வழக்கமான பதின்பருவத்தினர்

'வழக்கமான பதின்பருவத்தினர்' என்பவர் யார்?

இந்தச் சொல்லை நான் பெற்றோரிடம்தான் கேட்டிருக்கிறேன். அதிலும் குறிப்பாக, பிரச்னைதரும் பதின்பருவத்தினரைப் பெற்ற தந்தை, தாய்தான் இந்தச் சொல்லை அதிகம் பயன்படுத்துகிறார்கள். இந்தப் பெற்றோரின் மகன்கள்/மகள்கள் இரவு நெடுநேரம் விழித்திருக்கிறார்கள், அதிகம் மது அருந்துகிறார்கள், காலையில் நெடுநேரம் தூங்குகிறார்கள், நல்ல் மதிப்பெண்கள் வாங்குவதில்லை... இதை எண்ணி இந்தப் பெற்றோர் கவலைகொள்கிறார்கள். 'என் மகனுக்கு வீடுங்கறது வெறுமனே தூங்கறதுக்கு, துணி துவைக்கறதுக்கான இடம்தான்' என்கிறார்கள் இவர்கள், 'எங்களைக்கூட அவன் வெறும் ATMமாதிரிதான் பார்க்கறான்.' இவையெல்லாம் நான் சொல்பவை அல்ல, அந்தப் பெற்றோர் சொல்பவை. இந்தப் பெற்றோரைக்கேட்டால், 'வழக்கமான பதின்பருவத்தினர் அவ்வப்போது கோபப்படுவார்கள், அளவுக்குமீறிப் பேசுவார்கள்' என்று சொல்வார்கள், அது இயல்புதான் என்று இவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். இதைச் சொல்லும்போது, அவர்கள் முகத்தில் ஒரு புன்னகை தோன்றும். சற்றுத்தொலைவில் அமர்ந்திருக்கும் தங்கள் மகன் அல்லது மகள் வருத்தப்பட்டுவிடக்கூடாதே என்பதற்காக அவர்கள் இந்தச் சிரிப்பைப் பயன்படுத்துவார்கள்.

சில நேரங்களில் இவர்கள் தங்களுடைய மகளைப்பற்றிச் சொல்லும்போது, 'அவ ரொம்ப நல்ல பொண்ணு, வழக்கமான பதின்பருவத்தினர்மாதிரி இல்லை' என்றுசொல்லி அதிர்ச்சியளிப்பார்கள். இதன் பொருள், அந்தப் பெண் தேர்வுகளில் நல்ல மதிப்பெண் எடுக்கிறாள், தன்னுடைய சிநேகிதர்களைப் பெற்றோருக்கு அறிமுகப்படுத்துகிறாள், மாலையில், நமது நகரங்களில் குழந்தைகளுக்கு, குறிப்பாகப் பெண்களுக்கு நிகழக்கூடிய ஆபத்துகளைப்பற்றி அவளுடைய பெற்றோர் கவலைப்படுவதற்குள் வீட்டுக்கு வந்துவிடுகிறாள். சில இளைஞர்கள், இரவு நெடுநேரம் கொண்டாட்டங்களில் கலந்துகொள்வதுண்டு. ஆனால், அதைப்பற்றிப் பெற்றோரிடம் சொல்லிவிடுகிறார்கள். கொண்டாட்டம் முடிந்தபிறகு, தங்களை வீட்டுக்கு அழைத்துவருவதற்காகக் குடிக்கும் பழக்கமில்லாத ஒரு நண்பரைப் பிடித்துவைத்திருக்கிறார்கள்.

நான் சந்திக்கும் பல பதின்பருவத்தினருக்குத் தங்களுடைய மதிப்பெண்களைப்பற்றிய கவலை இருக்கிறது, தங்களுக்கு நல்ல கல்லூரியில் இடம் கிடைக்குமா என்ற கேள்வி இருக்கிறது. அவர்கள் கச்சிதமானவர்களாக நடந்துகொள்வதில்லைதான், அது அவசியமா என்ன? அவர்கள் அவ்வப்போது அறிவுகெட்டத்தனமாக எதையாவது செய்வதுண்டு, தேர்வுகளில் தோற்றுப்போவதுண்டு, நண்பர்களுடன் ஊர்சுற்றுவதற்காக வகுப்புக்குச் செல்லாமலிருப்பதுண்டு. அவர்கள் 'எல்லாவற்றையும்' தங்கள் பெற்றோரிடம் சொல்வதில்லை. இது இயல்புதான். வளர்ச்சி என்பது அதுதானே? அவர்கள் தனித்துவமான இளைஞர்களாகிறார்கள், தங்கள் செயல்களுக்குத் தாங்களே பொறுப்பேற்கிறார்கள். அவர்களுடைய பெற்றோரின் மதிப்பீடுகளும் அவர்களுடைய மதிப்பீடுகளும் ஒரேமாதிரி இருக்கவேண்டும் என்று அவசியமில்லை, அப்படி இருப்பதுமில்லை. ஆனால், அவர்களுக்குக் குடும்பத்தின்மீது அக்கறை இருக்கிறது, பெற்றோர், உடன்பிறந்தோருடன் ஒத்திசைந்து வாழ்வதை விரும்புகிறார்கள்.

பதின்பருவத்தினர் இப்படிதான் இருப்பார்கள் என்று முத்திரைகுத்துவது சரியல்ல, அப்படிப்பார்த்தால், பெரியவர்களைக்கூட இப்படிதான் என்று முத்திரைகுத்தலாமல்லவா? பதின்பருவத்தினரிடம் பொதுவாகக் காணப்படும் ஒரே விஷயம், அவர்கள் சுதந்தரமானவர்களாக வளர விரும்புகிறார்கள், இது ஒரு நியாயமான எதிர்பார்ப்பு, தேவை, வாழ்க்கையின் இயல்பான பகுதி. அவர்கள் செய்கிற எல்லாமே, அவர்களுக்குள் இருக்கும் இந்தத் தேவையின் அடிப்படையில்தான் அமைகிறது. பதின்பருவத்தில் எந்தச் சவால்களும் இல்லை என்று நான் சொல்லவரவில்லை. பதின்பருவத்தில் உள்ள யாரைக்கேட்டாலும் அதைப்பற்றி விரிவாகப் பேசுவார்கள்: அடையாளம், உடல் தோற்றம், கல்வி, சக நண்பர்களுடனான உறவுகள், கல்லூரிக்குத் திட்டமிடல் என ஏகப்பட்ட சவால்கள் இவர்களுக்கு உள்ளன. ஆனால் அதற்காக, அவர்கள் எல்லாரும் மோசமான சூழலைச் சந்திக்கிறார்கள் என்று சொல்லிவிட இயலாது. சிலர் அவ்வாறு இருக்கலாம், ஆனால் பெரும்பாலான பதின்பருவத்தினர் அப்படியில்லை.

அப்படியானால், இந்த நம்பிக்கைகள் எங்கிருந்து வருகின்றன? 'வழக்கமான பதின்பருவத்தினர்' என்ற சொல், பொதுவாகப் பிரச்னை தரும் பிள்ளைகளை விவரிக்கிறது. அவர்கள் பாதுகாப்பற்ற உணர்வோடு இருக்கிறார்கள், அவர்கள் தங்களைப்பற்றி மகிழ்ச்சியாக உணர்வதில்லை. தங்களுடைய போதாமையை மறைப்பதற்காக, அவர்கள் எதிலும் ஆர்வமில்லாதவர்களைப்போல, அல்லது, ஆவேசமானவர்களைப்போல நடந்துகொள்கிறார்கள். அவர்களுடைய பிரச்னைகள் சில இயற்கையான காரணங்களாலும், சில சூழ்நிலைகளாலும் ஏற்படுகின்றன.

பிரச்னை தரும் ஓர் இளைஞர், ஏமாந்துபோயிருக்கலாம், கோபத்துடன், சோகத்துடன் காணப்படலாம். அவர் மிகுந்த மனச்சோர்வில் இருக்கலாம், நிரந்தரமாக இங்கிருந்து விலகிச்சென்றுவிடவேண்டும் என்று நினைக்கலாம். அவர் தனிமையில் இருக்கலாம், குழப்பத்தில் இருக்கலாம், தன் பிரச்னைகளைப் பகிர்ந்துகொள்ள அவருக்கு ஒருவரு இல்லாமல்போகலாம். எல்லாருக்கும் வாழ்க்கையில் ஏதோ ஒருநிலையில் ஆதரவு தேவைப்படுகிறது, ஆகவே, ஆதரவை நாடுவதில் தவறிக்கை. அது வெறும் முதல் படிதான்: முன்பின் தெரியாத ஒருவரைத் தொலைபேசியில் அழைத்து, 'நான் உங்களைச் சந்திக்கவேண்டும்' என்று நேரம் கேட்பது சிரமம்தான், இதைப் பல இளைஞர்கள் என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் முதன்முறை தொலைபேசியில் அழைக்கும்போது, அவர்களுடைய குரலில் பயம் தெரிகிறது, அல்லது, இதில் ஆர்வமில்லாதவர்களைப்போல் பேசுகிறார்கள், அந்தக் குரலால் அவர்களுடைய அச்சங்களை மறைக்க இயலுவதில்லை.

இவர்கள் முதன்முறை என்னைப் பார்க்கவரும்போது, என்னைச் சந்தேகத்துடன்தான் அணுகுகிறார்கள். காரணம், என்னால் இவர்களைப் புரிந்துகொள்ள இயலாது என்று இவர்கள் எண்ணுகிறார்கள். இதைப்பற்றிப் பல இளைஞர்கள் என்னிடம் சொல்லியிருக்கிறார்கள், 'உங்களை முதன்முறை சந்தித்தபிறகு, இங்கே வருவதில் எனக்கு இருந்த தயக்கமெல்லாம் போய்விட்டது' என்று அவர்கள் சொல்வார்கள். காரணம், முதல்முறை அவர்கள் மனத்தில் இருந்ததையெல்லாம் கொட்டிவிட்டார்கள், அதுவே அவர்களுக்குப் பெரிய நிம்மதியைத் தந்துவிட்டது. இப்போது அவர்களால் இன்னும் தெளிவாகச் சிந்திக்கமுடிகிறது, அவர்கள் வாழ்க்கையில் மீண்டும் நம்பிக்கை மலர்கிறது.

இவர்களுக்கு மனச்சோர்வுக்கெதிரான மருந்துகள் தரப்படுவது வழக்கம். பல நேரங்களில், இந்த மருந்துகளைச் சில மாதங்கள் உட்கொள்கிறவர்களுக்கு நல்ல பலன்கள் தெரிகின்றன. நீண்டநாள் தொடரும் அழுத்தமானாலும் சரி, திடீர் அதிர்ச்சியானாலும் சரி, அவை மக்களின் மனங்களைப் பாதிக்கின்றன, மனச்சோர்வுக்கெதிரான மருந்துகள் இதனைச் சரிசெய்ய மிகவும் உதவுகின்றன. இந்த மருந்துகளை உட்கொள்கிறவர்கள் அதற்கு அடிமையாகிவிடமாட்டார்கள், வெறுமையாக நடந்துகொள்ளமாட்டார்கள், அப்படியெல்லாம் மக்கள் சொல்வது முழுவதும் தவறு. இப்படி ஒருவர் மருந்துகளைச் சாப்பிட்டுப் பதற்றம், மனச்சோர்வைக் குறைத்துக்கொண்டபிறகு, அவருக்குத் தெரபி சிகிச்சை வழங்கலாம்.

டாக்டர் ஷ்யாமளா வத்ஸா பெங்களூரைச் சேர்ந்த மனநல நிபுணர், இருபது ஆண்டுகளுக்குமேலாக இத்துறையில் பணியாற்றிவருகிறார். நீங்கள் பகிர்ந்துகொள்ள விரும்பும் கருத்துகள், கேள்விகள் எவையேனும் இருந்தால், இந்த மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்: columns@whiteswanfoundation.org

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org