மனநலம் எல்லாருக்கும் முக்கியம்

மருத்துவர்களும் உளவியலாளர்களும் ஒன்றாகச் சேர்ந்து பணியாற்றி, உளவியல் பிரச்னைகளுக்கு இன்னும் சிறப்பாகச் சிகிச்சை அளிக்கலாம்

ஒருவருடைய உடல்சார்ந்த பிரச்னைக்குச் சிகிச்சை அளிக்கிற அதே நேரத்தில், அத்துடன் மனம்சார்ந்த பிரச்னை ஏதேனும் இருக்கிறதா என்பதையும் கவனிப்பது முக்கியம். மனநலப் பிரச்னைகளைப்பற்றிய களங்கவுணர்வு மற்றும் மனநலப் பிரச்னை கொண்டோருக்கு எதிரான பாரபட்சம் ஆகிய இந்தியாவின் சவால்களைப்பற்றியும், அவற்றைச் சரிசெய்ய யார் என்ன செய்யலாம் என்பதுபற்றியும் உலக உளவியல் அமைப்பின் தலைவர் பேராசிரியர் தினேஷ் புக்ரா, வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷனைச்சேர்ந்த பிரியங்கா மந்த்ரிப்ரகடாவிடம் பேசினார். இந்தப் பேட்டியிலிருந்து சில பகுதிகள்:

இன்றைய சமூகத்தில், மனநலப் பிரச்னை கொண்டோரும் அவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்களும் சந்திக்கிற சவால்கள் என்ன?

இவர்கள் சந்திக்கும் ஒரு மிகப் பெரிய பிரச்னை, சிகிச்சை பெறுதல்தான் என்று நினைக்கிறேன்: ஒரு மனநலப் பிரச்னை வந்துவிட்டால், எங்கே சென்று சிகிச்சை பெறுவது? அதற்கு யார் பணம் தருவார்கள்? பல சமூகக் காரணிகள் மனநலப் பிரச்னைகளை உண்டாக்குவது நமக்குத் தெரியும். ஒருவருக்கு மனநலப் பிரச்னை வந்துவிட்டபிறகு, பல பின்விளைவுகளும் ஏற்படுகின்றன. உதாரணமாக, பல நேரங்களில் மனநலப் பிரச்னை கொண்டோரின் வேலை பறிக்கப்படுகிறது. அவர்கள் வீடு மாறவேண்டியிருக்கலாம், அவர்களுடைய குடும்பம் அவர்களை விட்டுச் செல்லலாம். நாம் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டிய விஷயம், மனிதர்கள் எல்லாரும் சமூக விலங்குகள்தான். அவர்களுக்கு ஓர் உளவியல் குறைபாடு வந்துவிட்டால், பல நேரங்களில் அவர்களுடைய குடும்பமும் ஒட்டுமொத்தச் சமூகமும் அவர்களை நிராகரித்துவிடுகிறது. இது அவர்களது சுயமதிப்பையும் சமூகத்தில் இயங்குவதையும் பாதிக்கிறது.

இந்த சவால்கள் அவர்களுடைய வாழ்க்கைகளை எப்படிப் பாதிக்கின்றன?

உளவியல் பிரச்னையாக இருந்தாலும் சரி, மற்ற உடல்சார்ந்த பிரச்னையாக இருந்தாலும் சரி, பாதிக்கப்பட்டவர்களுடைய எதிர்பார்ப்பு, ஓர் ஏற்கத்தக்க வாழ்க்கைத்தரத்தில் வாழுவதுதான், உதாரணமாக, ஒரு வேலைக்குச் செல்லவேண்டும், சுறுசுறுப்பாக எதையாவது செய்துகொண்டிருக்கவேண்டும், சொந்தமாக ஒரு வீடு, சில நண்பர்கள், குடும்பம்... இப்படி. ஆனால், உளவியல் குறைபாடு கொண்டவர்களுடைய இந்த அடிப்படை எதிர்பார்ப்புகூட நிறைவேறுவதில்லை. சமூகம் அவர்கள்மீது களங்கத்தை வீசுகிறது, அவர்கள் சமூகத்துடன் இணைந்து செயல்படுவதோ, அதில் மீண்டும் கலப்பதோ பெரிய சவாலாக இருக்கிறது.

களங்கவுணர்வே இல்லாத நாடுகள் உண்டா?

அப்படி எந்த நாடும் இல்லை என்று நினைக்கிறேன். ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு சவால்கள் உள்ளன, அங்கே முதலீடு செய்யப்படும் பணத்தைப்பொறுத்து இந்தச் சவால்கள் மாறுபடும். உதாரணமாக, இந்தியாவைப்பொறுத்தவரை, நாட்டின் GDPயில் ஒரு சதவிகிதத்தைவிடக் குறைவாகதான் நலத்துறைக்குச் செலவிடப்படுகிறது என்று நினைக்கிறேன். இதில் பத்து சதவிகிதம்கூட மனநல ஆரோக்கியத்துக்குச் செல்லுவதில்லை. ஆனால், மற்ற நாடுகளில் நிலைமை இப்படியில்லை. உதாரணமாக, அமெரிக்காவில், நாட்டின் GDPயில் 21% நலத்துறைக்குச் செலவிடப்படுகிறது; UK மற்றும் ஐரோப்பாவின் பல பகுதிகளில், நாட்டின் GDPயில் எட்டு முதல் 10 சதவிகிதம் நலத்துறைக்குச் செலவிடப்படுகிறது. ஆக, இது செலவிடப்படும் வளங்களைப்பொறுத்து மாறுகிறது. அந்தப் பணம் எங்கே செலவிடப்படுகிறது என்பதைப்பொறுத்தும் மாறுகிறது. உதாரணமாக, புகலிடங்களுக்குச் செலவழிக்கலாம், மருத்துவமனைகளுக்குச் செலவழிக்கலாம், சமூகத்திற்குச் செலவழிக்கலாம், பொது மனநலத்துக்குச் செலவழிக்கலாம், மக்கள் தங்களைக் கவனித்துக்கொள்வது எப்படி என்று கற்றுத்தருவதற்குச் செலவழிக்கலாம்.

இந்தியாவில் களங்கவுணர்வைப் போக்குவது எப்படி?

மற்ற பல சமூகங்களைப்போலவே, இந்தியாவுக்கும் தனித்துவமான சவால்கள் உள்ளன. இது மாறிவரும் ஒரு கலாசாரம். இங்கே குடும்பத்தின் பாரம்பரிய மாதிரிகள் மாறிக்கொண்டிருக்கின்றன. பல மக்கள் நகர்ப்புறங்களுக்குச் சென்றுகொண்டிருக்கிறார்கள். இங்கே சிகிச்சை தேவைப்படும் ஒருவரை எடுத்துக்கொண்டால், அவரைச்சுற்றி அவரது குடும்ப உறுப்பினர்களும் நண்பர்களும் இருக்கிறார்கள், தங்கள் அன்புக்குரியவர் நலம்பெறவேண்டும், சுதந்தரமாகச் செயல்படவேண்டும் என்று இவர்கள் கருதுகிறார்கள், இவர்கள்தான் இந்தச் சிகிச்சையின் முக்கியப் பங்குதாரர்கள். இந்த வட்டத்துக்கு வெளியே, இன்னும் பலர் இருக்கிறார்கள். அரசியல்வாதிகள், கொள்கைகளை உருவாக்குகிறவர்கள், நிபுணர்கள், தலைவர்கள், சமூகத் தலைவர்கள், மதத் தலைவர்கள், ஆசிரியர்கள்... இவர்கள்தான் சமூகத்தின் பிரதிநிதிகள். இதுதான் நாம் கவனத்தில் கொள்ளவேண்டிய முழுக் குழு. இங்கே நாம் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டிய ஒரு விஷயம், ஆரோக்கியம் என்பது, குறிப்பாக மன ஆரோக்கியம் என்பது எல்லாருக்கும் முக்கியம்.

இதுபற்றிய விழிப்புணர்வை உண்டாக்குவதற்கு உளவியலாளர்கள் என்ன செய்யலாம்?

உளவியலாளர்கள் சந்திக்கும் மிகப் பெரிய சவால்களில் ஒன்று, அவர்கள் தங்களிடம் சிகிச்சை பெறுவோருக்காக வாதாடவேண்டும். பொதுவாக, உளவியல் சிகிச்சை பெறுவோருக்கென்று தனியே ஒரு குரல் இருப்பதில்லை. ஆகவே, அவர்களுக்காக மற்றவர்கள் பேசவேண்டும், 'இதுதான் தேவை' என்று சொல்லவேண்டும். இதற்கு உளவியலாளர் உதவலாம், அரசியல்வாதிகள், மற்ற நிபுணர்களிடம் பேசலாம், இந்தப் பிரச்னை வந்தவர்களைச் சரியான நேரத்தில் கவனித்துச் சரியான அளவில் சரியான சிகிச்சை தருவது அவசியம் என்று விளக்கலாம். ஒருவருக்கு நீரிழிவுப்பிரச்னை இருந்து, அவருக்கு மனச்சோர்வும் வந்தால், இந்த இரு பிரச்னைகளுமே மோசமான நிலைக்குதான் செல்லும். அதேபோல், ஒருவருக்கு உயர் ரத்த அழுத்தம் இருந்து, அவருக்கு மனச்சோர்வும் இருந்தால், அவரது உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவது சிரமம். ஆகவே, மனச்சோர்வை எப்படிக் கண்டறிவது என்று மருத்துவர்கள், அறுவைச்சிகிச்சை நிபுணர்களுக்குத் தெரியவேண்டும், அவர்கள் உளவியலாளர்களுடன் இணைந்து செயல்பட்டு மனச்சோர்வு, பிற உளவியல் குறைபாடுகளைக் குணப்படுத்தவேண்டும்.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org