மனநலன்: சமூகத்தின் கடமை

பாதிக்கப்பட்டவர்கள் அவர்களுக்குப் பழக்கமான சூழலில் சிகிச்சை பெற்றால், அவர்கள் விரைவில் குணமாவர்கள். மனநல பாதிப்பைப்பற்றிய சமூகத்தின் களங்க உணர்வும் குறையும்

மருதூரில் ஒரு குடிசை. 32 வயது சுப்பண்ணா தன்னைச் சுற்றி அமர்ந்திருக்கும் பக்கத்து வீட்டுக்காரர்களை கவனமில்லாமல் பார்க்கிறார். சற்றுத் தொலைவில் அவர் தாய் லக்ஷ்மி அமர்ந்திருக்கிறார் அவரது வயது 80. சிறுவயதிலேயே சுப்பண்ணாவிற்கு புத்திசாலித்தன குறைபாடு மற்றும் சைக்கோசிஸ் இருப்பது கண்டறியப்பட்டது. அப்போதிலிருந்து அவருடைய தாய்தான் அவரைக் கவனித்து வருகிறார். 80 வயதில் அவரும் இப்போது மிகவும் களைத்துவிட்டார். எந்த நேரமும் தான் மகனைக் கவனித்துக்கொண்டே இருப்பது, அவர் எந்த நேரத்தில் என்ன செய்வாரோ என்ற பதற்றத்தில் மற்ற வேலைகளைக் கவனிப்பது அவருக்கு சிரமமாக இருக்கிறது. ‘நான் இறந்த பிறகு என் மகன் என்ன செய்வான்’ என்று கவலைப்படுகிறார் லக்ஷ்மி. அவருடைய கவலையைப் போக்க வேண்டியது அக்கம்பக்கத்தில் உள்ளோரின் பொறுப்பல்லவா? சென்னையிலிருந்து வந்த லாபநோக்கற்ற தனியார் நிறுவனம் ஒன்று, மருதூரில் குறைபாடுள்ளோர் சுய உதவிக் குழு ஒன்றை உருவாக்கியுள்ளது. இந்தச் சமூக சேவை நிறுவனத்தில் உள்ளவர்கள் மரூதூர் போன்ற கிராமத்தில் உள்ளவர்களிடம் கலந்து பேசி, சுப்பாண்ணா போன்ற மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் கவனிக்க வேண்டியது அந்தந்த சமூகத்தின் பொறுப்பு என புரிய வைக்கிறார்கள்.

ஆகவே லக்ஷ்மிக்கு என்றைக்காவது வீட்டிற்கு வெளியே வேலை இருந்தால், அவர் இந்தச் சமூக அமைப்பில் இருக்கிறவர்களைத் தொடர்பு கொண்டு தன்னுடைய மகனை கவனித்துக்கொள்ளுமாறு கேட்கிறார். அவர்களும் உதவி செய்கிறார்கள். “இத்தனை ஆண்டுகளாக சுப்பண்ணாவை கவனித்துக்கொண்டிருக்கிற லக்ஷ்மிக்கு உடலளவிலும் மனத்தளவிலும் சோர்வு ஏற்படுவது இயல்பு, மனநலம் பாதிக்கப்பட்டவரைக் கவனித்துக்கொள்கிற லக்ஷ்மியைப் போல் நாங்கள் உதவுகிறோம் அவர்களுடைய சுமையிலிருந்து தாற்காலிகமாக அவர்களுக்கு ஓய்வு தருகிறோம் அதன்மூலம் அவர்கள் வேறு வேலைகளைக் கவனிக்க இயலும் அந்த நேரத்தில் முறை வைத்துக்கொண்டு மாறி மாறி நாங்கள் மனநலம் பாதிக்கப்பட்டவரைக் கவனித்துக்கொள்கிறோம்” என்கிறார் சதீஷ். இவர் மருதூரில் உள்ள குறைபாடுள்ளோர் பராமரிப்பு நிறுவனம் ஒன்றின் உறுப்பினர். இதற்காக ஓர் அமைப்பு வந்து உதவி செய்யவேண்டும் என்று அவசியமில்லை. லக்ஷ்மிக்கு திடீரென்று ஏதாவது ஒரு வேலை வந்துவிட்டால், அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு புறப்படலாம். அவர்களும் சுப்பண்ணாவை அக்கறையோடு கவனித்துக்கொள்கிறார்கள். ஆனால் இந்த மாற்றம் ஒரு ராத்திரியில் நிகழ்ந்துவிடவில்லை. பல ஆண்டுகளாக மனநலப் பிரச்னையைப்பற்றிய முகாம்கள் மருதூர் போன்ற கிராமத்தில் நடத்தப்பட்டன, பல்வேறு மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டன. மனநல நிபுணர்கள் இந்தக் கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் வருகை தந்து மக்களுக்கு மனநல பாதிப்பைப்பற்றியும் அதனால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்களைப்பற்றிய தேவைகளைப்பற்றியும் மக்களுக்குப் புரிய வைத்தார்கள். அதன்மூலம், லஷ்மி போன்ற எண்ணற்ற நபர்களுக்கு பலன் கிடைத்து இருக்கிறது.

மனநலம் பாதிக்கப்பட்டவர்களை சமூகம் கவனித்துக்கொள்ளவேண்டியது ஏன் முக்கியம்

மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெறுமனே மருந்துகள் மட்டுமே கிடைத்தால் போதாது. அவர்கள் குணமாவதற்கு அவர்களைக் கவணித்துக்கொள்கிறவர்களுடைய அக்கறையும் அவர்களைச் சுற்றியுள்ள சமூகத்தின் ஆதரவும் தேவை. அப்போதுதான் அவர்களால் கண்ணியமான ஒரு வாழ்க்கையை வாழ இயலும், புனர்வாழ்வு ஒன்றை அமைத்துக்கொள்ள இயலும், அதாவது அவர்கள் தங்கள் தினசரி வேலைகளை பழையபடி செய்யத்துவாங்குவார்கள். முன்புபோல் வேலைக்குச் சென்று தங்களுடைய குடும்பத்தினரை கவனித்துக்கொள்ள ஆரம்பிப்பார்கள். சமூக விழாக்கள் போன்றவற்றிற்கு பங்கு பெறத்தொடங்குவார்கள். இவை அனைத்திற்கும் சுற்றியிருக்கிற சமூகத்தின் ஆதரவு தேவை.

சமூகத்தினரின் மூலம் வழங்கப்படுகிற இன்னும் பல விதங்களில் கிராமப்புற மக்களுக்கு உதவுகிறது. பொதுவாக இந்தக் கிராமங்களில் உடல்நலப் பிரச்னைகளைக் கவனிக்கிற மருத்துவமனைகள் இருப்பதே அபூர்வம்தான். மனநலப் பிரச்னைகளைப் புரிந்து கொண்டு சிகிச்சை அளிக்கிற நிபுணர்கள் இந்தக் கிராமப்புற மக்களுக்குக் கிடைப்பார்கள் என்று சொல்ல முடியாது. ஆகவே பல்வேறு அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் அந்தந்த கிராமங்களில் உள்ள ஆர்வலர்களுடன் இணைந்து பணியாற்றி மனநலப் பிரச்னைகளைப்பற்றிய விழிப்புணர்வை உண்டாக்குகின்றன. இந்த அமைப்புகளின் உறுப்பினர்கள் கிராமத்து மக்களைச் சந்தித்து, அவர்களிடம் மனநலப் பாதிப்பைப்பற்றி பேசுகிறார்கள். பிரச்னை உள்ளவர்களை அடையாளம் காண்கிறார்கள், அவர்களை ஆங்காங்கே உள்ள மருத்துவ முகாம்களுக்கு அழைத்துச் சென்று குணம்பெறச் செய்கிறார்கள். மனநலப் பிரச்னையைப்பற்றி மக்களுக்குச் சொல்லும்போது வெறுமனே வளவளவென்று பேசினால் சரிப்படாது. ஆகவே வீதி நாடகங்கள், பாடல்கள் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி அதன்மூலம் இந்தப் பிரச்னையை கிராமப்புற மக்களுக்குப் புரிய வைக்கிறார்கள்.

சமூகத்தினரின் கவனிப்பு என்றால் என்ன?

சாந்தாராம் ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவர். திடீரென்று ஒரு நாள் ஈரோடு மாவட்டத்தில் உள்ள தளவாடியில் தெருக்களில் திரிந்து கொண்டிருந்தார். அவர் அந்தக் கிராமத்தை சேர்ந்தவர் அல்ல என்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால் எங்கிருந்து வந்திருக்கிறார் என்று யாருக்கும் தெரியவில்லை, சாந்தாராமை விசாரித்தால் அவருக்கும் பதில் சொல்லத்தெரியவில்லை. ஆகவே அந்தக் கிராமத்தில் இருந்த ஓர் NGO பிரதிநிதி சாந்தாராமை அருகிலுள்ள மருத்துவ முகாம் ஒன்றிற்கு அழைத்து சென்றார். அங்கே அவருக்கு மருந்துகள் தரப்பட்டன. ஆனால் இந்த மருந்துகளை வேளாவேளைக்கு சாந்தாராமுக்குக் கொடுத்து அவரைக் கவனித்துக்கொள்வதற்கு குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், என்று யாரும் அருகே இல்லையே. இந்த நேரத்தில் காவல் துறையினர் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டனர். அவருக்கு தினந்தோறும் மருந்து கொடுத்துக் கவனித்துக்கொண்டார்கள். சுமார் மூன்று மாதங்கள் கழித்து சாந்தாராமின் மனநலப் பிரச்னை குணமாகிவிட்டது. அவர் தான் எங்கிருந்து வந்தோம் என்று நினைவு படுத்திக்கொண்டார், அதனை காவல் துறையினருக்குத் தெரிவித்தார். உடனே காவல்துறையினர் அவரை அவர் கிராமத்துக்கு அனுப்பிவைத்தனர்.

(இது நிஜவாழ்க்கை அடிப்படையிலான ஒரு விவரிப்பு. சம்பந்தப்பட்டவர்களின் தனி நபர் உரிமையைப் பாதுகாப்பதற்காக பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன)

மனநலம் பாதிக்கப்பட்டவரை சமூகமே கவனித்துக்கொள்ளுதல் என்றால், ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்டுள்ள ஒருவரை கவனித்துக்கொள்ளும் பொறுப்பை ஒருவரே கவனித்துக்கொள்ளாமல் சமூகத்தில் உள்ள பலரும் பகிர்ந்துகொள்ளுதல் ஆகும். உதாரணமாக மனநலம் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு வேண்டிய மருந்தைத் தருதல், அவர்கள் பாதுகாப்பாகவும் நலமாகவும் இருப்பதை உறுதிசெய்தல் போன்றவற்றை சமூக உறுப்பினர்கள் கவனித்துக்கொள்வார்கள். இங்கே சமூக உறுப்பினர்கள் என்பவர்கள் பாதிக்கப்பட்டவருடைய தூரத்து உறவினர்களாக இருக்கலாம், நண்பர்களாக இருக்கலாம் பக்கத்து வீட்டுக்காரர்களாக இருக்கலாம், வேறு யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். பாதிக்கப்பட்டவர்களைக் கவனித்துக்கொள்வதற்காக அவர்கள் நேரம் ஒதுக்கவேண்டும், தங்களுடைய உழைப்பைத் தரவேண்டும் என்பதுதான் ஒரே எதிர்பார்ப்பு.

இப்படி சமூக உறுப்பினர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் கவனித்துக்கொள்வதன் மூலம், அவரை வழக்கமாக கவனித்துக்கொள்கிறவருக்கு சிறிய ஓய்வு கிடைக்கும், அவர் மற்ற வேலைகளைக் கவனிக்கலாம் அல்லது தனக்காக நேரம் ஒதுக்கலாம்.

இவ்வாறு சமூக உறுப்பினர்கள் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரைக் கவனித்துக்கொள்ளும்போது, அதற்காக உரிய மனநல நிபுணரிடம் ஆலோசனை பெறவேண்டும். அதற்காக பாதிக்கப்பட்டவருக்கு எப்படி மருந்துகளைக் கொடுப்பது, அவரை எப்படி கவனித்துக்கொள்வாது, என்பது போன்ற விஷயங்களை அவர்கள் நன்றாகத் தெரிந்துகொண்டு பின்பற்றவேண்டும். அவர்கள் நினைவில் கொள்ளவேண்டிய இன்னொரு விஷயம் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு வழங்கப்படும் சிகிச்சைத் திட்டம் இன்னொருவருக்கும் அதேபோல் இருக்கவேண்டும் என்று அவசியமில்லை. சிகிச்சைத் திட்டங்கள் ஒவ்வொருவருக்கும் மாறுபடலாம், அதற்கேற்ப அவர்களுடைய கவனிப்பும் மாறவேண்டும்.

சமூகத்தினர் மனநலம் பாதிக்கப்பட்டவர்களைப் பார்த்துக்கொள்ளுதல் நகரங்களில் சாத்தியமா?

நகரங்களைப் பொறுத்தவரை, மனநலன் பாதிக்கப்பட்டவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்கள் ஆதரவுக் குழுக்களை அமைக்கிறார்கள், அவர்கள் கலந்து பேசுகிறார்கள், ஒருவருக்கொருவர் உதவிக்கொள்கிறார்கள். ஆனால் சமூகத்தினரே மனநலன் பாதிக்கப்படவர்களைக் கவனித்துக்கொள்வது என்பது நகரங்களில் அவ்வளவு அதிகம் காணப்படுவதில்லை.     “சமூகம் என்கிற உணர்வு நகரங்களை விட கிராமங்களில் தான் அதிகம் காணப்படுகிறது, கிராமத்து மக்கள் தாங்களாகவே முன்வந்து உதவுகின்ற இயல்பைக் கொண்டிருக்கிறார்கள், இன்னொருவருக்கு உதவவேண்டும், அவரைக் கவனமாகப் பார்த்துக்கொள்ளவேண்டும் என்கிற அக்கறை இருக்கிறவர்களாக உள்ளனர்” என்கிறார் டாக்டர் என். ஜனார்த்தனா உதவிப் பேராசிரியர், உளவியல் சமூகப்பணித்துறை NIMHANS. “நகரங்களைப் பொறுத்தவரை ஒன்றுபட்ட சமூகம் என்கிற உணர்வு அதிகம் இருப்பதில்லை, காரணம் அங்கே வாழ்கிறவர்கள் தங்களுடைய சொந்த வேலையில் பரபரப்பாக இருக்கிறார்கள். வெவ்வேறு இடங்களுக்கு மாறிக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களிடையே சமூகம் என்கிற உணர்வு ஏற்படுவதில்லை. அதேசமயம், அப்படி ஓர் அமைப்பை நகரங்களில் உருவாக்க இயன்றால் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்களுக்கும் அது பெரிய உதவியாக அமையும். “

மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் கவனித்துக்கொள்வதற்கு சமூக உறுப்பினர்கள் முன்வரவேண்டும் என்றால் அதற்கு மனநலப் பிரச்னைகளைப்பற்றிய விழிப்புணர்வு அதிகரிக்கவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள், அப்போதுதான் அவர்கள் பாதிக்கப்பட்டவர்களுடைய நிலையைப் புரிந்துகொள்வார்கள், அனுதாபத்துடன் முன்வந்து உதவுவார்கள்.

மனநலம் பாதிக்கப்பட்டவரை சமூக உறுப்பினர்கள் கவனித்துக்கொள்வதால் அவருக்கும் அவரை கவனித்துக்கொள்கிறவருக்கும் ஏற்படும் நன்மைகள்

ஸ்கிஜோஃப்ரெனியா, இருதுருவக் குறைபாடு ஆகிய தீவிர மனநலப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்களைக் கவனித்துக்கொள்ளுதல் ஓராண்டு அல்லது இரண்டு ஆண்டுகளில் முடிந்து விடுகிற விஷயம் அல்ல, அது பல ஆண்டுகளுக்குத் தொடரும். ஆகவே அது போன்ற சூழ்நிலைகளில் அவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்கள் களைப்பும் சலிப்பும் அடைவது இயல்புதான். அவர்களால் தங்களது வழக்கமான வேலையைத் தொடர்ந்து செய்ய இயலாது. குடும்பத்திற்காக சம்பாதிக்க இயலாது, எப்போதும் பாதிக்கப்பட்டவரோடு இருந்து அவர்களையே கவனித்துக்கொள்ள வேண்டியிருப்பதால் அவர்களால் சமூக விழாக்கள் போன்றவற்றில் கலந்துகொள்ள இயலாது, ஆகவே அவர்கள் மிகவும் தனிமையில் வருந்தக்கூடிய சூழ்நிலை ஏற்படும். இதுபோன்ற நேரங்களில் சமூக உறுப்பினர்கள் அவர்களுடைய பொறுப்புகளைப் பகிர்ந்துகொண்டால், லக்ஷ்மி போன்ற உறுப்பினர்களுக்கு சற்றே ஓய்வு கிடைக்கும் அவர்கள் வேலைக்குச் சென்று தம் குடும்ப உறுப்பினர்களை பொருளாதார ரீதியாக காப்பாற்ற இயலும்.

கிராமங்களில் உள்ள அமைப்பு இதேபோன்ற சமூகங்களை ஆதரிக்கிறது, அக்கம் பக்கத்தில் உள்ளோர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் கவனித்துக்கொண்டே தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஏதாவது ஒரு பிரச்னை என்றால் சட்டென்று சென்று உதவுகிறார்கள். இதனால் மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் கவனித்துக்கொள்வோருக்கு தாற்காலிக ஓய்வு கிடைக்கிறது, அவர்கள் தனிமையில் இருப்பதுபோல் உணர்வதில்லை. அதுமட்டுமின்றி மனநலம் பாதிக்கப்பட்டவர்க்குக்கும் இது ஒரு முக்கியமான மாற்றமாக அமைகிறது. இதன்மூலம் சமூகத்தின் ஒரு பகுதியாக அவர்கள் தங்களை உணர்கிறார்கள், மனநல பாதிப்பினால் அவர்களுக்கு ஏற்படுகிற பழக்கவழக்கங்கள், அவர்களது நடவடிக்கைகள் போன்றவை எளிதில் மாறுகின்றன. பொதுவாக மனநலம் பாதிக்கப்பட்டவர்களை சமூக உறுப்பினர்கள் அருவருப்புடன் பார்த்து ஒதுக்கி வைப்பதுதான் வழக்கமாக உள்ளது. ஆனால் சமூக உறுப்பினர்களே அவர்களைக் கவனித்துக்கொள்ளும் சூழ்நிலை ஏற்படும்போது, மனநலம் பாதிக்கப்பட்டவர்களுடைய பிரச்னைகளை அவர்கள் புரிந்துகொள்கிறார்கள், அவர்களை பரிவோடு அணுகுகிறார்கள் அவர்களை ஏற்றுக்கொள்கிறார்கள். இதனால் மனநலம் பாதிக்கப்பட்டவர் சிகிச்சை நிறைவடைந்து வழக்கமான வாழ்க்கைக்குத் திரும்பும்போது, பிற சமூக உறுப்பினர்கள் அவர்களை எளிதில் ஏற்றுக்கொள்கிறார்கள், அவர்கள் வழக்கமான பணிகளைச் செய்து எளிதில் சமுகத்துடன் ஒன்றிணைய வாய்ப்பு ஏற்படுகிறது.

மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு சமூக உறுப்பினர்கள் எவ்வாறு உதவலாம்?

  • மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் சிகிச்சை பெற்று நான்கு குணமாகிவிட்டார் என்றால், அவர்க்குத் தகுந்த வேலை கிடைப்பதற்கு சமூக உறுப்பினர்கள் உதவலாம், அவர்களுடைய திறன்களுக்கு ஏற்ற வேலை தந்து அவர்களுக்கு உதவலாம்.
  • ஒருவேளை அவர் இன்னும் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தால், அவ்வப்போது அவரைக் கவனிக்கும் பொறுப்பை சமூக உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்ளலாம், அதன்மூலம் அவரை வழக்கமாக கவனித்துக்கொள்ளுபவருக்கு சிறிது ஓய்வு கிடைக்க வழி செய்யலாம்.
  • மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்குக் குறைபாடுள்ளோர் சான்றிதழ் பெறவேண்டிய தேவை இருக்கலாம். அதுபோன்ற நேரங்களில் அவர்கள் விண்ணப்பங்களை நிரப்பவும் அரசு ஆவணங்களைப் பெறவும் சமூக உறுப்பினர்கள் உதவலாம்.
  • இன்னொரு விஷயம் மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்கள் எப்போதும் தனிமையாக உணர்வார்கள், அதனால் சமூக உறுப்பினர்கள் தங்களது குடும்ப விழாக்களுக்கு அவர்களை அழைக்கலாம், சமூக நிகழ்வுகளுக்கு வரவேற்கலாம், அவர்களுடன் இயல்பாகப் பழகி அவர்களுடைய மனநிலையைச் சகஜமாக்கலாம்.

சமூக விழிப்புணர்வை உருவாக்குதல்

மனச்சோர்வு, ஸ்கிஜோஃப்ரெனியா போன்ற பல்வேறு மனநலப் பிரச்னைகளை குணப்படுத்துவதற்கு தனியே மருத்துவமனை தேவையில்லை. பாதிக்கப்பட்டவர்களுடைய வீட்டில்,அவர்களுடைய சமூகத்தில் அங்கே இருக்கிற நபர்களின் உதவியாலேயே இவற்றை குணப்படுத்தி விடலாம். ஆனால் இதற்கு சமூக உறுப்பினர்களிடையே மனநலப் பிரச்னைகளைப்பற்றிய விழிப்புணர்வை உண்டாக்கவேண்டும். மனநலப் பிரச்னை என்றால் என்ன, அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன மாதிரியான உதவிகள் தேவை அவர்கள் எப்படி, எப்போது குணமடைவார்கள், என்பதுபோன்ற விவரங்களை மக்களுக்கு தொடர்ந்து சொல்லி வரவேண்டும்.1 இதற்கு வீதி நாடகங்கள், சுவரோவியங்கள் போன்ற உத்திகள் நன்கு பலன் தரும். மனநலப் பிரச்னைகளைப்பற்றி தொடர்ந்து பேசி வருவதன் மூலம் அப்படிப்பட்டவர்களைக் களங்கமாக நினைத்து ஒதுக்குகின்ற நிலை மாறும் அவர்களை சமூகத்தின் ஓர் அங்கமாக மற்றவர்கள் ஏற்றுக்கொள்வார்கள். “இதுபோன்ற விவரங்களை சமூகத்திற்கு தொடர்ந்து சொல்லி வருவதன்மூலம் அவர்கள் மனநலப் பிரச்னைகளைப்பற்றி நான்கு அறிந்து கொள்கிறார்கள்” என்கிறார் டாக்டர் ஜனார்த்தனா, “அத்துடன், மனநலப் பிரச்னைகளுக்காகச் சிகிச்சை பெற்றுக் குணமடைந்த மக்களைப் பார்க்கும் சமூகத்தினர், இதுபோன்ற பிரச்னைகள் குணப்படுத்த முடியாதவை அல்ல என்பதைப் புரிந்துகொள்வார்கள், சரியான கவனிப்பும் மருந்துகளும் இப்படிப்பட்ட பிரச்னை கொண்டவர்களுக்கு உதவும் என்பதை ஏற்றுக்கொள்கிறார்கள்” அந்த விதத்தில் மனநலம் பாதிக்கப்பட்டு, அதற்குச் சிகிச்சை பெற்றுக் குணமானவர்கள் சமூகத்தினரிடையே ஒரு நேர்விதமான தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள்

சான்று

1 - ஜனார்த்தனா , N & நாயுடு, DM (2012). சமூகம் சார்ந்த புனர்வாழ்வில் மனநலப் பிரச்னை கொண்டோரை இணைத்தல்: இன்றைய தேவை, உளவியல் மற்றும் சமூகப் புனர்வாழ்வுச் சர்வதேச சஞ்சிகை. Vol 16(1) 117-124

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org