அன்புக்குரியவருக்கு மனநலப் பிரச்னையா…

தங்களுடைய அன்புக்குரிய ஒருவருக்கு மனநலப் பிரச்னை இருப்பது தெரியவரும்போது, அவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்கள் பலவிதமான உணர்ச்சிகளுக்கு ஆட்படுகிறார்கள்

நாள்பட்ட அல்லது படிப்படியாக வளரக்கூடிய மனநலப் பிரச்னை கொண்ட கவனித்துக்கொள்ளுதல் மிகப்பெரிய பொறுப்பு. அப்படிப்பட்ட ஒரு நபரைக் கவனித்துக்கொள்கிறவர் தினந்தோறும் வெவ்வேறுவிதமான பணிகளைச் செய்யவேண்டியிருக்கிறது: பாதிக்கப்பட்டவருடைய அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்தல், அவர்களுக்கு மருந்துகளைக் கவனமாகப் பார்த்துக்கொடுத்தல், அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுதல், அவர்கள் சரியாகச் சாப்பிடுகிறார்களா என்பதைக் கவனித்தல், அவர்களுடைய பொருளாதரத் தேவைகளை நிறைவேற்றுதல் போன்றவை. இத்துடன் பாதிக்கப்பட்டவரிடம் ஏற்படுகின்ற பழக்கவழக்க மாற்றங்களையும் அவர்கள் தாங்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது. இவை அனைத்தும் சேர்ந்து பாதிக்கப்பட்டவரை கவனித்துக்கொள்கிறவருக்கு மிகுந்த மன அழுத்தத்தையும் சுமையையும் உண்டாக்கக்கூடும்.

தங்களுடைய அன்புக்குரியவருக்கு மனநலப் பிரச்னை வந்திருக்கிறது என்பதில் தொடங்கி, அவரைக் கவனித்துக்கொள்கிறவர் பலவிதமான உணர்ச்சி ஏற்றத்தாழ்வுகளுக்கு ஆளாகிறார். இது மிகவும் இயல்பான ஒரு விஷயம், அநேகமாக பாதிக்கப்பட்ட ஒருவரைக் கவனித்துக்கொள்கிற எல்லாருக்கும் இந்த உணர்ச்சி மாற்றங்கள் நிகழும்.

இந்த அழுத்தத்தை வெவ்வேறு நபர்கள் வெவ்வேறு விதமாகக் கையாளுகிறார்கள். சிலர் இதனை எளிதாக எடுத்துக்கொண்டு தாங்கிக்கொள்கிறார்கள், பொறுத்துக்கொள்கிறார்கள், வேறு சிலர் தீவிரமாக உணர்ச்சிகளின் மூலம் இதை வெளிப்படுத்துகிறார்கள்.

நிபுணர்கள் இதைப்பற்றி ஆராய்ந்து, மனநலப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்கள், படிப்படியாக வெளிப்படுத்தக்கூடிய உணர்ச்சிகளை பட்டியலிட்டுள்ளார்கள். அவை பின்வருமாறு:

மறுப்பு

ஒருவருக்கு ஸ்கிஜோஃப்ரெனியா, இருதுருவக்குறைபாடு போன்ற மனநலப் பிரச்னைகள் வரும்போது, அவர்களுக்கு அன்புக்குரியவர்கள் அதைப் பெரிய பிரச்னையாக எண்ணுவதில்லை. இது ஏதோ ஒரு சாதாரண விஷயம், சில நாட்களில் சரியாகிவிடும் என்று எண்ணுவார்கள். இதற்குக்காரணம் அவர்களுக்கு மனநலத்தைப்பற்றியோ, மனநலப் பிரச்னைகளைப்பற்றியோ தெரிந்திருப்பதில்லை, ஆகவே மற்ற உடல்சார்ந்த குறைபாடுகளைப் போலவே இதுவும் சீக்கிரம் சரியாகிவிடும் என்று எண்ணுகிறார்கள். ஆனால் அடுத்த சில நாட்களில், அடுத்த சில வாரங்களில் பாதிக்கப்பட்டவரிடம் எந்த ஒரு முன்னேற்றமும் காணப்படவில்லை. ஆகவே அவர்கள் கவலைப்படத்தொடங்குகிறார்கள்.

அப்போதும் இது மனநலம் சார்ந்த பிரச்னையாக இருக்கும் என்று அவர்கள் எண்ணுவதில்லை, ஏதோ சாமி குத்தமாகிவிட்டது என்றுதான் கருதுகிறார்கள், அல்லது வேறு யாரோ செய்வினை அல்லது சூனியம் வைத்துவிட்டார்கள் என்று எண்ணுகிறார்கள். இப்படி மாறிமாறி நம்பிக்கை சார்ந்த விஷயங்கள்தான் அவர்களுக்குத் தோன்றுகின்றன. மருத்துவரை அணுகவேண்டும் என்று அப்போதும் அவர்கள் எண்ணுவதில்லை. அதற்குப் பதிலாக மதரீதியான சடங்குகளின் மூலமாக இந்தப் பிரச்னையை விரட்டிவிட வேண்டுமா என்பதில் கவனம் செலுத்துகிறார்கள்.

மனநலம் பாதிக்கப்பட்டவரைக் கவனித்துக்கொள்கிறவர்கள், இந்த மறுப்பு நிலையில் இருந்து வெளியே வந்து ஒரு மருத்துவரை அணுகி, தங்களுடைய அன்புக்குரியவரின் மனநலப் பிரச்னையைப்பற்றி அறிந்துகொள்வதற்கும், அதற்கு சிகிச்சை பெறுவதற்கும் சிலகாலம் ஆகலாம்.

கோபம்

இந்த நிலையில் உள்ளவர்கள் தங்களைத் தாங்களே கேள்வி கேட்டுக்கொள்ளத் தொடங்குகிறார்கள். ‘என்னுடைய குடும்ப உறுப்பினர்/ துணைவர்/குழந்தைக்கு ஏன் இப்படி நிகழ்ந்தது?’, ‘இந்த நிலைக்கு நான் தான் காரணமா?’ என்பதுபோல் பலப்பல கேள்விகள் அவர்களுக்குள் எழுகின்றன. ஆரம்பத்தில் அவர்கள் தங்கள் மீதே கோபப்படுகிறார்கள், தாங்கள்தான் ஏதோ ஒருவிதத்தில் இந்த நிலைக்குக் காரணமாகிவிட்டோம் என்று நினைக்கிறார்கள், அதன்பிறகு, மற்றவர்கள் இந்தப் பிரச்னைக்கு காரணமாக இருக்கக்கூடும் என்று எண்ணுகிறார்கள், தேடித்தேடி இந்த விஷயத்தில் கோபப்படுகிறார்கள். தங்கள்மீதான குற்ற உணர்ச்சியை நீக்கிக்கொள்கிறார்கள், உதாரணமாக ஒருவருடைய மகன் அல்லது மகளுக்கு மனச்சோர்வு அல்லது பதற்றம், உண்ணுதல் குறைபாடு போன்ற ஏதாவது ஒரு மனநலப் பிரச்னை வந்தால், அவர்கள் தங்கள் குழந்தையின் நண்பர்களைக் குற்றம் சொல்லத்தொடங்குகிறார்கள், ‘அவர்கள்தான் என் மகன்/மகளுக்கு தவறான பழக்கங்களைச் சொல்லிக்கொடுத்துவிட்டார்கள்’ என்று சொல்லத்தொடங்குகிறார்கள். வேறு சில பெற்றோர், கல்லூரியில் நடந்த ராகிங்தான் தங்கள் பிள்ளையின் மனநலப் பிரச்னைக்குக் காரணம் என்று சொல்லலாம். கல்லூரி நிர்வாகம் மாணவர்கள் மீது மிகவும் கண்டிப்பாக நடந்துகொள்கிறது, அவர்கள் தேர்வுகளில் நிறைய மதிப்பெண் எடுக்கவேண்டும் என்று வலியுறுத்துகிறது, அதனால்தான் இப்படி ஆகிவிட்டது என்று கூட அவர்கள் சொல்லக்கூடும். வேலைக்குச் செல்கிறவர்களுக்கு மனநலப் பிரச்னை வந்தால், அதற்கு அவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள், வேலைபார்க்கும் நிறுவனம்தான் காரணம் என்று சொல்லக்கூடும். உதாரணமாக, அவர்கள் வேலைசெய்யும் இடத்தில் உள்ள பணிசார்ந்த கொள்கைகள், நிர்வாக நடைமுறைகள், அல்லது அவர்கள் அதிகாரத்துடன் நடந்துகொள்ளும் தன்மை போன்றவற்றால்தான் இந்தப் பிரச்னை வந்துவிட்டது என்று அவர்கள் சொல்லலாம். அதனால்தான் தங்களது அன்புக்குரியவர்களின் மனநலம் கெட்டுவிட்டது என்று அவர்கள் குற்றம் சாட்டலாம்.

பெரும்பாலான சமயங்களில் இப்படி ஓர் உணர்வு ஏற்படுவது இயல்பானதுதான், சொல்லப்போனால் இது நல்ல விஷயமும் கூட. காரணம், மற்றவர்கள் மீது கோபப்பட்டு உணர்ச்சிகளைக் கொட்டுபவர்கள், மனதில் எதையும் வைத்துக்கொள்வதில்லை. ஆகவே தங்கள் எண்ணங்களை எல்லாம் சொன்னபிறகு, அவர்களால் இந்தக் கோபத்திலிருந்து வெளியே வந்து, தங்கள் அன்புக்குரியவரின் நிலையைச் சரிசெய்ய என்ன செய்யலாம் என்று யோசிக்க முடிகிறது.

குறிப்பு: ஒருவர் தனக்கு வருகிற கோபத்தை வெளிப்படுத்தாமல் வைத்திருந்தால், அதன்மூலம் அவருக்கு பதற்றம், மன அழுத்தம் அல்லது மனச்சோர்வு போன்ற பிரச்னைகள் வரக்கூடும். அதே சமயம் அவர் தன்னுடைய கோபத்தை வெளிப்படையாகக் காண்பித்தால், உறவுகள் கெட்டுப்போகக்கூடும், பிறருக்கு தீங்கு விளையவும் கூடும். ஆகவே கோபத்தைக் கையாளுவது எப்படி என்று ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ளவேண்டும் அதற்கு அவர்கள் பிறருடைய உதவியை நாடலாம் அல்லது கோபத்தைக் கட்டுப்படுத்துகிற, அறிவார்ந்த சிந்தனை உத்திகளைப் பின்பற்றலாம்.

பேரம் பேசுதல் / தற்காத்துக்கொள்ளுதல்

தங்களுடைய அன்புக்குரியவருக்கு மனநலப் பிரச்னை வந்திருக்கிறது என்பதைத் தெரிந்த சிலர் விதியுடன் பேரம் பேசத்தொடங்கலாம், அதாவது அவருக்கு எதுவும் ஆகிவிடவில்லை, விரைவில் அவர் சரியாகிவிடுவார், மருத்துவர்கள் அவரை முழுமையாக குணப்படுத்திவிடுவார்கள், என்றெல்லாம் இவர்கள் எண்ணத்தொடங்கலாம். ஆனால் உண்மையில் அவருக்கு வந்திருக்கும் மனநலப் பிரச்னை மிகவும் தீவிரமாக இருக்கலாம், அந்த உண்மையை இவர்கள் காண மறுக்கலாம்.

அதேபோல், தங்களுடைய அன்புக்குரியவருக்கு வந்திருக்கும் மனநலப் பிரச்னையைக் குறித்து இவர்கள் ஒரு தற்காப்பான மனப்பான்மையை ஏற்படுத்திக்கொள்ளலாம். உதாரணமாக, அவருடைய மனநலப் பிரச்னைகளைப்பற்றிப் பிறர் தீவிரமான கருத்துகளைச் சொல்லும்போது, அவர்கள் என்ன நம்புகிறார்களோ அதற்கு மாறான கருத்துகளைப் படிக்கிறபோது, அவர்கள் தற்காப்பாகப் பேசக்கூடும். மனநலப் பிரச்னை வந்த ஒருவரை அவருடைய அன்புக்குரியவர் நன்றாக அறிந்திருக்கலாம். அதேசமயம் அவருடைய மனநலப் பிரச்னையைப்பற்றி அவர்களுக்கு அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகவே, தற்காப்பான மனோநிலை அவர்கள் மனத்தை மூடச்செய்துவிடக்கூடும், அவருடைய அன்புக்குரியவரின் பிரச்னைக்கு உதவி/ ஆதரவு பெறுகிற வாய்ப்பைத் தடுத்துவிடக்கூடும்.

உதாரணமாக, தன்னுடைய உறவினருக்கு வந்திருக்கிற மனநலப் பிரச்னை ஒன்றும் பெரிதில்லை என்று ஒருவர் தீர்மானித்துவிடுகிறார், அதுகுறித்து யாருடனும் பேசாமல் இருந்துவிடுகிறார். ஒருவேளை அவர் தன் அருகில் உள்ள ஒரு சமூக சேவை ஊழியருடன் பேசினால், இந்தப் பிரச்னையை சமாளிப்பதற்கான ஒரு சிறந்த வழியை அவர் சிபாரிசு செய்திருப்பார். ஆனால் இவருடைய தற்காப்பு மனப்போக்கு காரணமாக, அவர் யாரிடமும் பேசுவதில்லை, அதனால் பிரச்னையைச் சரிசெய்கிற வாய்ப்பும் கிடைப்பதில்லை.

மனக்கசப்பு

இந்த உணர்வு தவறானது என்ற எண்ணம், நமக்கு சமூகத்தில் உள்ளது, ஆகவே மனநலம் பாதிக்கப்பட்டவரைக் கவனித்துக்கொள்கிற ஒருவர், தனக்கு இந்த உணர்வு இருந்தாலும் அதை வெளியே சொல்லத்தயங்குவார். இந்தப் பிரச்னைக்கு முக்கியமான காரணம், நமது சமூகம் தன்னைத்தானே வருத்திக்கொண்டு தியாகம் செய்தல், சமரசம் செய்துகொள்ளுதல், பிறருக்காகப் பாடுபடுதல், போன்றவற்றை மிகவும் உயர்த்திப் பேசுகிறது. அதனால் சம்பந்தப்பட்டவருடைய வாழ்க்கை எப்படி பாதிக்கப்படுகிறது, அவர்களுடைய ஆசைகள், உணர்வுகள், நோக்கங்கள், எப்படி சிதைந்து போகின்றன என்பதைப்பற்றி சமூகம் எண்ணுவதே இல்லை. உதாரணமாக, ஒருவருக்கு மனநலப் பிரச்னை ஏற்படுகிறது, அவருடைய உறவினர் ஒருவர் அவரைக் கவனித்துக்கொள்கிற பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார், பாதிக்கப்பட்டவருக்கு முழு நேரமும் உதவி தேவைப்படுவதால், அவர் தன் வேலையை விட்டுவிடுகிறார், தன்னுடைய பொழுதுபோக்குகளை விட்டுவிடுகிறார், வேறு எதிலும் கவனம் செலுத்தாமல் முழு நேரமும் அவருடனே இருந்து அவரைக் கவனித்துக்கொள்கிறார்.

இவை அனைத்தும் மிகப்பெரிய பொறுப்புகள், உடல், மன அழுத்தத்தை உண்டாக்கக்கூடியவை. ஆனால் சமூகம் அப்படி நினைப்பதில்லை. ஒருவர் மனநலம் பாதிக்கப்பட்டவரைக் கவனிக்கத்தொடங்கியதுமே அது அவருடைய பொறுப்பு என்று விட்டுவிடுகிறார்கள். அவர்களுக்கு எந்தவிதமான ஆதரவையும் வழங்குவதில்லை. இந்தப் பொறுப்பு அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் என்னென்ன இழப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது என்பதைப்பற்றி யாரும் அக்கறைப்படுவதில்லை. குறிப்பாக மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் பெண்களாக இருந்துவிட்டால், இந்தியாவில் இந்த நிலைமை இன்னும் மோசமாகிவிடுகிறது. அவர்கள் தங்களுடைய கல்வி, வேலை தொடங்கி இன்னும் பல விஷயங்களைத் தியாகம் செய்யவேண்டி இருக்கும் அவர்கள் வீட்டுவேலைகளையும் தொடர்ந்து செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கப் படுவதால். இந்த அழுத்தம் மேலும் அதிகரிக்கும்.

பெரும்பாலான நேரங்களில், தங்கள் வாழ்க்கையை நடத்துவதற்குப் போதுமான நிதி வசதி இல்லாமலிருப்பதும், தங்களுடைய உழைப்பைக் குடும்பத்தினர் அலட்சியப்படுத்துகிறார்களே என்ற உணர்வும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்களுக்குப் பெருத்த வலி, எரிச்சலை உண்டாக்கக்கூடும்.

சுருக்கமாகச் சொன்னால், மனநலம் பாதிக்கப்பட்டவரைக் கவனித்துக்கொள்கிறவருடைய பணிவாழ்க்கை, திருமணம், ஆரோக்கியம், வீட்டிற்கு வெளியே அவர் ஈடுபட்டு வந்த நடவடிக்கைள் என்று அனைத்தும், இந்தக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பால் பாதிக்கப்படும்போது, அவர்கள் கோபம் கொள்வதும் மனக்கசப்பு கொள்வதும் நிகழ்கிறது, அதை அவர்களால் வெளிப்படையாகச் சொல்லக்கூட இயலுவதில்லை.

குறிப்பு: மனநலம் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர் ஒருவரைக் கவனித்துக்கொள்கிற ஒருவர், மனக்கசப்பு, கொள்வது இயல்பான ஒன்றுதான். அதுபற்றி எந்தவிதமான குற்ற உணர்வோ, கூச்சமோ கொள்ள வேண்டியதில்லை. அதேசமயம் இந்த மனக்கசப்பு தீவிர நிலையை எட்டி அதன்மூலம் அவர் தங்களுக்கோ அல்லது மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கோ ஏதேனும் சேதத்தை உண்டாக்க முயன்றால், அதற்கு உரிய சிகிச்சை / மாற்று நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.

துயரம்   

மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்கள், எந்தத் துயரத்தையும் அனுபவிப்பதில்லை என பிறர் எண்ணக்கூடும். காரணம் பிறர் முன்னே அவர்கள் சிரித்த முகத்துடன் தோன்றலாம். ஆனால் உண்மை அதுதானா? இந்தத் தவறான எண்ணத்திற்குக் காரணம் பொதுவாக நாம் துயரத்தை மரணத்துடன் மட்டுமே தொடர்புபடுத்திப் பார்க்கிறோம். அதே வருங்காலத்தில் நிகழப்போவதை எண்ணி இப்போதே துயரம் நேரப்போவது சாத்தியம். குறிப்பாக தங்கள் அன்புக்குரியவர் ஒருவர் மனநலப் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருக்கிறார். அதற்கு சிகிச்சை கிடையாது, அது, நீண்டநாள் நீடிக்கப்போகிறது, அதிலிருந்து அவரால் மீள இயலாமலே போகலாம் என்பது போன்ற விஷயங்களை ஒருவர் அறியும்போது, துயரத்தில் ஆள்வது சகஜமே. உதாரணமாக அல்ஸைமர்ஸ், டிமென்சியா, புற்றுநோய் போன்றவற்றைக் கொண்டுள்ளவர்களின் உறவினர்கள் துயரம் கொண்டிருப்பது சகஜம். குறிப்பாக அவர்கள் சிகிச்சை பெற்றுக்கொண்டிருக்கிற காலத்திலும், அவர்கள் முடிவுக்காலம் நெருங்கிவிட்டது என்ற நேரத்திலும் இந்தத்துயரம் அதிகமாகக் காணப்படும். மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்கள் இந்தச் சோகம் மற்றும் வலியுணர்வைப் புரிந்து கொள்ளவேண்டும், அதைத் தங்கள் அன்புக்குரியவர்களிடம் வெளிப்படுத்தவேண்டும். அதாவது தங்களுடைய உணர்வுகளைப் புரிந்துகொள்வார்கள், தங்களுக்கு ஆதரவளிப்பார்கள், என்று நினைக்கக்கூடியவர்களிடம் அவர்கள் தங்களுடைய உணர்வுகளை மறைக்காமல் சொல்லவேண்டும். வெறுமனே சிரித்த முகத்தைக் காட்டி உண்மையான உணர்வுகளை மறைக்கக்கூடாது. அதன்மூலம் பிரச்னைகள் எந்தவிதத்திலும் தீராது, சொல்லப்போனால் அவை பெரிதாகக்கூடும்.

அதுபோன்ற சூழ்நிலைகளில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்கள் தங்களுக்காக சில நேரத்தை ஒதுக்கிக்கொள்ளவேண்டும். தங்களுடைய மனத்திற்குப் பிடித்த வேலையைச் செய்யவேண்டும். தெளிவாகச் சிந்தித்து நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கவேண்டும்.

கவலை

மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்கள், எவ்வளவுதான் முயற்சிசெய்தாலும் கவலையைத் தவிர்க்க இயலாது, காரணம் அவர்கள் தங்கள் அன்புக்கு உரியவர்கள் மீது மிகுந்த அன்பும் அக்கறையும் வைத்திருக்கிறார்கள், இந்த மனநலப் பிரச்னையால் அவர்களுடைய படிப்பு, நிதிநிலை, திருமணம், ஆகியவை பாதிக்கப்படுமே என்று வருந்துகிறார்கள். அதோடு தங்களுக்குப் பிறகு அவர்களை யார் கவனித்துக்கொள்வார்கள் என்ற கவலையும் உண்டாகிறது.

பாதிக்கப்பட்ட ஒருவரை எண்ணி இவ்வாறு கவலைப்படுவது நல்ல விஷயம்தான், அதே சமயம் இந்தக் கவலைகள் அளவுக்கு மீறும்போது பெரிய பிரச்னைகளைக் கொண்டுவந்துவிடும். உதாரணமாக வருங்காலத்தில் என்ன நடக்கப்போகிறதோ என்று கவலைப்படுபவர்களுடைய தூக்கம் கெட்டுப்போகும், அவர்களுக்கு அடிக்கடி தலைவலி வரும், மற்ற உடல்வலிகள் வரும், வேறு உடல்சார்ந்த பிரச்னைகளும் ஏற்படக்கூடும்.

மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரைக் கவனித்துக்கொள்கிறவர், இந்தக் கவலைகளால் உடல்நலமும் தினசரி நடவடிக்கைகளும் கெட்டுப்போவதாக உணர்ந்தால், அதனை அலட்சியமாக எண்ணக்கூடாது. உதாரணமாக இந்தக் கவலைகளால் ஒருவருடைய வேலை கெடலாம். சாப்பிடும் பழக்கம் மாறலாம், தூக்கம் கெடலாம், அதுபோன்ற நேரங்களில் இந்த உணர்வைக்கட்டுப்படுத்துவதற்கு அவர்கள் ஏதாவது செய்யவேண்டும். இதுபற்றி அவர்கள் ஒரு பயிற்சி பெற்ற ஓர் ஆலோசகருடன் பேசலாம், அவர் இந்த உணர்வுகளைப் புரிந்து கொண்டு, எதிர்மறையான இந்த எண்ணங்களை சரியான திசையில் எப்படிக்கொண்டு செல்லலாம் என்று ஆலோசனை கூறுவார்கள். அதன்மூலம் இந்தப் பிரச்னைகள் குறைந்து அவர்கள் தங்கள் அன்புக்குரியவர்களைக் கவனிக்கும் பணியில் கவனத்தைத் திருப்பலாம்.

ஆற்றாமை, வெட்கம்

இந்த உணர்வுகள் மனநலப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஏற்படுகின்றன, அவர்களைக் கவனித்துக்கொள்கின்ற குடும்பத்தினர்களுக்கும் ஏற்படுகின்றன, காரணம் மனநலப் பிரச்னைகளைப்பற்றி நமது சமுகம் கொண்டிருக்கிற தவறான கருத்துகள், களங்க உணர்வுதான். இதனால் தங்களுடைய அன்புக்குரிய ஒருவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டு இருக்கிறது என்பதையே குடும்ப உறுப்பினர்கள் வெளியே சொல்லத்தயங்குகிறார்கள். இதை வெளியே சொன்னால் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று தயங்குகிறார்கள், நெருங்கிய உறவினர்கள், நண்பர்களிடம் கூட இதைப்பற்றிச் சொல்வதில்லை, அப்படிச் சொன்னால் சமூகத்தில் தாங்கள் தனிமைப் படுத்தப்படுவோமோ என்று எண்ணிப் பயப்படுகிறார்கள்.

கிட்டத்தட்ட இதே மாதிரியான உணர்வுகள் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உள்ளன, காரணம் அவர்களால் தங்களுடைய உணர்வுகளையும், எண்ணங்களையும் தங்களுடைய அன்புக்குரியவர்களிடம் வெளிப்படையாகச் சொல்ல இயலுவதில்லை. அப்படிச் சொன்னால், தாங்கள் களங்கப்படுத்தப்படுவோமோ, தங்கள் மீது பாரபட்சம் காண்பிக்கப்படுமோ, சமூக ரீதியில் தனித்து விடப்பட்டு விடுவோமோ என்று அவர்கள் கவலையுறுகிறார்கள்.

மனநலம் பாதிக்கப்பட்ட ஓர் இளைஞரின் தந்தையிடம் இதுபற்றிப் பேசியபோது, அவர் வருத்ததுடன் சொன்னது, “இப்போதெல்லாம் எங்கள் வீட்டிற்கு நண்பர்கள் மற்றும் உறவினர்கள் யாருமே வருவதில்லை” என்றார், “திருமணங்கள், சமூக நிகழ்வுகளுக்குக்கூட எங்களை யாரும் அழைப்பதில்லை, எங்களுடன் பழகுவதற்கு யாருமே இல்லை”.    

குற்ற உணர்ச்சி

மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்கள், தங்களைத் தாங்களே குற்ற உணர்ச்சியில் வதைத்துக்கொள்வதும் நிகழ்கிறது. தாங்கள் தங்கள் அன்புக்குரியவர்களுக்கு சரியானவற்றைச் செய்யவில்லையோ என்ற எண்ணம் அவர்களை வருத்தப்படச் செய்கிறது. தாங்கள் எதையோ தவறாகச் செய்துவிட்டோம், சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்கவில்லை, மனநலத்தின் முக்கியத்துவத்தைப்பற்றி தாங்கள் சரியாகப்புரிந்துகொள்ளவில்லை என்று அவர்கள் நினைத்து வருந்துகிறார்கள்.

இதனால், மனநலம் பாதிக்கப்பட்டவரைக் கவனித்துக்கொள்கிற ஒருவர் “நான் இப்படிச் செய்திருக்கவேண்டும்…..”, “நான் அப்படிச்செய்திருக்கவேண்டும்…..”, “நான் இப்படிச்செய்திருக்கலாமே….”, “ஒருவேளை நான் இப்படிச்செய்திருந்தால்….” என்றெல்லாம் எண்ணிக் குற்றவுணர்ச்சி கொள்கிறார்கள். உதாரணமாக, ”நான் என் மகனை முன்பே சிகிச்சைக்கு அழைத்துச்சென்றிருக்கவேண்டும்”, ”நான் என் உறவினருடன் பொறுமையாகப் பழகியிருக்கவேண்டும்”, “நான் என் மகளுடன் அதிக நேரம் செலவழித்திருந்தால், அவள் உண்ணுதல் குறைபாட்டிற்கு ஆளாகியிருக்கமாட்டாள்“ … இப்படி இன்னும் பலவிதமான எண்ணங்கள்.

மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்கள், ஒருவிதமான நம்பிக்கையற்ற நிலையில் இருப்பதால் இது போன்ற குற்ற உணர்ச்சிகளைத் தவிர்க்க இயலாது, இந்த எண்ணங்கள் அவர்களுக்குள் தொடர்ந்து சுற்றிக்கொண்டே இருந்தால், ஒரு கட்டத்தில் அவர்களுக்கும் மனச்சோர்வு வரக்கூடும், அவர்களுக்கும் சிகிச்சை தேவைப்படக்கூடும்.

குறிப்பு: பொதுவாகவே லட்சியவாதமான எண்ணங்கள் மற்றும் எதிர்பார்ப்புகள் அதிகம் இல்லாமல் வாழ்வது நல்லது. உண்மை எப்போதும் லட்சியவாதக் கருத்துகளின் அடிப்படையில் அமைவதில்லை, அதில் வரம்புகள் இருக்கும், குறைகள் இருக்கும், அவற்றை ஏற்றுக்கொள்வதன்மூலம் அந்தச்சூழலை நம்மால் சிறப்பாகக் கையாள இயலும். அதாவது வாழ்க்கையின் ஓட்டத்தோடு செல்லப்பழகவேண்டும், அதில் ஏற்படக்கூடிய தடங்கல்களுக்காக நம்மை நாமே தண்டித்துக்கொள்ளக்கூடாது.

மனச்சோர்வு

மனநலம் பாதிக்கப்பட்ட தங்கள் அன்புக்குரியவரை நீண்ட நாட்களாகக் கவனித்துக்கொண்டிருப்பவருக்கு, உடல் மற்றும் மன ரீதியில் பலவிதமான பாதிப்புகள் ஏற்படக்கூடும். அவர்கள் மிகவும் அழுத்தமாக உணரலாம், பதற்றமாக உணரலாம், இதன்மூலம் அவர்களுக்கு, உணர்வுக் களைப்பு ஏற்படலாம். இந்த நிலை இப்படியே தொடர்ந்தால் அவர்களுக்கு மனச்சோர்வு உண்டாகலாம், அதுபோன்ற சூழ்நிலைகளில் மருத்துவர்கள் கவனித்துக்கொண்டிருப்பவருக்குச் சிகிச்சை அளித்து அவரைக் குணப்படுத்தவேண்டும், அப்போதுதான் அவர்களால் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை சரியாக கவனித்துக்கொள்ள இயலும்.

ஏற்றுக்கொள்ளுதல்

மேற்கண்ட உணர்வுகள், சிறிது காலத்திற்குத் தொடர்ந்து கொண்டிருக்க, ஒரு கட்டத்தில், மனநலம் பாதிக்கப்பட்டவரைக் கவனித்துக்கொள்கிறவர் யதார்த்தத்தைப் புரிந்து கொள்கிறார், இந்தப் பிரச்னைக்கு ஒரு நிபுணரின் உதவி தேவை என்று தீர்மானிக்கிறார். அதன்பிறகு, அவர்கள் ஒரு மனநிலை நிபுணரைச் சந்தித்து ஆலோசனை பெறுகிறார்கள், தன்னுடைய அன்புக்குரியவர்களுக்கு சிபாரிசு செய்யப்படும் சிகிச்சையை பின்பற்றத்தொடங்குகிறார்கள். இதற்காக அவர்களுக்குத் தேவைப்படும் அனைத்து விதமாக ஆதரவுகளையும் வழங்குகிறார்கள்.

மருத்துவரிடம் முறைப்படி சிகிச்சை பெற்றுக்கொண்டிருக்கும்போதே அவர்கள் மதரீதியிலான சடங்குகளையும் பழக்க வழக்கங்களையும் பின்பற்றக்கூடும். அவர்களுடைய இந்த நம்பிக்கைக்கு மனநல நிபுணர்கள் தடை சொல்வதில்லை. அதேசமயம் இந்த மதம் சார்ந்த பழக்கங்கள் மனநலம் பாதிக்கப்பட்டவரை துன்புறுத்தும் வகையில் அமைந்தால், உதாரணமாக மனநலம் பாதிக்கப்பட்டவரை அடிப்பது, அவருடைய கையில் கற்பூரம் ஏற்றுவது, அவரைக்கட்டிப்போடுவது போன்ற செயல்பாடுகளில் ஒருவர் ஈடுபட்டால், இதனை உடனடியாக நிறுத்தவேண்டும் என்று மனநல நிபுணர்கள் கண்டிப்பாகத் தெரிவிப்பார்கள். அதாவது மனநலப் பிரச்னைகளுக்குச் சிகிச்சை பெற்றுக்கொண்டிருக்கும்போது அத்துடன் செய்யப்படுகிற பிற மன ரீதியிலான சடங்குகள் எந்தவிதத்திலும் பாதிக்கப்பட்டவரை துன்புறுத்தக்கூடாது, அவருடைய முறையான சிகிச்சையை பாதிக்கக்கூடாது.

குறிப்பு: பொதுவாக ஒருவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பது தெரிந்தவுடன் அவரது குடும்பத்தினர் இதுபோன்ற மதம் சார்ந்த சடங்குகள், சிகிச்சைகளில் ஏகப்பட்ட பணத்தைச் செலவழித்து விடுகிறார்கள். நிறைவாக இதுபோன்ற சிகிச்சைகளால் எந்தப் பலனும் இல்லை என்று புரிந்துகொண்டு, அவர்கள் முறையான மருத்துவ சிகிச்சைக்கு வரும்போது, அவர்களிடம் அதிகப்பணம் இருப்பதில்லை, அதுவும் பாதிக்கப்பட்டவர் பெறும் சிகிச்சையின் தரத்தைப் பாதிக்கிறது.

ஒருவேளை அவர்கள் ஆரம்பத்திலேயே சிகிச்சைக்கு வந்திருந்தால் சிகிச்சை முன்கூட்டியே தொடங்கியிருக்கும், பிரச்னை இல்லாமல் சிகிச்சையை சரியாகச் செய்து அவர்கள் குணமாகி இருக்கவும் கூடும். மதரீதியிலான சடங்குகளைப் பொறுத்தவரை இது ஒரு மிக முக்கியமான பிரச்னை, அவற்றைப் பின்பற்ற எண்ணுகிறவர்கள் இதனைப் பின்பற்றவேண்டும். மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரைக் கவனித்துக்கொள்கிறவர் இத்தனை உணர்ச்சிகளையும் அனுபவிப்பதால், அவர் அழுத்தத்திற்கு ஆளாகிறார், அவருக்கும் பிற குடும்ப உறுப்பினர்களுடைய ஆதரவு, அன்பு, கவனிப்பு தேவைப்படுகிறது. குறிப்பாக அவருடைய நண்பர்களும் மற்ற குடும்ப உறுப்பினர்களும், இந்த நிலைமையைச் சமாளிக்க அவருக்கு உதவலாம்.

பெண் மனநலப் பிரச்னையால் பாதிக்கப்படும்போது அவரைக் கவனித்துக்கொள்கிறவரின் உணர்வுகள்

ஒரு பெண்ணுக்கு மனநலப் பிரச்னைகள் வரும்போது, அவருடைய குடும்பத்தினருக்கு சில கூடுதல் கவலைகள் சேர்ந்து விடுகின்றன. அதே பிரச்னைகள் ஓர் ஆணுக்கு வந்தால் அவர்கள் இந்த அளவுக்குக் கவலைப்படமாட்டார்கள். குறிப்பாக கிராமங்களில் ஒரு பெண் திருமணம் செய்துகொண்டால் மட்டுமே அவர் வாழ்க்கை முழுமையடைகிறது, அப்போதுதான் அவர் நன்கு வாழ இயலும் என்கிற எண்ணம் பரவலாகக் காணப்படுகிறது.

ஆகவே ஒரு பெண்ணிற்கு மனநலப் பிரச்னை வந்தால் அவரது குடும்பத்தினர் உடனடியாக “அவருடைய வாழ்க்கை என்ன ஆகும்?“ என்று சிந்திக்கத் தொடங்குகிறார்கள். அவரை யார் திருமணம் செய்து கொள்வது என்று கவலை கொள்ளத் தொடங்கிவிடுகிறார்கள். இன்னும் திருமணமாகாத ஓர் இளம்பெண்ணின் தாய், தன்னுடைய மகளின் மனநலப் பிரச்னையை மறைத்துவைப்பதாகச் சொல்கிறார். காரணம் “அவருக்கு மனநலப் பிரச்னைகள் இருக்கின்றன என்று யாருக்காவது தெரிந்தால், பின்னால் நாங்கள் அவருக்கு மாப்பிள்ளை தேடும்போது யாரும் அவரைத் திருமணம் செய்துகொள்ள முன்வர மாட்டார்கள், யாரும் அவருக்கு பிரச்னை குணமாகிவிட்டது என்று தெரிந்தாலும், அவளைத் திருமணம் செய்துகொள்ளத் தயங்குவார்கள்.”

இந்தக்கூடுதல் கவலைகளுக்கு முக்கியமான காரணம், நமது சமூகத்தில் ஓர் ஆண் திருமணமான பிறகும் தன் பெற்றோருடனே வசிக்கிறார். அவருக்கு மனநலப் பிரச்னை இருந்தால் முன்பு ஆதரித்துவந்த பெற்றோர் அவரைத்தொடர்ந்து ஆதரிப்பார்கள். அவருடைய மனைவியும், அவரைக் கவனித்துக்கொள்ளக்கூடும். ஆனால் ஒரு பெண்ணின் நிலைமை அவ்வாறல்ல, அவரது மனநலப் பிரச்னையைக் கவனித்துவந்த பெற்றோர் ஒரு கட்டத்தில் அவரை இன்னொரு வீட்டிற்கு அனுப்பவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகிறார்கள். இந்தக்கட்டத்தில் அந்த இன்னொரு வீட்டில் இருக்கும், கணவர், மாமனார், மாமியார் போன்ற இவருடைய பிரச்னையை எந்த அளவு புரிந்துகொள்வார்கள், எந்த அளவு அவருக்கு ஆதரவு தருவார்கள், என்கிற கவலை அவர்களுக்கு உண்டாகிறது. நமது சமூகம் இன்னும் பழமைவாதச் சிந்தனையிலேயே இருப்பதால், இப்படி மனநல பாதிப்பு தொடர்பான சில கூடுதல் பிரச்னைகள், பெண்களுக்கு ஏற்படுகின்றன. மனநலம் பாதிக்கப்பட்ட ஓர் ஆணைவிட மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு பெண் அதிகம் களங்கப்படுத்தப்படுகிறார், ஆகவே இந்தப் பிரச்னையைச் சந்திக்கும் பெண்கள், ஒரு முழுமையான, பயனுள்ள வாழ்வை வாழ இயலாமல் சிரமப்படுகிறார்.

இந்தக் கட்டுரை NIMHANS உளவியல்துறைப் பேராசிரியர் டாக்டர் ஜகதீஷா தீர்த்தஹள்ளி வழங்கிய குறிப்புகளின் அடிப்படையில் எழுதப்பட்டது.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org