-அனுபவம் மற்றும் ஒத்திசைவு போன்று அவர் முன்வைத்த கொள்கைகள் இப்போது தினசரி ஆங்கிலத்திலேயே கலந்துவிட்டன. நேர்வித உளவியலின் இரண்டு முக்கிய அம்சங்களில்மட்டுமே நாம் இப்போது கவனம் செலுத்தவிருக்கிறோம். அவை: ஓட்ட அனுபவங்கள், நம் வாழ்க்கையில் நம்பிக்கைக்குரிய ஒருவரின் இருப்பு

தினசரி வாழ்க்கையில் ஓட்டத்தைக் கண்டறிதல்

ஒருவர் ஏதோ ஒரு வேலையை ஆர்வத்தோடு செய்துகொண்டிருக்கிறார். ஒருகட்டத்தில், அவர் 'தன்னைத்தானே மறந்துவிடுகிறார்', காரணம், அவர் அதில் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஈடுபடுவதுதான். அந்த வேலையைச் செய்கிறபோது, நேரம் அதிவேகமாக ஓடுவதுபோல் அவர் உணர்கிறார். இதுவே ஓட்ட அனுபவம் எனப்படுகிறது. இதனைத் தனிப்பட்டமுறையில்/ நிறுவனரீதியில் எப்படிப் பயன்படுத்திக்கொள்வது என்று பலரும் ஆராய்ந்துவருகிறார்கள். குறிப்பாக, தொழில்துறைத் தலைவர்கள் இதில் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்கள். காரணம், ஒரு நிறுவனத்தில் இத்தகைய தருணங்களை உருவாக்கினால், ஊழியர்கள் மிகவும் ஆர்வத்துடன் வேலை செய்வார்கள், அவர்களது செயல்திறன் அதிகரிக்கும். அவர்களுடைய நோக்கம் என்ன? தினசரி நடவடிக்கைகளில் ஓட்ட அனுபவங்களைத் தூண்டுவதற்கும் அவற்றைத் தக்கவைத்துக்கொள்வதற்கும் உதவுதல்.

முன்பு 'ஓட்டத்தோடு செல்லுங்கள்' என்று ஒரு பிரபலமான வாசகம் இருந்தது. அதற்கும் இந்த உளவியல் கொள்கைக்கும் தொடர்பில்லை என்று சொன்னால் பலரும் ஆச்சர்யப்படுவார்கள். உண்மையில் இந்தக் கொள்கை பல ஆண்டு ஆராய்ச்சிக்குப்பிறகு உருவாக்கப்பட்டது. டாக்டர் மிஹல்யி சிக்ஸ்ஜென்ட்மிஹல்யி தனது சொந்த வாழ்க்கை அனுபவங்களையும் கலந்து ஆராய்ச்சி செய்து இதனைக் கண்டறிந்தார். டாக்டர் மிஹல்யி சிக்ஸ்ஜென்ட்மிஹல்யி 1934ல் ஹங்கேரியில் பிறந்தவர். அவரது குழந்தைப்பருவத்தின்போதுதான் இரண்டாம் உலகப்போர் மூண்டது. ஆகவே, அவர் மிகுந்த சிரமங்களை அனுபவித்தார். அப்போது, அவருக்கு மகிழ்ச்சி தந்த ஒரு விஷயம், சதுரங்கம். அந்த விளையாட்டில் ஈடுபடும்போது, அவரால் தனது துயரங்களை மறக்க இயன்றது. வேறோர் இடத்துக்குச் சென்றுவிடுவதுபோல் உணர்ந்தார் அவர். இதுபற்றிப் பின்னர் ஒரு பேட்டியில் டாக்டர் சிக்ஸ்ஜென்ட்மிஹல்யி கூறியது, "அது ஓர் அற்புதமான அனுபவம். அந்த விளையாட்டு என்னை ஒரு வித்தியாசமான உலகத்துக்கு அழைத்துச்சென்றது. அங்கே இதுபோன்ற துயரச் சம்பவங்களுக்கு இடமே இல்லை. ஆகவே, நான் மணிக்கணக்காக அந்த விளையாட்டை விளையாடிக்கொண்டிருந்தேன். தெளிவான விதிமுறைகள், இலக்குகளைப் பின்பற்றி விளையாடி மகிழ்ந்தேன்.” பின்னர், சிக்ஸ்ஜென்ட்மிஹல்யி பதின்பருவத்தில் நுழைந்தபோது, அவருக்குப் படம் வரைவதில் ஆர்வம் ஏற்பட்டது. இதுவும் அவரைச் சட்டென்று உள்ளிழுத்துக்கொண்டது. 1965ல் சிகாகோ பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற சிக்ஸ்ஜென்ட்மிஹல்யி, கலைஞர்கள், பிற படைப்பாளிகளைப்பற்றிய பல முக்கியமான ஆய்வுகளை நிகழ்த்தினார். இந்த ஆய்வுகள்தான், பின்னர் 'ஓட்டம்' என்ற கோட்பாட்டை உருவாக்க உதவின. இதன் வரையறை, "ஓட்ட நிலையில் உள்ள ஒருவர் ஒரு செயலில் மிகவும் ஆழ்ந்துவிடுகிறார், அவருக்கு வேறு எதுவும் முக்கியமாகத் தோன்றுவதில்லை. அது அவருக்கு மிகவும் மகிழ்ச்சி தருகிறது. ஆகவே, அவர் தனக்கு எந்த இழப்பு ஏற்பட்டாலும் பரவாயில்லை, இதைச் செய்வதுதான் முக்கியம் என்று கருதுகிறார்." ஒருவர் ஓட்ட அனுபவத்தில் இருக்கிறார் என்பதை எப்படி உணர்வார்? டாக்டர் சிக்ஸ்ஜென்ட்மிஹல்யி இதற்காக 8 அம்சங்களை அடையாளம் கண்டுள்ளார்: 1) செயலும் விழிப்புணர்வும் கலந்த நிலை, அதன்மூலம் ஒருவர் செயலுக்கு 'உள்ளே' முழுமையாகச் சென்றுவிடுகிறார்; 2) தன்னிடமுள்ள பணியில் முழு கவனம் செலுத்துவார், எதிலும் கவனம் சிதறமாட்டார்; 3) கட்டுப்பாட்டை இழப்பதுபற்றிக் கவலைப்படமாட்டார்; 4) தன்னுணர்வை இழந்துவிடுவார், அவரது ஈகோ அமைதியாக்கப்பட்டிருக்கும், அல்லது, அவரைவிடப் பெரிய ஒன்றுடன் இணைந்திருக்கும்; 5) நேரம் ஓடுவதே தெரியாது, ஒன்று, 'நேரம் வேகமாகச் சென்றுவிடும்', அல்லது, 'நேரம் மிக மெதுவாகச் செல்லும்'. 6) இந்த அனுபவம் 'ஆட்டோலெடிக்' என்பப்படும். அதாவது, இதைச் செய்பவர் இதனால் தனக்கு என்ன பலன் கிடைக்கும் என்பதைப்பற்றியெல்லாம் யோசிக்கமாட்டார், இதைச் செய்வதில்தான் முழு கவனம் செலுத்துவார். 7) இது ஒரு செயல்திறன் தேவைப்படும் வேலையாக இருக்கும். குறிப்பாக, ஒருவர் இயல்பாக எந்தத் திறனுடன் செயல்படுவாரோ, அதிலிருந்து சற்றே அதிகத் திறனுடன் செயல்படவேண்டிய சவால் அவருக்கு இருக்கும்.8) இந்த வேலையில் தெளிவான இலக்குகள் இருக்கும், ஒருவருடைய செயல்பாட்டுக்கு உடனடி விமர்சனம் கிடைக்கும். அதாவது, தான் என்ன செய்யவேண்டும் என்பது அவருக்குத் தெரிந்திருக்கும், தான் அதைச் செய்கிறோமா என்று குழப்பத்தில் இருக்க நேராது.

உங்களுக்கு ஒரு நம்பிக்கையான நண்பர் இருக்கிறாரா?

25 ஆண்டுகளுக்கும் மேலாக, பழகுமுறை அறிவியலாளர்கள் நட்பு மற்றும் நலன் இடையே உள்ள ஓர் அளவிடக்கூடிய இணைப்பை உறுதிப்படுத்திவருகிறார்கள். ஆனால், இது ஒரு புதிய கருத்து அல்ல. பழங்கால கிரேக்கத் தத்துவஞானியான அரிஸ்டாட்டில் மூன்றுவிதமான நட்புகளை அடையாளம் கண்டார்: தொழில்முறை நட்பு (தொழில் நன்மைக்காக), மகிழ்ச்சிக்கான நட்பு (ஒரேமாதிரியான ஆர்வங்கள்) மற்றும் நல்லொழுக்க நட்பு (உணர்வுசார்ந்த அக்கறை மற்றும் பராமரிப்பு). தினசரி வாழ்க்கையில் மனிதனுடைய நலனில் மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்குவது நல்லொழுக்கங்களின் அடிப்படையிலான நட்புதான் என்றார் அவர். பின்னர், மத்திய காலகட்டத்தில், அரிஸ்டாட்டிலின் பார்வையை மோசஸ் மைமொநிடெஸ் என்பவர் மேலும் நீட்டித்து எழுதினார். இவர் ஸ்பெயின், எகிப்தில் வாழ்ந்த புகழ்பெற்ற மதகுரு, மருத்துவர் ஆவார். நட்பு என்பது ஒருவருடைய நலனுக்கு மிகவும் அவசியமானது என்பதே அவருடைய கொள்கை. "ஒருவருடைய வாழ்நாள்முழுக்க நண்பர்கள் தேவை" என்றார் அவர். "ஒருவர் நல்ல உடல்நலத்துடன் இருக்கும்போது, செல்வச்செழிப்புடன் இருக்கும்போது, அவர் நண்பர்களுடன் நேரம் செலவிட விரும்புகிறார். அவருக்குப் பிரச்னை வந்தாலும், அவர் நண்பர்களையே தேடுகிறார். வயதாகும்போது, அவரது உடல் பலவீனமடைகிறது. அப்போதும் நண்பர்கள் அவருக்கு உதவுகிறார்கள்."

சரித்திரத்தில் அரிஸ்டாட்டில், மைமொநிடெஸ் போன்ற சிந்தனையாளர்கள் நட்புக்கும் நலனுக்கும் இடையிலுள்ள ஒரு தெளிவான பிணைப்பைக் கண்டார்கள். ஆனால், அறிவியல்ரீதியில் இது உறுதிப்படுத்தப்படவில்லை. அதற்கான சான்றுகள் இப்போதுதான் தோன்றத்தொடங்கியுள்ளன. இதற்காகப் பல ஆய்வுகள் கருத்தில் கொள்ளப்பட்டன, இவற்றில் வட அமெரிக்கப் பதின்பருவத்தினர் மத்தியில் போதைப்பொருள் பழக்கம், மனச்சோர்வு தொடங்கி, மெக்ஸிகோ ஆண்கள் மத்தியில் ஆரோக்கியப் பழக்கவழக்கங்கள்வரை பலவும் ஆராயப்பட்டன. இவற்றைத் தொகுத்துப்பார்த்தபோது, திரும்பத் திரும்பத் தெரியவந்த விஷயங்கள், ஒரு நம்பிக்கையுள்ள நண்பர் இருந்துவிட்டால், ஒருவர் எந்தவிதமான ஆபத்திலோ, தன்னைத்தானே சிதைத்துக்கொள்ளும் முயற்சியிலோ சிக்குவதில்லை. அத்துடன், யாருக்கெல்லாம் நெருங்கிய நண்பர்கள் இருக்கிறார்களோ, அவர்களுடைய ஒட்டுமொத்த நலனும் சிறப்பாக உள்ளது என இந்த ஆராய்ச்சிகளின்மூலம் தெரியவந்துள்ளது. இவர்களுக்கு இதயப் பிரச்னை, உயர் இரத்த அழுத்தம், ஆஸ்துமா போன்ற நாள்பட்ட மருத்துவப் பிரச்னைகள் வரும் வாய்ப்பும் குறைவு எனத் தெரிகிறது. அதேபோல், ஒரு நெருங்கிய நண்பரைக் கொண்டுள்ள ஒருவர் அதிகம் எதிர்த்துநிற்கும் திறனைக் கொண்டுள்ளார், அவருக்கு மனச்சோர்வு வரும் ஆபத்து குறைகிறது. பிரிட்டனைச் சேர்ந்த டாக்டர் பால் சர்டீஸ், கேம்பிரிட்ஜில் உள்ள ஸ்ட்ரேஞ்ச்வேஸ் லெபாரட்டரியில் அதீத உடல்பருமன்பற்றி ஓர் ஆய்வை நிகழ்த்தினார். அதில் ஓர் ஆணுக்கு ஒரு நெருங்கிய நண்பர் இல்லாவிட்டால், அவரது செயல்வயது நான்கு ஆண்டுகள் அதிகரித்துவிடும், அதேபோல் ஒரு பெண்ணுக்கு ஒரு நெருங்கிய நண்பர் இல்லாவிட்டால், அவரது செயல்வயது ஐந்து ஆண்டுகள் அதிகரித்துவிடும் என்று தெரியவந்துள்ளது.

ஒவ்வொரு மாதமும், நேர்வித உளவியல்பற்றிய உடனடி அறிவியல் விவரங்களை நான் உங்களுக்கு வழங்குவேன். என்னுடைய அடுத்த பத்தி, நமது தினசரி நலனில் நன்றியுணர்வு மற்றும் மன்னித்தலின் முக்கியத்துவத்தைப்பற்றிப் பேசும்.

​எட்வர்ட் ஹாஃப்மன் நியூ யார்க் நகரத்தில் உள்ள யெஷிவா பல்கலைக்கழகத்தில் கூடுதல் இணை உளவியல் பேராசிரியர் ஆவார். உரிமம்பெற்ற மருத்துவ உளவியலாளரான அவர், உளவியல் மற்றும் அதுதொடர்பான 25க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி/தொகுத்துள்ளார். டாக்டர் ஹாஃப்மன் சமீபத்தில் டாக்டர் வில்லியம் காம்ப்டனுடன் இணைந்து நேர்வித உளவியல்: மகிழ்ச்சி மற்றும் மலர்தலின் அறிவியல் என்ற நூலை எழுதியுள்ளார். இவர் இந்திய நேர்வித உளவியல் சஞ்சிகை மற்றும் மனிதாபிமான உளவியல் சஞ்சிகை போன்றவற்றின் ஆசிரியர் குழுக்களில் பங்கேற்கிறார். நீங்கள் அவருக்கு எழுத, இந்த மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தலாம்: columns@whiteswanfoundation.org

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org