எப்படி உரையாடலைத் தொடங்கலாம்?

நேரம் செலவிட்டு, வகுப்பின் குணத்தைக் கண்டறியவேண்டும். வகுப்பில் ஒரு குறிப்பிட்ட மாணவர் அசாதாரணமாக நடந்துகொண்டால், அவரைச் சில நாள்கள் கவனிக்கவேண்டும், அந்த நடவடிக்கை தொடர்கிறதா, அல்லது, சில நாள்களில் மாறிவிடுகிறதா என்று கண்காணிக்கவேண்டும். நம்பிக்கையான சக ஊழியர் ஒருவரிடம் பேசி, மற்ற வகுப்புகளிலும் இதே நடவடிக்கை தொடர்கிறதா என்று விசாரிக்கலாம். சக ஊழியர்களிடம் பேசும்போது கொஞ்சம் கவனமாக இருக்கவேண்டும். மாணவருக்கு உதவுவது முக்கியம், அதற்காக ஒரு கிசுகிசுவைத் தொடங்கிவைத்துவிடக்கூடாது.

ஒரு குறிப்பிட்ட பழக்கம் இயல்பைவிட அதிகமாக நீடித்தால், அந்த மாணவரைக் கூப்பிட்டுத் தனியே பேசவேண்டும்:

  • ஆரம்பத்தில் அவரிடம் பொதுவான கேள்விகளைக் கேட்கலாம்: "எப்படியிருக்கே?", "கொஞ்சநாளா ரொம்பப் பரபரப்பா இருக்கியே, என்ன விஷயம்?" என்பதுபோல.

  • மாணவர்மீது முத்திரை குத்தவேண்டாம், குறிப்பாக, மருத்துவச் சொற்களைப் பயன்படுத்தவேண்டாம். உதாரணமாக, "நீ மனச்சோர்வோடு இருக்கிறாய்" என்பதுபோல் சொல்லவேண்டாம்.

  • மாணவர் சொல்வதைக் கேட்கவேண்டும். மாணவர் என்ன சொன்னாலும் சரி, அதை ரகசியமாக வைத்திருக்கவேண்டும். கல்லூரிக் கொள்கையின்படி, ஆசிரியர் இந்த விவரங்களை ஓர் ஆலோசகர் அல்லது உயர் அதிகாரியிடம் பகிர்ந்துகொள்ளவேண்டுமென்றால், அதை மாணவரிடம் சொல்லவேண்டும், அவரைப்பற்றிய விவரம் யாரிடம், எப்படிப் பகிர்ந்துகொள்ளப்படும், அதைப் பகிர்ந்துகொள்ளவேண்டிய அவசியம் என்ன என்பவற்றை விளக்கவேண்டும். மாணவரைப்பற்றித் தீர்ப்புச்சொல்லக்கூடாது, அவர்மீது குற்றம் சாட்டக்கூடாது.

சில சூழ்நிலைகளில், தனக்கு என்ன நடக்கிறது என்பதை மாணவர் ஏற்க மறுக்கலாம், அல்லது, மனம் திறந்து பேசாமலிருக்கலாம். அதுபோன்ற சூழ்நிலைகளில், அவர்களைத் தனியே விட்டுவிடவேண்டும், சில வாரங்கள் அவர்களை அமைதியாகக் கண்காணிக்கவேண்டும், அதன்பிறகு அவர்களை மீண்டும் அணுகவேண்டும். நினைவிருக்கட்டும், ஒரு மாணவர் பிரச்னையைச் சொல்லிதான் தீரவேண்டும் என்று அவரை வற்புறுத்தக்கூடாது. இதற்கான எளிய விதிமுறை, ஒரு மாணவரிடம் இரண்டுமுறை பேசிப்பார்க்கலாம், இரண்டாவதுமுறையும் அவர்கள் மனம் திறக்கவில்லை என்றால், அதை வளாக ஆலோசகரிடம் சொல்லிவிடலாம், அடுத்து என்ன நடவடிக்கை எடுப்பது என்பதை அவர்களே தீர்மானிக்கட்டும்.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org