தற்கொலையைத் தடுத்தல்

தெரிந்த ஒருவரின் தற்கொலையை எதிர்கொள்ளுதல்

உங்களுக்குத் தெரிந்த ஒருவர் தங்கள் வாழ்க்கையை முடித்துக்கொண்டுவிட்டால், அந்நிலையை எப்படிச் சமாளிப்பது?

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்

எழுதியவர்: டாக்டர் மனோஜ் ஷர்மா

குடும்பத்தில் ஒருவர் தற்கொலை செய்துகொண்டால் அதுவரை அவர்களைக் கவனித்துக்கொண்டவர்கள் பெரும்பாலும் உடைந்துவிடுகிறார்கள், அவர்களால் தீவிர துயரத்தை, சிரமமான, வலிமிகுந்த, மற்றும், பெரும்பாலும் பதில் சொல்ல இயலாத கேள்விகள், எண்ணங்களைத் தவிர்க்க இயலுவதில்லை: ‘எனக்கு ஏன் இப்படி நடந்தது?’ அல்லது ‘அவருடைய மனத் துயரத்தின் அறிகுறிகளை நான் ஏன் உணரவில்லை?’ அல்லது ‘தற்கொலைக்கு முயற்சி செய்யுமுன் அவர் ஏன் என்னை அழைக்கவில்லை?’ அல்லது ‘நான் ஒரு நல்ல தாய்/ தந்தை இல்லை’. ஒவ்வொரு தற்கொலையும், குறைந்தபட்சம் ஆறு பேரைப் பாதிப்பதாகச் சொல்லப்படுகிறது. உதாரணமாக, குடும்ப உறுப்பினர்கள், சக ஊழியர்கள், அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள், வகுப்புத்தோழர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள்.

பல நேரங்களில், துயரத்திலிருந்து மீள முயற்சிசெய்யும் குடும்பம் தங்களுடைய உணர்ச்சிகளிடமே தோற்றுவிடுகிறது. அவர்களுடைய உணர்ச்சிகள் தனியே நிகழலாம், அல்லது, குழுக்களாக நிகழலாம். அவை அவ்வப்போது வந்துபோகலாம், அல்லது, நீண்டநாள் நீடிக்கலாம். ஒருவர் துயரத்திலிருந்து மீளவேண்டுமென்றால், இவற்றைச் சமாளிக்கவேண்டும்.

அதிர்ச்சி: ஒருவர் தற்கொலை செய்துகொண்டுவிட்டால், அவருடனிருந்த பிறர் பெரும்பாலும் உடனே உணர்வது, அதிர்ச்சி என்கிற எதிர்வினையைதான். இதோடு, உடல் மற்றும் உணர்வு மரத்தநிலையும் அவர்களுக்கு ஏற்படுகிறது.

கோபம்: பல நேரங்களில், இறந்தவர்களின் அன்புக்குரியவர்களும் குடும்ப உறுப்பினர்களும் மனித வாழ்க்கையின் நிலையில்லாமையை  கோபத்தை வெளிப்படுத்துகிறார்கள் (அல்லது, அதைக் கட்டுப்படுத்துகிறார்கள்). கோபம் என்பது, சோகத்தில் வரும் இன்னொரு எதிர்வினை, தற்கொலைசெய்துகொண்டு இறந்தவர்மீது கோபம், தங்கள்மீது கோபம், இன்னொரு குடும்ப உறுப்பினர்மீது கோபம், அல்லது, ஒரு நிபுணர்மீது கோபம் என இது பலவிதமாக அமையலாம்.

குற்றவுணர்ச்சி: ஒருவர் தற்கொலை செய்துகொண்டுவிட்டால், மற்ற குடும்ப உறுப்பினர்கள் தாங்கள் கவனிக்காத துப்புகளைத் தேடத் தொடங்குகிறார்கள், தாங்கள் எப்படித் தற்கொலையைக் கண்டறிந்து தடுத்திருக்கலாம் என்று சிந்திக்கிறார்கள். உதாரணமாக, தாங்கள் சொன்னவற்றை (அல்லது சொல்லாதவற்றை) எண்ணித் தங்களையே நொந்துகொள்வது, தாங்கள் அன்பை அல்லது அக்கறையை வெளிப்படுத்தவில்லை என எண்ணுவது, அவர்கள் செய்யத் திட்டமிட்ட (ஆனால், எப்போதும் செய்யாத) விஷயங்களை எண்ணுவது... இது ஒரு முடிவில்லாத கலைடாஸ்கோப்போல நீளும்.

பயம்: குடும்பத்தில் ஒருவர் தற்கொலை செய்துகொண்டால், இன்னொருவரும் தற்கொலைக்கு முயற்சி செய்வாரோ என்று பயப்படுதல்.

மனச்சோர்வு: தூக்கமின்மை, அல்லது, தொந்தரவான தூக்கம், பசியெடுப்பதில் மாற்றங்கள், களைப்பு மற்றும் வாழ்க்கையில் மகிழ்ச்சி குறைதல் போன்றவகைகளில் இது வெளிப்படுகிறது.

இந்தத் தீவிர உணர்வுகளில் பலவும், காலப்போக்கில் குறைந்துவிடும், அதன்பிறகும், சில உணர்வுகள் எஞ்சியிருக்கலாம், அவை எப்போதும் முழுக்கத் தீர்ந்துவிடாமலிருக்கலாம். ஒவ்வொருவரும் வெவ்வேறுவிதமாக சோகத்தை எதிர்கொள்கிறார்கள். அத்துடன், சில கேள்விகளுக்கு எப்போதும் பதில் கிடைக்காமல்போகலாம்.

தற்கொலையைத் தாங்கிக்கொள்ளுதல்

  • ஒருவருடைய தற்கொலையை எதிர்கொண்டு சோகமாக உள்ளபோது, இதுபோன்ற தீவிர உணர்வுகள் வருவது மிகவும் சகஜம்தான் என்பதை ஒருவர் உணரவேண்டும்.
  • அவர் திருப்தியடையும்வரை, பதில்களைத் தொடர்ந்து தேடவேண்டும், அதற்கு நேரம் ஒதுக்கவேண்டும். அவரது கேள்விகளுக்கு அரைகுறையான பதில்கள்தான் கிடைக்கின்றன, வேறு எதுவும் கிடைக்கவில்லை என்றால், அதனை ஏற்றுக்கொண்டு திருப்தியடையவேண்டும், வாழ்க்கையைத் தொடரவேண்டும்.
  • பிற குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்பில் இருக்கவேண்டும். ஒருவருடைய அன்புக்குரியவர் தற்கொலை செய்துகொண்டார் என்றால், அடுத்த ஆறு மாதங்களுக்கு அவர் பிறருடன் தொடர்பில் இருப்பது மிகவும் முக்கியம். அவர் பிற குடும்ப உறுப்பினர்களுடன் தற்கொலைபற்றிய தனது உணர்வுகளை வெளிப்படையாகப் பேசவேண்டும், அவர்களிடம் உதவி கேட்கவேண்டும்.
  • குழந்தைகளை விசேஷமாகக் கவனித்தல். குறிப்பாக, குழந்தைகள் தீவிர உணர்வுகளைத் தாங்க இயலாமல் மிகவும் சிரமப்படக்கூடும். ஒருவர் சோகமாக உள்ளபோது இப்படிப்பட்ட உணர்வுகள் வருவது இயல்புதான் என்று அவர்களுக்கு நினைவுபடுத்துவது முக்கியம். எல்லாவற்றுக்கும் மேலாக, அவர்களுடன் இருப்போர், 'நான் உன்னை இன்னும் நேசிக்கிறேன், உனக்காக எப்போதும் இருப்பேன், உன்னுடன் நேரம் செலவிடுவேன்' என்று தெரிவிக்கவேண்டும்.
  • ஞாபகமிருக்கட்டும், தற்கொலை செய்துகொண்டவர்களுடைய உறவினர்களுக்கு, விடுமுறைகள், பிறந்தநாள்கள், திருமணநாள்கள், பிற விசேஷ நாள்கள் போன்றவை மிகுந்த அழுத்தத்தைத் தருகின்றன. அந்த நேரங்களில், அவர்கள் ஏதேனும் ஒரு வேலையில் மூழ்கிவிடுவது நல்லது, அல்லது, பிறருடன் இருப்பது நல்லது.
  • தற்கொலை தந்த காயம் குணமாக நேரமாகும். இது இத்தனை நாள்களுக்குள் சரியாகிவிடும் என்று எதிர்பார்க்கக்கூடாது. குணமாகும் நேரம் ஒவ்வொருவருக்கும் மாறுபடும்.
  • பொறுமையாக இருக்கவேண்டும், பிறரிடம் பொறுமை காட்டவேண்டும். ஒருவர் அனுபவிக்கும் துயரம் எல்லாருக்கும் புரிந்துவிடாது. அதேபோல், பிற குடும்ப உறுப்பினர்கள், அன்புக்குரியவர்கள் அவரவர் துயரத்தை வெவ்வேறுவிதமாகதான் கடக்கவேண்டும்.
  • இதற்கு நிபுணரின் உதவியைப் பெறுவது நல்லது.

டாக்டர் மனோஜ் ஷர்மா NIMHANS மருத்துவ உளவியல் பிரிவுத் துணைப் பேராசிரியர்.

மேலும் விவரங்களுக்கு NIMHANS நல மையத்தைத் (NCWB) தொடர்புகொள்ளவும்: +919480829670/ (080) 2668594 காலை 9 மணிமுதல் மாலை 4:30 மணிவரை

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org