தேர்வின்போது நேரத்தைக் கையாள்தல்

தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களைக் கேட்டால், 'நிறைய பாடங்கள் இருக்கின்றன, ஆனால், அத்தனையையும் படிப்பதற்கு நேரம் இல்லை!' என்பார்கள். இதன் பொருள், தேர்வு அழுத்தத்தைச் சரிசெய்ய ஒரு சிறந்த வழி, நேர மேலாண்மை. பல மாணவர்கள், தேர்வின்போது தங்களுக்குக்கிடைக்கும் நேரத்தை வீணடித்துவிடுகிறார்கள். சிலர் படிக்க விரும்புவதே இல்லை, இன்னும் சிலர் 'அப்புறம் படித்துக்கொள்ளலாம்' என்று இருந்துவிடுகிறார்கள், தேர்வுக்குப் படிக்க ஆகும் நேரத்தைக் குறைத்து மதிப்பிட்டுவிடுகிறார்கள். ஒருவர் தன்னுடைய நேரத்தைத் திட்டமிடுகிறார் என்றால், அவர் அதைப்பற்றி வியூகரீதியில் சிந்திக்கிறார். இப்படி உருவாக்கிய திட்டத்தை அவர் பின்னர் மாற்றவேண்டியிருக்கலாம். ஆனால், தொடக்கத்தில் தன்னுடைய வேலைகளை ஒழுங்காக வரையறுத்ததால், அவர் பலன் பெறுவார்.

பல நேரங்களில், ஒரு குறிப்பிட்ட வேலையைச் செய்ய எவ்வளவு நேரம் தேவைப்படும் என்பதை மாணவர்கள் உணர்வதில்லை. ஒன்று, அதனை அதிகமாக மதிப்பிட்டுவிடுகிறார்கள், அல்லது, குறைத்து மதிப்பிட்டுவிடுகிறார்கள். இதனால், ஒருவர் தன்னுடைய வழக்கமான வேலைகளுக்கு எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்கிறார் என்பதைக் கருத்தில் கொள்வது நல்லது. ஆரம்பத்தில், பல மாணவர்கள் ஒரு வாரத்துக்கு நாட்குறிப்பு எழுதுகிறார்கள், ஒவ்வொரு நாளையும் தாங்கள் எப்படிச் செலவிட்டோம் என்று மணிவாரியாகக் குறிப்பிடுகிறார்கள்.

ABC வகைபாடு

ஒரு மாணவர் தன்னுடைய பாடத்திட்டத்தை அல்லது தேர்வு தொடர்பான வேலைகளை வகைவாரியாகப் பிரித்தால், அவர் தன்னுடைய நேரத்தைச் சரியாகப் பயன்படுத்துவார், தன்னுடைய செயல்திறனை மேம்படுத்திக்கொள்வார். அவர் தன்னைத்தானே கேட்கவேண்டிய சில கேள்விகள்: எனக்கு எது மிகவும் முக்கியம்? எந்த வேலைகளைப் பிறகு செய்யலாம்? எதை நாளைக்குச் செய்யலாம்? எதை வார இறுதிக்குத் தள்ளிப்போடலாம்? இந்த அணுகுமுறையால் அவர் தன்னுடைய வேலைகளைச் சிறப்பாகச் செய்யக் கற்றுக்கொள்கிறார், அத்துடன், தன்னுடைய பணிகள் அனைத்துக்கும் அமைப்புரீதியில் முக்கியத்துவம் வழங்குகிறார்.

வேலைகளைப் பின்வரும் குழுக்களாக வகைப்படுத்தலாம்:

  • A மிக அவசரம் (மிக முக்கியம்)

  • B விரைவாகச் செய்தால் நல்லது (ஓரளவு முக்கியம்)

  • C காத்திருக்கலாம் (குறைந்த முக்கியத்துவம்)

ஒரு நேர மேலாண்மைத் திட்டத்தை உருவாக்குதல்

பொதுவாக ஒரு நேர மேலாண்மைத் திட்டத்தில் ஒருவர் அன்றைக்குச் செய்யவேண்டிய எல்லா வேலைகளும் இருக்கும். உதாரணமாக:

  • செய்யவேண்டியவை: வகுப்புகள், வேலை, குடும்ப நேரம், விளையாட்டு, உடற்பயிற்சி, குழுக்கள் (பயண நேரம் உள்பட)

  • தனிப்பட்ட நேரம்: குளித்தல்/காலைக்கடன்கள், மனத்தைத் தளர்வாக்குதல், தொலைக்காட்சி பார்த்தல், இசை கேட்டல், பொருள்களை வாங்குதல், பிறருடன் பழகுதல், மின்னஞ்சல் அனுப்புதல், தொலைபேசியில் பேசுதல் போன்றவை

  • அவசியமான நேரம்: சாப்பிடுதல், தூங்குதல்

  • வீட்டுவேலை: சமைத்தல், வீட்டைச் சுத்தப்படுத்துதல், பாத்திரம் தேய்த்தல், துணி துவைத்தல் போன்றவை.

இதேபோல, படிக்கும்போது மாணவர் தன்னுடைய தினசரி வேலைகளை முன்கூட்டியே திட்டமிடவேண்டும். அதாவது, தான் அன்று படிக்கப்போகும் பாடங்கள் அல்லது தலைப்புகளின் பட்டியலைத் தயாரிக்கவேண்டும். இதைச் செய்ய ஒரு வழி, "செய்யவேண்டியவை" பட்டியலொன்றை எழுதுதல். இந்தப் பட்டியலில் உள்ள பாடங்கள் அல்லது அத்தியாயங்களை ABC அணுகுமுறைப்படி வகைப்படுத்தலாம், ஒவ்வொரு வேலைக்கும் A, B அல்லது C என முக்கியத்துவம் வழங்கலாம். இதனால், எதை முதலில் செய்யவேண்டும் என்ற தெளிவு அவருக்குக் கிடைக்கும். பெரிய வேலைகளைப் பல சிறிய வேலைகளாகப் பிரிக்கலாம். இதனால் அவற்றை எளிதில் முடித்துவிடலாம். இதேபோல், ஒவ்வொரு வேலையையும் விரிவாக விளக்கவேண்டும்.

தள்ளிப்போடுதல்

பல மாணவர்கள் தங்களுடைய படிப்பு வேலைகளைக் கடைசி நிமிடம்வரை தள்ளிப்போடுகிறார்கள். இது ஏன்? ஏதாவது ஒரு சாக்குப்போக்கு சொல்லி அதிலிருந்து மாணவர்கள் விலகுவது ஏன்? அவர்களே கவனச்சிதறலுக்கு அனுமதி அளிப்பது ஏன்? பல நேரங்களில், ஒரு வேலையைத் தொடங்குவது அல்லது தொடர்வதில் இருக்கும் சிரமங்களைப்பற்றி ஒருவர் சிந்திப்பது, அந்த வேலையைவிட மோசமாக இருந்துவிடுகிறது. குறிப்பாக, மாணவர்களைப்பொறுத்தவரை ஒரு பெரிய பாடத்திட்டத்தைப் பார்க்கும்போதே அவர்கள் 'இது சிரமம்' என்று தீர்மானித்துவிடுகிறார்கள். சோம்பேறித்தனத்தால் அவர்கள் படிப்பதைத் தள்ளிப்போடுகிறார்கள். கடைசிநேரம்வரை சும்மா இருந்துவிடுகிறார்கள். பல நேரங்களில், தொடங்குவதுதான் பெரிய சிரமம். ஆகவே, தள்ளிப்போடும் பழக்கத்தை வெல்லவேண்டுமென்றால், முதல் படியை எடுத்துவைக்கவேண்டும், அது எத்துணை சிறிய படியாக இருந்தாலும் சரி.

தள்ளிப்போடும் பழக்கத்தை வெல்லும் வழிகள்:

  • ஒரு விஷயத்தைத் தான் ஏன் தள்ளிப்போடுகிறோம் என்பதை அடையாளம் காணுதல். இந்த எண்ணங்களில் தெளிவு ஏற்பட்டால், வாசிப்பு இலக்குகளை எட்டுவதற்கான தீர்வுகள் கிடைத்துவிடும். உதாரணமாக, ஒருவர் தோல்வியை எண்ணிப் பயப்படுகிறார் என்றால், அவர் இலக்கைத் தீர்மானிப்பதில் கவனம் செலுத்தலாம், எண்ணங்களை இன்னும் நேர்விதமாக அமைத்துக்கொள்ளலாம். ஒருவர் ஒரு குறிப்பிட்ட வேலையைச் செய்வதுகுறித்துப் பதற்றம்கொள்கிறார் என்றால், அந்த வேலையை அல்லது இலக்கைச் சிறு இலக்குகளாகப் பிரிக்கலாம்.

  • சிலருக்குக் கவனம் செலுத்துதலில் பிரச்னைகள் இருக்கலாம், அவர்கள் தங்களுடைய படிக்கும் இடத்தில் கவனச்சிதறல்கள் இல்லாதபடி பார்த்துக்கொள்ளலாம், வேலையைச் சிறிய, எட்டக்கூடிய பகுதிகளாகப் பிரிக்கலாம், இதனால் 'இது நம்மால் இயலாது' என்கிற எண்ணம் வராது, அவருடைய கவன அளவுக்குச் சவால் ஏற்படாது.

  • இங்கே நினைவில் வைக்கவேண்டிய ஒரு விஷயம், ஒருவர் மிகவும் எச்சரிக்கையாக இருக்கும்போதுதான் மிகவும் சிக்கலான வேலைகளைப் பூர்த்தி செய்கிறார். ஆகவே, தொடக்கத்தில் சிரமமான அத்தியாயங்களைப் படிக்கலாம், திரும்பப்பார்க்கலாம், அதன்பிறகு, சுலபமான பாடங்களைப் படிக்கலாம்.

காண்க:

  • சாங், J. (2007). நேர மேலாண்மை. சிட்னி, ஆஸ்திரேலியா: நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம்.

  • காட்ரெல், எஸ். (2008). படிப்புத் திறன்கள் கையேடு (மூன்றாம் பதிப்பு). நியூ யார்க், NY: பால்க்ரேவ் மெக்மில்லன்.

  • மோர்ஜென்ஸ்டெர்ன், J. (2004). நேர மேலாண்மை: உள்ளிருந்து வெளியே நியூ யார்க்: ஹென்றி ஹால்ட் மற்றும் நிறுவனம்.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org