COVID-19 ன்போது முதியோர் மன நலன்: அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

COVID-19 ன்போது முதியோர் மன நலன்: அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

இப்போதைய COVID-19 பரவலானது எல்லாருடைய மன நலனிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தைக் கொண்டுள்ளது. கொரோனாவைரஸ் பெருந்தொற்று பரவலாக இருந்தபோதும், முதியவர்கள், குறிப்பாக, உயர் ரத்த அழுத்தம், ஆஸ்துமா, இதயப் பிரச்னைகள் அல்லது நீரிழிவு போன்ற மருத்துவப் பிரச்னைகளைக் கொண்டவர்கள் தீவிரமாக நோய்வாய்ப்படுவதற்கான ஆபத்து கூடுதலாக உள்ளது. முதியவர்களுக்கு இந்த வைரஸ் கூடுதல் ஆபத்தாக உள்ளது என்கிற உண்மை, அவர்களுடைய மன நலனில் குறிப்பிடத்தக்க தாக்கத்தைக் கொண்டிருக்கலாம்.

COVID-19ன்போது முதியோர் மன நலன் மற்றும் பராமரிப்பு தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் சில கேள்விகளை (FAQs) தன்வி மால்யா’ஸ் எல்டர்கேர் சர்வீஸஸைச் சேர்ந்த நரம்பியல் உளவியலாளர் தான்வி மால்யாவிடம் நாங்கள் கேட்டோம். 

இப்போதைய சூழ்நிலைபற்றிப் பதற்றமடையும் முதியவர்களுக்கு உதவுவதற்கு நாம் என்ன செய்யலாம்?

பெரும்பாலான முதியவர்களுக்குத் தாங்கள்தான் COVID-19ஆல் கூடுதல் ஆபத்துக்குள்ளாகக்கூடியவர்கள் என்பது தெரியும், செய்திகளைத் தொடர்ந்து காண்பது அவர்களுடைய பதற்றத்தை மிகுதியாக்கலாம். எந்நேரமும் பெருந்தொற்றைப்பற்றியே பேசிக்கொண்டிருக்காமல், அவர்களிடம் மற்ற, நேர்விதமான தலைப்புகளைப் பேசுவது உதவும். ஒருவேளை, அவர்களிடம் COVID-19ஐப்பற்றிப் பேசினால், அல்லது, அவர்கள் குறிப்பிடத்தக்க அளவு அழுத்தத்துடன் இருந்தால், கூடுதல் நம்பிக்கையை வழங்கக்கூடிய சரியான தகவல்களை அவர்களுக்குச் சுட்டிக்காட்ட முயலுங்கள். 

என்னுடைய முதிய பெற்றோர், தங்களைச் சுற்றியுள்ள சமூகத்தைத் தாங்களே அமைத்துள்ளார்கள், அவர்களுடைய பழக்கவழக்கமும் இதைச்சுற்றிதான் அமைகிறது. இந்த ஊரடங்கு நேரத்தில், அவர்கள் தங்களுடைய உணர்வு ஆதரவுக்கான முக்கியமான வளம் இல்லாமல் சிரமப்படுகிறார்கள். அவர்கள் இதைச் சமாளிக்க நான் எப்படி உதவலாம்

இதுபோன்ற ஒரு நேரத்தில் முதியவர்களுக்கு உதவுவதற்கான ஒரு வழி, அவர்களுடைய சமூகச் செயல்பாடுகளை இயன்றவரை இணையத்துக்குக் கொண்டுசெல்ல முயல்வது. நம்முடைய அன்றாட வாழ்க்கையை இணையத்துக்குக் கொண்டுசெல்லலாம் என்ற எண்ணம் இளையோருக்குத் தானாக வருகிறது, முதியோருக்கு அப்படி வருவதில்லை —அவர்களுடைய வாழ்க்கையின் வெவ்வேறு அம்சங்களை இணையத்துக்குக் கொண்டுசெல்ல அவர்களுக்கு உதவினால், அது அவர்கள் நிலைமையைச் சமாளிக்க உதவலாம். எடுத்துக்காட்டாக, அவர்கள் நாள்தோறும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நண்பர்களைச் சந்திக்கிறார்கள் என்றால், அதற்குப்பதிலாக அவர்கள் அந்த நண்பர்களைத் தொலைபேசியில் அழைக்கலாம் அல்லது வீடியோ அழைப்பின்மூலம் பேசலாம். அவர்கள் யோகாசனம் அல்லது அறிவாற்றல் சிகிச்சை போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுகிறார்கள் என்றால், அவற்றையும் இணையத்துக்குக் கொண்டுசெல்லும் வழிகளைக் கண்டறியலாம். அவர்கள் சமூகரீதியில் தனித்து இல்லை என்பதை உறுதிப்படுத்துவதற்காக, அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களும் மற்றவர்களும் மாறி மாறி அவர்களைத் தொலைபேசியில் அழைக்கலாம், அல்லது வீடியோ அழைப்பின்மூலம் பேசலாம். 

இந்த நேரத்தில் முதியவர்கள் தங்களைத் தாங்களே கவனித்துக்கொள்ள என்ன செய்யலாம்?

·       அவர்களுடைய வழக்கங்களை இயன்ற அளவு இணையத்துக்குக் கொண்டுசென்றால், ஒருவிதமான இயல்பு உணர்வைப் பராமரிக்க அது உதவும்.

·       அவர்கள் நாள்தோறும் சந்திக்கிற நண்பர்கள், குடும்ப உறுப்பினர்களைத் தொலைபேசியில் அழைத்துப் பேசலாம்.

·       செய்திகளை மிகுதியாகக் காணாமல் இருக்கலாம், ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில்மட்டும் ஒரு குறிப்பிட்ட கால அளவுக்குமட்டும் செய்திகளைப் பார்க்கலாம். இப்போதைய செய்திகள் மிகவும் திகைப்பளிக்கலாம், பதற்றத்தைத் தூண்டலாம்.

·       அவர்கள் வீட்டு வேலைகளைச் செய்யலாம், அதன்மூலம் தங்களைச் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ளலாம்.

·       கலை, இசை, படித்தல் போன்ற தங்களுடைய பிற ஆர்வங்களை ஆராய்வதற்கு, அல்லது, தொழில்நுட்பத்தைப் பழகிக்கொள்வதற்கு இந்த நேரத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

பல முதியவர்கள் தனியாக வாழ்கிறார்கள். அவர்கள் தனிமையைக் கையாள்வதற்கு நாம் எப்படி உதவலாம்?

·       குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் அவர்களை அடிக்கடி அழைத்துப் பேசலாம். 

·       ஒவ்வொருமுறை தொலைபேசியில் அழைக்கும்போதும், குறைந்தது 30-60 நிமிடங்களுக்கு அவர்களிடம் உரையாடலாம். 

·       அவர்களிடம் பலவிதமான தலைப்புகளைப் பேசலாம்—அவர்களுடைய இளமைப்பருவ நிகழ்வுகளைப்பற்றிக் கேட்கலாம், அல்லது, அவர்களுக்குத் தெரிந்த சமையல் குறிப்புகளைப்பற்றி விசாரிக்கலாம். 

·       ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலர் ஒரு குழு வீடியோவுக்கு ஏற்பாடு செய்யலாம், எல்லாரும் ஒரே நேரத்தில் அவர்களுடன் பேசலாம், ஒன்றாகச் சமைத்தல் அல்லது ஓவியம் தீட்டுதல் போன்ற ஒரு செயல்பாட்டில் ஈடுபட்டு, ஒன்றாக இருக்கும் ஓர் உணர்வை வளர்க்கலாம்

பலருடைய வீட்டில் வழக்கமான பணியாளர்கள் வருவதில்லை. கவனித்துக்கொள்கிறவர்கள் வீட்டிலிருந்து பணியாற்றுதல், முதியவர்களைக் கவனித்துக்கொள்ளுதல், வீட்டு வேலைகளைக் கவனித்தல் ஆகியவற்றைச் சமநிலைப்படுத்தவேண்டும். அவர்கள் இந்த நிலைமையைச் சமாளிப்பதற்கும் தங்களைக் கவனித்துக்கொள்வதற்கும் என்ன செய்யலாம்?

இந்த நேரத்தில் கவனித்துக்கொள்ளுதல் என்பது வெறும் உடல்சார்ந்த வேலை இல்லை, அறிவாற்றல் மற்றும் உணர்வு சார்ந்த வேலையும்தான் என்பதை அடையாளம் காண்பது முக்கியம். இது மிகவும் களைப்பைத் தரலாம்.

·       இடத் தட்டுப்பாடு இருந்தால், கவனித்துக்கொள்கிறவர் முதியவருக்குப் பிடித்த ஒரு படத்தை ஓடவிடலாம், அல்லது, அவர் விரும்பும் ஏதாவது ஒரு வேலையைச் செய்யச்சொல்லலாம், அந்த நேரத்தைத் தனக்காகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

·       ‘தனியாக உள்ள’ இந்த நேரத்தை உடற்பயிற்சி, ஓவியம் போன்ற தன்னைக் கவனித்துக்கொள்ளும் செயல்பாடுகளுக்குப் பயன்படுத்தலாம்.

·       நேர மேலாண்மை, அன்றாடச் செயல்பாடுகளைத் திட்டமிடுதல்.

·       சிகிச்சையாளர்கள் அல்லது நண்பர்களை அணுகி ஆதரவு பெறுதல்.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org