நீங்கள் வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷனின்மூலம் எப்படிப் பலன் பெறலாம்?

 

மனநலம் மற்றும் ஆரோக்கியம்பற்றிய இந்தப் போர்ட்டல், வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன் உங்களுக்காக வழங்கும் முதல் படைப்பு. இந்த விவரத்தளம் தற்போது இணையம்வழியாக வழங்கப்படுகிறது. மனநலம் மற்றும் ஆரோக்கியம்பற்றிய விவரங்களை அறிவதற்கு இந்த போர்ட்டல் உங்களுக்கு உதவும் என நாங்கள் நம்புகிறோம். நீங்கள் இதுதொடர்பாக ஏதேனும் ஒரு பிரச்னையைச் சந்தித்தால், சரியான நடவடிக்கை எடுக்க இது உதவும். நீங்கள் அடுத்து என்ன செய்யவேண்டும் என்பதை அறிவதற்காக, உங்களுக்குச் சரியான விவரங்களைத் தர நாங்கள் உறுதிகொண்டுள்ளோம்.

எங்களுடைய வாசகர்கள் யார்?

மனநலப் பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் அல்லது, அவர்களைப் பார்த்துக்கொள்கிறவர்களுக்கு, அந்தப் பிரச்னையைப்பற்றியும், சாத்தியமுள்ள தீர்வுகளைப்பற்றியும் தெரியவந்தால், அவர்கள் மிகுந்த பலன் பெறுவார்கள். இந்தப் போர்ட்டல் நிச்சயம் அவர்களுக்கானதுதான். அவர்கள் மனங்களில் இருக்கக்கூடிய கேள்விகளுக்கு இது பதிலளிக்கும்.

இந்தப் போர்ட்டல் நம்மைப்போன்ற பொதுமக்களையும் மனத்தில் வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. நமக்கு மனநலப் பிரச்னைகள் இல்லாமலிருக்கலாம், அப்படி யாரையும் நாம் கவனித்துக்கொள்ளாமலிருக்கலாம். அதேசமயம், இதுபோன்ற பிரச்னைகளைப்பற்றிப் பொதுமக்களான நாம் சரியாகத் தெரிந்துகொள்ளாவிட்டால், மனநலம்பற்றிய பல்வேறு தவறான நம்பிக்கைகள் நம்முடைய மனத்திலும் இருக்கும், அதை நாம் தொடர்ந்து பரப்புவோம். ஆகவே, மனநலப் பிரச்னை கொண்டவர்களை இந்தச் சமூகம் அருவருப்பாகப் பார்க்கிறது, ஒதுக்குகிறது, அவர்கள்மீது வன்முறையைச் செலுத்துகிறது என்றால், அதற்கு நம்மையும் அறியாமல் நாமும் ஒரு காரணமாக இருக்கிறோம். பொதுமக்களான நாம் இந்தப் பிரச்னைகளைப்பற்றிச் சரியாகத் தெரிந்துகொண்டால், இதனால் பாதிக்கப்படுகிறவர்களுடைய போராட்டங்களை நாம் உணர்வோம், அவர்கள்மீது அன்புகாட்டுவோம். இதனால், அவர்கள் சமூகரீதியில் ஒப்புக்கொள்ளப்படும் சூழல் உருவாகும், அவர்களுக்குத் தேவைப்படும் தன்னம்பிக்கை கிடைக்கும், அவர்கள் தங்களுடைய பிரச்னைகளை வெல்லும் துணிவு கொள்வார்கள், சரியான தீர்வுகளை நாடிச்சென்று பலன் பெறுவார்கள்.

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன் போர்ட்டலில் நீங்கள் மன நலனைப்பற்றிய விவரங்களையும் அறியலாம். நம் அனைவருக்கும் இது ஒரு முக்கியமான விவரம் ஆகும். மனநலனைப்பற்றித் தெரிந்துகொண்டு, அதை நமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வதன்மூலம் நமது வாழ்க்கைத்தரமும் மேம்படும், நம்மைச் சுற்றியுள்ளவர்களின் வாழ்க்கைத்தரமும் மேம்படும்.

போர்ட்டலின் வடிவமைப்பு

தி வொய்ட் ஸ்வான் ஃபௌண்டேஷன் போர்ட்டல் இரண்டு பெரும்பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

முதல் பகுதி, மன நலத்தைப் புரிந்துகொள்ளுதல், இதில் மனநலம் மற்றும் அதுசார்ந்த பல்வேறு தலைப்புகளைப்பற்றி வாசிக்கலாம். பல்வேறு உளவியல் சவால்கள், வாய்ப்புகள், போக்குகள், பார்வைகள், மற்றும் மன நலம் மற்றும் ஆரோக்கியம்பற்றிய பிற அம்சங்களைப்பற்றி இந்தக் கட்டுரைகள் பேசுகின்றன.

இரண்டாவது பகுதி உளவியல் குறைபாடுகள், இந்தப் பகுதியில் உளவியல்துறையினர் கண்டறிந்துள்ள பல்வேறு குறைபாடுகளைப்பற்றி வாசிக்கலாம். நீங்கள் ஒரு குறிப்பிட்ட குறைபாட்டைப்பற்றி அறிந்துகொள்ள விரும்பினால், இங்கே உள்ள தலைப்புகளிலிருந்து அந்தக் குறைபாட்டைத் தேர்ந்தெடுங்கள், அதுபற்றிய உங்களுடைய அனைத்துக் கேள்விகளுக்கும் பொருத்தமான பதில்களைத் தெரிந்துகொள்ளுங்கள். எளிமையும் அவசியமும் கருதி, பழக்கங்களிலிருந்து விடுபடுதல் மற்றும் தற்கொலையைத் தடுத்தல் ஆகியவை மற்ற குறைபாடுகளுன் சேர்க்கப்படாமல் தனியே வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பக்கத்தின் மேல்பகுதியிலும் நீங்கள் இந்த இரு தலைப்புகளைக் காணலாம்.

ஒவ்வொரு தலைப்பு அல்லது குறைபாடும் பல்வேறுவகையாக விளக்கப்பட்டுள்ளது. இங்கே கட்டுரைகள் உண்டு, பேட்டிகள் உண்டு, நிஜவாழ்க்கைக் கதைகள் உண்டு, வீடியோக்கள்கூட உண்டு.

இங்கே நீங்கள் என்ன செய்யலாம்?

விவரங்களைப் பெறலாம்

முதலாவதாக, மனநலம்பற்றிய விவரங்களைத் தேடிப்பெறும் தனித்துவமான இடம் இந்த போர்ட்டல்.

இங்குள்ள தேடல்வசதி மிகச்சிறப்பானது. நீங்கள் அறியவிரும்பும் விவரத்தை அது விரைவாகப் பெற்றுத்தரும். நீங்கள் எதைப்பற்றி அறியவிரும்புகிறீர்கள் என்பது உங்களுக்குத் தெளிவாகத் தெரிந்தால், இந்தப் போர்ட்டலில் உள்ள தேடல் பெட்டியில் அந்தச் சொற்களைத் தட்டச்சு செய்து தேடுங்கள், அதற்கான விடைகள் உங்களுக்குக் காட்டப்படும், அவற்றை நீங்கள் வாசித்து அறியலாம்.

தொடர்பில் இருக்கலாம்

நாம் விவரங்களை அறிய விரும்புகிறோம் என்றால், அதற்காக ஒரு கட்டுரை, ஒரு புத்தகம் அல்லது ஒரு வீடியோவைப் பார்த்தால் போதாது. சரியான செயல்பாடு என்ன என்பதைத் தெரிந்துகொள்வதற்காக, நாம் தொடர்ந்து வாசிக்க விரும்புவோம், அதற்கான முயற்சிகளில் ஈடுபடுவோம். இதற்கு, நீங்கள் தொடர்ந்து இந்த விவரத்தளத்தைப் பார்த்துவரவேண்டும், ஒவ்வொருமுறையும் இங்கே ஒரு புதிய விஷயத்தை நீங்கள் அறியலாம். நீங்கள் சந்திக்கும் சவால்களைத் தாண்டிச்செல்வதற்கான அறிவுப்பயிற்சியாக, இந்தப் போர்ட்டலை அமைத்துக்கொள்ளுங்கள், அடிக்கடி இங்கே வந்து வாசியுங்கள்.

உங்களுடைய கதையைப் பகிர்ந்துகொள்ளலாம்

நிஜவாழ்க்கை அனுபவங்கள் எல்லாருக்கும் பிடிக்கும், எல்லாருக்கும் புரியும். ஆகவே, நம்பிக்கையோடு போராடியவர்களின் வெற்றிக்கதைகளை நாங்கள் உங்களுக்குத் தொடர்ந்து வழங்குவோம். நீங்களும் இப்படியொரு பிரச்னையைச் சந்தித்து, போராடி வென்றவர் என்றால், உங்களுடைய கதையைப் பகிர்ந்துகொள்ளுங்கள். உங்களைப் பார்த்துப் பலர் ஊக்கம் பெறுவார்கள், உங்களுடைய தீர்மானங்களும் வெற்றியும் பலரை முன்னேறச்செய்யும், குணப்படுத்தும்.