மனநலப் பிரச்னை: உண்மை அறிவோம்

தவறான நம்பிக்கை: மனநலம் என்று எதுவுமில்லை. எல்லாரும் சும்மா நடிக்கிறார்கள்.

உண்மை: மனநலம் என்பது உண்மையே. மனித உடலின் பிற பகுதிகளைப்போலவே, மூளைக்கும் நலப்பிரச்னைகள் வரலாம். இவற்றையே நாம் மனநலப் பிரச்னைகள் என்கிறோம். இந்தப் பிரச்னைகள் கொண்டோரால் இயல்பான வாழ்க்கையை அனுபவிக்க இயலாமல் போகலாம்.

பலவிதமான மனநலப் பிரச்னைகள் இருக்கின்றன. அவை மக்களை வெவ்வேறுவிதமாகப் பாதிக்கின்றன. மனநலப் பிரச்னைகள் உண்மையிலேயே இருக்கின்றன என்பதை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும். அந்தப் பிரச்னைகள் கொண்டோருக்கு நிபுணரின் உதவி தேவை என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

தவறான நம்பிக்கை: எனக்கு எப்போதும் மனநலப் பிரச்னைகள் வராது/ ஏழைகளுக்குதான் மனநலப் பிரச்னைகள் வரும்.

உண்மை: ஐந்து பேரில் ஒருவருக்கு மனநலப் பிரச்னைகள் வருகின்றன, இவை யாரை வேண்டுமானாலும் பாதிக்கலாம். பொதுவான மனநலப் பிரச்னைகள் முன்பைவிட வேகமாகப் பரவிக்கொண்டிருக்கின்றன. எந்த வயதில் உள்ளவருக்கும், எந்தச் சமூகத்தைச் சேர்ந்தவருக்கும், எந்தப் பொருளாதார நிலையில் உள்ளவருக்கும், எந்தக் கலாசாரத்தைப் பின்பற்றுபவருக்கும் மனநலப் பிரச்னைகள் அவரலாம். மனநலத்தை நாம் அலட்சியப்படுத்தக்கூடாது. மனநலப் பிரச்னைகளைத் தடுக்கிற, குணப்படுத்துகிற, அவற்றோடு வாழ்கிற வழிகளைப் புரிந்துகொள்ளவேண்டும்.

தவறான நம்பிக்கை: மனநலப் பிரச்னைகளைக் குணப்படுத்த இயலாது.

உண்மை: பெரும்பாலான மனநலப் பிரச்னைகளைக் குணப்படுத்த இயலும். அவற்றை முன்கூட்டியே கண்டறிந்து, உரியமுறையில் சிகிச்சை வழங்கினால் போதும். மனநலப் பிரச்னைகளைக் கொண்டோரைக் கவனித்துக்கொள்கிறவர்கள் வழங்கும் ஆதரவு, உதவியும் மிக முக்கியம். அப்போதுதான் அவர்கள் விரைவில், முழுமையாகக் குணமாவார்கள். பிற சூழ்நிலைகளில், தீவிர மனநலக் குறைபாடுகளின் தாக்கத்தைக் குறைப்பதற்காகச் சிகிச்சை வழங்கப்படலாம். இதன்மூலம் அவர்கள் தங்களுடைய வாழ்க்கையைச் சிறப்பாகக் கட்டுப்படுத்திக்கொண்டு வாழலாம்.

தவறான நம்பிக்கை: பலவீனமானவர்களுக்குதான் மனநலப் பிரச்னைகள் வரும்.

உண்மை: மனநலப் பிரச்னைகளுக்கும் 'மன உறுதி'க்கும் சம்பந்தமே இல்லை. ஒருவருடைய ஆளுமையைப்பொறுத்தும் அது வருவதில்லை. பின்வரும் அம்சங்களில் ஒன்று அல்லது பலவற்றை அடிப்படையாகக்கொண்டு மனநலப் பிரச்னைகள் வரலாம்: சமூகக்காரணிகள், மரபியல் காரணிகள், உயிரியல் காரணிகள், சுற்றுச்சூழல் காரணிகள் மற்றும் உளவியல் காரணிகள்.

தவறான நம்பிக்கை: மனநலப் பிரச்னை கொண்டோர் எப்போதும் வன்முறையாக நடந்துகொள்வார்கள், பிறரைக் காயப்படுத்துவார்கள், ஆகவே, அவர்களைப் பார்த்து நாம் பயப்படவேண்டும்.

உண்மை: மனநலப் பிரச்னை கொண்டோர் எப்போதும் வன்முறையாக நடந்துகொள்வதில்லை, அவர்களுடைய மனநலப் பிரச்னை அவர்களை அப்படித் தூண்டுவதில்லை. 'சாதாரண' மனிதர் ஒருவர்கூட வன்முறையாக நடந்துகொள்ள வாய்ப்புள்ளது, மனநலப் பிரச்னை கொண்ட ஒருவர் வன்முறையாக நடந்துகொள்வதற்கும் அதே அளவு வாய்ப்புதான் உள்ளது. அவர்களுக்குச் சரியான சிகிச்சை தந்தாலே போதும். இவர்கள் பெரும்பாலும் தங்களைத் தாங்களே காயப்படுத்திக்கொள்வார்கள். பிற 'சாதாரண' மக்களும் இவர்களைக் காயப்படுத்துவதுண்டு. இவர்கள் பிறரைக் காயப்படுத்துவதில்லை. மனநலப் பிரச்னை கொண்டோரைப்பார்த்து நாம் பயப்படவேண்டியதில்லை, இப்படித் தவறாக எண்ணவேண்டியதில்லை.

தவறான நம்பிக்கை: மனநலப் பிரச்னை கொண்டோரை மருத்துவமனையில் அல்லது காப்பகத்தில் சேர்த்துவிடவேண்டும்.

உண்மை: மனநலப் பிரச்னை கொண்டோரில் பெரும்பாலானோரை மருத்துவமனையில் சேர்க்கவேண்டிய அவசியம் இல்லை. சில சூழ்நிலைகளில், சிகிச்சையின் ஒரு பகுதியாக அவர்களை மருத்துவமனையில் சேர்க்கவேண்டியிருக்கலாம். அதேசமயம், அவர்கள் நீண்டகாலத்துக்கோ, நிரந்தரமாகவோ மருத்துவமனைகளில் அல்லது காப்பகங்களில் இருக்கவேண்டியதில்லை. உண்மையில், மனநலப் பிரச்னை கொண்ட ஒருவரைக் கவனித்துக்கொள்கிறவர், அவர்மீது அன்பு செலுத்துகிறவர் அருகிலேயே இருந்தால், அவர் விரைவில் குணமாகலாம். தாங்கள் தங்களுடைய இல்லத்தில் இருக்கிறோம் என்கிற சவுகர்ய உணர்வே இவர்கள் குணமாக உதவலாம்.

தவறான நம்பிக்கை: பலவீனமான மனத்தால்தான் மனநலப் பிரச்னைகள் ஏற்படுகின்றன. வலுவான மனம் கொண்ட ஒருவருக்கு மன நலப் பிரச்னைகள் வராது.

உண்மை: மனநலப் பிரச்னை வருவதற்கும் ஒருவருடைய 'மன உறுதி'க்கும் சம்பந்தமே இல்லை. நமது மனங்கள் சுற்றுச்சூழல், உளவியல் மற்றும் உயிரியல் காரணிகளால் பாதிக்கப்படக்கூடும்.

தவறான நம்பிக்கை: மன நலப் பிரச்னை கொண்டோர் தங்களுடைய மனத்தைக் கட்டுப்படுத்தினாலே போதும், அவர்களே எளிதாக இந்தப் பிரச்னையிலிருந்து வெளியே வந்துவிடலாம்.

உண்மை: மனநலப் பிரச்னைகளுக்கும் மூளைக்கும் தொடர்பு உள்ளது உண்மைதான். மனநலப் பிரச்னை கொண்டோர் சிகிச்சை எடுத்துக்கொள்ள, குணமாக விரும்பவேண்டும் என்பதும் உண்மைதான். ஆனால், மனத்தைக் கட்டுப்படுத்துவதால் மனநலப் பிரச்னைகளிலிருந்து குணமாகிவிட இயலாது. முறையான பராமரிப்பு, சிகிச்சை உள்படப் பல விஷயங்களைச் செய்தால்தான் இதிலிருந்து குணமாக இயலும்.

தவறான நம்பிக்கை: மனநலப் பிரச்னை கொண்டோரால் எந்த வேலையையும் செய்ய இயலாது.

உண்மை: ஒருவருக்கு வந்திருக்கும் மனநலப் பிரச்னை எப்படிப்பட்டது, அது அவரை எந்த அளவு தீவிரமாகப் பாதித்துள்ளது என்பதைப்பொறுத்து, அவர் ஓர் இயல்பான வாழ்க்கையை வாழலாம், தங்களுக்கு வந்திருக்கும் பிரச்னையைச் சமாளிக்கலாம். அவர்கள் தங்களுக்குப் பொருந்துகிற, தாங்கள் குணமாவதை ஆதரிக்கிற வேஅலிகளில் சேரலாம்.

தவறான நம்பிக்கை: மனநலப் பிரச்னை கொண்டோருடன் பேசுவதன்மூலம், தெரபி தருவதன்மூலம் அதனைக் குணமாக்க இயலாது. இது பேசிச் சரியாகிற விஷயம் அல்ல.

உண்மை: பெரும்பாலான மனநலப் பிரச்னைகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகளில் தெரபிகள், ஆலோசனை நிகழ்வுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. சில நேரங்களில், தெரபிகள் அல்லது ஆலோசனைகளைக்கொண்டே பிரச்னைகளைக் குணப்படுத்திவிடலாம், வேறு சில சூழ்நிலைகளில், அவர்களுக்கு மருந்துகளும் தேவைப்படலாம். அறிவியல்பூர்வமாக நடத்தப்படும் தெரபிகள் அல்லது ஆலோசனை நிகழ்வுகளால் பலர் குணமாகியிருக்கிறார்கள், இது நிரூபிக்கப்பட்ட உண்மை.

தவறான நம்பிக்கை: மனநலப் பிரச்னைகளைத் தடுக்கவே இயலாது.

உண்மை: மேலே சொன்னதுபோல், மனநலப் பிரச்னைகள் பல காரணிகளால் நிகழ்கின்றன: உயிரியல் காரணிகள், சுற்றுச்சூழல் காரணிகள் மற்றும் உளவியல் காரணிகள். இந்தக் காரணிகளை நாம் கட்டுப்படுத்தினால், பல மன நலப் பிரச்னைகளைத் தடுக்கலாம். இதற்கு மிக எளிய உதாரணம், போதைப்பொருள்களைப் பயன்படுத்துதல். சரியான வாழ்க்கைச் சூழல் இருந்தாலே போதும், பல பொதுவான மனநலப் பிரச்னைகளைத் தடுக்கலாம்.

தவறான நம்பிக்கை: மனநலப் பிரச்னைகளுக்கும் மதத்துக்கும் ஆழமான தொடர்பு உண்டு. சாத்தான் அல்லது இறந்த ஒருவருடைய ஆன்மா உடலில் நுழையும்போதுதான் மனநலப் பிரச்னைகள் ஏற்படுகின்றன.

உண்மை: இது ஒரு மிகப் பழைய, தவறான நம்பிக்கை. இதை நம் மனங்களிலிருந்து நீக்கவேண்டும். இது முற்றிலும் தவறு. மனநலப் பிரச்னைகள் ஒருவருடைய மனத்தைப் பாதிக்கின்றன. மனத்தில் என்ன நடக்கிறது என்பதற்கும், மதத்துக்கும், ஒருவருடைய மத நம்பிக்கைகளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. உண்மையில், இதுபோன்ற தவறான நம்பிக்கைகளைக் கண்மூடித்தனமாக நம்பினால், மனநலப் பிரச்னை கொண்ட ஒருவருடைய நிலைமை இன்னும் மோசமாகலாம், அவர் குணமாகும் சாத்தியத்தைக் குறைத்துவிடலாம்.

தவறான நம்பிக்கை: மனநலப் பிரச்னை வந்தாலே, உடனே மனநல மருத்துவரிடம் செல்லவேண்டும்.

உண்மை: மனநல மருத்துவர்கள் ஒருவருடைய மனநலப் பிரச்னைகளுக்கு நல்ல ஆலோசனைகளை வழங்குவார்கள். அதேசமயம், எல்லாப் பிரச்னைகளுக்கும் அவர்களிடம் செல்லவேண்டியதில்லை. பல மனம்சார்ந்த பிரச்னைகளைக் குணமாக்க மருத்துவ உளவியலாளர்கள், ஆலோசகர்கள், தெரபிஸ்ட்கள்போன்ற பிற நிபுணர்களின் ஆலோசனைகள் உதவும். இவர்கள் பெரும்பாலான பொது மனநலக் குறைபாடுகளைக் குணமாக்கப் பயிற்சிபெற்றுள்ளார்கள். பல சிகிச்சைச் செயல்பாடுகளின்போது, பாதிக்கப்பட்டவர்கள் மனநல மருத்துவர்கள் மற்றும் உளவியலாளர்கள்/ஆலோசகர்கள் என இருவரையும் சந்திப்பது நல்லது எனச் சிபாரிசு செய்யப்படுகிறது.

தவறான நம்பிக்கை: ஒருவருக்கு மனநலப் பிரச்னை வந்துவிட்டால், அவருக்கு நாம் எந்தவிதத்திலும் உதவ இயலாது.

உண்மை: அன்புக்குரிய ஒருவருக்கு மனநலப் பிரச்னை வந்துவிட்டால், அவரைக் கவனித்துக்கொள்கிறவர் அவருக்குப் பலவிதங்களில் உதவலாம், அவர் குணமாவதில் முக்கியப் பங்கு வகிக்கலாம். மன நலப் பிரச்னை கொண்ட ஒருவர் குணமடைவதற்குத் தேவையான மிக முக்கியமான விஷயங்களில் ஒன்று, ஓர் ஆதரவான, அவரைப் புரிந்துகொள்கிற சூழல். அந்தச் சூழலை, அவருடைய அன்புக்குரியவர்கள்தான் உருவாக்க இயலும். பாதிக்கப்பட்டவரிடம் 'நாங்கள் உங்களுக்காக இருக்கிறோம்' என்று இவர்கள் சொல்லலாம், அதனை அவர்கள் உணரும்படி செய்யலாம், அவர்களைச் சாதாரண மனிதர்களாக நடத்தலாம், இதன்மூலம் அவர்கள் பாதுகாப்பாக உணர்வார்கள், விரைவில் குணமாவார்கள், இந்த மாற்றம், அவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்களாலேயே நிகழ்கிறது. இதனைச் செய்வதற்கு, ஒருவர் மனநலம்பற்றிய சரியான விவரங்களை அறிந்துகொள்ளவேண்டும்.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org