மனநல சிகிச்சைக்குப்பின் பணிக்குத் திரும்புதல்

மனநலப் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்த ஒருவர் எப்போது மீண்டும் வேலைக்குத் திரும்பலாம்? இந்தக் கட்டுரை தெளிவாக விளக்குகிறது!

மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் அதற்கான சிகிச்சையை எடுத்துக்கொண்ட பிறகு எப்போது பணிக்குத் திரும்பலாம் என்பது பற்றி நிபுணர்கள் குறிப்பிட்ட நெறிமுறைகளை வகுத்திருக்கிறார்கள்.

1. அவர்களுடைய மனநலப் பிரச்னைகளுக்கான அறிகுறிகள் நின்றுவிட்டனவா: மனநலப் பிரச்னையால் பாதிக்கப்பட்டவரிடம் அதற்கான அறிகுறிகள் இன்னும் காணப்படுகின்றனவா? அல்லது நின்றுவிட்டனவா? இதைப்பற்றி அவரது உளவியல் நிபுணர்தான் சிந்தித்துத் தீர்மானிக்கவேண்டும், அதன் அடிப்படையில் அவர் எப்போது பணிக்குச் செல்லலாம் என்பதைத் தீர்மானிக்கவேண்டும்.

ஒருவர் எத்தகைய மனநலப் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்தார் என்பதைப் பொருத்தும் இது மாறுபடும். உதாரணமாக ஒருவருக்கு மிதமான அல்லது நடுத்தர அளவிலான மனச்சோர்வு பிரச்னை வந்திருந்தால் அவருக்கு சரியான சிகிச்சை வழங்கப்பட்டால் அந்தப் பிரச்னைக்கான அறிகுறிகள் விரைவில் நின்றுவிடும் ஆனால் OCD பிரச்னைக்கு ஒருவர் சிகிச்சை பெறும்போது, அதற்கான அறிகுறிகள் அவ்வளவு விரைவாக நின்றுவிடாது.

2. அவர்களுடைய பழக்க வழக்கங்கள் எப்படி மாறி உள்ளன: அவர்கள் நன்றாகச் சாப்பிடுகிறார்களா? நன்றாகத் தூங்குகிறார்களா? மனநலப் பிரச்னை வருவதற்கு முன் பிறருடன் எப்படி பழகிக்கொண்டிருந்தார்களோ அப்படி பழகுகிறார்களா? ஏதாவது வேலையைச் செய்து கொண்டே இருக்கவேண்டும் என்று எண்ணுகிறார்களா? மீண்டும் பணிக்குத் திரும்பவேண்டும் என்ற ஊக்கம் அவர்களுக்குக் காணப்படுகிறதா?

3. அவர்களுடைய தினசரி பழக்கங்கள் எப்படி உள்ளன: அவர்கள் மீண்டும் பணிக்குத் திரும்ப இயலும், தினசரி ஒரு குறிப்பிட்ட பணியைச் செய்ய இயலும் என்று அவரைக் கவனித்துக்கொள்கிறவர்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா?

சில நேரங்களில் மனநலப் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்கள் தங்களுடைய அன்புக்குரியவர்கள் மீண்டும் வேலைக்குத் திரும்ப வேண்டுமா என்று தயங்குகிறார்கள். காரணம், பாதிக்கப்பட்டவருடைய திறன்களில் அவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்களுக்கு நம்பிக்கை இருப்பதில்லை, அவர்கள் வேலைக்குப் போனால் அவர்களால் தாங்க இயலாதோ என்று அவர்கள் பயப்படுகிறார்கள்.

ஆனால் இந்த விஷயத்தில் அவர்கள் மனத்தை திடப்படுத்திக் கொண்டு முயற்சி செய்யத்தான்வேண்டும். அப்போதுதான் பாதிக்கப்பட்டவர் ஒரு குறிப்பிட்ட அளவிலான இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவார். சில பணிகளைச் செய்துகொண்டு எல்லாரையும் போல் வாழத் தொடங்குவார்.

மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்கள் தங்களுடைய அன்புக்குரியவர்கள் அதற்கான சிகிச்சை பெற்ற பிறகு வழக்கமான பணிக்குத் திரும்புவதற்கு பின்வரும் வழிகளில் உதவலாம்:

  • முதலில், தங்களுடைய அன்புக்குரியவர்கள் வேலைக்குத் திரும்பத்தான்வேண்டும் என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும். மனநலம் பாதிக்கப்பட்டவர் அதற்கான சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறார். அவர்களால் பிறருடன் சகஜமாக உரையாட இயலும். நாள் முழுவதும் தங்களைத் தாங்களே கவனித்துக்கொள்ளவேண்டும் என்பதை, அவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்கள் நம்பவேண்டும், அதனை ஏற்றுக்கொள்ளவேண்டும்.

  • அவர்கள் எங்கே பணி செய்யப்போகிறார்களோ அந்த இடத்தில் போதுமான ஆதரவு அவர்களுக்கு கிடைக்கிறது என்பதை உறுதி செய்யவேண்டும். உதாரணமாக மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்து ஒருவர் பணிக்குத் திரும்பும்போது, அவருடைய கவலைகளைப் புரிந்துகொண்டு, அவரைத் தங்களில் ஒருவராக நினைக்கக்கூடிய ஓர் இடத்தில் அவருக்கு வேலை பெற்றுத் தரலாம். ஒருவேளை மனநலம் பாதிக்கப்படுவதற்கு முன்பு அவர்கள் எங்கே வேலை பார்த்தார்களோ அதே இடத்திற்கு இப்போதும் திரும்பச் செல்கிறார்கள் என்றால், பாதிக்கப்பட்டவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்கள் அந்த நிறுவனத்திடம் பேசவேண்டும், அவருக்கு என்ன நடந்தது என்பதை விளக்கவேண்டும், இப்போது அவர் பணிக்குத் திரும்பும்போது என்ன மாதிரியான ஆதரவுகள் அவருக்குத் தேவைப்படுகின்றன என்பதை சொல்லி அவர்களுடைய ஒத்துழைப்பைப் பெறவேண்டும்.

  • மனநலம் பாதிக்கப்பட்டு அதற்குச் சிகிச்சை பெற்ற ஒருவருக்கு வேலை கிடைக்கவில்லை என்றால் அவர்கள் ஊக்கமிழந்து காணப்படக்கூடும். முன்பு தங்களுடன் வேலை பார்த்தவர்கள் இப்போது நன்றாக சௌகரியமாக வாழ்கிறார்கள் என்பதைக் கண்டு தாங்கள் பல வாய்ப்புகளை வீணடித்துவிட்டோமே என்று அவர்கள் வருந்தலாம். அதுபோன்ற நேரங்களில் அவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்கள் அவர்களுக்கு ஊக்கம் தரும் விதமாகப் பேசவேண்டும், அவர்களுடைய ஆர்வம் மற்றும் திறன்களுக்குப் பொருந்துகிற ஒரு வேலையைக் கண்டறியச்சொல்லி அவர்களை ஊக்கப்படுத்தவேண்டும்.

  • மனநலம் பாதிக்கப்பட்டு அதற்குச் சிகிச்சை பெற்று வருகிறவர்கள் பணிக்கு திரும்புவதற்கு முன்னால் அதற்கு வெள்ளோட்டமாக சில கூடுதல் பொறுப்புகள், வாய்ப்புகளைக் கொடுத்துப் பார்க்கலாம். இதன்மூலம் அவர்கள் சமூகத்தில் பிறருடன் உரையாடப் பழகுவார்கள், தங்களைப் பிறர் மதிக்கிறார்கள் என உணர்வார்கள். உதாரணமாக அவர்களை திருமணங்களுக்கு அழைத்துச் செல்லலாம், பிற சமூக நிகழ்வுகளுக்கு அழைத்துச் செல்லலாம், வீட்டில் ஏதேனும் ஒரு தீர்மானம் எடுக்கவேண்டியிருக்கும்போது அவர்களுடன் கலந்து பேசலாம். ஷாப்பிங், சின்னச்சின்ன வேலைகள், மின்சாரக்கட்டணம் செலுத்துதல், போன்றவற்றை அவர்களையே செய்யச்சொல்லலாம். ஆனால் இந்த முயற்சியை படிப்படியாகத்தான் செய்யவேண்டும். ஒரே நேரத்தில் ஏகப்பட்ட வேலைகளை அவர்கள் தலையில் சுமத்தி திணறடித்துவிடக்கூடாது, அவர்களால் எதை சௌகரியமாகச் செய்யமுடிகிறது என்பதைக் கவனித்து கொஞ்சம் கொஞ்சமாக செயல்படுத்தவேண்டும்.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org