எங்களைப்பற்றி மேலும் :: வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன் ::

எங்களைப்பற்றி மேலும்

நாங்கள் யார்

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன் ஃபார் மென்டல் ஹெல்த் என்பது மன நலத்துறையில் அறிவுச்சேவைகளை வழங்கிவரும் லாபநோக்கற்ற ஒரு நிறுவனம். மன நலப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டோர், அவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்கள் மற்றும் பிறருக்கு இந்தப் பிரச்னைகளைப்பற்றிய பலதரப்பட்ட தகவல்கள் தேவைப்படுகின்றன. இவற்றைக்கொண்டு  அவர்கள் மன நலப் பிரச்னைகளை எப்படிக் கையாள்வது என்பதுபற்றிய தீர்மானங்களை எடுக்க இயலும். அத்தகைய விவரங்களை நன்கு ஆராய்ச்சிசெய்து வழங்கும் நோக்கத்துடன் நாங்கள் செயல்பட்டுவருகிறோம். வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன் குழுவினர், உலகெங்கும் இதேபோன்ற சிந்தனையைக் கொண்ட தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி, மன நலம் பற்றிய மிகச் சிறந்த விவரங்களை உங்களுக்குக் கொண்டுவருவார்கள்.

எங்கள் தொடக்கம்

2013ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி, பெங்களூரில் உள்ள தேசிய மன நலம் மற்றும் நரம்பியல் அறிவியல் கல்விக் கழகத்தின் (NIMHANS) கழக நாள் விழா நடைபெற்றது. மைண்ட் ட்ரீ லிமிடெட் தலைவர் சுப்ரதோ பாக்சி இதில் முதன்மைச்சொற்பொழிவை வழங்கினார். அப்போது அவர் இந்தியாவில் மன நலத்துறை சந்திக்கும் பல்வேறு சவால்களைச் சமாளிக்கவேண்டுமானால், இத்துறைபற்றிய அறிவைப் பெருக்குவது முக்கியம் என வலியுறுத்தினார். மனநல நிபுணர்களும் பிறரும் இதுபற்றிய சரியான விவரங்களைப் பரப்பவேண்டும், அப்போதுதான் பொதுமக்கள் இதைப்பற்றித் தெரிந்துகொண்டு தீர்மானங்களை எடுக்க இயலும் என்று அவர் சொன்னார். இதைத்தொடர்ந்து, சுப்ரதோவின் தலைமையில் இதுகுறித்த ஆய்வொன்றை நிகழ்த்தினார் மனோஜ் சந்திரன். இதற்கு அவர் இந்திய மன நலப் பிரிவையும், சில வளர்ந்த நாடுகளில் பின்பற்றப்படும் சிறந்த நெறிமுறைகளையும் கருத்தில் கொண்டார். தேசிய மன நலம் மற்றும் நரம்பியல் அறிவியல் கல்விக் கழகத்தின் (NIMHANS) இயக்குநர்/ துணைவேந்தர் டாக்டர் பி. சதீஷ்சந்திரா, அக்கழகத்தின் பல உளவியல் நிபுணர்களின் பேராதரவுடன், இந்தியாமுழுவதும் இன்னும் பல மன நல நிபுணர்கள், இந்தத் துறையில் பணிபுரிந்துவரும் சமூகத் தொழிலதிபர்களுடைய கருத்துகளைச் சிந்தித்து, வொய்த் ஸ்வான் ஃபவுண்டேஷன் ஃபார் மென்டல் ஹெல்த்க்கான எங்கள் இலக்கை நாங்கள் தீர்மானித்தோம். மார்ச் 25, 2014 அன்று, நிறுவனச் சட்டத்தின் 25வது பிரிவின்படி லாபநோக்கற்ற ஒரு நிறுவனமாக இது உருவாக்கப்பட்டது. 

எங்களது பணி

“மன நலம் மற்றும் ஆரோக்கிய வாழ்க்கைபற்றிய அறிவுச் சேவைகளை வழங்குதல்”

எங்கள் இலக்கு

  • இந்தியாவின் முதன்மையான 10 நகரங்களில் உள்ள இளைஞர்களைச் சென்றுசேர்வது, இதற்காக 3 மொழிகளில், 500 நிபுணர்களைக்கொண்ட ஒரு வலுவான வலைப்பின்னலைப் பயன்படுத்துவது
  • மன நலம் மற்றும் ஆரோக்கியம் ஆகிய துறைகளில் செயல்படுத்தக்கூடிய அறிவை வழங்கும் இந்தியாவின் மிகப் பெரிய போர்ட்டலாகத் திகழ்வது
  • இந்தியாவில் மிகவும் வியக்கப்படும் முதன்மையான 10 லாபநோக்கற்ற நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்வது
  • ஐந்து சர்வதேச அமைப்புகளுடன் வியூகரீதியிலான கூட்டணியை அமைப்பது
  • வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷனைக் கிராமப்புற இந்தியாவுக்குக் கொண்டுசெல்வது

தி வொய்ட் ஸ்வான், எங்களுடைய சின்னம்

எங்களுடைய காட்சிபூர்வமான அடையாளத்தை வடிவமைத்தவர், விருதுபெற்ற வடிவமைப்பாளர் சுஜாதா கேசவன் (Ray+Keshavan | Brand Union). மற்ற அன்னங்கள் இடப்பக்கமிருந்து வலப்பக்கம் நீந்தும்போது, இந்த அன்னம்மட்டும் வலப்பக்கமிருந்து இடப்பக்கம் நீந்துகிறது, மந்தை மனோபாவத்தை மீறி அது செல்கிறது. இங்கே அன்னம் ஒரு வடிவம் அல்ல, அது ஓர் எதிர்வடிவத்திலிருந்து உருவாக்கப்பட்டுள்ளது. உண்மையில் இங்கே எதுவுமே இல்லை: வடிவம் இல்லை, நிறம் இல்லை. வெறும் வெள்ளைக் காலியிடம்தான் இருக்கிறது. இங்கே நாம் ஓர் அன்னத்தைக் காணக் காரணம், மேலே உள்ள இடம் ஓர் அன்ன வடிவத்தினாலும் ஒரு நீலச் செவ்வகத்தாலும் வரையறுக்கப்பட்டிருக்கிறது. இதனை ஜெஸ்டால்ட் படம் என்பார்கள், இங்கே காலியிடம்தான் இருக்கிறது என்றாலும், உங்கள் மனம் தேவையான இணைப்புகளை ஏற்படுத்திக்கொண்டு அங்கே ஓர் அன்னத்தைக் காண்கிறது. அன்னம் என்பது, மென்மையானது, நாசூக்கானது, அது அக்கறையான ஒரு தருணத்தைக் காட்டுகிறது. இந்த அன்னம், தனது குழந்தைகளைப் பேணி வளர்ப்பதுபோல் தோன்றுகிறது. அந்தக் குட்டி அன்னங்களையும் நாம் கற்பனை செய்து காணலாம், அதன் மேலெழுந்த சிறகைப் பார்கும்போது, அது அசைந்துகொண்டிருப்பது தெரிகிறது, அது நீரில் ஊர்ந்து செல்வதை நாம் அறிகிறோம். இங்குள்ள வெட்ஜ்வுட் வகை நீலமும், பெரிய, சிறிய எழுத்துகள் சேர்த்துப் பயன்படுத்தப்பட்டிருக்கும் தன்மையும் எங்களது நோக்கத்தின் தீவிரத்தன்மையைக் காட்டுகின்றன, எங்களை யாரும் எளிதில் அணுகலாம், நாங்கள் அனைவரிடமும் அக்கறையோடு நடந்துகொள்வோம் என்பதை உணர்த்துகின்றன.