மனச்சோர்வு

Q

மனச்சோர்வு என்றால் என்ன?

A

உங்களுக்கு நன்றாகத் தெரிந்த ஒருவர், உங்களுடைய நண்பர் அல்லது உறவினர் என்று வைத்துக்கொள்வோம், அவர் திடீரென்று மிகவும் சோகமாகத் தெரிகிறார், அல்லது, நெடுநேரம் களைத்துப்போனவரைப்போலச் சோர்வுடன் காணப்படுகிறார். கவனித்துப்பார்த்தால், அவர் யாருடனும் அதிகம் பேசுவதில்லை, தினசரி நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டுவதில்லை, ஒழுங்காகச் சாப்பிடுவதில்லை, அடிக்கடி வேலைக்கு வராமல் வீட்டிலேயே இருந்துவிடுகிறார். இப்படிப்பட்ட அறிகுறிகள், அவர் மனச் சோர்வால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்பதைக் காட்டுகின்றன.

மனச்சோர்வு என்பது ஒரு சாதாரணமான, மனம் சார்ந்த பிரச்னை. இதன் அறிகுறிகள் ஒருவருடைய சிந்தனையை, உணர்வுகளை, பழக்கவழக்கங்களை, உறவுகளை, வேலைசெய்யும் திறனைப் பாதிக்கின்றன. சில தீவிர சூழ்நிலைகளில், இது மரணத்துக்குக்கூட வழிவகுக்கக்கூடும்.

நாம் எல்லாருமே அவ்வப்போது சோகமாக உணர்வோம், சில மோசமான நிகழ்வுகள் அல்லது சூழ்நிலைகளை எண்ணி வருந்துவோம், அது சகஜம்தான். ஆனால், இந்த உணர்வு நெடுநேரம் (இரண்டு வாரங்களுக்கு மேல்) நீடித்தால் அல்லது அடிக்கடி திரும்பத் திரும்ப வந்து தினசரி வாழ்க்கையை, ஆரோக்கியத்தைப் பதித்தால், அது மனச் சோர்வுப் பிரச்னையாக இருக்கலாம், அதற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம்.

குறிப்பு:

  • மனச்சோர்வு என்பது, பலவீனத்தின் அடையாளம் அல்ல, ஒருவருடைய மனநிலை சரியில்லை என்பதற்கான அடையாளம் அல்ல; சர்க்கரை நோய், இதய நோய்போல, இதுவும் ஒரு நோய்தான். இது யாரை வேண்டுமானாலும் எந்த வயதிலும் பாதிக்கலாம்.
  • மனச்சோர்வைக் குணப்படுத்தலாம்.

Q

மனச் சோர்வின் அறிகுறிகள் என்ன?

A

“இப்போதெல்லாம் எனக்குப் பசிப்பதே இல்லை. நாள்முழுக்கத் தூங்கிக்கொண்டிருக்கவேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால், இரவு நேரங்களில் நெடுநேரம் விழித்திருக்கிறேன், என் மனத்தில் ஏதேதோ எண்ணங்கள் தோன்றித் தொந்தரவு செய்கின்றன. நான் வேலை செய்ய விரும்புவதில்லை, யாருடனும் பேச விருப்பமில்லை. நாள்முழுக்க என்னுடைய அறையிலேயே இருந்துவிட நினைக்கிறேன். நான் என்ன செய்தாலும் அது தவறாகவே தோன்றுகிறது. எனக்கு எந்த மதிப்பும் கிடையாது, என்னால் யாருக்கும் எந்தப் பிரயோஜனமும் கிடையாது என்று உணர்கிறேன். யாரும் என்னைப் புரிந்துகொள்வதில்லை…”

இப்படி ஒருவர் சிந்தித்தால், உணர்ந்தால், அவர் மனச் சோர்வால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும். அதேசமயம், பிரச்னையின் தீவிரமும் அறிகுறிகளும் ஒருவருக்கு ஒருவர் மாறலாம். அத்துடன், மனச் சோர்வின் அறிகுறிகள் எல்லாமே ஒருவரிடம் காணப்படாது, ஒவ்வொருவரிடமும் ஓரிரு அறிகுறிகள்மட்டுமே இருக்கலாம், மனச் சோர்வு வாழ்க்கையின் ஒவ்வோர் அம்சத்தையும் பாதிக்கக்கூடும்.

குறிப்பு: இந்த அறிகுறிகள் மனச் சோர்வின் சாத்தியங்களைக் குறிப்பிடக்கூடிய பொதுவான வகைபாடுகள் ஆகும். ஒருவேளை இந்த அறிகுறிகளில் எவையேனும் ஒருவரிடம் காணப்பட்டால், மன நல நிபுணர் ஒருவரைச் சந்தித்து, ஆலோசனை பெறுவது முக்கியம். அப்போதுதான் அவருடைய பிரச்னையைச் சரியாகக் கண்டறிந்து, அதற்கு என்னவகையான சிகிச்சை தேவைப்படும் என்று தீர்மானிக்கலாம்.

இந்த அறிகுறிகளில் சில:

  • பெரும்பாலான நேரங்கள் சோர்வாகவும் சோகமாகவும் உணர்வார்கள்
  • தினசரி வேலைகளைச் செய்வதில் ஆர்வமில்லாமலிருப்பார்கள், அல்லது, அதைச் சிரமமாக உணர்வார்கள். எளிதில் களைத்துப்போவார்கள், நாள்முழுக்க ஆற்றலில்லாததுபோல் உணர்வார்கள். முன்பு அவர்கள் ஆர்வத்தோடு செய்த வேலைகளை இப்போது ரசித்து அனுபவிக்கமாட்டார்கள்.
  • கவனம் செலுத்துதல், சிந்தித்தல், தீர்மானமெடுத்தல் போன்றவற்றில் சிரமப்படுவார்கள் (உதாரணமாக: பொழுதுபோக்குகள், கல்வியில் கவனம் செலுத்துதல் போன்றவை.)
  • தன்னம்பிக்கை குறையும், தன்மீதே மதிப்பு குறையும்
  • தன்னைப்பற்றியும், வாழ்க்கையைப்பற்றியும், வருங்காலத்தைப்பற்றியும் எதிர்மறையாகச் சிந்திப்பார்கள்
  • பசி இருக்காது, அல்லது, அதிகமாகச் சாப்பிடுவார்கள்
  • குற்றவுணர்ச்சியோடு இருப்பார்கள், முந்தைய தோல்விகளுக்குத் தன்னையே காரணமாகச் சொல்லிக்கொள்வார்கள், தான் எதற்கும் லாயக்கில்லை என்று உணர்வார்கள்
  • அடிக்கடி வேலைக்கு வராமலிருப்பார்கள், அல்லது, வேலை செய்யச் சிரமப்படுவார்கள்
  • எதிர்காலத்தைப்பற்றி நம்பிக்கையில்லாமலிருப்பார்கள்
  • தூங்கச் சிரமப்படுவார்கள், அல்லது, தூக்கமே வராது
  • பாலுறவு/ அதுசார்ந்த செயல்பாடுகளில் ஆர்வமில்லாமலிருப்பார்கள்
  • தலைவலி, கழுத்துவலி அல்லது தசைப்பிடிப்பு போன்ற உடல்சார்ந்த வலிகளை உணர்வார்கள்
  • தன்னைத்தானே காயப்படுத்திக்கொள்வது, தற்கொலை அல்லது மரணத்தைப்பற்றிச் சிந்திப்பார்கள்

உங்களுக்குத் தெரிந்த யாரிடமாவது இந்த மனச் சோர்வு அறிகுறிகளில் எவையேனும் காணப்பட்டால், இதுபற்றி நீங்கள் அவர்களிடம் பேசலாம், அவர்களை ஒரு மன நல நிபுணரைச் சந்தித்து ஆலோசனை பெற ஊக்கப்படுத்தலாம்.

Q

மனச் சோர்வு எதனால் ஏற்படுகிறது?

A

மனச் சோர்வு பல காரணிகளுடைய கூட்டணியினால் ஏற்படலாம். அவை மரபு சார்ந்த காரணிகளாகவோ வாழ்க்கை நிகழ்ச்சிகள் அல்லது அழுத்தம் தொடர்பானவையாகவோ இருக்கலாம்.

  • உளவியல் குறைபாடுகள்: மனச் சோர்வானது கண்டறியப்படாத உளவியல் குறைபாடுகளின் ஒரு பகுதியாகவும் இருக்கலாம், உதாரணமாக, எண்ணச் சுழற்சிக் குறைபாடு, சமூக பயம் மற்றும் ஸ்கிஸோபெர்னியா. இந்தச் சூழ்நிலைகளில் ஒரு மன நல நிபுணர் அவரை விரிவாக ஆராய்ந்து மதிப்பிடுவது நல்லது.
  • வாழ்க்கை அழுத்தங்கள்: வயது வந்தவர்களில் பொதுவாகக் காணப்படும் அழுத்தங்கள் பணி, பிறருடனான உறவுகள் (குடும்ப உறவுகள் அல்லது திருமண உறவுகள்), நிதிப் பிரச்னைகள் தொடர்பானவையாக இருக்கலாம், மற்றவையாகவும் இருக்கலாம்.
  • உடல் ஆரோக்கியப் பிரச்னைகள்: கட்டுப்படுத்தப்படாத நோய்களான நீரிழிவு மற்றும் தைராய்டு பிரச்னைகள் கூட மனச் சோர்வுக்கு வழி வகுக்கலாம். ஆகவே ஓர் உளவியல் நிபுணரைச் சந்திக்கும்போது இதற்கு முன் கண்டறியப்படாத நோய்கள் ஏதேனும் இருக்கின்றனவா என்பதும் ஆராயப்படும். இதய நோய், புற்றுநோய் அல்லது ஹெச் ஐ வி போன்ற பெரிய நோய்களால் அவதிப்படுகிறவர்கள் அந்த நோயைச் சமாளிக்க இயலாமல் அல்லது அதற்கேற்பத் தங்களை மாற்றிக் கொள்ள இயலாமல் மனச் சோர்வுச்தைச் சந்திக்கலாம்.
  • ஆளுமை: ஆளுமை அல்லது உடல் பிம்பம் பற்றிய பிரச்னைகளைக் கொண்டிருப்பது (மிகவும் குண்டாக உணர்வது அல்லது மிகவும் ஒல்லியாக உணர்வது, மிகவும் குள்ளமாக உணர்வது அல்லது மிகவும் உயரமாக உணர்வது), எதையும் மிகச்சிறப்பாகச் செய்ய வேண்டும் என்று எண்ணுதல், குறைந்த சுயமதிப்பு, பள்ளி, கல்லூரி, அலுவலகத்தில் ஆரோக்கியமற்ற போட்டி மற்றும் உடன் இருப்பவர்களின் அழுத்தம். இந்தக் காரணிகள் தனித்தனியாகவோ ஒன்றாகச் சேர்ந்தோ மனச் சோர்வைத் தூண்டக்கூடும் எனப் பெரும்பாலான ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
  • மது அல்லது போதை மருந்துகளுக்கு அடிமையாக இருத்தல்: மது என்பது மனச் சோர்வை உண்டாக்கக் கூடியது, அதை மிக அதிகமாக அருந்தினால் மனச் சோர்வு உண்டாகக் கூடும். போதைப் பொருள்கள் மற்றும் பிற ஆபத்தான பொருள்களுக்கு அடிமையாக இருக்கிற ஒருவர் தன்னுடைய குடும்பம் மற்றும் நண்பர்களிடமிருந்து தனிமைப்படுத்தப்படுகிறார். போதை மருந்துகளைத் தொடர்ந்து பயன்படுத்துவது அல்லது அவற்றைப் பெற இயலாமல் இருப்பது போன்றவை விலகல் அறிகுறிகள், பழகுமுறைப் பிரச்னைகள் மற்றும் மனச் சோர்வுக்கு வழி வகுக்கலாம்.

மனச் சோர்வானது பல்வேறு வயதினருக்கும் பல்வேறு உளவியல் காரணிகள் காரணமாக வரலாம். பின்வரும் பிரிவுகளில், மனச் சோர்வு குழந்தைகள், பெண்கள் மற்றும் வயதானவர்களை எப்படிப் பாதிக்கிறது என்பதை  விவரமாகப் பார்ப்போம்.

Q

மனச் சோர்வு எவ்வாறு கண்டறியப்படுகிறது?

A

ஒவ்வொரு மனச் சோர்வையும் கண்டறிய வெவ்வேறு வழிமுறைகள் உள்ளன, சிகிச்சையைத் தொடங்குவதற்கு முன்னால் ஒரு மன நல நிபுணரைச் சந்தித்து ஆலோசனை பெற்று பிரச்னையைச் சரியாக கண்டறிவது முக்கியம். பிரச்னையைத் தவறாக கண்டறிந்துவிட்டால் சிக்கல்கள் ஏற்படலாம், அவருடைய மனநிலை மேலும் மோசமாகலாம்.

மருத்துவ வரலாறு: பொதுவாக உங்களுடைய அறிகுறிகளை உண்டாக்கக்கூடிய பிற நோய்கள் எவையும் உங்களுக்கு இல்லை என்பதை உறுதி செய்வதற்காக மருத்துவ நிபுணர் உங்களுடைய மருத்துவ வரலாற்றைப் பதிவு செய்வார்.

உளவியல் மதிப்பீடு: ஒருவருடைய அறிகுறிகள், சிந்தனைகள், உணர்வுகள் மற்றும் நடந்து கொள்ளும் பாணிகள் ஆகியவற்றைப்பற்றிய விவரங்களைத் திரட்டுவதற்கு மனநல நிபுணர் கேள்வித்தாள் ஒன்றைப் பயன்படுத்துகிறார். இந்த அறிகுறிகள் எவ்வளவு நாளாக இருக்கின்றன, எப்படி, எப்போது அவை தொடங்கின, அவற்றின் தீவிரத்தன்மை மற்றும் இந்த அறிகுறிகள் அவருடைய சிந்தனை மற்றும் நடக்கும் விதத்தை எப்படிப் பாதித்துள்ளன என்பனவற்றையும் நிபுணர் மதிப்பிடுகிறார்.

ஒருவருக்கு மனச் சோர்வின் அறிகுறிகளில் ஐந்துக்குமேல் இரண்டு வாரங்களுக்குமேல் நாளின் பெரும் பகுதி நேரங்களில் காணப்பட்டால்மட்டுமே அவருக்கு மனச் சோர்வு இருப்பதாகக் கருதப்படும். இந்த அறிகுறிகள் அலுவலகம் அல்லது வீட்டில் அவருடைய தினசரி நடவடிக்கைகளைப் பாதிக்கும் அளவு தீவிரமாக இருக்க வேண்டும்.

Q

மனச் சோர்வுக்குச் சிகிச்சை பெறுதல்

A

மனச் சோர்வுபற்றி மக்கள் பேசத் தயங்குவதால் அது பெரும்பாலான நேரங்களில் வெளிப்படையாகத் தெரிவதில்லை. நம்மில் பெரும்பாலானோர் பிரச்னையைப் பகிர்ந்து கொள்வதில்லை, சும்மா சிரித்துச் சமாளித்துவிடுகிறோம். காரணம், அதைச் சொன்னால் மற்றவர்கள் நம்மைக் கேலி செய்வார்களோ, அல்லது பலவீனமாகக் கருதுவார்களோ என்கிற பயம்தான். மனச் சோர்வைச் சமூகம் பார்க்கும் விதம், அதனால் பாதிக்கப்படுகிறவர்கள் உதவியை நாடுவதற்கு ஒரு பெரிய தடையாக உள்ளது. சிகிச்சை வழங்கப்படாவிட்டால் ஒருவர் தேவையில்லாமல் நீண்ட நாள் துன்பப்படலாம், தன்னுடைய குடும்பத்துக்கும் துன்பத்தைக் கொண்டுவரலாம்.

பெரும்பாலானோரால் மனச் சோர்வின் அறிகுறிகளை அடையாளம் காண இயலாது. இதற்குக் காரணம் இந்தப் பிரச்னை பற்றிய தெளிவோ விழிப்புணர்வோ அவர்களுக்கு இல்லாததுதான். இதனால் அவர்கள் சிகிச்சையை நாடுவதற்கு முன்னால் நிறைய நாள் வீணாகிவிடுகிறது, இது அவர்களுடைய நிலையை இன்னும் மோசமாக்கக்கூடும். மிதமான மற்றும் நடுத்தர மனச் சோர்வுக்குச் சுய உதவி உத்திகள், ஆலோசனைகள் அல்லது சிகிச்சையே போதுமானது, பாதிக்கப்பட்டவர்கள் இவற்றின்மூலம் குணமடைந்துவிடுவார்கள். தீவிர மனச் சோர்வுக்கு மட்டுமே சிகிச்சையும் மருந்துகளும் தேவைப்படும்.

உலக சுகாதார அமைப்பு (WHO) உலகை மிகவும் ஊனமாக்கும் நோய்களில் ஒன்றாக மனச் சோர்வைக் குறிப்பிடுகிறது. அதேசமயம், மனச் சோர்வால் பாதிக்கப்பட்ட எவரும் குணமடையலாம், ஓர் இயல்பான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழலாம்.

மனச் சோர்வுக்குச் சிகிச்சை தர பல வழிகள் உண்டு. இது மனச் சோர்வின் தீவிரம், ஆரோக்கிய நிலை மற்றும் பாதிக்கப்பட்டவர் விரைவில் குணமாக வேண்டும் என்று எந்த அளவு உறுதியுடன் இருக்கிறார் என்பனவற்றைப்பொறுத்து அமைகிறது.

  • மருத்துவர்கள் பொதுவாக மனச் சோர்வைப் போக்கும் மருந்துகளைச் சிபாரிசு செய்கிறார்கள்.
  • மனச் சோர்வுத்தோடு இருக்கக் கூடிய பிற நோய்களான நீரிழிவு அல்லது தைராய்டு குறைபாடு போன்றவற்றைக் கண்டறிந்து குணப்படுத்துவதன்மூலம் அவர் மனச் சோர்வுத்திலிருந்து விரைவில் குணமாகலாம்
  • மனச் சோர்வைக் குணப்படுத்துவதில் பல உளவியல் சிகிச்சைகளும் சிறப்பாகப் பலன் தருகின்றன. பாதிக்கப்பட்டவருக்கு மனத்தை இயல்பாக வைத்துக்கொள்ளும் உத்திகளைச் சொல்லித் தரலாம், அதன் மூலம் அவர்கள் நேர் விதமாகச் சிந்திப்பது அதிகரிக்கும், சமாளிக்கும் திறன் பெருகும். இதனைப் பல சிகிச்சைகளின் வழியாகச் செய்யலாம், உதாரணமாக அறிவாற்றல் நடத்தைச் சிகிச்சை, ஆதரவு சிகிச்சை, மன முழுமைத் தன்மை சார்ந்த அறிவாற்றல் சிகிச்சை, மற்றும் பிற.

Q

மனச் சோர்வு உடைய ஒருவரைக் கவனித்துக் கொள்ளுதல்

A

மனச் சோர்வால் சிரமப்படும் ஒருவருக்கு நீங்கள் உதவலாம். அதே சமயம் அவர் இந்த உண்மையை ஒப்புக்கொள்ளவைப்பது, பிறருடைய உதவியை நாடுவதற்குச் சம்மதிக்க வைப்பது சிரமமாக இருக்கலாம். உங்களுக்குத் தெரிந்த யாரிடமாவது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அறிகுறிகளை நீங்கள் பார்த்தால் அவர் ஒரு மன நல நிபுணரைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்று ஊக்கம் தருவது நல்லது.

  • அவரைக் கவனித்துக் கொள்கிற நீங்கள் அவரை அதிகம் புரிந்துகொள்ளலாம், ஆதரவும் அக்கறையும் காட்டலாம்.
  • அவருடன் பேசலாம், அல்லது அவர்கள் சொல்வதை அனுதாபத்துடன் கேட்கலாம்.
  • பேசுமாறும் தன்னுடைய உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ளுமாறும் அவருக்கு ஊக்கம் தரலாம்.
  • அவர் ஏதாவது நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு உதவலாம், காரணம், சுறுசுறுப்பாக இருப்பது மனச் சோர்வுக்கு மருந்து ஆகும்.
  • அவர் தற்கொலைபற்றி ஏதாவது சொல்கிறாரா என்பதைக் கவனித்து, உடனடியாக உளவியல் நிபுணருக்கு அதைத் தெரிவிக்கலாம்.

Q

மனச் சோர்வைச் சமாளித்தல்

A

மனச் சோர்வு ஒரு நோய். அதைச் சமாளிப்பதற்கு உங்களுக்கு ஆதரவு தேவை. உங்களுடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பேசுங்கள், முதல் படியாக ஒரு மன நல நிபுணரைச் சந்தித்து ஆலோசனை பெற்று உங்களுக்கு என்ன பிரச்னை என்பதைத் கண்டறிந்து சிகிச்சையைத் தொடங்குகள். சிகிச்சையுடன்  நீங்கள் உங்களையும் கவனித்துக்கொள்ளவேண்டும். அது எளிதான விஷயம் அல்ல, அதேசமயம் உங்களுடைய தினசரி நடவடிக்கைகளில் செய்யும் சிறிய மாற்றங்கள் ஒரு நேர்விதமான பலனைத் தரக் கூடும்.

எதிர்மறைச் சுழலை உடையுங்கள்: மனச் சோர்வின் அறிகுறிகளுள் ஒன்று, தொடர்ந்து குற்ற உணர்வு, சுய மதிப்பற்ற உணர்வு மற்றும் பயனற்றவராக இருக்கும் உணர்வுடன் இருத்தல். அத்தகைய உணர்வுகளைக் கட்டுப்படுத்தவேண்டும், இது போன்ற எண்ணங்கள் மற்றும் உணர்வுகள் எப்போது வருகின்றன என்பதை நீங்கள் தெரிந்துவைத்திருக்க வேண்டும். எதிர்மறைச் சிந்தனையின் இந்தப் பாணியை அடையாளம் கண்டு, அதற்குப் பதிலாக நேர்விதமான அல்லது நல்ல விஷயங்களைச் சிந்திக்க முயற்சி செய்யுங்கள். இயன்றால், அத்தகைய எண்ணங்களைக் குறித்து வையுங்கள், அவற்றை மகிழ்ச்சியான சிந்தனைகள் மற்றும் உணர்வுகளால் மாற்றலாமா என்று பாருங்கள்.

சுறுசுறுப்பாக இருங்கள்: தினசரி வேலைகளும் நடவடிக்கைகளுமே நல்ல சிகிச்சைகள். உங்களுடைய தினசரி வேலைகளை எந்த அளவு இயலுமோ அந்த அளவு பூர்த்தி செய்ய முயற்சி செய்யுங்கள். சிறிய, எட்டக்கூடிய இலக்குகளை அமைத்து அவற்றை நோக்கிப் பணியாற்றுங்கள். ஏதேனும் ஒரு வகை உடற்பயிற்சியைத் தொடங்குகள். உடற்பயிற்சியானது உடலுக்கும் மனத்துக்கும் உதவுகிறது என ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன.

உங்களுடைய பயங்களை எதிர்கொள்ளுங்கள்: பொதுவாக மக்கள் சோகமாகவோ கவலையாகவோ இருந்தால் பிறருடன் பேசுவதைத் தவிர்த்துவிடுவார்கள், அல்லது, பயணம் செய்தல், தோட்ட வேலை, சமைத்தல் போன்ற வேலைகளைத் தவிர்த்துவிடுவார்கள். உங்களுடைய பயங்களைச் சந்தித்து இந்த வேலைகளை மெதுவாகத் தொடர்ந்து செய்வது சிறந்தது.

உங்களுடைய வேலைகளையும் தினசரி ஒழுங்கையும் திட்டமிடுங்கள்: மனச் சோர்வு தூக்கபாணிகளை பாதிக்கிறது என்பதால் உங்களுடைய வழக்கமான நேரத்தில் தூங்கி எழ முயற்சி செய்யுங்கள், ஒவ்வோர் இரவும் ஒரே நேரத்தில் தூங்க முயற்சி செய்யுங்கள். இயன்ற வரை இந்த ஒழுங்கைப் பின்பற்றுங்கள்.

குடும்ப ஆதரவு: குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடைய ஆதரவை நாடுங்கள். மருத்துவர் சிபாரிசு செய்தபடி தேவையான சிகிச்சையைத் தொடர்ச்சியாக எடுத்துக் கொள்ளுங்கள், நீங்கள் விரைவில் குணமாக அது உதவும். மனச் சோர்வுத்திலிருந்து குணமாவதற்கு ஊக்கமும் சுய உறுதியும் முக்கியக் காரணிகள் ஆகும்.

Q

கவனித்துக் கொள்பவரைக் கவனித்துக் கொள்ளுதல்

A

மனச் சோர்வு கொண்ட ஒருவரைக் கவனித்துக் கொள்வது உங்களைக் களைப்பாகவும் அழுத்தமாகவும் உணரச் செய்யலாம். நீங்கள் உங்களுடைய ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்வது முக்கியம், அப்போதுதான் உங்களால் உங்கள் அன்புக்குரியவரைக் கவனித்துக்கொள்ள இயலும். குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் பிற நிபுணர்களின் ஆதரவு அல்லது ஆலோசனையைப் பெறுவதும் இதில் உதவலாம்.

மனச் சோர்வுத்தில் உள்ளவர்களைக் கவனித்துக் கொள்கிற உங்களைப்போன்ற பிறருடனும் நீங்கள் பேசலாம், நீங்கள் என்ன பிரச்னையை அனுபவிக்கிறீர்கள் என்பதை அவர்கள் புரிந்துகொள்வார்கள், உங்களுடைய சூழலைத் தெளிவாக உணர்வார்கள்.

  • உங்களைச் சிறப்பாக உணரச் செய்யக்கூடிய சில விஷயங்களை நீங்கள் செய்யலாம்.
  • இந்தக் குறைப்பாட்டைப்பற்றித் தெரிந்து கொள்ளுங்கள், அது உங்களுடைய பதற்றத்தைக் குறைக்கும், பாதிக்கப்பட்டவரை நீங்கள் நன்றாகக் கவனித்துக்கொள்ள உதவும்.
  • முறையான ஊட்டச்சத்துள்ள உணவுகளை உண்டு, போதுமான அளவு தூங்கி உங்களுடைய உடல் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள்.
  • தினமும் ஒரு குறிப்பிட்ட அளவு நடக்கத் தொடங்குங்கள், அல்லது உங்களுக்கு ஆர்வமுள்ள ஏதாவது ஒரு பொழுதுபோக்கு அல்லது செயல்பாட்டில் ஈடுபடுங்கள்.
  • உங்களுடைய நண்பர் அல்லது நம்பிக்கையான ஒருவருடன் பேசி உங்களுடைய எண்ணங்களையும் உணர்வுகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள். இது நீங்கள் உங்களுடைய சொந்தத் தடைகளைத் தாண்டுவதற்கு உதவும்.
  • உங்களுடைய எல்லைகளை அறிந்திருங்கள், உங்களால் எவ்வளவு நேரம் மனச் சோர்வுத்தில் உள்ளவரைக் கவனித்துக் கொள்ள இயலும் என்பதை எதார்த்தமாகச் சிந்தியுங்கள். இந்த எல்லைகளைப் பாதிக்கப்பட்டவருக்கும் உங்களுடைய குடும்பத்தினருக்கும் மருத்துவருக்கும் சொல்லுங்கள். இதன் மூலம் இந்த எல்லைகள் எல்லாருக்கும் தெரிந்திருக்கும், அவர்கள் உங்களிடம் அளவுக்கதிமாக எதையும் எதிர்பார்க்கமாட்டார்கள்.
  • உங்களால் சமாளிக்கவே இயலவில்லை என்றால் அந்தச் சூழ்நிலையிலிருந்து சிறிது காலம் விலகியிருங்கள்.

Q

மனச் சோர்விற்கான சிகிச்சை வகைகள்

A

மனச் சோர்வுக்குப் பலவகையான உளவியல் சிகிச்சைகள் பலன் தந்துள்ளன. உதாரணமாக அறிவாற்றல் நடத்தைச் சிகிச்சை (CBT), உளப்பகுப்பாய்வுச் சிகிச்சை (IPT). பொதுவாக இந்த இரண்டு சிகிச்சைகளுமே குறுகிய காலத்திற்கானவை, இவை பொதுவாக 10-20 வாரங்களுக்கு நீடிக்கும். மருந்துகள் அல்லது உளவியல் ஆலோசனையை மட்டுமே பயன்படுத்தி மிதமான மனச் சோர்வு முதல் நடுத்தர மனச் சோர்வு வரை வெற்றிகரமாகக் குணப்படுத்தலாம் என ஆராய்ச்சிகள் சொல்கின்றன. அதே சமயம் தீவிர மனச் சோர்வு கொண்ட ஒருவருக்கு இந்த இருவிதச் சிகிச்சைகளையும் சேர்த்துத் தர வேண்டியிருக்கும்.

அறிவாற்றல் நடத்தைச் சிகிச்சை (CBT) என்பது மனச் சோர்வைக் குணப்படுத்திப் பலன் தரக்கூடிய ஒரு செயல்திறன் வாய்ந்த மற்றும் சான்று அடிப்படையிலான சிகிச்சை ஆகும். அது மனச் சோர்வுத்துடன் தொடர்புடைய எதிர்மறைச் சிந்தனை பாணியையும் செயல்படுதலையும் மாற்ற உதவுகிறது. அதே சமயம் பாதிக்கப்பட்டவருக்கு மனச் சோர்வைத் தூண்டும் இந்த எதிர்மறைச் சிந்தனை பாணியை எப்படி புரிந்துகொள்வது, கட்டுப்படுத்துவது மற்றும் நிறுத்துவது என்று கற்றுத் தருகிறது.

எதிர்மறைச் சிந்தனைச் செயல்முறை (உதாரணமாக: "என்னால் எதையும் சரியாகச் செய்ய இயலாது”) கண்டறியப்பட்டு நேர்விதமான சிந்தனைகளால் (உதாரணமாக: "என்னால் இதை சரியாகச் செய்ய இயலும்”) மாற்றப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர் மேலும் சிறப்பாகவும் நேர்விதமாகவும் நடந்து கொள்கிறார். ஒருவர் நடந்து கொள்ளும் விதத்தை மட்டுமே மாற்றுவதன்மூலம் அவரது சிந்தனைகள் மற்றும் மனப்பாங்கில் முன்னேற்றத்தைக் காண இயலும் என்பது நிருபிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக ஒருவர் வீட்டிலிருந்து வெளியே வந்து தினமும் 15நிமிடம் மட்டும் நடந்தாலே அவருடைய சிந்தனை மற்றும் மனப்போக்கு ஆகியவை மேம்படக் கூடும்.

உளப்பகுப்பாய்வு சிகிச்சை (IPT) தனிப்பட்ட உறவுகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. இந்தச் சிகிச்சையை வழங்குபவர் பாதிக்கப்பட்டவருக்கு இவற்றை சொல்லித் தருகிறார்: அவர்கள் பிறருடன் பழகுகிற தன்மையை எப்படி மதிப்பிடுவது, சுய தனிமைப்படுத்துதலை உணர்ந்திருப்பது, பிறருடன் பழகுவது, தொடர்புபடுத்திக்கொள்வது அல்லது அவர்களைப் புரிந்துகொள்வதில் ஏற்படக்கூடிய சிரமங்களைப் புரிந்துகொள்வது.

உளவியல் கல்வி என்பது, ஒருவருக்கு அவருடைய நோயைப்பற்றியும் அதனை எப்படிக் குணப்படுத்துவது என்பதையும் அது பழைய நிலைக்குத் திரும்புகிற அறிகுறிகளை எப்படி அடையாளம் காண்பது என்பதையும் நோய் மோசமாகும் முன் அல்லது திரும்ப வரும் முன் அவர்கள் தேவையான சிகிச்சையை எப்படி பெறுவது என்பதையும் சொல்லித் தருகிறது.

குடும்ப உளவியல் கல்வி குடும்பத்தினர் மத்தியில் துயரம், குழப்பம் மற்றும் பதற்றத்தைக் குறைக்க உதவுகிறது. அவர்கள் சூழ்நிலையைச் சமாளிக்க உதவுகிறது. இதன் மூலம் அவர்கள் மனச் சோர்வால் பாதிக்கப்பட்ட தங்களுடைய அன்புக்குரியவர்களைக் கவனித்துக் கொண்டு ஆதரவு அளிக்க இயலுகிறது.

மன நோய்களைச் சமாளித்து வரும் நபர்கள் மற்றும் குடும்பத்தினருக்கான சுய உதவி மற்றும் ஆதரவுக் குழுக்கள் பரவலாக உள்ளன. இந்தக் குழுக்களில் மக்கள் தங்களுடைய அனுபவங்கள், உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளலாம், தகுதியுள்ள நிபுணர்களைச் சந்திக்கச் சிபாரிசு பெறலாம்; இங்கே அவர்கள் சமூக வளங்களைப்பற்றியும் அவர்கள் குணமாவதற்கு எந்தச் சிகிச்சை சிறப்பாக உதவும் என்பதுபற்றியும் கற்றுக்கொள்கிறார்கள்.

மின்சார வலிப்புச் சிகிச்சை (ECT): தீவிர மனச் சோர்வு நிகழ்வுகள் மற்றும் சைக்கோசிஸ் உடனான தீவிர மனச் சோர்வு கொண்டோருக்கு மிகவும் பயன் தரும் சிகிச்சை இது. தீவிர அறிகுறிகளான தீவிர சைக்கோசிஸ் அல்லது தற்கொலை எண்ணங்கள் ஆகியவற்றைக் குணப்படுத்துவதற்கு மருந்துகள் அல்லது உளவியல் சிகிச்சை பயன் தரவில்லை என்றால், அல்லது, ஒருவரால் மனச் சோர்வுக்கு எதிரான மருந்துகளை எடுத்துக்கொள்ள இயலாது என்றால் ECTயைப்பற்றிச் சிந்திக்கலாம். சிலருக்கு ECTயுடன் மனச் சோர்வுக்கு எதிரான மருந்துகளையும் சேர்த்துக் கொடுக்கலாம். ECT சிகிச்சைக்குப்பிறகு நினைவுப் பிரச்னைகள் வரலாம், ஆகவே, இந்த முக்கியமான மற்றும் செயல்திறன் வாய்ந்த சிகிச்சையைச் செய்வதற்குமுன்னால், அதன் ஆபத்துகளையும் பலனையும் கவனமாக மதிப்பிடவேண்டும்.

Q

உங்களுக்குத் தெரியுமா?

A

WHOவின் மதிப்பீட்டின்படி:

  • வாழ்வின் பல்வேறு காலகட்டங்களில் உள்ள வயது வந்த நபர்களில் ஐந்து சதவீதத்தினரை மனச் சோர்வுக் குறைபாடுகள் பாதிக்கின்றன.
  • 2020ம் ஆண்டில், மனச் சோர்வு உலகின் இரண்டாவது மிகப் பெரிய மன நோயாக இருக்கும்.
  • உலகில் மிக அதிக மனச் சோர்வு விகிதம் கொண்ட நாடு இந்தியா.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org